காலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று, அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம். பழகுவதற்கு இனிமையானவர். அன்பானவர். பண்பானவர். தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் சிறந்த ஒரு சேவையாளர்தான் ஐ.தி.சம்பந்தன். அவரின் பல்வேறுபட்ட சேவைகளை நோக்கும்போது ‘பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாய கடமை’ என்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கிய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ என் நினைவில் வந்து போகின்றார்.
1962 களில் யாழ்ப்பாணத்தில் “சிற்பி’’ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘கலைச்செல்வி’ என்ற சஞ்சிகையில் இணைந்து கடமை புரிந்த திரு.சம்பந்தன் தொடர்ந்தும் கலை, கலாச்சாரம், இலக்கியம், சமூகம், அரசியல் போன்ற பல்வேறுபட்ட விடயங்களைத் தாங்கிவரும் சர்வதேச தமிழ்ச் சஞ்சிகையான ‘லண்டன் சுடரொளியின்’ பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வருவது மிகவும் ஆரோக்கியம் தரும் விடயமாகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்இ சிங்கள இரு இனமக்களும் சுதந்திரமாகவும்இ சுபிட்சமாகவும் வாழ்வற்கு சமஷ்டி முறைதான் பொருத்தமானது என்று 1949 இல் தீர்க்கதரிசனமாகக் கூறியவர் தந்தை செல்வா என்று ஆவேசம் மேலோங்க குரலெழுப்பும் திரு. ஐ.தி. சம்பந்தன் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா முன்னெடுத்த தமிழரசுக் கட்சியின் அகிம்சைக் கோட்பாடுடனான கொள்ளைகளோடு இணைந்து செயற்பட்டவராவார்.
தமிழ் அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காகத் தோற்றம்பெற்ற மொழிவழித்; தொழிற்சங்க வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தவர். அரச கூட்டத்தாபன ஊழியர் சங்கத்தின் செயலாளராகவும். தமிழ்த் தொழிற்சங்கக்கூட்டணியின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் தொழிலாளர்களின் நலனுக்காகவும் உழைத்து வந்தவர். 1965ம் ஆண்டிலிருந்தே தொழிற்சங்கத்தில் ஈடுபாடுகொண்ட இவர் பிரசித்திபெற்ற கோடீஸ்வரன் வழக்;கை வெற்றிகரமாக நடத்துவதற்கு அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்துடன் ஈடுபட்டு உழைத்தவா.
தமிழ்த் தொழிற்சங்க நடவடிக்கைகள் அனைத்திலும் சம்பந்தன் அவர்கள் ஈடுபட்டு வந்திருந்தமையை நோக்கும்போது அவர் எவ்வளவுதூரம் தமிழ்த் தொழிலாளர் நலன்மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் இனக்கலவரங்கள் தோன்றியபோதெல்லாம் பாதிக்கப்;படும் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழிகளின் நிலைப்பாடுகளை தமிழ் தொழிற்சங்கக் கூட்டணிமூலம் அவர் போராடி வந்தமை அவரின் மனித நேயத்தை எடுத்துக் காட்டுவதாகும்.
தமிழ் மக்களின் இதயங்களில் கறைபடிந்த 1983 கறுப்பு யூலை கலவரத்தின்போது.திரு. சம்பந்தன் அவர்களும் தனது உயிரைக் காப்பாற்றிய விதத்தினை ஒரு தடவை என்னிடம் விவரித்தபோது என் நெஞ்சை உலுக்கியது. இத்தகைய அனுபவங்களை பாரீசில் வெளியான தமிழன் பத்திரிகையில் கட்டுரைகளாக பதிவு செய்திருந்ததை அறிந்திருந்தேன். “கறுப்பு யூலை 83’ – குற்றச்சாட்டுகள்” என்னும் நூலை ஆங்கிலம்இ தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிட்டு அன்றைய கலவரத்தின் கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்கியுள்ளளார். இலங்கையில் 1958. 1977, 1983 ஆகிய காலங்களில் நடைபெற்ற சோகம் நிறைந்த இனக்கலவரங்களை நேரில் பார்த்த அனுபவம் கொண்டவர்.
பிரித்தானியாவில்; முற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் சைவமுன்னேற்றச் சங்கத்தின் பணிகளில் ஈடுபட்டுவரும் ஐ.தி. சம்பந்தன் சைவத் திருக்கோவில் ஒன்றியம் நடாத்தும் சைவ மகாநாடுகளிலும் பங்கு பற்றி தனது தெய்வீக வழிபாட்டின் நம்பிக்கையையும் வளர்த்து வருகின்றார். நாவலரின் பின் சைவத்தையும்இ தமிழையும், சமூகப்பணியையும் வளர்த்து வந்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பற்றி சைவமுன்னேற்றச்சங்கத்தினால் வெளியிட்ட “வாழ்வியற்பணிகள்” என்னும் சிறந்த நூலின் தொகுப்பாசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.
இளம் சமுதாயத்தினருக்கு தமிழ் மொழியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதிலும், சமய அறிவை ஊட்ட வேண்டுமென்பதிலும் ஆவல் கொண்டிருக்கும் திரு.சம்பந்தன் அவர்கள் லண்டனில் சில ஆலயங்கள் முத்தமிழ் விழா நடாத்தி தமிழ் இளைஞர்களிடையே சமய, கலை, கலாச்சார உணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள்… ஆனால் சில ஆலயங்கள் ஏதோ ஆலயங்களில் பூஜைகளும,; திருவிழாக்களும் நடந்தால் போதும், வருவாய் வந்தால்போதும் என்று செயற்படுவதாயும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இவர் லண்டனுக்குப் புலம்பெயாந்து வந்த ஆரம்ப காலப்பகுதியில் வோல்த்தம் வோறம் தமிழ்ப் பாடசாலையின் அதிபராகச் செயற்பட்டதுடன் தமிழ் மாணவர்களுக்கான தமிழ் பாடத்திட்டம் ஒன்றைக்கொண்டு வரவேண்டுமென்பதில் முனைப்பாகச் செயற்பட்டவர். அப்பாடசாலை இவ்வாண்டு (2011இல்) வெள்ளிவிழா காண இருப்பதையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்வார்.
ஒரு கவிஞனால்தான் எதிர் காலத்தையோ, எதிர் கால சமுதாயத்தையோ யதார்த்தமாகக் கற்பனை செய்யமுடியுமென்ற நம்பிக்கைகொண்ட ஐ.தி.சம்பந்தன் அவர்கள் 2004ம் ஆண்டில் ‘சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் மூலம் ‘உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியி’னை நடாத்தி வெற்றிபெற்றவர்களுக்கு இரண்டு இலட்சம் பெறமதியான பரிசில்களை வழங்கியதோடு, வெற்றிபெற்ற கவிஞர்களின் கவிதைகளை ‘புதுயுகத் தமிழர்’ என்ற மகுடமிட்டு சுடரொளிவெளியீட்டுக்கழகத்தினால் ஒரு தொகுப்பாக வெளியிட்டமை மிகுந்த பாராட்டுக்கு உரியதொன்றாகும்.
லண்டனில் இடம்பெறும் பாராட்டுவிழாக்கள், இலக்கியவிழாக்கள், சமய விழாக்கள், நூல்வெளியீட்டுவிழாக்கள், சர்வதேச பெண்கள் தினங்கள் போன்ற பல்வேறுபட்டவற்றோடெல்லாம் ஐ.தி. சம்பந்தன் அவர்கள் மிகுந்த துரிதமாக இயங்குவதைப் பார்க்கும்போது தமிழ் மொழியோடும், தமிழ் மக்களோடும் அவர் கொண்டுள்ள உறவையும், பரிவையும் உணரமுடிகின்றது.
லண்டனில் தன் சொந்தச் செலவில் புத்தகங்களை வாங்கி அதனைப் பயன் பெறுவோர்கள்; எனக் கருதுபவர்களுக்கு அறிமுகஞ்செய்து வழங்கி வருபவராகிய ‘புத்தகம் என்னும் ஸ்தூல உருவம்’ என்று வர்ணிக்கப்படும் பத்மநாப ஐயரைக் கண்டு வியந்திருக்கிறேன். தரமான புத்தகங்களை வித்தியாசமான முறையில் அச்சிட்டு தமிழ் இலக்கிய உலகில் பேசப்படுபவர் பத்மநாப ஐயர். அந்த வரிசையில் ஐ.தி. சம்பந்தன் அவர்களும் சுடரொளி வெளியீடாக லண்டனில் உள்ள சில எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு பதிப்புத்துறையிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்;. குறிப்பாக பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் அவர்களின் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்’, ‘தமிழ் தந்த தாதாக்கள்’, ‘ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா’, ‘குமுதினி படுகொலை பற்றி’ போன்ற நூல்களோடு மேலும் 15க்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றமை அவரது தமிழ்த் தொண்டிற்கு ஆற்றும் அடித்தளமான பணிகளாகக் கருத முடிகின்றது.
இனங்களின், மொழிகளின், தேசங்களின் மீதான ஒடுக்குமுறைகளில் எழும்; போராட்டங்கள் வன்முறையாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலக்கியங்கள் வாழ்வின் ஆதாரங்களைத் தேடிச் செல்கின்றது. இத்தகைய இலக்கியத்துறையில் தன்னை அர்ப்பணித்துவரும் ஐ.தி.சம்பந்தன் அவர்கiளை திரு.நடாமோகன் இயக்கும் சூரியோதயம் கிஸ்மத் வானொலி, லண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றில் ‘மகரந்தச் சிதறல்’ என்ற எனது தயாரிப்பில் இடம்பெற்றுவரும்;; நிகழ்ச்சியில் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அந்த நேர்காணலை எழுத்துருவிலும் ஆக்கியிருந்தேன். 2007 ம் ஆண்டு மே மாதம் இலங்கைப் பத்திரிகையான ‘தினக்குரல்’ வார இதழில்; அந்நேர்காணல் பிரசுரங்கண்டு இலக்கிய ஆர்வலர்கள் பலரின் மிகுந்த பாராட்டைப் பெற்றுக் கொண்டதை இவ்வேளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
2010 ம் ஆண்டு மே மாதம் அவரது இனிய துணைவியாரின் பேரிழப்பு அவரைப் பெரிதும் பாதித்திருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. உண்மையில் தனது துணைவிக்கு ஒரு இனிய கணவராகஇ ஒரு சேவகனாக, ஒரு சிறிய குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற அவரின் செயல்கள் அனைத்தும் மனைவியினிடத்து எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை உணர்த்தி நின்றது.
இழப்புக்களையெல்லாம் எதிர்கொண்டு வாழ்வை முன்னெடுப்போம்! ஐ.தி சம்பந்தன் என்னும் பெரியவர் எழுபத்தைந்து வயதல்ல இன்னும் பல்லாண்டு வாழ்க! அவர் பணிகள் தொடர்க…!
Navajothy Baylon <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>