அத்தியாயம் மூன்று: மாமா மகன்
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்] மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு.... வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. 'பார்க்' ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது. மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான. இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள். குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள். தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய். தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில் அதன் அளவினை உணரமுடிந்தது.
இன்னும் அவளைக் காணவில்லை. அவனுக்கு திடீரென்று மாமா மகனின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நாட்களாகவே இருவருக்குமிடையில் பிளவு ஒன்று அதிகரித்து வருவதாகப்பட்டது. இவன் வாடகை கொடுக்கின்றான். 'குரோசரி' வாங்கிப் போடுகிறான். பெரும்பாலும் வீட்டு வேலைகள், சமையல் எல்லாம் இவன்தான். இருந்தும் நாளுக்கு நாள் பிளவு அதிகரித்தபடியேயிருந்தது. அவனது மனைவி விரைவில் வரவிருக்கிறாள். அதற்கு முதற்படியாக அவனை அங்கிருந்து அகற்றுவதற்கான செயல்முறைகளின் முதற்படியாக மாமா மகனின் நடவடிக்கைகளிருக்கலாம்.
மாமா மகனின் நடவடிக்கைகள் இவனுக்குச் சிரிப்பைத் தந்தன. எவ்வளவு 'சீப்பா'க இவனை அவன் எடை போட்டிருக்கிறான். ஆனால் இத்தனைக்கும் காசு செலவழித்து, தலை மாற்றி, விசா குத்தி, யாருமே வராத 'ரூட்' ஒன்றைக் கண்டுபிடித்து இவனைக் கனடாவுக்குக் கூட்டி வந்ததே மாமா மகன்தான். வந்த கடனை ஒரு மாதிரி அண்மையில்தான் இவன் முடித்திருந்தான்.
இந்நிலையில் மாமா மகன் தேவையற்று இவனுடன் முரண்படத்தேவையேயில்லை. ஒரு வேளை இவனைப் போகச் சொல்லுவதை அவனது உள்மனம் விரும்பாமலிருக்கலாம். யதார்த்தத்தில் இவன் போக வேண்டிய நிலை. இருவகையான போக்குகளூக்குள் சிக்கியதால் உருவான காரணமற்ற வெறுப்பின் விளைவாகவிருக்கலாம். மாமா மகனின் அன்றைய நடவடிக்கைகள்.
ஆனால் அன்று காலை நிகழ்ந்துவிட்ட மோதல் வழமைக்கு மாறாக சிறிது காரமாகவிருந்தது. வழமைக்கு மாறாக இவனும் நேரத்துடனேயே எழுந்து விட்டான். நித்திரை வரமாட்டேனென்று முரண்டு பிடித்தது. எழுந்து முகம் கழுவி, கோப்பி போட்டபடி சோபாவில் நாய்ந்தபடி, டி.வி.யை 'ஆன்' பண்ணினான். டி.வி. மாமா மகனது 'சொனி'. அண்மையில் வாங்கியிருந்தான். சிறிது நேரம் 'கொன்வேட்டரை' மாற்றி மாற்றி இயக்கியவன் கடைசியில் சி.பி.சி.யில் விட்டான். இது மாமா மகனுக்கு ஒரு வித ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது போலும். வாங்கிய புது டி.வி.யை இவன் பழுதாக்குவதாக அவன் எண்ணியிருக்கலாம். ஆனால் நேரடியாக 'டி'வி'யைப் போடாதே என்று கூற முடியாதே. நாகரிகத்துக்கு இழுக்காக அவன் கருதியிருக்கலாம். மோதல் வேறு வழியில் உருவானது.
மாமா மகனுக்குக் கோபம் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுவான். சரியோ, பிழையோ என்பதல்ல முக்கியம். ஆங்கிலத்தில் திட்டுவது தமிழில் திட்டுவதைவிட நாகரிகமானதாக அவன் எண்ணியிருந்தான்.
கோப்பி போட்டபடி இவனுக்கருகில் வந்தமர்ந்தவன் 'கொன்வேட்டரை' வாங்கி டி.வி.சத்தத்தைக் குறைத்தான். அதில் தன் மனநிலையினைக் காட்டினான்.
"வாட் இஸ் இன் யுவர் ஹெட்?" மாமா மகன் எப்பொழுதும் இப்படித்தான் திடீரென , முறைப்பாகத் தாக்குதலை ஆரம்பிப்பான்.
'தலைக்குள் மூளை' என்று கூறலாமென்று இவனுக்குப் பட்டது. பேசாமலிருந்தான். மாமா மகன் தொடர்ந்தான்.
"தீஸ் டேய்ஸ் யு பிகம் சோ லேஸி... யூ ஹாவ் டு பி மோர் அக்டிவ். மோர் எனர்ஜடிக். மோர் சியர்ஃபுல். மோர் ரெஸ்பான்சிபிள். மோர் பொசிடிவ்"
இவனுக்கு உள்ளுக்குள் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். சிரிப்பு மாமா மகனின் கோபத்தை மேலும் அதிகமாகக் கிளறிவிடும்.
இத்தனைக்கும் இவன் சமையல், வீட்டு வேலைகள், 'ஷொப்பிங்' என்று எல்லாவற்றையும் செய்கின்றான். இவன் 'லேஸி'யாம். திடீரென்று அச்சமயம் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் ஞாபகம் கூட இவனுக்கு வந்தது. இப்பிரபஞ்சத்தில் நிகழும் யாவுமே சார்பானவை. ஒருவேளை மாமா மகனின் அர்த்தத்தில், சார்பில் 'லேஸி'யாகவிருக்கலாம்.
இவன் தொடர்ந்தும் மெளனமாகவிருந்தான். மாமா மகனின் கோபம் எல்லை கடந்தது. 'கொன்வேட்டரை' இழுத்து அமுக்கி டி.வி.யை ஓஃப் பண்ணினான். இப்பொழுது தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினான்.
"டு யு திங் ஐ ஆம் அ ஸ்டுபிட், நான் பேசிக் கொண்டே போறன் உன்ரை வாயிலை என்ன கொழுக்கட்டையா?"
மாமா மகன் கொழுக்கட்டை என்று சொன்னதும் அச்சமயம் இவனுக்கு பீறிட்டுக்கொண்டு சிரிப்பு வந்தது. கொழுக்கட்டை என்ற சொல் சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! .. கூழும் பனங்கட்டி, கொழுக்கட்டை தின்னலாம்..' என்னும் பாடலை நினைவுக்குக்கொண்டு வந்தது. இதுதான் அவன் சிரிப்புக்குக் காரணம். அது இவனது சிரிப்பு மாமா மகனின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது. தொடர்ந்த சொற்களில் மரியாதை பறந்தது.
"என்னடா சிரிப்பு ... வாட் த ஹெல் யூ ஆர் திங்கிங்.. சிரிப்பென்னடா சிரிப்பு.. சீரியஸா நானிங்கை கதைக்கிறன்.. நீ என்னடாவென்றால்..."
'சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாட்டு ஞாபகம் வந்தது நீ கொழுக்கட்டை என்று சொன்னபோது' இவ்விதம் கூறலாமாவென்று பட்டது. எப்படிக் கூறுவது? இப்படித்தான் இருந்தாற்போலிருந்து எதிர்பாராத சமயங்களில் ஒரு சிறு நினைவு, சொல், காட்சி, நெஞ்சின் ஆழ்மனத்தே பதிந்துள்ள நினைவுப் பெட்டகத்திலிருந்து ஒரு சில நிகழ்வுகளின் பதிவுகளை, எந்தச் சமயத்தில் அத்தகைய உணர்வுகள் தோன்றக்கூடாதோ அந்தச் சமயத்தில் அவற்றைத் தோன்ற வைத்து ஒருவித இக்கட்டான நிலைமையினை ஏற்படுத்தி விடுகின்றன.
மாமா மகனின் வாயில் வந்த கொழுக்கட்டை சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை' பாடலை இவனுக்கு நினைவுபடுத்திச் சிரிப்பை உண்டாக்கிவிட்டது கூட இத்தகையதொரு விதமான நிலைமைதான்.
தொடர்ந்து பேசிய மாமா மகனின் சொற்கள் தமிழிலேயே வெளிவந்தன. அதற்குக் காரணமும் இருந்தது. "வட் த பிளடி ஹெல்', 'யூ சன் ஒ1ப் அ கன்' இவ்விதமாக சிறு சிறு வசனங்களாகப் பேசும் போதெல்லாம் சரளமாக வரும் ஆங்கில வார்த்தைப் பிரயோகம் தொடர்ந்து சிறிது நேரம் கூடுதலாக வார்த்தைகளைப் பாவித்துப் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் சரளமாக வருவதற்குத் தயங்கி நிற்கும். கோபம் அதிகரித்து இவ்விதம் பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலேயே 'யூ... யூ... பிளடி' என்பன போன்ற வார்த்தைகளுக்கு மேல் வராத நிலையில் திக்குமுக்காடுவான். தனது இந்தப் பலவீனத்தை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அத்தகைய சந்தர்ப்பங்களில்தான் அவன் தமிழிலேயே பேசுவான். இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் தாய் மொழியின் அருமையே அவனுக்குத் தெரிய வருவதுண்டு.
'ஏதோ இந்தா பார் ... வெட்டிப் பிடுங்கிறன் என்றுதானே போனனீங்கள். ... என்னடா வெட்டிக் கிழிச்சியள்... உங்கட மூஞ்சிக்கு உங்களுக்கெல்லாம் ஒரு இயக்கம்... போராட்டம்... விடுதலை... ' முதன் முறையாக இவனது நெஞ்சின் ஒரு கோடியில் சுரீரென்று ஒருவித வலியின் பாதிப்பு. மாமா மகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
"போதாதற்கு ஊரிலை கூட்டிக் கொண்டு போனவனுக்கே மண்டையிலை வைச்சனீங்கள்... உங்களையெல்லாம் ..." உணர்ச்சி வசப்பட்டவனாகப் பல்லை நறநறவெண்டு நறுவிக்கொண்ட மாமா மகன் தொடர்ந்தான்.
"இன்றைக்கு மண்டையிலை போட்டவவன்ரை சொந்தங்கள் தேடி அலைஞ்சபடி.. நீங்களெல்லாம் ஏன்தான் இருந்து கிடந்து கழுத்தறிக்கிறீங்களோ"
மாமா மகன் மேலே பேசிக்கொண்டே போனான். ஆனால் இவனோ... காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன. சோபாவில் அப்படியே உறைந்துபோய் விட்டான். மோனத்துள் மூழ்கி விட்ட நிலை. காதுகளில் மாமா மகனின் சொற்களுக்குப் பதில்....
'நீயூமா? நீயுமா?' வாடி வதங்கித் துவண்டு வெந்து கிடந்த அந்த மெல்லிய உருவம்... உரோமம் மண்டிக் கிடந்த முகம்..
சிலையாக, துறவியைப்போல் மோனித்து உறைந்துவிட்ட இவனது நிலைமை... மாமா மகன் தான் எல்லை மீறிப் போய் விட்டதை உணர்ந்தான். இவனது உறைந்தபோக்கு ஒருவித கலக்கத்தை அவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். இவ்னது தோள்களைப் பற்றிச் சிறிது பலமாகக் குலுக்கினான். இவன் மெல்ல நனவுலகிற்கு வந்தான்.
"ஐ ஆம் சாரிடா" மாமா மகன் வேலைக்குப் போய் விட்டான்.
இவன் சிறிது வேதனைப் பட்டான். அண்மைக்காலமாகவே அவளது உறவின் வளர்ச்சி அவனிதயத்தில் பழையபடி மெல்லிய உணர்வலைகளைச் சிறிது ஏற்படுத்தியிருந்தது. ஓரளவுக்கு அவனது உறைந்த் நிலையைச் சிறிது நெகிழ்த்தியிருந்தது. அதன் விளைவாக சிறிதளவு வேதனைப்பட, சிரிக்க, உருக, இரசிக்க, மோகிக்கக் கூடிய அளவுக்கு நெகிழ்ந்திருந்தான். அதன் விளைவுதான் அவன் வேதனைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
"ஹாய்.."
இதயத்தைச் சுண்டியிழுத்த இனிமையான குரல். இவன் எதிரில் அவள்.
'டெனிம் பான்ற்ஸ்' போட்டிருந்தாள். நீலக் கோடுகளிட்ட வெள்ளை 'டீ சேர்ட்'டும் , 'லெதர் ஜாக்கற்'றும் அணிந்திருந்தாள். இறுக்கமான உடைக்குள் உடல் வளைவுகள், பார்ப்போரை மோகிக்க நின்றிருந்தாள். கூந்தலை இரண்டாகப் பின்னி, பொட்டு வைத்திருந்தாள். கண்கள் மின்ன, மோகனச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி நின்றிருந்தாள்.
[ தொடரும் ]