மானுடர்களில் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்ளடங்கி), அரசியல்வாதிகள் இவர்களைப்பொறுத்தவரையில் ஓய்வு என்பது உடலில் வலு உள்ளவரையே. உடல், உள்ளம் வலுவாக உள்ளவரை இவர்கள் இயங்கிக்கொண்டேயிருப்பார்கள். இருப்பை இவ்விதம்தான் எதிர்நோக்க வேண்டும். இதனால்தான் மனோரமா போன்ற கலைஞர்கள் தாம் இறுதிவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்நோக்கும் பண்பு இது. இவ்விதமே மனிதர்கள் இருக்க வேண்டும் என்பது என் பெரு விருப்பு.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே இயங்கிக்கொண்டேயிருக்கின்றன கதிர் உட்பட. இயக்கத்துக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆனால் சாதாரண மானுடரைப்பொறுத்தவரையில் தம் வாழ்க்கையை ஓய்வு பெறுதல் என்பதன் அடிப்படையில அமைத்துக்கொள்கின்றார்கள். இதனால் ஓய்வு பெறும் இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு உழைக்கின்றார்கள். கடுமையாக உழைக்கின்றார்கள். ஓய்வு பெற்றதும் இவர்களில் பலருக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒய்வு பெற்றதும் எல்லாமே முடிந்து போய்விடுகின்றது என்று தளர்ந்து விடுகின்றார்கள். விரைவிலயே முதுமை பெற்று உடல்ரீதியாக, உடல் ரீதியாக வாடிப்போகின்றார்கள். பலர் ஒன்றுக்கும் இயலாத இயலாமையில் ஓய்வு பெற்றதும் வாழ்வே இல்லை என்பது போல் ஒதுங்கி, ஓய்ந்து விடுகின்றார்கள்.
இதனால் ஓய்வு பெறுதல் (Retirement) என்னைப்பொறுத்த வரையில் எதிர் மறையானது என்பது கருத்து. இதற்குப் பதில் ஒருவர் தன்னிடமுள்ள ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாக இக்கால கட்டத்தைப் பார்க்கலாம். இளமையில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்று விரும்பி, வாழ்க்கைச் சூழல்கள் காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனவர்கள் படித்துப் பட்டங்கள் பெறுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளலாம். மேனாடுகளில் அன்றாடப் பணிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பலர் முதுமையில் படித்துப் பட்டம் பெறுகின்றார்கள். ஓவியம், எழுத்து , நடிப்பு போன்ற தம் ஆற்றல்களை வளர்த்துக்கொள்கின்றார்கள். தன்னார்வத்தொண்டர்களாக ஏனைய மானுடர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள்.
மானுடர்கள் ஓய்வு பெறும் காலகட்டத்தை இருப்பின் வளமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகக் கருதித் தம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஓய்வு பெறுதல் என்னும் சொல்லினைத் தம் வாழ்க்கையின் அகராதியிலிருந்து நீக்க வேண்டும். இருப்பில் மானுடர்களுக்கு ஓய்வு என்பது இருப்பின் முடிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் வகையில் மானுடர்கள் தம் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் அண்மையில் என் கவனத்தைக் கவர்ந்த இருவர் பற்றி நிச்சயம் இங்கு கூற வேண்டும். ஒருவர் ஜோர்ஜ் டாவ்சன் (George Dawson). மார்சல், டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆபிரிக்க அமெரிக்கர்களில் ஒருவர். தன் இளமைப்பருவத்தில் அமெரிக்காவில் இனவெறி காரணமாகக் கறுப்பின மக்கள் அடைந்த கடுமையான துன்பங்களையெல்லாம் கண்டு வளர்ந்தவர். படிப்பதற்குச் சூழ்நிலைகள் காரணமாகப் படிக்க முடியாமல் வளர்ந்து, தனது 98 ஆவது வயதில் முறையாக எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்துத் தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டவர். அதன் பின்னர் இவர் ஒரு நூலொன்றினை எழுதினார். அதன் பெயர் Life is So Good (வாழ்க்கையானது மிகவும் இனிமையானது). இந்நூலொன்றின் மூலம் தன்னை வரலாற்றில் நிலை நிறுத்திக்கொண்டவர்.
- அண்மையில் இவர் தனது எண்பதாவது வயதில் முதுகலையில் பட்டம் பெற்றதையொட்டி மார்க்கம் நகரத்து மேயரிடமிருந்து விருதினையும் பெற்றுள்ளார் -
இவ்வகையில் அண்மையில் 'டொராண்டோவில் என்னை மிகவும் கவர்ந்த செய்தி ஒன்று உள்ளது. இங்குள்ள முதுமையான பெண்மணி ஒருவர் இன்னும் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக விளங்குகின்றார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதியிருக்கின்றார். அந்நூல் தமிழகத்தில் வெளியாகியுமுள்ளது. அண்மையில் தனது எண்பதாவது வயதில் முதுகலையில் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டமும் பெற்றுள்ளார். இவரைப்போன்றவர்கள் ஓய்வு எடுத்தல் என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இயங்குவதில்லை. தம் ஆற்றல்களை எவ்விதம் இளமைப்பருவத்தில் பெருக்கி அனைவருக்கும் பயனுள்ள வகையில் வாழ்கின்றார்களோ அவ்விதமே வாழ்கின்றார்கள். இவர்களைப்போன்றவர்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். இவர் தனக்கென்று Linked In பக்கம் கூட வைத்துள்ளார். அண்மையில் இவர் தனது எண்பதாவது வயதில் முதுகலையில் பட்டம் பெற்றதையொட்டி மார்க்கம் நகரத்து மேயரிடமிருந்து விருதினையும் பெற்றுள்ளார். அது பற்றி மேயர் Mayor Frank Scarpitti தனது ட்வீட்டரில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"Meet Yogaratnam Chelliah, a member of Middlefield Seniors Wellness Club. She is an inspiration, obtained her Master's Degree at the age of 80. Today, we recognize her efforts in the pursuit of educational excellence. Knowledge is key to progress. "
முனைவர் இளங்கோவன் திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்களைப்பற்றி எழுதிய பதிவு: http://muelangovan.blogspot.ca/2010/05/blog-post_24.html
திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்களை வாழ்த்துகின்றோம். எனவே மானுடர்களே! ஓய்வு பெறுதல் என்னும் சொற் தொடரினை உங்கள் வாழ்விலிருந்து எடுத்தெறியுங்கள். இருப்புள்ள வரை வாழ்வதற்கே ! வாழ்க்கையை அவ்விதமே அமைத்துக்கொள்ளுங்கள். அமைத்துக்கொள்வோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.