அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகளை நினைவு கூருகிறேன். மாகவி தான் வாழ்ந்த சமுதாயத்தை பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த நாட்டைப்பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த உலகைப்பற்றிச் சிந்தித்தான். இவ்வுலகை உள்ளடக்கிய இப்பிரபஞ்சத்தைப்பற்றிச் சிந்தித்தான். பிரபஞ்சப்பிரக்ஞையுடன் அவன் இம்மானுடர் பிரச்சினைகளை, துயரங்களை அணுகினான். அவ்விதம் அணுகியதால்தான் அவன் மொழி வெறியனாகவோ, மத வெறியனாகவோ எப்பொழுதும் இருந்ததில்லை. மிகவும் தெளிவாக அவனால் சகல பிரச்சினைகளையும் அணுக முடிந்தது; சிந்திக்க முடிந்தது. தமிழ் மொழியின் தொன்மையினை, இலக்கியச் சிறப்பினை உணர்ந்திருந்த பாரதி அதனால்தான் தமிழ் மொழியின் சிறப்பினைப்பாடினான். அந்நியருக்கெதிரான இந்திய தேசிய விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவன் என்றுமே தேசிய வெறியனாக இருந்தானல்லன். இவ்விதமான தெளிவு காரணமாகத்தான் அவனால் மானுட விடுதலையைப்பற்றியும் மிகவும் தெளிவாகப்பாட முடிந்தது; எழுத முடிந்தது.
இந்நாளில் நாமுமொரு உறுதியெடுப்போம். நாம் நமது மக்களின் உடனடிப்பிரச்சினையான சமுதாய, அரசியற் மற்றும் பொருளாதாரப்பிரச்சினைகளை அணுகும்போது பிரபஞ்சப்பிரக்ஞையுடன் எம் பிரச்சினைகள் அணுகுவோம். அவ்விதம் அணுகினால் நாம் மொழி வெறியர்களாகவோ, இன , மத வெறியர்களாகவோ இருக்க மாட்டோம். இம்மானுடரை, இம்மண்ணை, பிறந்த மண்ணை, இங்கு வாழும் சகல உயிரினங்களை, இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, இதற்கு இணையாக இருக்கும் சாத்தியம் மிக்க ஏனைய பிரபஞ்சங்களைப் பற்றியெல்லாம் தெளிவுடன் இருப்போம். இருக்கும் பிரச்சினைகளையும் விரைவாக அணுகித் தீர்த்திட முயற்சி செய்வோம்.
"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! "
"மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும் "