- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -
அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.
நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.
நாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது. அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன. அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.
நாவலின் இறுதி வானதியின் காதல் எவ்விதம் முறிவடைக்கின்றது என்பதை விபரிப்பதுடன் முடிவுறுகின்றது. ஆரம்பத்தில் இயக்கத்தில் செல்லும்போது தனக்காகக் காத்திருக்க முடியுமா என்று வானதியிடம் கேட்டு, அவளது சம்மதத்தைப்பெறும் பரணி, இயக்கத்திலிருந்து விலகி அவளைத்தேடி வருகின்றான். அவனுக்காகவே அதுவரையில் காத்திருக்கும் வானதி அவனுடன் இணைந்து தன் வாழ்வினை ஆரம்பித்திருப்பாள் என்றுதான் பலர் எண்ணக்கூடும். ஆனால் .. நடந்தது வேறு. நாவலின் இடையில் ஒருமுறை பல சிரமங்களுக்குள்ளாகிப்போராளியாகச் செயற்படும் பரணியைச்சந்திக்கச் செல்லும் வானதியிடம் அவன் இனிமேல் இவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்று கூறி அனுப்பி விடுகின்றான்.
மீண்டும் இயக்கத்தை விட்டு விலகி, அவளிடம் வந்து மீண்டும் அவள் மீதான தன் காதலைப் பரணி யாசிக்கும்போது , அவள் மறுத்து விடுகின்றாள். காரணம் அவன் மீண்டும் நிலைமை மாறினால், இயக்கத்துக்குத்திரும்பக்கூடும், தான் மிகுந்த சிரமங்களுடன் அவனைச்சந்திக்கச்சென்றபோது அவன் தன்னை மீண்டும் வந்து சந்திக்க வேண்டாமென்று கூறியது போன்ற காரணங்களினால் அவனது காதலை ஏற்க அவள் மறுத்து விடுகின்றாள். அவளது உணர்வுகளை நாவலாசிரியர் பின்வருமாறு விபரித்திருப்பார்:
"நான் நாய்க்குட்டி போல உங்களைத்தேடி வர வர என்னிட்டை இருந்து நீங்கள் விலகி விலகிப்போனீங்கள். இனி இஞ்சை வரவேண்டாம் எண்டு கொஞ்சங்கூட இரக்கமில்லாமச் சொன்னீங்கள். கடைசியா ஈச்சங்குளத்திலை வைச்சு நீங்கள் சொன்னதும் அதைத்தான் ஒரு கட்டத்திலை ஏதோ மனசுக்குள்ள விட்டுப்போச்சு. இப்ப இயக்கத்தை விட்டிட்டு வந்து வாவெண்டு கூப்பிடுறீங்கள். பிறகு இயக்கம் உங்களை வாவெண்டு கூப்பிடேக்கை என்னை விட்டிட்டுப் போவீங்கள். விலகிப் போகவும் நெருங்கி வரவும் உங்களாலை முடியிற மாதிரி என்னாலை முடியேல்லை"
வானதியின் உணர்வுகள் உண்மையிலேயே காதலா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், வகையில் அமைந்திருக்கின்றன நாவலின் இறுதியில் அவள் நடந்துகொள்ளும் முறை.
போராளியாகச் செயற்படும் ஒருவனைச்சந்திக்கச்செல்லும்போது அப்போராளி அவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்பது இயல்பானது. ஆனால் அதே சமயம் போராடுவதற்காக அனைத்தையும் விட்டுச்செல்லும் போராளியொருவன், தனக்காகத் தான் விரும்பும், தன்னை விரும்பும் ஒருத்தியைக் காத்து நிற்கச்சொல்வதும் இயல்பானதா என்றால் சிறிது சந்தேகமே. பரணியின் மீதுள்ள காதலால் அவனுக்காகக் காத்து நிற்கும் வானதி, அவன் மிகவும் இலகுவாக அவளை நாடி வரும்போது அவனை நிராகரிக்கின்றாள். ஆனால் நாவலின் ஆரம்பத்தில் அவன் எல்லாவற்றையும் துறந்து போராடப்போகும்போது அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதிமொழி அளிக்கின்றாள். உண்மையில் நாவலின் இறுதியில் அவனை அற்பக் காரணங்களுக்காக நிராகரிக்கும் வானதி, ஆரம்பத்தில் அவன் உறுதிமொழி கேட்கும்போது , 'நீங்களோ எல்லாவற்றையும் துறந்து போராடப்போகின்றீர்கள். உங்கள் வாழ்வோ நிரந்தரமற்றது. உங்களுக்காக நான் எவ்விதம் காத்து நிற்பது?' என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.
சுருக்கமாகக்கூறப்போனால் பரணி, வானதி ஆகிய இருவருக்கிடையிலான நிறைவேறாத காதலை விபரிப்பதுதான் பார்த்தீனியத்தின் பிரதான கதை. அதனூடு, தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இயக்கப்பயிற்சிகள் (ராதா, பொன்னம்மான் ஆகியோரிடம் பெறும் பயிற்சிகள்), அக்காலகட்டத்தில் பரணி விடுதலைப்புலிகளின் தலைவருடன் உரையாடுவது, தலைவரின் காதல் திருமணம், பின்னர் இந்தியப்படையினர் இலங்கையில் நடாத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், அக்காலகட்டத்தில் பிற இயக்கங்களுடன் நடைபெற்ற மோதல்கள், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், இந்தியப்படையினர் அங்கு நடாத்திய மனித உரிமை அத்து மீறல்கள், படுகொலைகள் இவற்றையெல்லாம் விபரித்துச்செல்வதுதான் பார்த்தீனியம் நாவலின் பிரதான நோக்கம்.
நாவலின் இறுதியில் , இந்தியப்படையினர் நாட்டை விட்டுத்திரும்பிச்செல்கையில் தன் சார்பில் கட்டி அமைத்த 'தமிழ் தேசிய இராணுவ'த்துக்காக இளைஞர்களைச்சேர்ப்பதைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. அவ்விதம் சேர்க்கப்பட்ட தீண்டாமைக்கொடுமையினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகத்து இளைஞன் ஒருவனைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. தீண்டாமையினால் அவன் பாதிக்கப்பட்டபோது அவன் அடைந்த உணர்வுகளை விபரிப்பதற்குப் பதில், அவன் அதற்காகப் பழி வாங்குவதற்காக தமிழ்த் தேசிய இராணுவத்தில் சேர்வதாகவும், ஆனால் அவனது ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்னால், பிஸ்டல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் நாவல் விபரிக்கின்றது. இவ்விதம் தீண்டாமைக்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞனொருவனின் கதை கூறப்பட்டு அவன் முடிவு துரோகியாக முடிக்கப்பட்டிருப்பதை நாவல் தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வே வாசிக்கும்போது ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டிலும் ஜான் மாஸ்ட்டரும் இது பற்றிக்குறிப்பிடும்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கும் அவரது கூற்றில் உடன்பாடே. ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடலாம். அந்த இளைஞன் தீண்டாமைக்கொடுமைகளினால் அடைந்த உளவியல்ரீதியிலான பாதிப்புகளைப் போதிய அளவு விபரிக்காமல், அவனது உணர்வுகள் நாவலில் விபரிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் இந்தப்பாத்திரமானது அதன் மீது நடத்தைப்படுகொலை செய்து விட்டு, அதனை நியாயப்படுத்தச்சுட்டுக்கொல்லப்படுவதைப்போன்று அமைக்கப்பட்டிருப்பதாகவே வாசிக்கும் ஒருவருக்குத்தெரியும். எதிர்காலத்தில் இந்தப்பாத்திரப்படைப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பப்போகின்றது. இதுபோல் நாவலில் இயக்க மோதல்கள் விபரிக்கப்படும் விதமும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களுள்ளன.
இவைு 'பார்த்தீனியம்' மீதான என் முதற்கட்ட வாசிப்பின் எண்ணப்பதிவுகள். எதிர்காலத்தில் அதன் மீதான விரிவான வாசிப்பின் பின்னர் மீண்டும் விரிவாக என் கருத்துகளைத்தெரிவிப்பேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: கணையாழி அக்டோபர் 2019