எழுத்தாளர் நந்தினி சேவியர் தான் படித்த சிறுகதைகள் மூலம் அறிந்த எழுத்தாளர்களையும், அவர்களது சிறுகதைகளில் தனக்குப் பிடித்த சிறுகதையையும் பற்றி முகநூலில் எழுதிவரும் சுருக்கக் குறிப்புகள் முகநூலில் மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. அவற்றில் அவரது ஆரம்ப அறிமுகக் குறிப்புகளை உள்ளடக்கிய தொகுதி ஒன்று ஏற்கனவே இலங்கையில் கொடகே பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி சேவியரின் இம்முகநூற் குறிப்புகள் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
அண்மையில் அவர் எழுதிய நானூற்றி எண்பத்தியேழாவது குறிப்பினை வாசித்தேன். பதிவுகளில் தனது சிறுகதைகள் மூலம் அறியப்பட்ட எழுத்தாளர் கடல்புத்திரன் (ந.பாலமுரளி) பற்றியத் அக்குறிப்பு. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கடல்புத்திரனின் நாற்பத்தியொரு சிறுகதைகளை சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/5/
முகநூற் பதிவு: பிடித்த சிறுகதை. - 487 - நந்தினி சேவியர் -
நான் ஒரு மா.ஓ வாத இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவன். 50 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல், இலக்கிய அனுபவத்துடன் இன்றும் நிறம்மாறாது இருப்பவன். தமிழ் தேசிய இயக்கங்கள் தலையெடுத்த காலத்திலும் அந்த அலைகளில் அள்ளுண்டு போகாதவன். தமிழரசுக்கட்சியின் தீவிர விமர்சனாக இருந்தபோதும் அவர்களின் அபிமானிகள் மத்தியில் எனக்கான நட்புவட்டம் இருந்தது. அதேபோல் இயக்க காலத்திலும் சகல இயக்கக்காரர்கள் மத்தியில் உள்ள இலக்கியக்காரர்களிடம் எனக்கான ஆதரவு இருந்தது. அவர்களுக்கு நான் யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் அரச அராஜக நடவடிக்கைகளுக்கு எதிரானவன் என்பதை அவர்கள் அறிவார்கள். இலக்கிய ரீதியான நட்புடன் என்னோடு பழகிய சிலரை நான் இழந்து விட்டேன். அவர்களில் சகோதரப்படுகொலை செய்யப்பட்டவர்கள் அதிகம். நான் எழுதப்போகும் இவர் ஒரு இயக்கக்காரர். இடதுசாரி சிந்தனையை ஏற்றுக்கொண்ட இயக்கக்காரரே என்னோடு நிறைந்த உறவுடன் இருந்தனர். ஈரோஸ், புளட், ஈபிஆர்எல்எவ். என்எல்எவ்ரி இயக்கங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை. நான் 'ஈழமுரசு ' பத்திரிகையிலும் சில காலம் கடமையாற்றியிருக்கிறேன். என் சுயத்தோடு. இவர் முன்நாள் 'புளட் ' இயக்கத்தைச்சேர்ந்தவர். எனக்கு அறிமுகம் இல்லாதவர்.
"கடல்புத்திரன் " இயற் பெயர்.: ந.பாலமுரளி. பிறப்பிடம் : வண்ணார்பண்ணை. வாழ்ந்த இடங்கள்: அராலி வடக்கு - வவுனியா. அராலி இந்துக்கல்லூரியில் அப்பச்சி மகாலிங்கத்திடம் தமிழ் கற்றவர்.(6ம்,7ம் வகுப்புகளில்.) யாழ் /தொழில்நுட்பக்கல்லூரியில் கற்று படவரைஞராக வெளிவந்தவர். கையெழுத்துச் சஞ்சிகைகளில் எழுதியவர். தற்போது கனடா ரொரன்ரோ வாசி. கனடாவிலிருந்துவெளிவந்த' தாயகம் ' இதழில் கதைகளும் குறுநாவலும் எழுதியவர். சாதியம் குறித்த நேர்மையான பார்வை கொண்டவர். இவரது 'வெகுண்ட உள்ளங்கள்' குறுநாவல் பற்றி நல்ல அபிப்பிராயம் பலர் மத்தியில் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். போர்கால இலக்கியம் என்ற வகைமாதிரிக்குள் 'புதியதோர்உலகம் ''கொரில்லா ' 'நஞ்சுண்டகாடு ' என்பவற்றிற்கு முந்தைய சம்பவங்களைக் கொண்டது இக் குறுநாவல்.
இவரது நூல் : * வேலிகள் - 1998. (குறுநாவல்களும்,சிறுகதைகளும்)
இவர் கதைகளில் எனக்குப் பிடித்த சிறுகதை இது:
"செல்லாச்சியம்மா ": கனாடா 'தாயகம் ' இதழில் வெளிவந்த கதை. 'வேலிகள் ' தொகுப்பிலும் இருக்கிறது. வவுனியாவுக்கு வாழ வந்து பெற்ற அனுபவங்களுடன் யாழ்ப்பாணம் திரும்பும் ஒருவரின் மனஅவசங்கள்.
செல்லாச்சியம்மா செத்துப்போனாவாம்" .என்று தொடங்கி முழுமையான தனிமையாக்கலுக்குள்ளாகி விட்டோம் என்று முடியும் இக்கதையை மேற்படிதொகுப்பில் வாசிக்கமுடியும்.
கடல்புத்திரன் என்னும் இவ் எழுத்தாளரை இப்பதிவில் கொண்டுவர நினைவூட்டிய வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி.!