என் மாணவப்பருவத்தில், யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த 'சிந்தாமணி' பத்திரிகையில் (தினபதி பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பு சிந்தாமணி என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது) த. இந்திரலிங்கம் என்னும் எழுத்தாளர் நகைச்சுவை ததும்பும் படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய தொடரொன்று ஞாபகத்திலுள்ளது. அத்தொடரின் பெயர், பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மறந்து விட்டாலும், தொடரின் மையக் கரு இன்னும் ஞாபகத்திலுள்ளது. யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகிலுள்ள முற்றவெளியிலிருந்தென்று நினைக்கின்றேன் சிலர் சந்திரனுக்கு 'ராக்கட்' மூலம் பயணிக்க விளைகின்றார்கள். 'அப்புக்குட்டி' 'மணியண்ணை' போன்ற பாத்திரங்களுடன் , சிறுவனொருவனும் விண்வெளி வீரர்களாகப் பயணிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன். பனங்கள்ளை ராக்கட்டுக்குரிய எரிபொருளாகப் பாவித்து ஒரு வழியாக ராக்கட்டில் புறப்படுகின்றார்கள். இவ்விதம் பலத்த ஆரவாரங்களுடன் புறப்பட்டவர்களின் விண்வெளிக்கப்பலுடனான தொடர்பு அறுந்து விடுகின்றது. தொடர்பு அறுவதற்கு முன்னர் அவர்கள் தரையினைக் கண்டது பற்றி அறிவிக்கின்றார்கள். பூமியிலிருந்தவர்களெல்லாரும் விண்வெளிக்கப்பலில் சென்றவர்கள் நிலவில் இறங்கிவிட்டதாக எண்ணுகின்றார்கள். அவர்களது நிலை பற்றிக் கவலையுறுகின்றார்கள். ஆனால் தொடரின் இறுதியில்தான் தெரிய வருகிறது அவர்கள் இறங்கியது நிலவிலல்ல , பரந்தனுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலென்று. இவ்விதமாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஞாபகத்தில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால அன்றைய காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்துச் சிரித்து மேற்படி தொடரினை வாசித்தது மட்டும் இன்னும் நினவிலிருக்கிறது. ஈழத்தில் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்தவர்களில் த.இந்திரலிங்கத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
அவ்வப்போது த.இந்திரலிங்கம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றதா என்பது பற்றிப் பார்ப்பதுண்டு. அண்மையில் த.இந்திரலிங்கம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்தன. மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பெத்தை வளாகமாகவிருந்த சமயம், நாடகவியலாளர் க.பாலேந்திரா கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருந்த சமயம், பொறியியல் பீட மாணவரான யோ.க.மதுரநாயகத்தை இதழாசிரியராகக் கொண்டு வெளியான கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்க இதழான 'நுட்பம்' சஞ்சிகையில் வெளியான அவரது அறிவியற் சிறுகதையான 'தொலைவிலிருந்து வந்தவர்கள்' என்னும் சிறுகதையில் அவரைப்பற்றி வெளியான சிறு குறிப்பிலிருந்து மேலும் சில தகவல்களை அறிய முடிகின்றது. [ கட்டுப்பெத்தை வளாகம், மொறட்டுவைப்பல்கலைக்கழகமாக 1978இல் மாறியது. மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தின் 1980ஆம் ஆண்டுக்கான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராக நானிருந்தேன்.)
அச்சிறுகதையின் ஆரம்பத்தில் அவரைப்பற்றி வெளியான குறிப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள்:
1. த.இந்திரலிங்கம் என்னும் இளம் எழுத்தாளரின் படைப்புகள் இலங்கை மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் 'ஆனந்தவிகடன்' , Readers Digest ஆகியவற்றிலும், பி.பி,சி உலகச்சேவையிலும் வெளியாகியுள்ளன. இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுமாற்றலுள்ளவர் என்பதை இவை புலப்படுத்துகின்றன.
2. சிறுகதையின் தொடக்கத்திலுள்ள த.இந்திரலிங்கத்தின் சிறு குறிப்பு: " என் எழுத்து முயற்சிகளுக்குப் பலவகையிலும் ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் , உலகப்புகழ்பெற்ற , விஞ்ஞான எழுத்தாளரும், விஞ்ஞானியுமாகிய ஆதர் - ஸி - கிளார்க் (Arthur C Clarke)அவர்களுக்குப் புனைகதை சமர்ப்பணம். ( இதிலிருந்து எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கும், ஆர்தர் சி கிளார்க் அவர்களுக்குமிடையில் நிலவிய தொடர்பினையும் அறிய முடிகின்றது.
அறிவியல் எழுத்தாளராக த.இந்திரலிங்கம்!
எழுத்தாளர் த.இந்திரலிங்கம் நகைச்சுவைப் படைப்புகளுடன், அறிவியற் புனைகதைகளையும் எழுதுமாற்றல் மிக்கவர் என்பதை அறிகையில் வியப்பும், மதிப்பும் ஏற்படுகின்றன. ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கியமான படைப்பாளியான இவரைப்பற்றி ஏன் போதுமான தகவல்களில்லை என்பது வியப்பினைத்தருகின்றது. நம்மவர்கள் குழுச்சேர்ந்து, குழுக்களாகப்பிரிந்து கிடக்கும் விமர்சகர்களை அரவணைத்து, ஒருவருக்கொருவர் முதுகு சொறிவதால் த.இந்திரலிங்கம் போன்ற தரமான படைப்பாளிகள் பலர் பற்றிய தகவல்கள் குறைவாகவிருக்கின்றனவோ என்றும் எண்ணமொன்று தோன்றுகின்றது.
'நுட்பம் 1975' சஞ்சிகையில் வெளியான த..இந்திரலிங்கத்தின் அறிவியற் சிறுகதையான 'தொலைவிலிருந்து வந்தவர்கள்' மட்டுமே இதுவரையில் கிடைத்துள்ளது. இச்சிறுகதையுன் வெளியான அவரது அவரைப்பற்றிய குறிப்பிலிருந்து அவர் 'Readers Digest' மற்றும் 'பி.பி.சி உலகசேவையில் பங்களித்துள்ள விபரம் தெரிகின்றது, இது பற்றிய பூரண ஆய்வொன்றின் மூலம், அவரது படைப்புகள் பற்றிய் விபரங்களைப்பெறுவது சாத்தியமாகலாம்.
"
த.இந்திரலிங்கம் பற்றிய தேடலில் அவர் அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வந்தது தெரிய வந்தது. அறிவியல் விடயங்களைத் தாங்கி வெளியான 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையில் இவர் 'ஒளியியல்'பற்றித் தொடர் கட்டுரைகள் எழுதியதையும் அறிய முடிகின்றது. இவரது ஒளியியல் பற்றிய தொடரின் இரண்டாவது கட்டுரை 'ஒளியியல் 2: ஒளி நேர்கோட்டில் செல்வதில்லை' என்னும் தலைப்பில் , 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
இதழாசிரியராக த.இந்திரலிங்கம்!
கோப்பாய் சிவம் எழுதிய 'இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்' நூலிலும் இவரைப்பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "செங்கதிர் என்ற தரமான மாணவர் அறிவியல் ஏடு 1971ல் பொன்னா குமாரசூரியரை ஆசிரியராகக் கொண்டு ஐந்து இதழ்;கள் வெளிவந்து இடையில் நின்றிருந்தது. பின்னர் 1973ல் புத்துயிர் பெற்று த. இந்திரலிங்கம், கோப்பாய் - சிவம், செல்வி புஷ்பா மாணிக்கம்,எம். எல். எம். இக்பால் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகக் கொண்டு மேலும் சில இதழ்கள் வெளிவந்தன." [ எழுத்தாளர் த.இந்திரலிங்கம் பற்றிய மேலதிகத் தகவல்களை எழுத்தாளர் கோப்பாய் சிவம் அறிந்திருக்கக் கூடும். ]
இக்கட்டுரையை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/02/125/125.htm
'நுட்பம் 1975' சஞ்சிகையினை 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/119/11840/11840.pdf
இச்சஞ்சிகையின் பொருளடக்கம் வருமாறு:
நுழைவாயில் ... - யோ. க. மதுரநாயகம்
மண்ணில் இணைந்தால் ... - அம்பி
அந்தர ஊர்தி
பாரதிக்குப் பின் - வே. இளங்கோ
சுழன்றாடும் பூமி - ப. நித்தியானந்த சர்மா
நவயுக நாயகர் - கோப்பாய் சிவம்
குறளும் வாழ்வும் - சி. சிவலோகநாதன்
பாகத்தைப் பிரிப்போம் - க. இராஜம்னோகரன்
"தன் ஊண் பெருகுதற்கு தான் பிறிது ஊண் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" - வை .இரகுநாதன்
தாயத்தில் மாயம் - சி. சிவசுப்பிரமணியம்
விஞ்ஞானப் புனைகதை : தொலைவிலிருந்து வந்தவர்கள் - த. இந்தீரலிங்கம்
நீரும், நீவிரும். - ஜீவன்
செங்குட்டுவன் காட்டும் வழி - கோவை மகேசன்
"0632870811 HERE ..." - S. நாகேஸ்வரன்
கனவில்லை எங்கள் வாழ்க்கை - சௌமினி
நானிருந்து பாட்டெழுத வேண்டும் .... - ஞான - ஸ்ரீதரன்
அண்ணனுக்கு ஓர் கடிதம் - சரசி
மொழி வழி சேர் வீர்! - கனக - மனோகரன்
மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை - ஈழவேந்தன்
தமிழர் நால்வரின் குரல்கள் - இளங்கோ
ஆடால்லான் என்னுங் காசு கல்லால் ... - கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
புதிய கல்வித்திட்டம் + தொழில்நுட்பம் = ? - தி. விஜயகுமார்
புதுக் கவிதிகள்
நீண்டபயணம் - கல்முனை பூபால்
பத்திரிகை, ஒரு பத்திரிகை - அளலக்தர்
பொறுக்கமுடியாது .....! - ஏ. எல். ஜீனைதீன்
முதுகொழும்புகள் - தில்லையடிச்செல்வன்
HON PRSIDENT OF THA CAMPUS WRITES ... - DR U. S. KARUPPU
தலைவரின் தகவல் ... - க. பாவேந்திரா
சிறப்புப் பகுதி : சிறுகதை அனுபந்தம் ... - ஆசிரியர்
தமிழ்ச் சிறுகதைகள் - சில சிந்தனைகள் - நா. சுப்பிரமணிய ஐயர்
மர்மக்கதை - எனது பார்வை - தேவன், யாழ்ப்பாணம்
சிறுகதை - ஒரு ஆய்வு - சு. வேலுப்பிள்ளை
"சந்தேகம்" எம். ஏ. எம். ஏ. வாஹிது
செயலாளர் சிந்த்யவை ... - ஜி. ஜெயக்குமார்
இவர்களுக்கு எமது நன்றிகள் - இதழாசிரியர் குழு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.