பல்வேறு துறைகளில் மலேசியா முத்திரைப் பதிப்பது போல் விளையாட்டுத்துறையிலும் அது தனிச் சிறப்பினை அடைந்து வருவதைக் கண்கூடாகக் காணலாம். உலக அளவில் “தாமஸ் கிண்ண” பூப்பந்துப்போட்டியில் பல முறை வெற்றி வாகைச்சூடி உலக ஜாம்பவான் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியா வெற்றிகரமாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியையும் காமன்வெல்த் போட்டியையும் மிகச் சிறப்பாக நடத்தி இத்துறையில் மலேசியாவுக்கு இருக்கும் தனித்திறமையை உலகுக்குக் காட்டியுள்ளது.தொடர்ந்து உலகக்கிண்ண ஹாக்கிப் போட்டியையும் நடத்தி மலேசியா புகழ் உச்சியில் நிற்பது தெளிவு. குவாஷ் விளையாட்டுப்போட்டியில் நிக்கல் டேவிட் மூலம் உலக முதல் நிலை விளையாட்டாளரை உருவாக்கிய பெருமையை நமது நாடு பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடு விளையாட்டுத் துறையில் வெற்றி நடை போட்டாலும் நமது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இத்துறையில் அதர்ச்சி அடையும் நிலையில் இருப்பது எதிர் காலத்தில் நமது இளைஞர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை! இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? இந்திய இளைஞர்களின் பால் இந்திய சமூகம் அக்கறைக்கொள்ளாமல் இருந்துவிட்டதா? அல்லது திட்டமிட்டு இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் நுழைய விடாமல் மலேசிய அரசாங்கமே தடுத்து விட்டதா? இதற்கு முறையான விடையைக் காண்பது அவசியமும் அவசரமும் ஆகும்.
1960ஆம் ஆண்டுகளில் நமது இந்திய இளைஞர்கள் செய்த சாதனைகளை நாடு எளிதில் மறக்க முடியாது. தென் கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகளில் ஆண்களுக்காண 100 மீட்டர் நேர் ஓட்டத்தில் 10.3 விணாடிகளில் ஓடி சாதனைப் புரிந்த டாக்டர் மணி ஜெகதீசன் இப்போது டத்தோ ‘பறக்கும் டாக்டர்’ எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். அவர் ஏற்படுத்திய சாதனையை மலேசியர் யாரும் இன்று வரையில் முறியடிக்க முடியாமல் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன் 200 மீட்டர் ஓட்டத்தில் ஏற்படுத்திய சாதனையும் இன்று வரையில் எந்தவொரு மலேசிய ஓட்டக்காரராலும் முறியடிக்க இயலவில்லை என்பது இங்கு நினைவுக் கொள்ளத்தக்கதாகும். 1964 இல் தோக்கியோவி நடைப்பெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் கால் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான முதல் ஆசிய ஓட்டக்காரர் எனும் செய்தி இங்கே அவசியம் நினைவுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.1968 இல் மெக்சிகோவிலும்,1972இல் மூனிக்கிலும் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் நாட்டைப் பிரதிநிதித்து ஓடி நாட்டின் நற்பெயரை உயர்த்தியவர்.இவருடன் ஆசிர்விக்டர் 400 மீட்டர் ஓட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஒலிம்பிக் போட்டியிலும் நாட்டைப் பிரதிநிதித்ததுடன் தன் திறமையான ஓட்டத்தினால் மலேசியாவின் புகழுக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது! இவர்களுடன், டி.கிருஷ்ணன், இராஜலிங்கம், இரா.சுப்ரமணியம், நசத்தார் சிங், டில்பாக் சிங் கிளர், எம்.இராமச்சந்திரன், எம்.இராஜமணி,அங்கம்மா, ஜி.சாந்தி போன்ற பெண் ஓட்டக்காரர்களும் இன்னும் எண்ணற்ற விளையாட்டாளர்கள் ஓட்டப்பந்தய உலகில் வெற்றிக்கொடி நாட்டி மலேசியப் புகழை உயர்த்தியவர்கள்.
காற்பந்து துறையிலும் 1960 தொடங்கி 1990 வரையில் நமது இந்திய விளையாட்டாளர்கள் தனி முத்திரையுடனே இத்துறையில் வலம் வந்தார்கள். தனபாலன் போன்ற தேசிய முன்னணி ஆட்டக்காரர்கள் தொடங்கி பேராக் மாநிலத்தின் முன்னணி விளையாட்டாளர் கருத்து, சிலாங்கூர் சந்தோக் சிங், “சிலந்தி மனிதன்” என்று சிறப்பித்துக் கூறப்பட்ட கோல் பாதுகாப்பாளர் எம்.ஆறுமுகம், குணாளன், இன்று தேசிய காற்பந்து பயிற்றுநராகப் பணி புரியும் கே.இராஜகோபால்,மலாக்கா மாநில தேசிய விளையாட்டாளர் துரைராஜ்,சிலாங்கூர் மாநிலத்தின் குணாளன் இன்னும் பல இந்திய விளையாட்டாளர்கள் மாநில மற்றும் தேசியக்குழுவில் இடம் பெற்று பல சாதனைகள் புரிந்ததை எவரும் மறுப்பதகில்லை.எனினும், இவர்களின் சாதனைகளைத் தொடராமல் நமது விளையாட்டாளர்கள் முடங்கிப் போன மர்மம் தான் என்ன? இந்தத் தொய்வு நிலைக்கு யார் காரணம்? மலாய்க்காரர்கள் மட்டுமே இத்துறையில் தலைத் தூக்கி நிற்க வேண்டும் என்றஅரசின் எண்ணமா? ஒரு சமயத்தில் இத்துறையில் தனிச்சிறப்புடன் சாதனைகள் புரிந்த இந்திய இளைஞர்களை வேரோடு களையெடுக்கும் சதித்திட்டமா? அல்லது களையெடுப்பு என்று தெரிந்தும் நமது சமுதாயத் தலைவர்கள் தக்க தருணத்தில் நமது உரிமைக்குப் போராடாமல் மாசு மறுவற்ற நமது இந்திய இளைஞர்களை நட்டாற்றில் விட்டுவிட்ட வேடதாரிகள் இப்போது மட்டும் குறைப்பட்டுக்கொள்ளலாமா?
பூப்பந்தாட்டத்தில் இந்திய சமுதாயம் கண்டெடுத்த நல்முத்து பஞ் குணாளன் ஆவார்.இவ்விளையாட்டில் அவர் ஒற்றையர் சாம்பியனாகப் பல ஆண்டுகள் சாதனையாளராகத் திகழ்ந்தவர். காமன்வெல்த் சாம்பியனாக வாகைச் சூடியவர். தாமஸ்கிண்ண வெற்றியாளர், உலகப் பிரசித்திப் பெற்ற போட்டியான “அகில இங்கிலாந்து” சாம்பியன் போட்டியில் ஒற்றையருக்கான போடியிலும் வெற்றி வாகைச் சூடியவர். தேசிய நிலையில் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுனராகி, காந்தரூபன் போன்ற இளம் விளையாட்டாளர்களை உருவாக்கியப் போதிலும் போதிய இந்திய விளையாட்டாளர்களை இத்துறைத் தொடர்ந்து கொண்டிருக்க வில்லை என்பது ஏமாற்றமே! பஞ் குணாளன் சாதனைக்குப் பின் ஜேம்ஸ் செல்வராஜு ஒற்றையர் பிரிவில் ஓரளவு அவர் தன் திறனைக் காட்டினாலும் தொடர்ந்து இப்போட்டியில் அவர் நீண்ட காலத்திற்குப் பிரகாசிக்க முடியாமல் போனதுடன் அவருக்குப் பின் இத்துறையில் ஒரு வெறுமை ஏற்பட்டு இன்று மருந்துக்குக்கூட ஒருவர் இல்லாமல் அடியோடு இந்தியர்கள் காணாமல் போனது பேரிழப்பே!
இந்திய விளையாட்டாளர்கள் புகழ் பெற்று விளங்கிய மற்றொரு விளையாட்டு ஹாக்கி. இவ்விளையாட்டில் மலேசியாவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்துச் சாதனையை ஏற்படுத்தியது! மலேசியக் குழுவுக்குக் காப்டனாக சண்முகநாதன் பொறுப்பேற்று குழுவை மிக அற்புதமாக வழி நடத்தி மலேசியாவின் நற்புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்தார். மலேசியக் குழு வெற்றி பெறுவதற்கு உதவிய மற்ற இந்திய விளையாட்டாளர்கள் மகேந்திரன், மகேந்தர் சிங் இன்னும் பல இந்திய ஆட்டக்காரர்கள் தங்களின் முழுத்திறனையும் காட்டி நாட்டின் புகழை உயர்தினர்! அதற்குப் பின் நமது நாடு இவ்விளையாட்டில் உலக அளவில் சாதனை ஏதும் பெரியதாகச் செய்து விடவில்லை! எனினும், ஜுனியர் உலக ஹாக்கிப் போட்டிகளில் நமது இந்திய விளையாட்டாளர்கள் ஒரு சிலர் விளையாடினாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் தொடர்ந்து அவர்கள் தேசியக் குழுவில் இடம் பெற இயலாமல்போய்விட்டது! இந்திய விளையாட்டாளர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டனர் என்றே கூறவேண்டும்!
ஒரு குறிப்பிடட சமூகத்துக்கு மட்டும் அரசாங்கம் இத்துறையில் வாய்ப்புகளை வழங்கியதால் இத்துறையில் இருக்கும் அபரிமிதமான சலுகைகளை நமது இந்திய இளைஞர்கள் நுகர்ந்துகூடப் பார்க்க இயலாமல் போய்விட்டது! இக்காரணமே நாட்டின் வளர்சிக்குப் பெரிதும் உதவ வேண்டியவர்கள் வெட்டுக்குத்து,சண்டைச்சச்சரவு,கொலை,கொள்ளை,கடத்தல், குடித்தல்,கஞ்சா புகைத்தல்,வீண் அரட்டைகள் போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் மூழ்கி பொன்னான வாழ்வை மண்ணாக்கிக்கொள்கின்றனர்! மலேசியச் சிறைச்சாலைகளில் பல்வேறு கைதிகளா அடைக்கப்பட்டுப் பொன்னான வாழ்வை இழந்து பரிதாபமாகச் செத்து மடிகின்றனர்!
இந்நிலையை மாற்ற அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்போது இருக்கும் நடைமுறையினை மாற்றி விளையாட்டுத் துறையில் கடந்த காலங்களில் திறமையான இந்திய இளைஞர்கள் ஆட்கொண்டிருந்த நிறைவான இடங்களை மீண்டும் வழங்கப்பட வேண்டும். விளையாட்டுத்துறை இன அடிப்படையில் இயங்காமல் இந்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசிய நீரோட்டத்தில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பும் சீராக அமைய வாய்ப்பு ஏற்படும். இவ்விசியத்தில் இந்திய சமுதாயம் தீவிரம் காட்ட வேண்டும். அனைத்து சமுதாய இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்திய இளைஞர்களுக்கு முழு மனதுடன் உதவிக்கரம் நீட்ட முன் வரவேண்டும்.
இந்நாட்டு இந்தியர்களை ஒட்டு மொத்தமாக அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் கட்சி ம.இ.கா. இக்கட்சி கடந்த காலங்களில் இந்தி இளைஞர்களைத் தங்களின் சுயநலத்திற்காகப் பயன் படுத்தி அவர்களின் வாழ்வைச் சீர்குழைத்தது போல மீண்டும் அவர்களின் வாழ்வுடன் விளையாடாமல் உண்மையாகவே விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் சாதனைகள் படைத்திட ஆக்ககரமான வழிகளில் உதவ முன் வரவேண்டும்.அரசாங்கத்தின் மானியத்தை முழுமையாகப் பெற்றுத் தர வேண்டும். இளைஞர் விளையாட்டு அமைச்சு மூலமாக நமது இளைஞர்களுக்கு முறையானப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். காற்பந்து, பூப்பந்து, ஹாக்கி,ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளுடன் நமது பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மல்யுத்தம் மற்றும் பரதக்கலைகள் ஆகியவற்றை நமது பெண்மணிகளுக்கும் போதிக்க வேண்டும்.அவ்வப்போது பலவிதமான போட்டிகள் ஏற்பாடு செய்து இளைஞர்களின் கவனம் சிதறாமல் கவனித்துக்கொள்ளவதுடன் பல கவர்ச்சியானப் பரிசுகள் வழங்கி இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும். உலகளவிலான போட்டிகளுக்கு நமது இளைஞர்கள் சென்று பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
நடப்பில், பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நமது இந்தியர்கள் சிலரால் முன்னின்று நடைபொற்று வருவதைக் காண்கிறோம்.குறிப்பாக பரதன் கிண்ணக் காற்பந்து போட்டி மிகச்சிறப்பாகப் பல ஆண்டுகளாகக் குறிப்பிட்ட ஒரு சிலரால் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. இது போன்ற போடிகளுக்கு இந்திய மக்கள் பேராதரவு வழங்குவது மிகவும் அவசியமாகும்.இப்போட்டி மூலமாகப் பல இளைஞர்கள் சிறந்த விளையாட்டாளர் களாகத் திகழ்வதுடன் கட்டொழுங்கு மிக்கவர்களாகவும் நாட்டுக்கும் சமுதா யத்துக் பயன் தரும் விதத்தில் பொறுப்புள்ள நற்குடிமக்களாகத் திகழ்வதைக் காண முடிகிறது.
இந்நாட்டில் இயங்கிவரும் இளைஞர் அமைப்புகள் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மணிமன்றம்,இந்து இளைஞர் இயக்கம்,மற்றும் இளைஞர்களை அதிகமாகக் கொண்டுள்ள பல இளைஞரியக்கங்கள் இந்திய குழந்தைகளை ஆரம்பப்பள்ளிகளிலிருந்தே அடையாளம் கண்டு அவர்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை நாம் திட்டமிட்டு உடனே செயலில் இறங்கவேண்டும். விளையாட்டின் அவசியத்தையும் அவசரத்தையும் பிளைகளிடம் எடுத்துரைக்க வேண்டும். இதற்கு இந்தியப் பெற்றோர்கள் அனைவரும் பேராதரவு வழங்குவது அவசியமாகும். இந்தியச் சமுதாயம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிவகுத்துநிற்பது அவசியமாகும். நாடு தழுவிய நிலையில் நம் இளைஞர்களின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு கட்சி,மதம்,ஏழை,பணக்காரன்,என்ற பாகுபாடின்றி இந்நாட்டு இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணையும் நாளே நமது இந்திய இளைஞர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் நன்னாளாகும்!
காடாய்க் கிடந்த இந்நாட்டை உருவாக்கத் தங்களின் இன்னுயிரைக் கொசுக்களுக்கும், கொடிய விலங்குகளுக்கும்,விஷ்ப்பாம்புகளுக்கும் வழங்கிய நம் முன்னோர்களின் தாராளமயக் கொள்கையால் நாடு வளம் பெற்றது.ஆனால்,நாட்டின்வளப்பத்தினை அனுபவிப்பதில் நாம் தொடர்ந்து ஏமாளிகளாக இருந்துவிட முடியாது! “ஆண்ட பரம்பரை மீண்மொருமுறை ஆள நினைப்பது என்ன குறை?’ நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்; இளைஞர்கள் சாதனை புரிய பிறந்தவர்கள்! விரைவில் நாட்டின் தலை எழுத்தை மாற்றுவோம்; நாட்டின் தலைமைப் பீடத்தைத் தவறாமல் பிடிப்போம்! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவோம். விளையாட்டுத்துறை மட்டுமின்றிப் பிற எல்லா துறைகளிலும் மற்ற இனங்களை விட சிறந்து விளங்க ஒன்று படுவோம்; மிகக்கடுமையாக உழைப்போம்; உயர்ந்த வெற்றியை அடைவோம். நாம் யார் என்பதை இந்த உலகுக்கு நிரூபித்துக்காட்டுவோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.