அண்மையில் நடிகை ஸ்ரீதேவி மறைவினையொட்டி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் நடைபெற்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. அவரது மரணத்தை மகாராஷ்ட்டிர அரசானது அரச மரியாதைகளுடன் நடத்தி அவரைக் கெளரவித்தது. இது சிலருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கூத்தாடிக்கு இவ்வளவு மரியாதை தேவைதானா என்று கேட்கும் இந்தச்சிறுமதிக் கூட்டம்தாம் அக்கூத்தாடிகளின் கலைத்திறமையில் தம் இருப்புப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்பமடைவது அதிகம். இந்தச்சிறுமதிக்கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சினிமா, நாடக நடிகர்களும் எழுத்தாளர்கள் போல், இசைக்கலைஞர்களைப்போல், ஓவியர்களைப்போல் மக்களை அவர்கள்தம் வாழ்வியற் பிரச்சினைகளிலிருந்து சிறிதளவாவது கவனத்தைத் திருப்பி இன்பமடைய வைப்பவர்கள்; வாழ்வுக்கு வேண்டிய ஆரோக்கியமான அறிவுரைகளைத் தம் நடிப்பின் மூலம் உணர வைப்பவர்கள்; நாடொன்றின் பெருமையினை உலகெங்கும் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றுபவர்கள். எல்லாக் கலைகளிலுள்ளதைப்போல் நடிப்புக் கலையிலும் திறமையான கலைஞர்களுள்ளனர். இவர்கள் ஏனைய துறைக்கலைஞர்களைப்போல் நாடொன்றின் செல்வங்கள். அந்த வகையில் நாடொன்றானது பல்வேறு உயரிய விருதுகளைக் கொடுத்து அவ்வப்போது இக்கலைஞர்களைக் கெளரவிக்கிறது. அதுபோன்றதொரு உயர் கெளரவம் தான் இவ்விதமான அரச மரியாதை என்பதும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நடிகை ஸ்ரீதேவி.
தமிழகத்தில் பிறந்த ஒருவரின் இழப்பில் பாரதத்தின் அனைத்து மாநில மக்களும் இன,மத, மொழி , மாநில வேறுபாடுகளற்றுப் பங்குபற்றுகின்றார்கள் என்றால், அரசியல்வாதிகள், நடிகர்கள், பொதுமக்கள் அனைத்துப் பிரிவுகளைச்சேர்ந்தவர்களும் அவர் இழப்பால் துயருகின்றார்கள் என்றால், அங்குதான் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாளுமை, திறமை என்பன தங்கியுள்ளன. அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் அவரது கலையுலகப் பங்களிபபு அமைந்துள்ளது. இந்த வகையில் அவரது இறுதிச்சடங்குகளை அரச மரியாதைகளுடன் நடாத்திய மகாராஷ்டிர மாநில அரசினைப்பாராட்ட வேண்டும். ஒரு மாநில அரசுக்கு நாட்டின் செல்வமான கலைஞர்களின் பங்களிப்பைப் பொறுத்து எவ்விதம் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முழு உரிமையுமுண்டு. அது மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கும் உண்டு. அதனை அவர்கள் பாவிக்க வேண்டிய தருணத்தில் சரியாகப் பாவித்திருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் எனக்கு ஞாபகம் வரும் இன்னுமொருவர் நடிகை, நாட்டியப்பேரொளி பத்மினி. இந்திய நாட்டின் செல்வங்களிலொருவர். தனது நடிப்புத்திறமையினால், நாட்டியத் திறமையினால் உலக அரங்கில், உள்ளூரில் நாட்டைப்பிரதிநிப்படுத்தியவர் அவர். ஆனால் அவருக்கு மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ உரிய கெளரவத்தை வழங்கவில்லை என்பது துரதிருஷ்ட்டமானது. யார் யாருக்கோ எல்லாம் பத்மஸ்ரீ போன்ற பட்டங்களை அள்ளி வழங்கும் பாரத அரசு அவருக்கு அவ்விதமான எந்தவொரு பட்டத்தினையும் அவரது வாழ்நாளிலும் சரி, பின்னரும் சரி வழங்கவில்லையென்பதும் என்னைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று. இன்று தன் மாநிலத்து வாசியாக வாழ்ந்த காரணத்தினால் மகாராஷ்ட்டிர மாநில அரசானது அரச மரியாதைகளுடன் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகளைக் கெளரவித்தது. ஆனால் தமிழகத்திலேயே வாழ்ந்து, தமிழ்த்திரையுலகுக்கு பெரும் பங்களிப்பை நல்கிய நாட்டியப்பேரொளி பத்மினியின் மரணத்தின் போது அன்றைய கலைஞரின் மாநில அரசானது ஏன் உரிய மரியாதைகளுடன் கெளரவிக்கவில்லையென்பது மட்டும் புரியாத புதிர். நடிப்புக் கலைஞர்கள் கூத்தாடிகளல்லர்; நாட்டின் செல்வங்கள் அவர்கள். உரிய மரியாதைக்கு உரியவர்கள் அவர்கள்.
- நடிகை ஸ்ரீதேவி குழந்தையாக... -