எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :
" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ” ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )
மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:
இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதையின் அம்சங்களைப்போல் வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை. இன்று கவிதை மரபினை மீறி முற்றாக இன்னொரு தளத்தில் பயணிக்கின்றது. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு . அதனடிப்படையில் மட்டுமே மரபுக்கவிதையோ அல்லது ஏனைய கவிதை வடிவங்களோ நோக்கப்பட வேண்டுமென்று கருதுகின்றேன். அவ்விதம் கவிதையொன்றினை ஆராய்கையில் அதில் மரபுக்கவிதையின் கூறுகள் உள்ளனவா , இல்லையா என்று ஆராயலாமே தவிர அவை இருந்தால் மட்டுமே அது கவிதையா அல்லது இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவ்விதம் ஆராய்கையில் அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, பொருள் போன்ற ஏனைய பல விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
பிரமிளின் புகழ்பெற்ற சிறு கவிதையொன்று 'காவியம்'
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
இக்கவிதை ஒரு வசனத்தால் ஆன கவிதை. ஆக இது ஒரு வசன கவிதையும் கூட. வசன கவிதையென்றால் நிச்சயம் அது வசனங்களினால் அல்லது வசனத்திலானதாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். வசனம் முறையாக முடிக்கப்படாமல் , சொற்களால் பின்னப்பட்ட கவிதையினை வசன கவிதையாக நான் கருத மாட்டேன். ஆனால் இற்றைய கவிதையாக நிச்சயம் கருதுவேன். ஏனெனில் கவிதையின் பரிணாம விளைவு அது.
மேலுள்ள ஒரு வசனத்தையுள்ளடக்கியுள்ள சிறு கவிதையின் ஆரம்ப வரிகளில் 'சிற', 'பிற' என்று வருகின்றன. ஏனைய வரிகளில் மரபுக்கவிதையின் அம்சங்களெவையுமில்லை. குபராவின் கருத்துப்படி இது வெறும் வசனம். ஆனால் நாம் அனைவரும் அறிவோம் இதுவொரு நவீனத்தமிழ்க்கவிதையின் முக்கியமான கவிதையென்பதை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.