இளஞ்சேய் (வேந்தனார் இளஞ்சேய்) இவர் என் மாணவப்பருவத்து நண்பர்களிலொருவர். வவுனியா மகா வித்தியாலயத்தில் எழாம் வகுப்பை முடித்துக்கொண்டு , எட்டாம் வகுப்பிலிருந்து என் கல்வி யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகியது. 8G தான் என் வகுப்பு. அவ்வகுப்பில் என்னுடன் சக மாணவராக அறிமுகமானவர்தான் இளஞ்சேய். இலங்கையின் புகழ்மிக்க எழுத்தாளர்களிலொருவரான வேந்தனார் அவர்களின் இளைய புதல்வன். மிகவும் சிறந்த பேச்சாளர்ராக எம் வகுப்பில் அக்காலகட்டத்தில் விளங்கியவர். இளஞ்சேயிடமிருந்து அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. இலண்டனில் எழுத்தாளர் முல்லை அமுதனிடமிருந்து என் மின்னஞ்சலைப்பெற்றுக் கடிதம் அனுப்பியிருந்தார். அவரது தந்தையார் அமரர் வேந்தனாரின் நூறாவது பிறந்ததினத்தையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காகக் கட்டுரையொன்றினையும் அனுப்பியிருந்தார்.
இளஞ்சேயின் கடிதமும், மீள் தொடர்பும் மாணவப்பருவத்து நினைவுகளை மீண்டும் சிந்தையிலெழ வைத்துவிட்டன. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம் என் நல்ல நண்பர்களிலொருவராக விளங்கினார். நாமிருவருமே வாசிப்பதில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்ததும் முக்கிய காரணங்களிலொன்று. அக்காலகட்டத்திலேயே இவர் தன்னுடைய தந்தையாரை இழந்து விட்டிருந்தார். இவரது வீடு யாழ் இந்து மகளிரி கல்லூரிக்கு அண்மையிலிருந்தது. நான் இவரிடமிருந்து வாசிப்பதற்காகக் கதைப்புத்தகங்கள் வாங்குவதற்காக அடிக்கடி இவரது வீட்டுக்குச் சென்றிருக்கின்றேன். இவரும் அவ்வப்போது என்னிடம் புத்தகங்கள் இரவல் வாங்கிச்செல்வதற்காக வருவார்.
அக்காலகட்டத்தில்தான் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பட்டம் பெற்றிருந்த இவரது மூத்த அக்கா கலையரசி அவர்களின் திருமணம் நல்லூர் ஆலயத்துக்கருகிலிருந்த ஆலயமொன்றில் நடைபெற்றது. மணமகனும் பேராதனைப்பல்கலைக்கழகப்பட்டதாரியே. அத்திருமணத்துக்காக எம் வகுப்பு மாணவர்கள் பலர் இணைந்து சென்றிருந்தோம். இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.
பின்னர் காலப்போக்கில் திசை மாறிச்சென்று விட்டோம். இவரைக் கடைசியாகச் சந்தித்தது கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸொன்றில். 1978- 1981ற்குட்பட்ட காலகட்டத்திலொரு நாளென்று ஞாபகம். அப்பொழுது இவர் கணக்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். பின்னர் நாட்டு நிலை காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். இவரும் பின்னர் இங்கிலாந்து சென்று விட்டதாக அறிந்திருந்தேன். ஆனால் தொடர்புகளிருக்கவில்லை. பல வருடங்களின் முன்னர் டொராண்டோ, கனடாவில் அமரர் வேந்தனாரின் நூல்கள் வெளியிடப்பட்டபோது அந்நூல்களிலொன்றில் இவரது பெயரைப் பார்த்திருந்தேன்.
பேச்சாற்றலைப்போல் எழுத்தாற்றலும் உள்ளவர் இளஞ்சேய். அனுப்பியிருந்த மின்னஞ்சலில் தான் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதாக அவர் குறிப்ப்பிட்டிருந்தார். கணக்காளராகவும் பணியாற்றுவதாகவும் அறியத்தந்திருந்தார். எழுத்தாற்றல், வாசிப்பாற்றல் மிகுந்த இளஞ்சேய் அதிகமாக எழுத வேண்டும். இதுவரை அதிகம் எழுதியிருக்காவிட்டாலும் , இனியாவது அதிகம் எழுத வேண்டும். செய்வாரா?
இத்தனை வருடங்களின் பின்னர் அண்மையில்தான் இவருடன் மீள்தொடர்பு இவரது மின்னஞ்சல் மூலம் ஏற்பட்டது. அனுப்பியிருந்த புகைப்படத்தில் மிகவும் இளமையுடன் காணப்பட்டார். நன்றி இளஞ்சேய்.
இணையம் இன்று மக்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சங்களிலொன்று. ஆரோக்கியமான அம்சமது. மாணவப்பருவத்து நண்பரான இளஞ்சேயை மீண்டும் நான் தொடர்புகொள்ளக் காரணமாக அமைந்த ஊடகமல்லவா அது.
எனக்குப்பிடித்த கவிஞர் வேந்தனாரின் கவிதைகளிரண்டு:
1. காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.
புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.
அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.
பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்த
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.
பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.
2. 'கவிஞன்' என்னும் கவிதையிலிருந்து..
பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.