இந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.
கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது? அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா? என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
2012 ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூலில், மேலும் பல புதிய தகவல்களைக் கூடுதலாகச் சேர்த்து 2016 ஆம் ஆண்டில், 286 பக்களில் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டிருக்கின்றனர். இந்நூலில் கணிப்பொறி அறிமுகம், தமிழில் அச்சுப்பதிப்பும் அஞ்சல் பரிமாற்றமும், கணினியில் தமிழும் தமிழ் மென்பொருளும், தமிழ் இணையம், தமிழ் இணையப் பயன்பாடுகள் மற்றும் கற்றல் கற்பித்தல் எனும் ஐந்து அலகுகள் இடம் பெற்றிருக்கின்றன.
கணிப்பொறி அறிமுகம் எனும் அலகில் கணிப்பொறியின் வரலாறு, வளர்ச்சி, கணிப்பொறியின் தலைமுறைகள், அமைப்பு வகைகள், வன்பொருள், மென்பொருள், உள்ளீட்டு, வெளியீட்டுக்கருவிகள், சேமிப்பு முறைகள், இயங்குதளம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழில் அச்சுப்பதிப்பும் அஞ்சல் பரிமாற்றமும் எனும் அலகில் மைக்ரோசாப்ட் வேர்டு (MS Word), எக்செல் (Excel), பவர் பாயிண்ட் (Power Point), அக்சஸ் (Access) போன்ற செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கணினியில் தமிழும் தமிழ் மென்பொருள்களும் எனும் அலகில் தமிழ் எழுத்துருக்கள் (Tamil Fonts), சொற்பிழை திருத்தி (Spell Checker), அகராதி மென்பொருள் (Dictiionary), சொற்செயலிகள், பேச்சுணரிகள், எழுத்துணரிகள் போன்ற தமிழ் மொழி தொடர்பான மென்பொருட்கள், இவற்றில் இலவசமாகக் கிடைக்கும் கட்டற்ற மென்பொருட்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
தமிழ் இணையம் எனும் அலகில் இணையம், இணையத்தில் தமிழ், தமிழ் இணைய மாநாடுகள், கணிப்பொறித் திருவிழாக்கள், தமிழ்க் கணினி மொழியியல், தமிழ்க் கணிப்பொறி வல்லுநர்கள், இணையத் தமிழ்ப் பங்களிப்பாளர்கள்,கணினித்தமிழ் விருதுகள் போன்ற தலைப்புகளில் தமிழ் இணையம் குறித்த பல்வேறு தகவல்களும், இணையத்தமிழுக்குப் பங்களித்து வரும் செயற்பாட்டாளர்கள் குறித்த செய்திகளும், விருதுகள் குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் இணையப் பயன்பாடுகள் மற்றும் கற்றல் கற்பித்தல் எனும் அலகில் மின்னஞ்சல், தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs), வலைப்பூத் திரட்டிகள் (Tamil Blogs Collections), தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம், தமிழ் எழுத்துரு மாற்றிகள் (Tamil Font Converter), தமிழ் மின் நூலகங்கள் (Tamil Digital Library), தமிழ் மின்நூல்கள் (E Book), மின்நூல் உருவாக்கம், தமிழ் இயந்திர மொழிபெயர்ப்புகள் (Machine Translations), தமிழ் விக்கிப்பீடியா, சமூக வலைத்தளங்கள், தமிழ்க் குறுஞ்செயலிகள் (Apps), கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
இவை தவிர, கணினி தொடர்புடைய கலைச்சொற்கள், தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான இணையதளங்கள், வலைப்பதிவுகள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் எழுத்துரு மாற்றிகள், தமிழ்க் கணினி சார்ந்த இணையப்பக்கம், கணினித்தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள், தமிழ் மொழியிலான இணையதளங்கள் போன்றவைகளின் இணைய முகவரிகள், தமிழ் மொழிப்பயன்பாட்டுக்கான காணொலிப் பக்கங்கள், சில தமிழ் வலைப்பூக்கள், கணினியில் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசைகள் போன்றவையும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாகத் தமிழில் கணினி மற்றும் இணையம் குறித்த நூல்கள் மிகவும் குறைவாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி வெளியாகும் நூல்களும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கணினிப் பயன்பாடு குறித்த நூல்களாகவும், கணினியைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர்களுக்கு உதவும் நூல்களாகவும்தான் இருக்கின்றன. கணினி மற்றும் இணையப் பயன்பாடு குறித்த செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அறிமுக நூல்கள் ஒன்றிரண்டே வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், இந்த நூல் கணினி மற்றும் இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள உதவுவதாக அமைந்திருக்கிறது. இந்நூலினைப் பெற விரும்புபவர்கள் முனைவர் துரை. மணிகண்டன் (செல்லிடப்பேசி எண்: அலைபேசி எண் - 9486265886) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு:
(முனைவர் துரை.மணிகண்டன் இதுபோன்று இணையத்தில் தமிழ்(2007), இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்(2009) இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்(2011) போன்ற தமிழ்க் கணினி சார்ந்த மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். இதுவரை “இணையத் தமிழ் தொடர்பாக 60 மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்புரை வழங்கியுள்ளார். சிங்கப்பூர், இலங்கை போன்ற அயல்நாடுகளிலும் இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்)