நான் பால்யப் பருவத்துக் குருமண்காட்டை
நனவிடை தோய்கின்றேன். ஏன்?
நனவிடை தோய மட்டுமே என்னால் முடியும்.
நனவிடை தோய்தலன்றோ சாத்தியமானதொன்று.
ஏன்?
காலம் செய்த கோலமது!
போர் பின் பொருள், மானுடர்தம்
பேரார்வம்.
இவற்றால் என் குருமண்காடு
இன்றில்லை. அங்கு
இன்றில்லை!
இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காட்டில்
நடை பயின்றேன்.
வனமும், வாவியும் நிறைந்த
வளமானபூமியென் குருமண்காடு.
அந்தக் காட்டை இன்று நான் காணவில்லை.
அந்த வனப்பை, அந்த வளத்தை,
என்றுமே நான் காணப்போவதில்லை.
அது இனி நினைவுகளில் நிற்குமோருலகம்!
பிரதான மன்னார் வீதியிலிருந்து
பிரிந்ததோர் ஒற்றையடிப்பாதையில்
பிறந்திருந்தது என் குருமண்காடு!
பிரியும் மூலையிலோர் மயானம்!
முஸ்லீம் மயானம்!
அங்கிருந்து
நள்ளிரவுகளில்
நரிகளின் ஊளைகள் கேட்கையில்
நாம் படுக்கையில் முடங்கிக் கிடப்போம்!
முழுநிலாக் காலமென்றால்
நரிகளுக்குக் கொண்டாட்டம்தான்!
இரா அமைதி ஊடறுத்து வரும் ஊளையில்
இதயமொடுங்கிக் கிடப்போம்!
தொடர்ந்து சென்றால்
எண்ணக்கூடிய அளவில் சில வீடுகள்!
எழிலுடன் இலங்கிய வயற்புறம்!
எழிலாடை பின்னுமொரு நெசவு சாலை!
இவை தவிர,
நோக்கிய திசையெங்கும் விருட்சங்கள்!
முதிரை! பாலை! வீரை! கருங்காலி!
மேலும் பல பல்வகை விருட்சங்கள்!
விருட்சங்களில் தாவித்திரியும்
வானரங்களை எப்போதும் காணலாம்!
என்றும் காணலாம்!
வானரங்களிலும் பிரிவுகள் இரண்டு:
வனப்புமிகு செங்குரங்கு!
வலிமை மிகு தாட்டான் குரங்கு!
துரத்தும் தாட்டான்களிலிருந்து
தப்புவதற்காக எத்தனை தடவைகள்
துவளாமலோடியிருப்போம்!
எத்தனை வகைப் புள்ளினங்கள்!
எத்தனை வகைப் புள்ளினங்கள்!
எங்கு நோக்கினும் புள்ளினங்கள்!
எத்தனை வகைப் புள்ளினங்கள்!
காடை, கெளதாரி , காட்டுக்கோழி தொடக்கம்
ஊருலாத்தி, உயரதில் பறக்கும் பருந்து,
ஆட்களைக் காட்டும் ஆட்காட்டி,
ஆலா,
அவற்றுடன் நெடுமிரட்டை வாற் குருவி,
அழகு மைனா, மாம்பழத்தி, குக்குறுபான்,
தேன் சிட்டு, சிட்டுக்குருவி.. ஆகா!
எத்தனை வகைப் புள்ளினங்கள்!
எத்தனை வகைப் புள்ளினங்கள்!
வீதியை, பிரதான வீதியையடுத்திருந்த
வாவியை, பட்டாணிச்சுப் புளியங்குளத்தை
வான் பாயும் பொழுதுகளில் பார்ப்பதற்காக
விடிகாலையே எழுந்திருப்போம்!
வான் பாயும் நீர் மறித்து
வெங்கணாந்திப் பாம்புகளும், மானுடரும்
விரால் பிடிக்கும் காட்சிகள்
நனவிடை தோய்தலில் மிதக்கின்றன.
நினைவழியாக் காட்சிகள்!
நீந்தப் பழகியது அந்த வாவியில்தான்!
நீந்துகையில் மூழ்கி நினைவு திரும்பியதும்,
பின்
நீச்சலில் வலுமிகுந்து
நீரரவங்களுடன் போட்டியிட்டு
நீந்தியதும் அந்த வாவியில்தான்!
இக்கரைக்கும், அக்கரைக்குமாய்
தாமரைக்கொடி நீக்கி,
தளராமல் நீந்தினோம்.
பல்லின மனிதர் வாழ்ந்த மண்
படர் நினைவும் பசுமையாய்ப்
படரும்.
அமைதியில் ஆழ்ந்திருந்தது
அக்காலம்!
அக்காடு! குருமண்காடு!
அழகான காடு அது!
அற்புதமான காடு!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்தக் குருமண் காடு இன்றில்லை!
ஆ! அந்த ஒற்றையடிப்பாதை இன்றில்லை!
ஆ! அந்த வனப்பு இன்றில்லை!
ஆ! அந்த வளமும் இன்றில்லை!
காலம் மாற்றியது
மனிதரை மட்டுமல்ல
காட்டையும்தான். குருமண்
காட்டையும்தான்!
இன்று நான் நனவிடை தோய்கின்றேன்
இல்லாத என் குருமண்காட்டைப்பற்றி!
இன்று நான் நனவிடை தோய்கின்றேன்
இல்லாத என் காடு இன்றும்
இருந்திருந்தாலெப்படி என்று!
ஆம்! நான் நனவிடை தோய்கின்றேன்!
ஏனென்றால்
நனவிடை தோய மட்டுமே என்னால் முடியும்.
நனவிடை தோய்தல் ஒன்றே
நினைவுக்குக் கொண்டு வரும்.
நனவிடை தோய்தலன்றோ
நிசத்தில் சாத்தியமானதொன்று.
அதனால்,
நனவிடை தோய்கின்றேன்! என்
நினைவிலிருக்கும்
என் குருமண்காடு பற்றி.
என் குருமண்காடு பற்றி!
* வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.