மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.
எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.
நூலாசிரியரைப்பொறுத்தவரையில் நவீன யுகத்தின் பிதாமகர்கள் தெக்கார்தேயும் சேர்வாண்டேசுமே. விஞ்ஞானமும், தத்துவமும் மனிதரின் இருப்பினை மறந்துவிட்டது உண்மையானால், சேர்வாண்டேசின் மூலம் ஐரோப்பியக் கலையானது மறக்கப்பட்டிருந்த மானுட இருப்பு பற்றிய விசாரணையினை மேற்கொண்டது. உண்மையில் ஹைடெகரால் அவரது 'இருப்பும் நேரமும்' நூலின் ஆய்வுக்குள்ளாகியிருந்த இருப்பியல் பற்றிய,அதுவரை ஐரோப்பியத் தத்துவங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்துக்கருதுகோள்களையும் ஐரோப்பிய நாவலானது வெளிப்படுத்தியது. தனக்குரிய வழியில், தனக்குரிய தர்க்கத்தில், ஐரோப்பிய நாவலானது இருப்பின் பல்வகைப்பரிமாணங்களையும் ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்தது: சேர்வாண்டேஸ் மற்றும் அவரது காலத்துப் படைப்பாளிகள் மூலம் மானுடர்தம் சாகசங்களின் தன்மை பற்றி ஆராய்ந்தது. ரிச்சார்ட்சன் மூலம் மானுட உணர்வுகளின் இரகசிய வாழ்க்கையினை வெளிப்படுத்தும்பொருட்டு மனிதர்தம் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்தது. பால்சாக்கின் மூலம் வரலாற்றில் மானுடரின் காலூன்றல் பற்றி ஆராய்ந்தது. பிளாபர்ட் மூலம் மூடி மறைக்கப்பட்ட மானிடரின் அன்றாட வாழ்வினை ஆராய்ந்தது. டால்ஸ்டாயின் மூலம் மானுடர்தம் நடத்தை மற்றும் தீர்மானங்களில் பகுத்தறிவற்ற போக்கின் தலையீடு பற்றிக் கவனத்தைத் திருப்பியது.
மானுடர் இருப்புப்பற்றி இவ்விதம் தன் கவனத்தைத் திருப்பிய ஐரோப்பிய நாவலானது நேரம் பற்றியும் ஆராய்ந்தது: பிரவுஸ்ட் (Proust) மூலம் நழுவிச்செல்லும் கடந்த காலம் பற்றிய அது ஆராய்ந்தது. ஜாய்ஸ் (Joyce) மூலம் நழுவும் நிகழ்காலத்தைப்பற்றிச் சிந்தித்தது. தாமஸ் மான் மூலம் நம் நிகழ்காலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் கடந்த காலத்தொன்மங்கள் பற்றி ஆராய்ந்தது.
முற்றுப்பெறாத எனது நாவல்கள்!
பல நாவல்களை அவ்வப்போது தொடர்களாக எழுதத் தொடங்கி ஓரிரு அத்தியாயங்களுடன் நிறுத்தியிருக்கின்றேன். அவற்றின் பட்டியலிது. ஒரு பதிவுக்காக இதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இவை நிறுத்தப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள். சில பத்திரிகை அல்லது சஞ்சிகை வெளிவராது போனதால் நிறுத்தப்பட்டவை. சில எழுதத்தொடங்கியபோதிருந்த ஆர்வம் குறைந்ததால் நிறுத்தப்பட்டவை. இவற்றை மீண்டும் படித்துப்பார்த்து விட்டு மீண்டும் இவை கூறும் பொருளை மையமாக வைத்து மேலும் தொடர்வதா என்று முடிவு செய்யும் எண்ணமுண்டு. குறிப்பாக 1983 நாவல் தாயகம் (கனடா) சஞ்சிகையில் எழெட்டு அத்தியாயங்கள் வெளியாகின. அதனை முடிக்கும் எண்ணமுண்டு. இங்கு காணப்படும் 'மோகநிலா' கனடாவில் நான் வெளியிட்ட 'இரவி' பத்திரிகையில் வெளியான தொடர் நாவல். பத்திரிகை இரண்டு இதழ்களுடன் நின்று போகவே நாவலும் நின்று போனது. கனடாவில் வசிக்கும் தாயொருத்தியையும், அவளது பதின்ம வயதுப்பெண் குழந்தையையும் , அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு நாவலொன்று எழுத வேண்டுமென்று எண்ணியதன் விளைவு இந்த நாவலின் ஆரம்பம்.
தொடர் நாவல்: மோகநிலா (இரவி - கனடா, இரண்டு அத்தியாயங்களே வெளியாகின)
தொடர் நாவல்: அகதிகள் (குரல்,கையெழுத்துச் சஞ்சிகை, சில அத்தியாயங்கள் வெளியாகின)
தொடர் நாவல்: மண்ணின் அடிமைகள் (குரல், சில அத்தியாயங்கள்)
தொடர் நாவல்: 1983 (தாயகம், ஏழெட்டு அத்தியாயங்கள்.)
தொடர் நாவல்: மின் வாழ்வு (பதிவுகள்.காம்)
தொடர் நாவல்: புள்ளும், புலவனும் (பதிவுகள்)
தொடர் நாவல்: எத்தனை கோடி இன்பம்! (பதிவுகள்)
ஸ்கார்பரோவில் ஜான் மாஸ்ட்டரின் உரை..
அண்மையில் ஸ்கார்பரோவில் தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சி.க.செந்திவேல் அவர்களின் 'வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு' வரை நூல் வெளியீட்டு விழாவில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ஜான் மாஸ்ட்டர் ஆற்றிய உரையில் நூலாசிரியர் மார்க்ஸிச, லெனினிச மற்றும் மாவோயிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை நோக்கும் பார்வை என்று கூறினாலும் அவ்விதமல்ல வெறும் பொதுப்புத்தியின் அடிப்படையிலேயே தமிழரின் போராட்டத்தை இந்நூல் அணுகுகின்றது என்று தனது விமர்சனத்தைக் கடுமையாக வைக்கின்றார். பொதுப்புத்தி என்றதும் உயிர்ப்பு சஞ்சிகையில் வெளியான கட்டுரையொன்றில் பொதுப்புத்தி பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது ஞாபகத்துக்கு வந்தது.
ஜான் மாஸ்ட்டரின் உரை எப்பொழுதும் கேட்பதற்கு சுவாரசியமானது. பிரமிக்க வைப்பது. தான் அறிந்த கோட்பாடுகளின் அடிப்படையில் சமகாலப்பிரச்சினைகளை விரிவாகப் பல்கோணங்களிலுமிருந்து அணுக்கும் இவரது பார்வை இவரது பரந்த வாசிப்பினை வெளிப்படுத்தும். இக்காணொளி முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், பின் நவீனத்துவம், மேற்கு நாட்டு மார்க்சிய மற்றும் ஆசிய மார்க்சிய அறிஞர்களின் அணுகுமுறைகள், மார்க்சியக்கோட்பாடு, சாதி, தேசியம், மார்க்சியம் கூறும் அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம், வெற்றிகரமாக நடைபெற்ற மார்க்சியப் புரட்சிகள் நடைபெற்ற சூழல்கள், மார்க்சியத்தின் இயங்கியல் அணுகுமுறை, நம்மவர் பல்வேறு விடயங்களைத் தாளித்து எழுதும் அரசியல் ஆய்வுகள் என்னும் கூத்துகள், தமிழ்த்தேசியத்துக்கும் இடதுசாரிகளுக்குமிடையில் நிலவிய அணுகுமுறைகள் என்று பல விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது.
இவர் இங்கு குறிப்பிடும் அனைத்துமே முற்று முடிபான முடிந்த கருத்துகளல்ல. விவாதத்துக்குரியவைதாம். ஆனால் முரண்பாடுகளை, அறிந்தவற்றின் அடிப்படையில், அனுபவத்தின் அடிப்படையில் தர்க்கரீதியாக எடுத்துரைக்கும் இவரது ஆளுமையின் அடிப்படையில் அவை எதிர்கொள்ளப்பட வேண்டும். வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் எழும் வெற்றுக் கூச்சல்களாக அவ்வெதிர்வினைகள் இருக்கக் கூடாது.
இவர் தனதுரையில் முதலாளித்துவம் நிலவிய சூழலில் வாழ்ந்த மார்க்ஸ் பாட்டாளி வர்க்கப்புரட்சி முதலாளித்துவ நாடான ஜேர்மனியில் நடக்குமென்று நினைத்தார் நடக்கவில்லை. ஆனால் அது ஏகாதிபத்தியச் சூழலில் லெனின் தலைமையில் ருஷ்யாவில் நடைபெற்றது. மாவோவின் சீனப்புரட்சியோ விவசாயிகளை மையமாகக்கொண்டு நடைபெற்றது. இது போல் காஸ்ட்ரோவின் கியூபாப்புரட்சியும் விவசாயிகளை மையமாக வைத்து நடைபெற்றது. இவ்விதம் எடுத்துரைக்கையில் ஜான் மாஸ்ட்டர் வெற்றியடைந்த புரட்சியொன்றின் கோட்பாடானது ஏற்கனவே இருந்த புரட்சிக் கோட்பாட்டினை நிலை மறுத்துச் செல்கின்றது என்றுரைத்தார். அவ்விதம் கூறலாமா அல்லது கோட்பாடானது புதிய புதிய சூழல்களை உள்வாங்கித் தன்னை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டுள்ளது என்று கூறலாமா என்றொரு கேள்வி எழுகின்றது. என்னைப்பொறுத்தவரையில் மார்க்சியக் கோட்பாட்டினை லெனின், மாவோ மற்றும் காஸ்ட்ரோ போன்றவர்கள் தம் நாட்டுச் சூழல்களுக்கேற்ப வளர்த்தெடுத்தார்கள் என்றே தோன்றுகின்றது. ஏற்கனவே இருந்த மார்க்சியக் கோட்பாடுகளை அவர்களது கோட்பாடுகள் நிலைமறுக்கவில்லை. மாறாக மேலும் வளமைப்படுத்துக்கின்றன என்றே எனக்குத் தோன்றுகின்றது.
தன்னுரையில் யாழ்ப்பாணத்தவர் கேரளாவுடன் நடத்திய புகையிலை வியாபாரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சந்தையை மையமாக வைத்து நடைபெறும் வியாபாரம் முதலாளித்துவ வியாபாரம் என்று கூறியதாகத் தென்பட்டது. அப்படிக் கூறலாமா என்பதிலும் எனக்கொரு கேள்வி. நிலப்பிரபுத்துவச்சூழலிலோ அல்லது முதலாளித்துவச் சூழலிலோ வியாபாரமென்பது உற்பத்திப்பொருளுக்கான அல்லது சேவைக்கான சந்தையை மையமாக வைத்துத்தானெ நடைபெறுகின்றது. ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயந்திரங்களற்ற சூழலில், மனித உழைப்பை மையமாகக் கொண்டு உற்பத்தி நடைபெறும் சூழலில் , அச்சூழலை முதலாளித்துவச் சூழல் எனலாமா? அல்லது நிலப்பிரபுத்துவச் சூழல் எனலாமா? இலங்கையில் ஓரிரு பகுதிகளைத்தவிர (குறிப்பாகக் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம் போன்ற) ஏனைய பகுதிகளில் இன்னும் நிலப்பிரபுத்துவப்பொருளாதாரக்கூறுகளே இருப்பதாகத்தெரிகின்றது. இவை பற்றிய ஜான் மாஸ்ட்டரின் விரிவான எதிர்வினைகளை அறிய ஆவலாயுள்ளேன்.
மொத்தத்தில் இது போன்ற உரைகள் ஆரோக்கியமானவை. ஏனென்றால் மேலும் தர்க்கரீதியான , ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இவ்விதமான விவாதங்களே வழி வகுக்கின்றன. அவ்விதமில்லாமல் கண்ணை மூடிக்கொண்ட பூனைகளாக அல்லது மணலில் தலையை மறைத்துக்கொண்ட தீக்கோழிகளாக இருந்து கொண்டு, வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திப்பதைத்தவிர்த்துப் போடும் வெற்றுகூச்சல்களால் எவ்விதம் பயனுமில்லை. அவ்வெற்றுக் கூச்சல்காரர்கள் ஜான் மாஸ்ட்டரின் உரைகளிலிருந்து படிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
ஈழநாடு மாணவர் மலர்க் கட்டுரைகள்!
என் மாணவப்பருவத்தில் என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட பத்திரிகைகளில் முதலிடம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'ஈழநாடு' பத்திரிகைக்கே. என் மாணவப்பருவத்தில் ஈழநாடு மாணவர் மலர் என் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்தது. கவிதைகள், கட்டுரைகள் பல அக்காலத்து ஈழநாடு மாணவர் மலர் பகுதியில் வெளியாகின. என் பதின்ம வயதுகளில் என் சிறுகதைகளை (உருவகக் கதையுட்பட) , கவிதைகளை ஈழநாடு பிரசுரித்து மேலும் ஊக்குவித்தது. பின்னர் என் பல்கலைக்கழகக் காலகட்டத்திலும் எனது கட்டுரைகள் சிலவற்றை ஈழநாடு பிரசுரித்திருந்தது. இவ்வாறு என் எழுத்துகளை ஈழநாடு பத்திரிகை பிரசுரித்து ஊக்குவித்ததை நான் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். என் மாணவப்பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியான இரு கட்டுரைகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.