புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதெல்லாம், பார்க்கும்போதெல்லாம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மறந்திருந்த காலம் நினைவுக்கு வருவதுண்டு. எவ்வளவு ஆர்வமாக அன்று வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்தோம். எம்மை மறந்து இன்பத்தில் திளைத்தோம். இன்றம் கூட சற்சொருபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன், அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வி.என்.மதியழகன், கே.எஸ்.ராஜா, விவியம் நமசிவாயம், கே.எஸ்.பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதர், கமலா தம்பிராஜா என்று பலரின் பெயர்கள் பசுமையாக நினைவிலுள்ளன. அதற்குக் காரணம் அவர்கள் திறமையான கலைஞர்கள். ஒரு நிறுவனத்தில் முறையான நிர்வாகத்தில் கீழ், திறமையாகத் தம் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். தவறுகள் விட்டால் அவை அவர்களது பணியினைப் பாதிக்கும். இதனால் அவர்கள் கேட்பவர்களை மனத்திலிருத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். செய்திகளை வாசித்தார்கள். தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகச்சிகளை நடாத்தினார்கள். ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பல வானொலிகள், தொலைகாட்சிகளுள்ளன. ஆனால் இவற்றில் ஒலி(ளி) பரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களின், பங்குபற்றியவர்களின் பெயர்களை நாம் அன்று எம்மை மகிழ்வித்தவர்களைப்போல் நினைவில் வைத்திருக்கின்றோமா?. வைத்திருப்போமா?
இதற்கு முக்கிய காரணங்களில் சில: இங்குள்ள வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தனிப்பட்டவர்களின் வியாபாரங்களாக இருக்கின்றன; முறையான பயிற்சியற்ற பலர் செய்திகளை வாசிக்கின்றார்கள்; நிகழ்ச்சிகளை நடாத்துகின்றார்கள்; உச்சரிப்பில் தவறிழைக்கின்றார்கள்; போதிய தமிழறிவு, ஆய்வறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற காரணங்களினால் இவர்களால் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளை வழங்க முடிவதில்லை.
இங்கு வானொலிக்கலைஞர்களாக, தொலைக்காட்சிக் கலைஞர்களில் எவ்வளவுபேர் முறையாக அத்துறைகளில் கல்வி கற்று, பயிற்சியெடுத்து பணியாற்ற வருகின்றார்கள்? இவர்களைப்போன்றவர்கள் இத்துறைகள் பற்றி , இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களால் எழுதப்படும் நூல்களையாவது, விவரணக் காணொளிகளையாவது வாசித்து, பார்த்து விட்டுப் பணி புரிய வரவேண்டும். அதனால் அவர்கள் தயாரிக்கும், ஒலி(ளி) பரப்பும் நிகழ்ச்சிகளும் சிறக்க வாய்ப்புண்டு. இவ்விதமாக இத்துறைகளில் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் இத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர். இந்நூல் இந்நூல் குறிப்பாகச் செய்தித்துறையினை மையமாக எழுதப்பட்டிருந்தாலும், இவ்விதமான துறைகளில் பணிபுரியும் வகையிலான நூலாகும், வாசிப்பவர்களுக்கும் இத்துறை பற்றிய அறிவினை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும், இதனை எழுதியவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணி புரிந்த வி.என். மதியழகன். இந்நூலின் பெயர் 'சொல்லும் செய்திகள்'. இதனை அழகாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது 'காந்தளகம்' பதிப்பகம்.
இந்நூல் மிகவும் சுவையாக, எளிமையாக, வாசிப்பவர்களுக்கு இத்துறை பற்றிய புரிதலைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செய்தித்தயாரிப்பில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று வாசிப்போரைப்பிரமிக்க வைத்து விடுகின்றது.
இந்நூல் பதினைந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செய்தித்துறையின் வெற்றிக்கு, சிறப்புக்கு முக்கியமானவையாகக் கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
செய்தியின் நம்பகத்தன்மைக்கு (Credibility) திட்ப நுட்பம் (accuracy) , சமநிலை (balance) மற்றும் தெளிவு (clarity) ஆகியவை முக்கியம். செய்திகள் பிரச்சாரங்களாக இருக்கக் கூடாது. அவை உண்மையாக இருக்க வேண்டும். செய்திகளில் வதந்திகளுக்கு இடமில்லை. மொழிபெயர்ப்புகள் முறையாகச் செய்யப்பட வேண்டும். மூலப்பிரதியினைப் பூரணமாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றலுள்ளவராக மொழிபெயர்ப்பவர் இருக்க வேண்டும். ஊகித்து எழுதுதல் செய்தியாளர் ஒருவரின் கடமை இல்லையென்றாலும், உரிய முறையில் ஆராய்ந்து ,ஆதாரங்களை முன்வைத்துச் செய்தியாளர்கள் தம் ஊகங்களை வெளிப்படுத்துவதானது தற்காலச் செய்தித்துறையில் ஒரு தேவையாக உருவாகியுள்ளது.
வானொலிக்காக எழுதப்படும் செய்திகள் மானுடரின் காதுகளை மையமாக வைத்தே எழுதப்படுகின்றன. செய்தி என்பது படைப்பிலக்கியம் அன்று. அது இயல்பான பேச்சு மட்டுமே. எனவே செய்தியாளர் தான் கூறும் செய்தியினை நன்கு புரிந்துகொண்டு, நண்பர் ஒருவருடன் பேசுவதைப்போல் பேச வேண்டும். ஒரே வசனமொன்றில் அதிக தகவல்களை உள்ளடக்கக் கூடாது. சிறு சிறு வசனங்களாக்கி தகவல்களின் செறிவினைப் பரவலாக்க வேண்டும். தொழில் நுட்பப்பதங்கள், புதுச்சொற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கேட்கும் நேயர்களைத் திக்குமுக்காட வைக்கக் கூடாது. செய்தி இலகு நடையில் எழுதப்பட வேண்டும். இரு பொருள் தந்து நேயர்களைக் குழப்புவதாகச் செய்தி இருக்கக் கூடாது.
செய்திகளை வாசிப்போரின் உச்சரிப்பு, மொழியாற்றல் (குறிப்பாக இலக்கண அறிவு) ஆகியவற்றின் அவசியம் பற்றியும் நூல் விரிவாக உதாரணங்களுடன் எடுத்துரைக்கின்றது. உதாரணமாக தமிழ் மொழியின் ழ, ல, ள போன்ற எழுத்துகளைச் சரியாக உச்சரிக்க வேண்டும். சொற்களின் புணர்ச்சி விதிகளை நன்கு அறிந்து சொற்களைக் கையாளும் வகையிலான இலக்கண அறிவு பெற்றவராகச் செய்தியை வாசிப்பவர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தவறான அர்த்தம் தரும் வகையில் அவ்வுச்சரிப்பு அமைந்து விடும்.
இவை போல் வானொலிச் செய்தித் தயாரிப்பு பற்றிய விடயங்களைத் தமது இலங்கை மற்றும் புகலிட அனுபவங்களின் அடிப்படையில் சிறப்பாகக் கடைந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திரு. வி.என்.மதியழகன். மேலும் செய்திகளை மட்டுமின்றி, வானொலி நேர்காணல்கள் பற்றி, இலத்திரனியல் ஊடகச் செய்திகள் பற்றி, செய்திகளின் பல்வகைப்பிரிவுகள் பற்றி (விளையாட்டு, காலநிலை, அரசாங்கச்செயற்பாடுகள் போன்ற) எனத் தன் கருத்துகளை இலகுவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் தந்திருக்கின்றார். பாராட்டுகள்.
இந்நூலை வாசித்தபோது இந்நூலை ஒரு விடயத்துககுப் பரிந்துரை செய்யலாமென்று தோன்றியது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இயங்கும் வானொலி மற்றும் தொலக்காட்சியில் பல்துறைகளில் பணிபுரிய விரும்பும் இது போன்ற நூல்களை வாசிக்க வேண்டும். அவ்வாசிப்பின் மூலம் இத்துறையினைச் சிறப்பாக, கேட்பவர் ஒருவரின் நினைவினில் நிலைத்து நிற்கும் வகையில் ஆற்றிட முடியும்.
இந்நூலை ஒருமுறை வாசித்ததுமே இதன் பக்கங்களை மீண்டும் புரட்டிப்பார்க்காமல் இதன் சாரத்தை மீண்டும் மனத்தில் அசைபோட முடிகின்றது. அதற்குக் காரணம் இந்நூல் செய்தித்தயாரிப்பு பற்றிய அரிய பல விடயங்களை உள்ளடக்கி , மிகவும் இலகுவான, எளிய மொழி நடையில் எழுதப்பட்டிருப்பதுதான். செய்தி பற்றி நூல் எவ்விதம் எழுதப்பட்டுள்ளதோ அவ்விதமே செய்தியொன்றும் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை வாசகருக்குப் புரிய வைப்பது நூலின் வெற்றிக்குச் சான்று.
இந்நூலின் ஆரம்பத்தில் நூலாசிரியர் வி.என் மதிஅழகன் கனவொன்று கண்டிருப்பார். புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இயங்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் செய்திப்பணிப்பாளர், செய்தி ஆசிரியர், செய்திப்பணிப்பாளர், நிருபர்கள், முதன்மை நிருபர், உதவி ஆசிரியர்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் எனப்பலரால் உருவாக்கப்பட வேண்டிய செய்தியானது பெரும்பாலும் தனி ஒருவராலேயே சேகரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு ஒலி(ளி) பரப்பப்படுகின்றது. இந்நிலை மாறி இதுபோல் செய்தியானது பலரின் கூட்டுத்தயாரிப்பாக உருவாகும் நிலையினை உள்ளடக்கியதாக வெளிவரும் வகையில் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் விளங்க வேண்டும் என்று வி.என்.எம் கனவு காணுகின்றார். 'அது பள்ளியறைக் கனவல்ல; செய்தியறைக்கனவு' என்றும் நூலின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றார். அவரது செய்தியறைக் கனவு நனவாகட்டும். அதற்கு ஒரு படிக்கட்டாக அவரது இந்நூல் விளங்கட்டும். விளங்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.