இலங்கையில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் வருடா வருடம் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அமைதியான முறையில் அசம்பாவிதங்கள் எவையுமின்றி இடம்பெற்றுள்ளன. புகலிடத் தமிழர்கள் நினைவு கூரும் மாவீர்ர் தின நிகழ்வுகளுக்கும் , இலங்கையில் நடைபெறும் மாவீர்ர்தின நிகழ்வுகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு புகலிடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நவம்பர் 26 கொண்டாடப் படுவதைப்போல் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நினைவு கூர்ப்படுவது இலங்கையில் தடுக்கப்படுவதில்லை. இலங்கை அரசக் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்பத்திரிகை தினகரன். தினகரன் இம்முறை வடக்கில் நடக்கும் 'மாவீரர் தின' நிகழ்வினை வெளிப்படுத்தும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து "நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி" என்னும் தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு மாவீரர் தின நிகழ்வுகள் நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் மூலம் நினைவு கூரப்படுவதை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படங்கள் மீண்டும் புலிகள் போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாகக் காரணமாக அமைந்துவிடும் என்று இலங்கை அரசு ஐயுறுவதுதான்.
உண்மையில் இவ்விதமான நிலை ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கையில் பல்வேறு தமிழர் அமைப்புகள், சிங்கள அமைப்புகள் எல்லாம் தம் மறைந்த தலைவர்களை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். ஜேவிபியினர் தம் தலைவர் ரோகண விஜேவீராவை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தம் தலைவர் உமாமகேசுவரனை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தினர் தம் தலைவர் சிறீ சபாரத்தினத்தை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். இவ்விதம் ஏனைய அமைப்பினர் யாவரும் தம் தலைவர்களை நினைவு கூர்ந்து வருகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் அவ்விதம் செய்வதில் இலங்கையில் முடிவதில்லை.
இன்னுமொரு காரணம் தம் தலைவர் மரணமடைந்து விட்டதை இன்னும் விடுதலைப்புலி அமைப்புச் சார்பானவர்கள் ஏற்பதில்லை. இதுவும் முக்கியமானதொரு காரணம். உண்மையில் எல்லாருக்கும் தெரியும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறுதி யுத்தத்தில் தன் குடும்பத்தவர் அனைவருடனும் இறந்து விட்டார் என்பது. அதனை ஏற்றுக்கொண்டு அவரையும் நினைவு கூரும் சந்தர்ப்பமொன்றினை அவர் இன்னும் இறக்கவில்லையென்று கருதும் கண்ணோட்டம் தடுக்கின்றது எனவும் கூறலாம். மேலும் அவ்விதம் நினைவு கூரப்பட வேண்டிய ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது மீண்டும் அவர் திரும்பி வருவார் என்னுமொரு கண்ணோட்ட அரசியலை ஊக்குவிக்கின்றது என்று இலங்கை அரசு கருதும். அதே நேரத்தில் பொதுவாகத் துக்க தினங்களில் பிறந்தநாள்கள் கொண்டாடப்படுவதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் விடுதலைப்புலி அமைப்பினரின் நினைவு தினத்துடன் சேர்ந்து கொண்டாடப்படுவது விதிவிலக்கானது. உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து யுத்த காலத்தில் மரணித்த போராளிகளை நினைவு கூருகையில் யுத்தத்தில் மரணித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரையும் நினைவு கூர்வதே பொருத்தமானது.
உண்மையில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் அனைவரையும் , அனைத்திலங்கை மக்களையும் பலிகொண்டுள்ளது. மக்கள் போராளிகள், படையினர் என. உண்மையில் இலங்கையில் இனங்களுக்கிடையில் பூரண நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால், அனைவரும் பொதுவானதொரு தினத்தில் யுத்தத்தில் பலியான, பல் வகைகளில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூரலாம். ஆனால் அதற்கான காலகட்டம் அண்மையிலில்லை என்பது துரதிருட்டமானது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.