அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஈழநாதனின் வலைப்பதிவுகள்!
1. ஈழநாதம் அல்லது ஈழநாதம் குடில்: ஈழநாதம் என்பது அவரது பிரதானமான வலைப்பதிவு. அதன் இணையத்தள முகவரி: http://eelanatham.blogspot.ca/ தற்பொழுதும் இந்த வலைப்பதிவு இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. இந்த வலைப்பதிவின் குறிக்கோள் அறிக்கையாக 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு,நூல் விமர்சனங்கள்,அறிமுகங்கள், காலத்தால் அழியாத படைப்புகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது வலைப்பதிவின் நோக்கம் பற்றிய குறிப்பொன்றினையும் மேற்படி வலைப்பதிவினில் காண முடிகின்றது. அக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:
Tuesday, April 13, 2004 : வணக்கம் நண்பர்களே! வலைப்பதிவுகள் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்து இலக்கியங்களுக்கு தனி இடம் உண்டு.அந்தவகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஆரம்பத்தையும் தற்போதைய போக்கையும் ஆராய்வதும் கவிதைகள் பாடல்கள் இன்னும் பிற இலக்கியங்களை நயப்பதுமே இவ்வலைப்பதிவின் நோக்கம். இப்பதிவுகள் பல்வேறு இணையத் தளங்களிலும் காணப்பட்ட போதிலும் அவற்றை ஒருங்கு திரட்டி ஒரே தளத்தில் எழுத்துரு பிரச்சனையின்றித் தருவதே எனது நோக்கம் எமது அரிய இலக்கியங்களை வரும் சந்ததிக்கும் எடுத்துச்செல்லும் எனது சிறு முயற்சிக்கு உங்களின் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்............. - ஈழநாதன்
மே 2006, வியாழனற்று தனது ஈழநாதம் குடிலை (தனது ஈழநாதம் வலைப்பதிவினை ஈழநாதம் குடில் என்றே ஈழநாதன் குறிப்பிடுகின்றார்.) 'ஈழநாதம் குடிலை யாழ் தளத்திற்கு இடம் மாற்றி விட்டேன் அங்கு வந்து பாருங்கள்' என்று 'இடமாற்றம்' என்னும் தலையங்கமிட்டு சிறியதொரு அறிக்கையினை அவர் தனது வலைப்பதிவினில் வெளியிட்டிருக்கின்றார். அத்தளத்தின் இணையத்தள முகவரியை http://www.eelanatham.yarl.net/ என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அந்த இணையத்தள முகவரி என் கணினியில் இயங்கவில்லை. http://eelanatham.blogspot.ca என்னும் முகவரியே இயங்கும் நிலையிலுள்ளதாகத் தெரிகிறது.
மேற்படி 'ஈழநாதம் குடில்' வலைப்பதிவிலுள்ள தன்னைப் பற்றிய விபரக் குறிப்பினில் (Profile)) ஈழநாதன் தனது வலைப்பதிவுகளாகப் பின்வரும் வலைப்பதிவுகளைப் பட்டியலிட்டிருக்கின்றார்: ஈழநாதம், "அக"விதைகள், படிப்பகம், படைப்பு, சலனச்சுருள், சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு, சிங்கை முரசு. ஏப்ரில் 2004இலிருந்து வலைப்பதிவராக அவர் இருப்பதையும், இதுவரையில் அவர் பற்றிய விபரக் குறிப்பானது 8145 தடவைகள் பார்க்கப்பட்ட தகவலையும் , அவரது இருப்பிடம் சிங்கப்பூர் என்ற விபரத்தையும் அவர் பற்றிய விபரக் குறிப்பு தருகின்றது. [ நன்றி: http://www.blogger.com/profile/06819662477238200109 ]
மேலுள்ள வலைப்பதிவுகளில் ஈழநாதம், "அக"விதைகள், படிப்பகம், படைப்பு, சலனச்சுருள் ஆகிய ஐந்து வலைப்பதிவுகளுமே ஈழநாதனது வலைப்பதிவுகளாகும். சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு, சிங்கை முரசு ஆகியவற்றையும் அவர் தனது வலைப்பதிவுகளின் கீழ் பட்டியலிட்டிருந்தாலும் அவை அவரது வலைப்பதிவுகளல்ல. சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு எழுத்தாளர் ரோசாவசந்தால் சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்புக்காக உருவாக்கப்பட்ட வலைப்பதிவு. சிங்கை முரசு சிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம் என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு வெளியாகும் வலைப்பதிவு. அதன் பங்களிப்பாளர்களாக விஜயகுமார், எம்.கே.குமார் , மானஸாஜென் , பாலு மணிமாறன் , ஈழநாதன் ,ஜெயந்தி சங்கர், அருள், அன்பு, ரம்யா நாகேஸ்வர்ரன், குழலி, அல்வாசிட்டி.சம்மி, நட்டு, BioSwami ஆகியோர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இவ்விரு வலைப்பதிவுகளையும் தனது வாசகர்களுக்காக அறிமுகம் செய்யும்பொருட்டு அவற்றையும் தன் வலைப்பதிவுகளின் கீழ ஈழநாதன் பட்டியலிட்டிருக்கவேண்டும்போல் தெரிகின்றது.
2.அக'விதைகள் வலைப்பதிவு [http://akavithai.blogspot.ca/] : தனது ஏனைய வலைப்பதிவுளுக்கெல்லாம் 'குறிக்கோள் அறிக்கை'யினைத் தெரிவித்திருக்கும் ஈழநாதன் தனது 'அக'விதைகள் வலைப்பதிவுக்கு மட்டும் எந்தவிதக் குறிக்கோள் அறிக்கையினையும் (Mission Statement)) தெரிவிக்கவில்லை. இந்த வலைப்பதிவில் ஈழநாதன் பதிவு செய்திருக்கும் சில குறுங்கட்டுரைகள் அவ்வலைப்பதிவின் நோக்கத்தினைப் புலப்படுத்துகின்றது. அவற்றில் சிலவற்றை இத்தருணத்தில் அசைபோடுவது பயன்மிக்கதே. அவற்றில் சிலவற்றைக் கீழே வாசிக்கலாம்:
2.1 நீட்டிக்கப்படும் உயிர்வாழ்க்கை ( Tuesday, September 21, 2004): காலையிலிருந்து வானொலி அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டுமொருமுறை உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம். தொலைக்காட்சியில் கூட அடிக்கடி காட்டினார்கள். சிரித்த முகத்துடன் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள். தேவதைகள் ஆசீர்வதித்தன. தேவர்கள்பூமாரி பொழிந்தனர். வானத்திலிருந்து அசரீரியாய் வானொலி பெருங்குரலெடுத்து அலறியது. சமாதான முன்னெடுப்பாய் உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு உயிர்வாழ மட்டுமேஅனுமதி. படிப்படியாக வெளியே நடமாடவும் பிற செயற்பாடுகளுக்கும் அனுமதி கிடைக்கும், அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டார்கள். இப்படியாக வானொலியும்தொலைக்காட்சியும் சேதி சொன்ன காலையொன்றில், பக்கத்து வீட்டண்ணன் சுடப்பட்டிறந்தான். "ஒருவேளை உயிர்வாழ்வதற்கான அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்." தன்னைத்தானேதேற்றிக்கொள்ளும் அவனது தந்தை! [ இதற்கு 8/05/2005 08:57:00 காலை சோமி என்பவர் 'கனதியான மிக அமைதியான பொழுதொன்றில் உங்கள் பதிவு வாசிக்க கிடைத்தது. படுகொலை செய்து புதைக்கப்பட உடல்கள் நிரப்பட்ட குழியில் இருந்து வெளியே வந்தோம்/ சகதி கழுவ தண்ணீர் அள்ளினோம் கிணற்று வாளியில் இருந்து இரத்தம் வழிந்து என் உடல் கழுவியது. தொடர்ந்து எழுதுங்கள்' என்றொரு குறிப்பினையிட்டிருக்கின்றார். ]
3. வலைப்பதிவு படிப்பகம் [http://padippakam.blogspot.ca/] ஈழநாதனின் இன்னுமொரு வலைப்பதிவு. அதன் குறிக்கோள் 'புத்திலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள்.படைப்பு பற்றிய பார்வை.வாசக எண்ணம்' ஆகியவைகளாகுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வலைப்பதிவிலிருந்து பதிவுகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
3.1 Sunday, November 27, 2005. அகவணக்கம் , தமிழீழ விடுதலை/தமிழர்களின் விடுதலை என்னும் பெருங்கனவிற்காய் தமது இன்னுயிரை ஈந்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மரணித்த பொதுமக்களையும் இந்நாளில் நினைவு கூருகிறேன். அவர்களுக்கு எனது அகவணக்கம். நாம் இழந்து போன இந்த ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை. ஓருயிரை தியாகி என்றும் இன்னோருயிரை துரோகி என்றும் கட்டமைக்கும் ஒருபக்கத்தினரைப் போலவே ஓருயிரை மக்கள் நேசர்கள் என்றும் இன்னோருயிரை பயங்கரவாதிகள்/தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கட்டமைக்கும் இன்னோரு பக்கத்தினரையும் மறுக்கிறேன். [பதிவு செய்தவர்: ஈழநாதன்.]
3.2. 'புரகந்த களுவற' [Friday, September 23, 2005]
- ஈழநாதன் -
இலங்கை இனப்பிரச்சனையினதும் தொடரும் யுத்தத்தினதும் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் 'புரகந்த களுவற'(Death on a full Moon Day) தற்போதைய சிங்கள திரைத்துறையின் சிறந்த இயக்குனரான 'பிரசன்ன விதானகே'யால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் நிறைந்த பாராட்டுக்களோடு நிறையவே சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது. இலங்கையின் நாகரீகங்கள் பெரிதும் வந்தடையாத குக்கிராமம் ஒன்றிலிருந்து இராணுவத்தில் சேர்ந்து போருக்குப் போன சிங்கள இளைஞனின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்படுகின்றது.
வயதான கண்பார்வை இல்லாத தந்தை.திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குக் தாயாகிய மூத்த சகோதரி,திருமணத்திற்குக் காத்திருக்கும் இளைய சகோதரி.அவளது திருமணப்பரிசாகக் கட்டப்பட்டு அரைகுறையில் நிற்கும் வீடு.இவ்வளவும் இராணுவத்தினனான அந்த இளைஞனின் மதாந்திர உழைப்பை நம்பியே நடக்கின்றன.
ஒரு பூரணை நாள் ஒன்றில்(பௌத்தர்களுக்கு பூரணை விசேட வழிபாட்டு தினம்)போரில் இறந்து போன இராணுவ வீரனது பூத உடலைத் தாங்கியவண்னம் கார் ஒன்று அவர்களது வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்து வருகிறது. தனது மகன் போரில் இறந்திருப்பான் என்பதை நம்ப தந்தை தயாரில்லை.மகன் உயிருடன் இருக்கிறான் என்றே அவர் நம்புகிறார்.உடலைச் சுமந்து வந்த இராணுவத்தினரோ இறந்ததை உறுதிப்படுத்துகிறார்கள்.
சகோதரனின் முகத்தைப் பார்க்க விரும்பிய சகோதரிக்கு போரில் அவனது உடல் சிதைந்துவிட்டதாகக் கூறி பூத உடலைத் தாங்கிய பேழையை திறக்க மறுக்கின்றனர். சகோதரிகள் புலம்ப, வயோதிகத் தந்தை அதிர்ச்சியோடு செயலற்று நிற்க மழை சோவெனப் பெய்து கொண்டிருக்க அவர்களது நிலத்திலேயே மகன் உடல் புதைக்கப்படுகிறது.தந்தையும் வேண்டா வெறுப்பாக மதச் சடங்குகளைச் செய்கிறார்.
அடுத்த நாள் தந்தையை தேடி வரும் கிராம சேவகர் இராணுவத்தில் இருந்து இறந்தவர்களுக்குக் கிடைக்கும் நட்ட ஈட்டுக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அதை நிரப்பித் தந்தால் தான் பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.அத்தோடு அந்தப் பணம் வருமிடத்து வீடு கட்டுவதற்காகத் தன்னிடம் வாங்கிய கடனைத் தருமாறும் சொல்கிறார். மகன் இறக்கவில்லை என உறுதியாக நம்பும் தந்தை அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.
வீட்டில் வறுமை தாங்கமுடியாத இளைய மகள்.தன்னை மணம்புரிவதற்காகக் காத்திருப்பவனது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்கு வேலைக்குப் போகிறாள்.தந்தையின் முடிவு எல்லாவற்றையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்கிறாள்.
நட்ட ஈட்டுக்கு விண்ணப்பிக்கக் கோரி கிராம சேவகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்குதல் கொடுக்கிறார்.அதனை ஏற்றுக்கொண்டால் தான் மகன் இறந்ததை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் தந்தை நட்ட ஈட்டை ஏற்க மறுக்கிறார்.
இதேவேளை மகன் பண்டாரவினது மூன்றாவது மாத நினைவுக்காய் தானம் வழங்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறார் கிராமத்து மதகுரு.செய்வதறியாத நிலையில் மூத்த மகளும் அவள் கணவனும் வயோதிகரை நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும்படி நெருக்கிறார்கள்.
இளைய மகளைத் திருமணம் செய்யவிருந்தவனோ வீட்டு வறுமையைத் தீர்ப்பதற்கு தானும் பண்டார வழியில் இராணுவத்திற்குச் சேர்வதுதான் ஒரே வழியென்ற முடிவுக்கு வருகிறான்
அடுத்த பௌர்ணமியும் வருகிறது.பண்டாரவின் நினைவாய் தானம் வழங்க ஆயத்தம் நடக்கிறது.தந்தையால் பொறுக்க முடியவில்லை.மண்வெட்டியுடன் போய் மகனைப் புதைத்த குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறார்.மகள்களின் அழுகுரல் கேட்டு ஊராரும் கூடிவிடுகிறார்கள்.கிழவனாரைத் திருப்திப்படுத்தவேண்டி மருமகன் புதைகுழியைத் தோண்டி பேழையை வெளியே எடுக்கிறான் அனைவரும் சேர்ந்து பேழையைத் திறக்கிறார்கள்.உள்ளே இரண்டு மரக்குற்றிகள் துணியாற் சுற்றப்பட்டு வைக்கைப்பட்டிருக்கின்றன.
இதுதான் படத்தின் கதை.சிங்களத் திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு மிக அருகிலானவை என்பார்கள்.அந்த வகையில் இது யதார்த்தத்தை எந்தவித மிகைப்படுத்தலுமின்றி அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை,மதகுருக்கள் இடையிலான உறவு என்பன அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன. வயோதிகத் தந்தை வன்னிஹாமியாக பிரபல நடிகர் ஜோ அபேவிக்ரம திறம்படச் செய்திருக்கிறார்.
மொத்தம் 75 நிமிடங்களே நகரும் படம் முடியும் வரைக்கும் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது. இந்தப் படம் நாட்டுக்காகப் போராடும் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி அதற்குக் தடைவிதிக்குமாறு பிரசன்னா விதானகே மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பல்வேறு மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார்.ஒரு கிராமத்து ஏழைக் குடும்பத்து இராணுவ வீரன் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியதற்கான எதிர்ப்பு அது
சிங்களத் திரைப்படங்களை வாங்க விரும்புபவர்களுக்கு (கீத்துகொட்டாய் அண்ணாச்சி சன்னாசிக்கு இந்தப் பதிவு)
கருத்துகளில் சில:
ஜெயந்தி சங்கர்: அன்புள்ள ஈழநாதன், இந்தப்பதிவு நான் இதுவரை அறிந்திராத சிங்க்ளத் திரைப்படத்தினைப் பற்றிய நல்ல ஒரு அறிமுகமாக அமைந்தது. இந்தப்பதிவே படத்தின் அழுத்தத்தைக் கொணர்ந்துவிட்டது. மனதைத் தொடும் கதை! பதிவுக்கு நன்றி! நட்சித்திர வாரத்திற்கு( தாமதமாக :)!) வாழ்த்துக்கள். அன்புடன், ஜெயந்தி சங்கர்
கலாநிதி: இந்த திரைப்படத்தை பார்தவர்களில் நானும் ஒருவன் பூரனையில் இருட்டு என்பது தமிழாக்கமாகும்.ஆனையிறவு சண்டைக் காலத்திலே இப் படம் வெளிவந்தது.இதை பார்த்தபோதுதான் யுத்தத்தின் இன்னொருமுகம் வெளிப்பட்டது.தடைவிதிக்கப்பட்டது உண்மை பின் நீக்கப்பட்டது.
3.3 இது என் புராணம் [Tuesday, September 20, 2005 ]
- ஈழநாதன் -
யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம் இப்படி யாராவது யாழ்ப்பாணத்தவர் பெருமையடிச்சுக் கேள்விப்பட்டிருக்கிறியளோ? ஊர்ப்பெருமை பேசுவதற்கு மற்றெந்த ஊர்க்காரரையும் விட குறைந்தவர்கள் இல்லை.யாழ்ப்பாணத்தார் அதாவது நாங்கள்.அப்படி எங்கள் ஊரைப்பற்றி நாங்களே பெருமையாச் சொல்லிக்கொள்ளுற ஒரு விசயம் எங்கடை கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம். உன்னிப்பாப் பார்த்தால் இதிலை கலாச்சாரமும் இல்லை ஒரு மண்ணுமில்லை.வாழையடி வாழையாக கந்தபுராணம் வீடுகளில் படிக்கப்பட்டு வந்தது.அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி கந்தபுராணக் கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது.அவ்வளவுதான் என்பது புரியும்.ஏதோ கந்தபுராணம் படிச்சு அதைப் போலவே வாழ்க்கை நடத்தினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனால் தமிழை வளர்க்கிறதிலையும் சைவ சமயத்தை வளர்க்கிறதிலையும் கந்தபுராணப் படிப்புச் செலுத்திய செல்வாக்கு குறைச்சு மதிப்பிட முடியாதது.
மூன்று நான்கு தலைமுறையளுக்கு முந்தி படிப்பெண்டா உத்தியோகத்துக்கு மட்டுமே என்றிருந்த காலத்திலை.நாலெழுத்தாவது படிக்கவேணும் என்ற தூண்டுதலுக்கு கந்தபுராணாம் காலாக இருந்திருக்கிறது.கந்தபுராணம் படிச்சுப் பொருள் சொல்லத் தெரிந்தவன் ஊருக்குள்ளை நாலெழுத்துப் படிச்சவன் என்ற மதிப்பைப் பெறுவான்.அந்த மதிப்பின் பொருட்டு ஊருக்குள்ளை வாற பிரச்சனையளுக்கு தீர்வு சொல்லுறதிலை இருந்து அரசாங்க உத்திரவுகளைப் படிச்சுக் காட்டுறதுவரை உந்த புராணம் படிக்கிறாக்களிட்டையே எல்லாரும் வருவினமெண்டு அம்மம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.
யாழ்ப்பாணத்துப் பழைய வீடுகளை யாராவது பார்த்திருப்பியள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பியள்.குடிசைகள் வீடான நேரத்திலை கட்டப்பட்டவை அனேகமாக நாச்சார் வீடுகள் தான் நடுவிலை முற்றம் வைச்சு சுற்றி வரக் கட்டப்பட்ட வீடுகள்.
முற்றத்துக்கு நாற்புறமும் அரைச்சுவருடன் கூடிய திண்ணை இருக்கும். இதைத் தவிர வீட்டுக்கு வெளியிலும் வாசற்படிக்கருகில் திண்ணை கட்டியிருப்பார்கள் இந்தத் திண்ணைகள்தான் புராண படனத்துக்குரிய இடம்.திண்னையை அண்டிய சுவற்றில் மாடங்கள் கட்டப்பட்டிருக்கும் அதுதான் புத்தகம் வைக்கிற இடம்.சிலர் அந்த மாடத்துக்குள்ளை விளக்கும் ஏற்றி வைச்சிருப்பினம்.
நாங்கள் பிறந்த நேரத்திலை இப்படியான வீடுகளும் அருகி புராணப் படிப்பும் அருகிப்போய்விட்டாலும் அப்படி ஒரு வீட்டை நான் பார்த்திருக்கிறன்.அந்த வீட்டை வாத்தியார் வீடு என்பார்கள்.ஆனால் அந்த வீட்டில் யாரும் ஆசிரியராக இருந்ததில்லை.காலம் காலமாக கந்தபுராணம் படித்து பொருளும் சொல்லி அதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்ததால் அது வாத்தியார் வீடாகிவிட்டது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக புராணப் படிப்பு நடக்கும் இடங்கள் சிலவற்ரைக் கடந்துதான் சிறுவயதில் படிக்கப்போவது வழக்கம். அப்படிப் போற நேரத்தில் கந்த புராணதினாலோ அல்லது பாடுபவராலோ கவரப்பட்டு நானும் இருந்து கேட்க ஆரம்பித்தேன். புராணம் பாடுபவரைப் பார்த்தாலே பக்தி தன்பாட்டிலை பெருக்கெடுக்கும்.தண்ணீரிலை குழைச்சுப் பூசிய மூன்று திருநீற்றுக் குறி நெற்றியிலை பளிச்செண்டு இருக்கும்.நடுமத்தியிலை சந்தனம் குங்குமம் பொட்டு. அதே மாதிரி மார்பிலையும் நீறும் சந்தனமும் இட்டிருப்பார்கள்.காதில் ஏதாவது பூ இருக்கும்.நான் பார்த்த இடத்தில் பாடுபவர் இரண்டு காதிலும் இரண்டு செவ்வரத்தப் பூக்களை வைத்திருப்பார்.அந்தப் பூவுக்கும் அவரது குரலுக்கும் சேர்த்து நாங்கள் வைத்த பெயர் லவுட்ஸ்பீக்கர்.அப்படியான கணீர்க் குரலிலே அவர் பாட ஆரம்பித்தால் நேரத்தை மணிக்கூடு பார்க்காமலே சொல்லிவிடலாம்.அப்படியொரு நேரந்தவறாமையை அதிலே கடைப்பிடித்தார்கள்.
பாடுபவருக்கு முன்னாலே விளக்கொன்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்.புத்தகத்தை வைத்து முதுகு வளையாமல் படிப்பதற்காக ஒரு சிறிய பீடமொன்றை வைத்திருப்பார்கள்.எதிரில் பொருள் சொல்லுபவருக்கும் அதே மாதிரியான வசதி இருக்கும்.
முதலில் பாடுபவர் ராகம் போட்டு ஒரு செய்யுளைப் படிப்பார்.எந்தவிதப் பிசிறும் இல்லாமல் பொருள் விளங்கி உச்சரிப்புப் பிழையின்றி படிப்பதைக் கேட்பதே தனி சுகம்.அவர் முடித்ததும் பாட்டின் முதலடியை ராகத்தோடு மறுபடியும் பாடி நிறுத்துவார்.இப்போது பொருள் சொல்பவர் அதே மாதிரி ராகத்தில் நீட்டி முழக்கி பொருள் சொல்லுவார்.பாதிப்பாட்டுக்கள் அனேகம் பேருக்கு பாடம் என்கிறபடியால் புத்தகம் பார்க்காமல் பொருள் சொல்லுவார்கள்.
ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும் சுற்றிவர இருந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.அவர்கள் தானென்றில்லை அந்தத் தெருவால் போறவர்களும் காலாற இருந்து புராணப் படிப்புக் கேட்ட்பதுண்டு.
இப்படி பாடுறதைக் கேட்டு மட்டும் கொண்டிருந்த எனக்கு பாடுறதுக்கும் சந்தர்ப்பம் வந்துது.ஆனால் அது கந்தபுராணமில்லை பிள்ளையார் புராணம்.கார்த்திகை மாதம் இருபத்தியொருநாள் விநாயகசஷ்டி விரதமிருப்பார்கள்.அந்த நேரம் விரதமிருப்பவர்களுக்கு விநாயக புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லவேண்டும்
வழக்கமாகப் பாடுபவ்ர்களின் இறப்பு எங்கடை தலைமுறையை உள்ளே கொண்டுவந்தது.வழக்கமாகப் பாடும் வயதான ஐயாவுடன் நானும் போய் இருந்தால் சபையே என்னை விசித்திரமாகப் பார்த்துச்சுது.எனக்கு குரலெல்லாம் நடுங்கி அழுகைவாறமாதிரி ஆகிப்போச்சுது.முதலே கொஞ்சம் படித்து வைத்திருந்ததாலை தட்டித் தடக்கி முதற்பாட்டை வாசிச்சு முடிச்சன்.என் ராகம் எனக்கே கேட்கச் சகிக்கேலாமல் இருந்துது இரண்டு மூன்று நாளிலை எனக்கு ராகம் பிடிபட்டுப் போச்சு.
அதுக்குப் பிறகென்ன பாவம் விரதமென்று சொல்லி பசியோடிருப்பவர்களை வாட்டு வாட்டென்று வாட்டியதுதான் நான் செய்ததெல்லாம்.
பாட்டெல்லாம் முடிய பாடியதற்குச் சன்மானமாய் பழமும் மோதகம் வடை பொங்கலும் தருவார்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டியதுதானே வேறென்ன வேண்டும்.
என்னதான் விநாயக புராணம்,திருவாதவூரடிகள் புராணம் சித்திரகுப்தர் புராணமென்று படிச்சாலும் கந்தபுராணம் மீது ஆர்வம் போகவில்லை. கந்தபுராணம் படிக்க கொஞ்சநாள் தான் சந்தர்ப்பம் கிடைச்சது அதுக்குப் பிறகு படிக்க ஆளில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது படிக்கப்பட்டும் நாட்களும் படிப்பதற்கு ஆட்கள் பயந்ததற்குக் காரணம்.கிட்டத்தட்ட ஆறுமாதமாகும் முழுப்புராணத்தையும் படிச்சு முடிக்க.திரும்ப ஆறுமாதம் லீவு பிறகு திரும்பவும் ஆரம்பமாகும்.
இப்படியாக படிக்கும் வழக்கம் ஒருத்தரிலை இருந்து ஒருத்தருக்குப் பரவியதும் அதையொட்டி பலர் தமிழ் படித்துப் பண்டிதர்கள் ஆனதையுமே கந்தபுராணக் கலாச்சாரம் என்கிறார்கள் என நினைக்கிறேன்
கந்தபுராணம் கலாச்சாரமோ இல்லையோ செந்தமிழின் இனிமையை இண்டைக்கும் நாவிலினிக்கும்படி ஊற்றிவிட்டிருக்கிறது.ஞாபகத்திலிருக்கும் பாடல்களை சொல்லிப் பார்க்கும் போது அந்த ராகமும் அப்படியே நெஞ்சில் நிற்கிறது
(ஊர்க்கதைகளைச் சுவைபடச் சொல்லும் வசந்தனுக்கும்.ஊர்க்கதையென்றாலே ஆவென்று கேட்கும் மதிக்கும் இது சமர்ப்பணம்)
கருத்துகள் சில:
வசந்தன்: நல்லாயிருக்கு. எனக்கெல்லாம் சமர்ப்பணம் செய்து பெரிய மனுசராக்காதையுங்கோ. உந்தப் பழையகால வீடுகள் பற்றி அறிய ஆவல். நான் பாத்ததுக்க மானிப்பாயில ஒண்டும் வட்டுக்கோட்டையில ஒண்டும் அளவெட்டியில ஒண்டுமெண்டு 3 வித்தியாசமான பழைய வீடுகள் பாத்திருக்கிறன். தட்சனா மருதமடுவில நான்பாத்த வீடுகள் வித்தியாசமானவை. கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே பழையவைதான். அந்த மக்களின் வாழ்க்கைமுறையும் வித்தியாசமானது.
-/பெயரிலி: (ஸ்)கந்த(ப்)புராண(க்)கலாசாரத்துக்கும் நாற்சார்வீட்டுக்கும் இப்பிடியும் ஒரு தொடர்போ? நல்ல பதிவு.
டிசே தமிழன்: ஈழநாதன் புதிய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி. ஊரில் இருந்தபோது, பிரசங்கங்கள் சிலதைக் கேட்டிருக்கின்றேன். இப்படி பாடுவதும் பிறகு பொருள் சொல்வதும் கேட்டதில்லை. நாற்சார்மட வீடொன்றில் முதன்முதலாய் சங்கானைக்குப் பிரச்சினையின் நிமிர்த்தம் பெயர்ந்தபோது தங்கியிருக்கின்றேன். அதில் ஒரு அறை முழுவதும், நாங்கள் சேகரித்த (நானல்ல, எனது பெற்றோரும் சகோதரர்களும்) புத்தகங்களை நிரப்பி வைத்தது நினைவு. பிறகு கொழும்புக்கு வந்தபோது அதை அப்படியே விட்டு விட்டு வந்திருந்தோம். இப்போதும், நாற்சார்மட வீட்டை நினைத்தால் புத்தகங்களும், புத்தகங்களைப் பற்றி நினைத்தால் நாற்சார்மட வீடும் ஞாபகத்துக்கு வரும் :-(.
மதி கந்தசாமி: சமர்ப்பணம் அதுஇதெண்டெல்லாம் பயமுறுத்த வேண்டாம் ஈழநாதன். நல்ல பதிவு! நாற்சார்வீடுகள் பற்றி ஒரு இணையத்தளம் இருக்கிறது. மத்தியகிழக்கில் இருப்பவர் ஒருவர் அமைத்திருக்கிறார். தமிழ் விக்கியிலும் ஈடுபடுகிறார் அவர். சுட்டியைத் தேடவேண்டும். பிறகு தாறன். -மதி
ஒரு பொடிச்சி: 'யாழ்ப்பாணமே ஓ..எனது யாழ்ப்பாணமே' நூலில் நிலாந்தனும் 'கந்தபுராணக் கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள்வரை' என்றுஎழுதியிருந்தார்! 'யாழ்ப்பாணத்தார்' இப்படிச் 'பெருமையடிச்சுக்' கொள்வார்கள் என்று தெரியாது. சுவாரசியமான பதிவிற்கு நன்றி.
அன்பு: இது போன்று உன்னிடம் நிறைய கதைக்(கேட்)கணும்னு ரொம்ப நாள் ஆசை. தொடர்ந்து நிறையா எழுதுங்கோ... எங்க ஊர்ல மழைவேண்டியோ, இன்ன பிற நாளிலோ - இரமாயாணம் போன்றவற்றை படித்து கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது முடிந்து 'பானக்கரம்' கொடுக்கும்போது மட்டும் போய் வாங்கிக்குடித்த ஞாபகம் வருகிறது:)
G.Ragavan: படிக்கச் சுவைக்கும் அருமையான பதிவு. பழக்கவழக்கங்களும் மறந்து போன பண்பாடுகள் நினைக்க இனிப்பே. நீங்கல் இனிக்க இனிக்க நினைத்திருப்பது பதிப்பில் தெரிவது. // குறவள்ளித் திருமணத்தைத் தவிர அதில் வாழ்க்கையில் நடத்த என்ன இருக்கிறது! தமிழ் ஒரு பயனெனச் சொல்லலாம்! //
தங்கமணி, கந்தபுராணம் ஒரு ஞானநூல், அதில் கதை போல இருந்தாலும் கருத்துகள் பலவுண்டு. ஆழப்படித்தவருக்கே அது விளங்கும். அப்படி விளங்கியவரின் விரிவுரை மிகச்சிறப்பாக இருக்கும். நானும் கொஞ்சம் படித்திருக்கிறேன். வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளையும் ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன். அருமையாக இருக்கும்.
ஜெயச்சந்திரன்: யாழ்ப்பாணத்தில் புராணம் படிப்பவர்களது எண்ணிக்கை அருகி விட்டதால், சைவ புலவர் சபை? ஒவ்வொரு இடத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு புராண படிப்பு வகுப்புக்களை ஒழுங்கு செய்து நடத்தியது தெரியும். தற்போதும் இருக்கிறதா தெரியவில்லை
ஈழநாதன்: பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி.இப்போது நான் ஊர் சென்றிருந்தபோது புராணப் படிப்பு வெகுவாக அருகிவிட்டதைக் கண்டேன் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவிலில் மட்டும் படிக்கிறார்கள்
ஜெயச்சந்திரன்: http://us.geocities.com/rmayooranathan/ இது தான் மதி சொன்ன யாழ்ப்பாண வீடு பற்றிய இணைய பக்கம் என நினைக்கிறேன்
3.4 யுத்தத்தின் மறுபக்கம் [Thursday, September 22, 2005]
- ஈழநாதன் -
இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது.
ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பாடல் அற்ற நிலையில் அரசாங்கம் அவர்களையும் இறந்ததாகக் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி விடும்.
இவற்றையெல்லாம் செய்தியாகப் படிக்கும்போது சிறுவயதில் எனக்கும் வேடிக்கையாகத் தான் இருக்கும்.அரசாங்கத்திற்காகப் போராடும் இராணுவத்தினரையே அரசாங்கத்தால் ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை என்பது கேலியாகத் தான் இருக்கும். ஆனால் வேறு சில ஊடகங்கள் வழியாக தென்னிலங்கையில் பெயரே தெரியாத சிறு சிறு கிராமங்களில் பலநூறு குடும்பங்கள் இந்த இராணுவத்தினரின் மாத வருவாயை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன என்பதை அறிந்துகொண்டபோது யுத்தத்தின் மறுபக்கமும்தெரியவந்தது.
நாமெல்லாம்பொதுவாக நம்புவது சிங்கள இளைஞர்கள் இனவாதத்தின் காரணமாகத் தான் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பதே. இராணுவத்தினரில் பாதிப்பேர் இனவெறி காரணமாகவும் நாடு நமதே என்ற அரசியல் தூண்டுதல்கள் காரணமாகவும் சேர்கிறார்கள் என்றால் இன்னொருபுறம் தாளமுடியாத வறுமையும் தன் பங்கிற்கு இளைஞர்களைச் சேர்க்கிறது.
ஒவ்வொரு யுத்தத்தின் பின்னாலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பின்னாலும் எஞ்சியிருக்கும் வறுமை மற்றவர்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது.இவர்கள் பெரும்பாலும் மத்திய இலங்கை,மலையகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் குடும்பங்களினது இளைஞர்களினதும் வறுமையையும் அறியாமையையும் ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.இராணுவத்துக்கு ஆள் தேவைப்படும்போதெல்லாம் அரசாங்கம் கொழும்பையும் அதைச் சூழவுள்ள பகுதிலும் வசிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளிடமோ அல்லது வியாபாரிகளின் பிள்ளைகளிடமோ போவதில்லை.இப்படியான கிராமங்களுக்குத் தான் போகிறார்கள்.
இவர்கள் மத்தியில் நாடு பற்றிய,இனம் பற்றிய பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.ஆறாம் வகுப்புவரை கல்வி கற்றவனுக்கு பதினோராயிரம் ரூபா மாதச் சம்பளம் என்பதுதான் அவர்களிடையே எடுபடுகிறது.
ஒருவேளை போரில் சிக்கி இறந்துபோனால் தொகையாகக் கிடைக்கும் ஒரு சில லட்ச ரூபாக்களால் குடும்பம் வாழ்ந்துகொள்ளும் என்று நம்பித்தான் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள்.
தந்தை போரில் இறந்தபின் அதே குடும்பத்து மகனோ அல்லது தமையன் இறந்தபின் தம்பியோ மீண்டும் இராணுவத்தில் சேர்வதற்கான காரணம் அவர்களது வறுமை.ஒருமுறை கண்ட இழப்பும் கையறுநிலையும் திரும்பத் திரும்ப இராணுவத்தில் சேர்வதே ஒரே வழியாக அவர்களுக்குப் புரிகிறது.
ஆனால் அரசாங்கமோ படைக்கு ஆள்ச்சேர்க்கவும் பாதுகாப்பு நிதிக்கு பெருமளவில் துண்டுவிழும் தொகையைச் சரிப்படுத்தவும்பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது.
சில இராணுவத் தாக்குதல்களில் மாண்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடல்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.மக்களின் உணர்வுகளைக் கிளறி அவர்களை தங்களுக்குச் சார்பாய்த் திருப்ப இப்படியாகப் பல்வேறு செயல்களைச் செய்தது.சில உடல்களைச் சிதைந்தது சிதைந்தபடியே குடும்பத்தினருக்குக் காட்சிப்படுத்தியது.இன்னும் சில உடல்களை முகாம்களிலேயே எரித்துவிட்டு விடுதலைப்புலிகள் கண்டதுண்டமாக வெட்டிவிட்டார்கள் என்றோ அல்லது உடலைத் தர மறுக்கிறார்கள் என்றோ சொல்லி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடியது.
பெற்ற மகனையோ கணவனையோ சகோதரனையோ அப்படியான நிலையில் பார்க்கும் அந்த மக்களின் துக்கம் வடகிழக்கில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட குடும்பத்தினரின் துக்கம் எல்லாமே ஒன்றுதான்.
அதையெல்லாவற்றையும் விட மோசமான ஏமாற்று வேலை அரசாங்கத்தால் வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் அதன் பின்னரான புலிகளின் எதிர்த்தாக்குதலின் பின்னும் செய்யப்பட்டது.
போரில் இறந்த இராணுவவீரர்களுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையான ஒரு சில லட்ச ரூபாக்களை ஆளும் வர்க்கம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு யுத்தத்தில் அவ்வீரன் தப்பியோடிவிட்டதாகவும் அவனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருத்தல் குற்றம் எனவும் சொல்லிக்கொண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களே பொய்யாகச் சோதனை போடப்பட்டன
தப்பியோடிய இராணுவத்தினருக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டியதில்லை என்பதால் இறந்த பலநூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தப்பியோடியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் நட்ட ஈட்டுப் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.
அவர்களின் குடும்பத்தினரோ மகன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்று நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.அல்லது அவனுக்குப் பதிலாக சகோதரன் இராணுவத்தில் சேர்கிறான்.
தேர்தல் கூட்டங்களில் பிக்குமார் முழங்குகிறார்கள் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்".மகிந்த முழங்குகிறார் "நாடு துண்டுபடுவதை அனுமதியேன்".ஜே.வி.பி சொல்கிறது "அப்பே ரட்டை"(எங்கள் நாடு)இலங்கையின் பெயர் தெரியா ஒரு கிராமத்தில் அப்புகாமியோ பொடிமெனிக்கேயோ ஆனையிறவுச் சண்டையில் காணாமற் போன தங்கள் மகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
(இந்தப்படியான ஒரு குடும்பத்தினரின் அவலத்தைச் சொல்லும் ஒரு திரைப்படத்தைஇம்முறை இலங்கையிலிருந்து வரும்போது வாங்கி வந்தேன் அதுபற்றிய விமர்சனம் அடுத்தடுத்த பதிவில்)
4.0 படைப்பு [ஈழத்து/புலத்து சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகமும் பகிர்வும்]
வலைப்பதிவு 'படைப்பு'. இவ்வலைப்பதிவுக்கான குறிக்கோள் அறிக்கையில் 'ஈழத்து/புலத்து சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகமும் பகிர்வும்' என்றிருக்கிறது. இவ்வலைப்பதிவில் பல்வேறு சஞ்சிகைகளைப் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. 'பதிவுகள்' போன்ற இணைய இதழ்களிலிருந்தெல்லாம் சஞ்சிகைகள் பற்றிய தகவல்கள் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன. மறக்காமல் 'நன்றி பதிவுகள்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வலைப்பதிவில் காலம் , அறிவிசை , பெண் , போது , புதிய தரிசனம், ஆத்மா, தூண்டி, அம்பலம், ஏகலைவன் , பூவரசு ஆகிய சஞ்சிகைகளைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்திருக்கின்றார். உதாரணத்திற்கு காலம், பூவரசு, பெண் ஆகிய இதழ்களைப் பற்றிய பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன:
காலம்: கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ். மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது. காலத்தின் ஆரம்பகர்த்தா குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ். 23 ஆவது இதழ் காலம் இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் tamilbooks at gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும். படங்கள் நன்றி:பதிவுகள்,ஆறாம்திணை
பூவரசு: பூவரசின் கடந்த ஆண்டுமலரின் அட்டைப்படம் (நன்றி:பதிவுகள்) . வெளியீடு: பூவரசு கலை இலக்கியப் பேரவை. ஆசிரியர்: இந்துமகேஷ். முகவரி: Kultur und Literatur Organisation e.V, Postfach 10 34 01 28034 ,Bremen Germany தொலைபேசி/ தொலைநகல்: 0421 / 5970822 . மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஜேர்மனியிலிருந்து இருமாத இதழாக இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு,பூவரசு கலை இலக்கியக் குழுவினரது வெளியீடாக வெளிவருகின்றது. ஆண்டுதோறும் கதை,கவிதை கட்டுரை ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தி பரிசளிக்கின்றனர்.
பெண் [தொகுதி:9, இல:1, 2004]. தொடர்புகளுக்கு: விஜயலட்சுமி சேகர், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு.
5. வலைப்பதிவு 'சலனச்சுருள்'. இதழ் குறிக்கோள் அறிக்கையில் 'சலனப்படங்கள் பற்றிய அறிமுகமும் கருத்துப் பகிர்வும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதற்கமைய குறும்படங்கள் பற்றிய கட்டுரைகள் அப்பால் தமிழ் போன்ற இணையத் தளங்களிலிருந்து நன்றி குறிப்பிடப்பட்டு மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பதிவுக்காக அவற்றில் சில இங்கே மீள்பிரசுரமாகின்றன:
5.1 சுமதி ரூபனின் 'You 2' : நடிகைகள் சுமதி ரூபன்,பவானி மனமுள்,மனுஷி,இனி.உஷ்,சப்பாத்து ஆகிய குறும்படங்களின் படைப்பாளி சுமதி ரூபன் அவர்களின் அடுத்த படைப்பு 'You 2'தற்போது தயாரிப்பில் உள்ளது.இப்படைப்பின் நிழற்படத் தொகுப்பை இங்கே காணலாம்.
கருத்துகள்: மதி கந்தசாமி: நல்ல விஷயம் செய்யிறீங்க ஈழநாதன்!
5.2: இளங் கலைஞர்களுக்கு ஒரு மடல்! எழுதியவர் கலைஞர் ஏ.ரகுநாதன்.
- தமிழாள் கூத்தவை (பாரிஸ்) -
மண்னின் மேல் மாறாத பற்றும் கலையின் மேல் காதலும் கொண்ட தமிழ் ஈழத்தின் அன்பு நெஞ்சங்களே! இது உங்களுக்கு ஒரு மடல்... அழைப்பு மடல்... அன்பு மடல்... கலைத்துறையிலன் நானொரு வித்தகன் என்றோ அன்றி சாதனையாளன் என்றோ என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை. ஒரு சாதாரண கலை உபாசகன் என்ற ரீதியில் 1947ம் ஆண்டு முதல் நாடகத் துறையிலும் 1963ம் ஆண்டு முதல் திரைப்படத் துறையிலும் ஓரம் நின்றவன் என்ற உரிமையிலும், வயதும் எழுபதை நெருங்கி விட்டது நம் அடுத்த சந்ததிக்கு எம் அகனுபவத்தை முன்மொழிய வேண்டிய கடமைப்பாட்டிலும் இதனை வரைகின்றேன்.
இது உலகமெல்லாம் கால் பதித்து விட்ட நம்மவர்க்கான மடல். படித்து விட்ட மறந்து விடாமல் உங்கள் கால்களை இத்துறையில் எடுத்து வையுங்கள். முந்தாநாள் எங்கள் பாட்டன் நட்ட மாமரத்துக் கனியை அவன் ருசிக்கவில்லை. நாம்தான் புசிக்கின்றோம்.
எப்படி படம் செய்ய வேண்டு என்று சொல்ல எனக்குத் தகுதியில்லா விட்டாலும் எப்படி படம் செய்யக் கூடாதென்ற அனுபவத் துணிவுடன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய கடமைப்பாட்டுடன் இதை எழுகிதுறேன் கலை நெஞ்சங்களே.
1963ல் ஆரம்பிக்கப்பட்டது ஈழத்து தமிழ் சினிமா. அன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் மட்டுமே நமது ஈழத் திரைப்படங்கள் திரையிடும் வாய்ப்பு நமக்கிருந்தது.
இன்று... உலகெல்லாம் நமக்கென்று நம்மவர் பரந்து படர்ந்திருக்கிறார்கள். அந்த நம்மவரை நமக்கென்று, நம் தனித்துவத்துக் கென்று நம் படைப்புகளைத் தந்து எமக்காக வழிநடத்த வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு கலை நெஞ்சத்திற்கும் உண்டு.நம்மவர் கலைப்பசியை நாமே நிறைவேற்றி சுயமாக நமக்கென்றதொரு கலைத்தொழிலை உருவாக்குவோம். பயமோ மயக்கமோ இன்றி நமக்கான உணவை நாமே ஆக்கிக்கொள்வோம். இதில் அடுத்தவர் மேல் காழ்ப்போ பொறாமையோ வெறுப்போ கொஞ்சம்கூட இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உலகில் இன்று சினிமாவின் எண்ணிக்கையில் அதிகமான படங்களைத தருவதில் முன்நிற்கும் இந்தியாவையும், உலகத்தின் மிகப் பிரமாண்டமான படங்களைத் தரும் அமெரிக்காவையும் விட இன்று உலகத்தில் மிகச் சிறந்த படஙகளைத் தருவது ஈரான்தான் என்ற உண்மையை உலகச் சினிமா வல்லுநர்கள் பிரமிப்போடு வழிமொழிகிறார்கள். கவர்ச்சிக் கோலங்கள் இல்லாத காத்திரமான சினிமாக்களை உலகிற்கு தந்து ஈரான் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. ஈரான் கலைஞர்கள் போல் நாமும் நமக்கான சினிமாவை வடிவமைக்க வாருங்கள். அதற்கான நேரம் வந்துவி்ட்டது. 'தொட்ட எதனையும் துலங்கச் செய்யும் ஆற்றல் நமக்கிருக்கின்றது. சாதிக்கும் தைரியம் நமக்கிருக்கின்றது' என்றே உங்களை அழைக்கின்றேன். நம் அனுபவங்களை, இழப்புகளை புலம்பெயர்ந்ததால் உலகுடன் எமக்கேற்பட்ட நெருக்கத்தில் நாம் கற்ற நல்லவைகளை வெளிப்படுத்தனாலே நல்ல சினிமாக்கள் நம்முன் மலரும். முதலில் குறும்படங்களைத் தாருங்கள். காலம் அந்த குறும்படங்களை எங்கள் கலைக் குறியீடுகளாக மாற்றும். அவை முழுச் சினிமாக்களுக்கு முன்னோடியாக அமையும். நம்மிடையே எழுதத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நடிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது நாம் வாழும் நாட்டின் மொழியும் நமக்குத் தெரியும். சினிமாவைக் கண்டுபிடித்த ஐரோப்பாவில் சினிமாவை உலகமயப்படுத்திய அமெரிக்காவில் நாம் பரந்திருக்கிறோம். இங்கு திரைப்பட பயிற்சியை அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம். களத்தில் இறங்குங்கள் ஐந்து வருடங்களில் அற்புதமான படைப்புகளை உங்களால் தரமுடியும். அதனை நம்மவர்கான தொழிலாகவும் உருவாக்க முடியும். எங்கள் கலையை கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தவும் முடியும். எனக்குத்தான் படம் செய்யத் தெரியும் என்ற பழைய தலைமுறையின் எண்ணங்களை மாற்றி ஆர்வமும் கற்பனை வளமும் கலைமேற் பற்றும் தேடலும் உள்ள ஒவ்வொரு இளைஞனாலும் இது முடியும் வாருங்கள். பேசிவிட்டுப் போகாமல் செயலில் இறஙகுங்கள். நமக்கான நுகர்வுச் சந்தை உருவாகிவிட்டது. அதனை மற்றவர்களிடம் இழந்து விடாமல் நமதாக்கி கொள்வோம். கலைப்பாதையில் நம் பயணத்தை தொடங்குவோம். நாளை உலகம் நமக்கு வசப்படும். என்றும் அன்புடன் ஏ.ரகுநாதன். நன்றி அப்பால் தமிழ்
ஈழநாதனின் வலைப்பதிவுகள் பற்றிய தகவல்கள் அவரது கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி அறிதற்கு மிகவும் முக்கியமானவை. அவரது பணியினை வெறும் நூலகம் இணையத்தள முயற்சிகளுடன் மட்டும் சுருக்கி விடாமல், அவரது வலைப்பதிவுகள் பற்றிய செயற்பாடுகள், இணையத்தில் வெளியான அவரது கவிதைகள் பற்றிய விபரங்கள் ஆகியவை பற்றியும் ஆராய்ந்து பதிவு செய்வதவசியம். அதற்கொரு முதற்படியாக இக்கட்டுரை அமையும்; அமையலாம். அவ்விதம் அமைந்தால் அதுவே இக்கட்டுரையின் மிக முக்கியமான பயனாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.