முன்னுரை
- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -
காலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning, கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
நோக்கு
தமிழ்மொழியின் செழுமைக்கும் அதன் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பழமொழிகளை அடுத்த தலைமுறையினருக்காக மின்கற்றலுக்காக கணினி மயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனித சமுதாயத்தின் தோற்றத்திற்கு அவை எடுத்தியம்பும் வாழ்வியல் விழுமியங்களையும் கோடிட்டுக் காட்டுதல்.
மின்கற்றல்
மின்கற்றல் என்பது அறிவியல் வளர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகும். ஆற்றல் வாய்ந்த ஒரு கற்றல் முறை. இன்றைய சூழலுக்கேற்ற ஒரு புது வழி. காலத்தையும் பொருளையும் மிச்சப்படுத்தும் ஒரு நவீன கற்றல் முறை. மேலும் உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பதற்குரிய ஒரு சிறந்த வாயில். மின்கற்றலானது E-Learning என்று அழைக்கப்படுகிறது. மின்னியலின் பயன்பாடுகளைப் பயன்படுத்தி கணினியின் துணையுடன் கற்பிக்கும் கற்றல் முறையே மின்கற்றலாகும். இதனை CSCL (Computer Supported Collaborating Learning) என்றும் அழைக்கலாம். மின்கற்றலில் காணப்படும் E என்பது பொதுவாக Electronics என்பதைக் குறித்தாலும் இது Effective or Efficient or Evolving or Everywhere or Enhanced or Extended என்பனவற்றையும் சுட்டிக்காட்டும். தற்போது பொதுவாக எல்லா நாடுகளிலும் முழுக்க முழுக்க ஆசிரியரையே நம்பி செயற்பட்டுக் கொன்டு வந்த மரபுவழிக் கற்றலான ஆசிரிய மையக் கல்வி Teacher-Centred Education துடைக்கப்பட்டு பிள்ளை மையக் கல்வி Child-Centred Education நடைமுறைப் படுத்தப்படுகிறது. மேலும் பாடப் புத்தகங்களும் கரும்பலகையுமே வகுப்பறையில் இடம் பெற்ற காலம் போய் இப்போது கணினி அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. அதிலும் கணினியின் மிகையான பாவனையால் ஒரு மாணவன் முழுமையாகத் தானே கற்கும் நிலையாக மின்கற்றல் உருவாகியுள்ளது. மின்கற்றலை Virtual Learning என்று கூட அழைப்பர். இது கற்றலில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது காரணம் இந்தக் கல்வி முறையானது மாணவன் சுயமாகச் சிந்தித்தல், தன்னைத்தானே மதிப்பிடல், தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளல், குறிக்கோளுடன் செயற்படுதல், மற்றும் கற்றலை நோக்கிய இடைவிடாத ஆர்வம் போன்ற நல்ல வாய்ப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மின்கற்றலின் வரவிற்கு முன்னைய காலப் பகுதியிலே ஒரு மாணவன் புத்தகம் படித்துக் கொண்டே ஒரு பாடலைக் கேட்க விரும்பினால் இரண்டு வளங்களைப் பயன் படுத்த வேண்டியிருந்தது. ஒன்று புத்தகம் மற்றையது பாடல் ஒலிக்கும் சாதனம். ஆனால் தற்கால கணினி யுகமோ மின்கற்றல் அல்லது இணைய வழி ஊடாக பல வளங்களை அதாவது படங்கள் Visuals pictures, அசைவுப் படங்கள் Animations, படவரைபு Graphics, ஒலி Audio, மற்றும் ஒளிக்காட்சிகள் Video, என்பனவற்றை ஒன்று சேர்த்து மாணவனுக்கு உயிரோட்டமான கற்றலை வழங்குகின்றது.
பழமொழி என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கு அந்தச் சொல்லிலேயே விளக்கம் இருப்பதை நாம் காணலாம். பழைய மொழி, பழகிப்போன மொழி, பழக்கத்தில் வந்துவிட்ட மொழி மூதறிவிலிருந்து தோன்றிய மொழி, நினைப்பிற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வரும் மொழி பழமொழி எனக் கூறலாம்.
நாம் நாள்தோறும் பேசும் வாக்கியங்கள் அவ்வப்போது எம்மால் அமைக்கப்படுவன. அவை அவ்வப்போதைய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்துவிட்டு மறைந்து போகின்றன. எனினும் சிற்சில வாக்கியங்கள் பொருட்சிறப்பு மிக்கவையாகப் பிறந்து மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் தகுதியைப் பெற்றுவிடுகின்றன. அத்தகைய வாக்கியங்களே பழமொழிகளாக நிலைக்கின்றன. பழமொழிகள் யார் எப்பொழுது இயற்றினார் என்று சொல்ல முடியாது. அவற்றிற்கு இலக்கணமோ வரையறையோ கிடையாது. மேலும் பழமொழிகளுக்கு எழுதா இலக்கியம் என்ற பெயரும் உண்டு. நம் முன்னோர்கள் அனுபவரீதியாகப் பெற்ற அறிவைக் கொண்டே பழமொழிகளைக் கூறினர். அவைகள் கற்பனை சிறிதும் கலவாத வாழ்க்கை நெறி மற்றும் இலக்கிய வடிவங்கள். அவை சமுதாயத்தின் பொதுச்சொத்து. நீதியைக் கூறி வாழ்க்கையை நேர்மைப்படுத்தும் கருத்துக்களைப் பொதித்து வைத்திருப்பதால் பழமொழிகள் காலத்தை வென்று சிறப்போடு வாழும் தன்மையை பெறுகின்றன. எல்லோராலும் என்றும் ஏற்கத்தக்கவையாக அவை திகழ்கின்றன. உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் நீதி போதிக்கும் பழமொழிகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழ் மொழியிலே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றொரு பழமொழி நெடுங்காலமாக தமிழர்களால் சொல்லப்பட்டு வருகின்றது. இதனுடைய கருத்தும் இலகுவாக பெரும்பாலானோர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது ஊகிக்கப்படுகிறது. அதாவது கணவன் என்பவன் கல்லாக இருந்தாலும் சரி அல்லது புல்லாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணானவள் அவனை தனது இதயத்தில் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறாள். ஆனால் இந்தப் பழமொழியும் சரி இதனது பொருளும் சரி மேலெழுந்தவாரியாகத்தான் இங்கே பார்க்கப்படுகிறது. காரணம் இந்தப் பழமொழியானது தனது சரியான வடிவத்தினின்று சிதைந்து காணப்படுகின்றது. இதனது ஆரம்பத் தோற்றமானது கல்லானானாலும் கணவன் புல்லனானாலும் புருசன் ஆகும். அதாவது கணவனானவன் கல்லாதவனாக (படிக்காதவனாக) இருந்தாலும் சரி அல்லது புல்லனாக (சுகதேகி இல்லாமல்) இருந்தாலும் சரி அவனை மனைவியானவள் எப்போதும் தனது இதயத்தில் உயரிய இடத்திலேயே வைக்கிறாள். இதுதான் எமது தமிழ்க் கலாச்சாரம். மேலும் பல பழமொழிகள் சிறப்புக்குரிய அம்சங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன. சிந்திக்கத் தூண்டுகின்ற ஆழமான கருத்துக்களை குறுகலான வாக்கிய அமைப்பில் அவை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக வீட்டுக்கு நல்லவளை வை என்னும் பழமொழியை எடுத்துக் கொண்டால் இதிலே இரண்டு பொருள்களைக் காணலாம். ஒன்று ஒரு வீட்டிலே ஓர் ஆணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கின்றபோது ஆண் வீட்டார் ஒரு நல்ல பெண்ணைத்தான் தேடுவார்கள். காரணம் வீட்டுக்கு அடி எடுத்து வைப்பவள் ஒரு நல்ல பெண்ணாக இருந்தால்தான் அந்த வீடு துலங்கும். இரண்டு வீடு ஒன்று கட்டி முடித்ததும் அதற்கு கூரை போட வேண்டும். கூரை போடுவதற்கு கட்டி முடித்த சுவர்கள் மேல் மரத்தினாலான வளை வைக்க வேண்டும். அந்த வளை நேராகச் சீராக இருந்தால்தான் கூரை திடமாகவும் எடுப்பாகவும் இருக்கும். எனவே பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அவை புலப்படுத்தும் கருத்துக்களோ ஆழமாக இருக்கும்.
பழமொழியும், தமிழ் மொழியும், கணினி மயப்படுத்தலும்
தமிழில் ஏராளமான பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை தக்கவாறு எடுத்துக் கொண்டால் மாணவர்களது பேச்சும் எழுத்தும், வலிமையும் ஆற்றலும் பெறும் என்பது திண்ணம். பழமொழிகள் மூலம் அனுபவம் பேசுகிறது. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கூற்றுக்கிணங்க அந்த நல்வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ விடயங்களை பழமொழிகள் மூலம் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாகத் தமிழ் வசன அமைப்பின் தன்மையையும் அதனுள் பொதிந்திருக்கும் மேலோட்டமான மற்றும் ஆழமான கருத்துக்களையும் பழமொழிகள் மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்றொரு பழமொழி தமிழில் உள்ளது. இது இரு பொருள்களை பிரதிபலிக்கின்றது. ஒன்று இதனுள் அமைந்துள்ள சொற்களின் மேலோட்டமான கருத்தின் மூலம் ஒரு பொருளை அவதானிக்க முடியும். அதாவது அடுத்தவர்களின் பிள்ளைகளை நாம் பாசத்தோடு பார்த்தால் நம் சொந்தப் பிள்ளைகளில் பாசமும் நல்ல குணங்களும் தானாகவே வந்து சேரும் என்பதாகும். இதனை ஆங்கிலத்தில் Endocentric construction என அழைப்பர். உதாரணமாக, தேங்காய் எண்ணெய் Coconut oil என்று சொல்கின்ற போது தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் எனப் பொருள் படுகிறது. குறிப்பிடப்பட்ட பழமொழியின் இரண்டாவது பொருளை நோக்குமிடத்து ஒருவனுக்கு அவனது மனைவியானவள் ஊரார் பிள்ளையாக இருக்கின்றாள். அதாவது, அடுத்தவர்கள் பெற்று வளர்த்த மகள். அவள் கர்ப்பிணியாக (pregnant) இருக்கின்ற போது அவளை அவன் அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து பராமரிக்கின்ற போது அவள் வயிற்றிலே வளரும் அவனது குழந்தையும் நல்ல ஆரோக்கியமாக பிறக்கும் என்பதேயாகும். இவ்வாறு சொற்களின் கருத்துக்களை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாகப் பொருள் படும்படி பார்க்கப்படும் இந்த வசன அமைப்புக்களை ஆங்கிலத்தில் Exocentric construction என அழைப்பர். உதாரணமாக Baby oil என்று கூறுகின்ற போது குழந்தைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் என பொருள் கொள்ளலாகாது. மாறாக குழந்தையின் பாவகைகாக தயார் செய்யப்படும் எண்ணெய் என பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பழமொழிகளை கற்கின்ற போது தமிழ் அறிவு மாணவர்களிடத்தே பெருகுகின்றது.
தமிழ் மொழியின் இலக்கண கர்த்தாவாகிய தொல்காப்பியரே பழமொழிகளை முதுமொழி எனக் கூறிச் சிறப்பித்துள்ளார். இவ்வளவு சிறப்புப் பெற்ற பழமொழிகளை 1842 ஆம் ஆண்டு பெர்சிவல் (Percival) முதன்முதலில் தொகுத்து வெளியிட்டார். 1870 ஆம் ஆண்டு லாரி (Larry) பழமொழி பற்றிய நூலொன்று வெளியிட்டார். பழமொழிகளைத் தொகுத்து வெளியிடுவதில் எமது தமிழ் அறிஞர்களும் பின்னிற்கவில்லை. 1874 ஆம் ஆண்டு இராமசாமி அய்யங்கார் தமிழ்ப் பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் சேகரித்து நூலொன்று வெளியிட்டார். 1877 இல் வேணுகோபால் நாயுடு பழமொழிப் புத்தகம் எனும் நூலை வெளியிட்டார். மேலும் 1888 ஆம் ஆண்டு குப்புசாமி நாயுடுவும் கருப்பண்ண பிள்ளையும் இணைந்து தமிழ்ப் பழமொழிகளைச் சேகரித்து நூலாக வெளியிட்டனர். இவ்வாறு அறிஞர்களின் பழமொழிகள் பற்றிய தொகுப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் இவற்றை கணினியில் மேற்கொள்ளும் மின்கற்றல் முறைக்கு உறுதுணையாக காணப்படும் பென்பொருள் வடிவிலான தொகுப்புகள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே சிந்திக்கத் தூண்டுகின்ற வகையில் குறுகலான வாக்கிய அமைப்பில் ஆழமான விடயங்களைச் சொல்லும் இந்தப் பழமொழிகளை கணினி மயப்படுத்தல் என்பது காலத்தின் தேவையாக உள்ளது.
சூழலும் பழமொழியும்
அன்னைத் தமிழில் ஆயிரமாயிரம் பழமொழிகள் பரவிக்கிடக்கின்றன. மனிதனுக்கு மட்டுமல்ல, மாட்டுக்குக்கூட பழமொழிகள் உண்டு. மரம், செடி, கொடிகளுக்குக்கூட பழமொழிகள் ஏராளம் உண்டு. எனவே பல கருப்பொருள்களில் சூழலின் தன்மைக்கேற்ப பழமொழிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது கீழே விளக்கப்படுகிறது.
• கருப்பொருள்
• ஒற்றுமையே பலம்
• அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
இப் பழமொழி நமக்குப் புலப்படுத்தும் உண்மை என்ன? அடம்பன் கொடி என்பது இலகுவில் அறுத்து விடக் கூடிய ஓர் மிருதுவான கொடியாகும். ஆனால் இக்கொடிகள் பல சேர்ந்து ஒன்றிணைந்திருந்தால் அவற்றை அறுப்பது மிகவும் சிரமம். இதே போல் மனிதர்கள் பலர் சேர்ந்து ஒற்றுமையாக இருப்பார்களாயின் அவர்களைப் பிறர் எளிதில் வென்றுவிட முடியாது. ஓற்றுமையே பலம் என்ற உண்மையை உரைக்கும் இப்பழமொழியின் உள்ளார்ந்த கருத்தினை உணர்ந்து செயற்படின் நம் வாழ்வு நலம் பெறும் என்பது திண்ணம்.
1 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
இன்றைய உலகில் ஒருவன் தனித்து வாழ முடியாதுள்ளது. அவன் பலருடன் கூடி வாழ வேண்டியவனாக இருக்கின்றான். ஒருவன் தனித்து ஒரு தொழிலைச் செய்வதை விட பலருடன் கூடிச் செய்யும் போது சிரமமில்லாமல் எளிதாகவும் இலாபகரமாகவும் அதனைச் செய்திட முடியும். மேலும் இதன் மூலம் அதிக நன்மையும் விளையும்.
2 எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்.
(இப்பழமொழியினதும் கீழ்வரும் பழமொழிகளினதும் முழுமையான விளக்கம் மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ளளது.)
முக்கியத்துவம் அச்சாணியில்லாத் தேர் முச்சாணும் ஓடாது.
3. அளவை மீறல்
1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
4. விடயப்புலமையின்மை
1. ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம்.
5. ஆராய்ந்து செய்தல்
1. ஆழமறியாமல் காலை விடாதே.
6. பெரியோரும் தவறலாம்
1. ஆனைக்கும் அடி சறுக்கும்.
7. திருப்தியற்ற மனம்
1. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை
8. வீண் பெருமை
1. எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.
2. குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்.
9. விடா முயற்சி
1. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
2. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
3. முயற்சி திருவினையாக்கும்.
4 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
10. பேராசை
1. பேராசை பெரு நட்டம்.
2. அரசனை நம்பி புருசனைக் கை விடாதே.
3. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
11. உத்தம நட்பு
1. அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்.
12. அவசரம் காட்டாமை
1. பதறிய காரியம் சிதறும்.
2. அவசரக் காரனுக்கு புத்தி மத்திமம்.
13. நன்றியுணர்வு
1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
14. காலத்தின் மகிமை
1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
2. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
15. தருமம்
1. தருமம் தலை காக்கும்.
2. இட்டுக் கெட்டார் எங்குமில்லை.
16. வஞ்சகம்
1. அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும்.
17. இளமையின் சிறப்பு
1. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
18. சிறிதுக்கும் சிறப்புண்டு
1. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
2. சிறுதுளி பெரு வெள்ளம.;
19. பிடிவாதம்
1. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.
20. விவேகம்
1. வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்.
இம் மென்பொருளினால் விளையும் நன்மைகள்
பழமொழிகளை கணினிமயமாக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகளை பட்டியலிடலாம்.
• மாணவர்களின் சுயமான, முனைப்பான கற்றலுக்கு அதிக வாய்ப்பு இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் குழுவாகவும் கற்க முடிகிறது. இதனால் அவர்களிடையே தன்னம்பிக்கை, குழு உணர்வு, கருத்துப் பரிமாற்றம், மற்றும் தோழமை உணர்வு என்பன வலுப் பெறுகின்றன.
• மாணவர்களின் வசனப் படைப்பாற்றல் (Syntactic competence)) பெருகுகிறது.
• சூழலுக்கேற்ப மாணவர்கள் மொழியைப் பிரயோகிக்க முடிகிறது.
• மாணவர்களுக்கும் கணினிக்குமிடையெயான உறவு நெருங்குகிறது.
• இம் மென்பொருள் பாவனையால் கிடைக்கப் பெறும் அறிவினூடாகவும் அனுபவத்தினூடாகவும் எதிர்காலத்தில் மிகையாக இருக்கும் கணினி-வழி தமிழ் மொழி கற்றல் பயன்பாடுகளுக்கு மாணவர்களால் ஈடு கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
• கணினி ஊடாக தமிழ் மொழியைப் கற்க மற்றும் பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் இது ஓர் நல்ல கற்றல்-கற்பித்தல் உபகரணமாக இருக்கும்.
மென்பொருள் நெறிமுறை
புத்தகங்களிலிருந்தும், கற்றவர்களிடமும், மற்றவர்களிடமுமிருந்தும் பழபொழிகள் சேகரிக்கப்பட்டு கருப்பொருள் ரீதியாகவும் சூழலின் தன்மைக்கேற்றவாறும் அவை தரம் பிரிக்கப்பட்டு Visual Basic கணினி மொழி உதவியோடு கீழே உள்ள இம் மென்பொருள் ஆக்கப்படுகிறது.
மென்பொருளின் ஒரு தோற்றம்
முடிவுரை:
இன்றைய அறிவியல் உலகில் தகவல் தொழினுட்பத்துறையில் நிகழ்ந்து வரும் கண்டுபிடிப்புக்கள் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதை நாம் எல்லோரும் அறிவோம். கற்றல் கற்பித்தலில் கணினியும் இணையமும் அருமையான இன்றியமையாத துணைக் கருவிகள் ஆகிவிட்டன. இவற்றை நாம் சிறந்த முறையில் பயன் படுத்தினால் அவை நிச்சயமாக மாணவர்களின் முன்னெற்றத்திற்கு உதவும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பழமொழிகளைக் கணினி மயப்படுத்தவதன் மூலம் எமது பழந்தமிழின் சிறப்பையும் அதன் சீர் அமைப்பையும் அது கூறும் வலிவையும் பொலிவையும் மக்களுக்கு வழங்க முடியும் என்பதில் கட்டுரையாளர்களாகிய தமிழர்கள் நாங்கள் பெருமையடைகின்றோம்.
உறுதுணை நூல்கள்
1. சண்முகலிங்கம்.க,1995, தமிழ் நாட்டார் வழக்காற்றியல்
2. துரைசிங்கம்.த, 2004,பாடம் புகட்டும் பழமொழிகள்
3. வரதராசன்.மு, மொழி வரலாறு
4. அருணாசலம்.க, இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்
அனுப்பியவர்: துரை மணிகண்டன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.