காலத்தால் அழியாத கானங்கள் 1: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?"
தமிழர்களின் கவிதை வரலாறானது சங்கப்பாடல்களில் தொடங்கி இன்றைய தமிழ்ச்சினிமா மெல்லிசைப்பாடல்களையும் உள்ளடக்கியதொன்றுதான் என்பதை இன்று கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் , திறனாய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கி விட்டார்கள். சங்கப்பாடல்கள் எவ்விதம் அகம், புறம் பற்றிப்பாடினவோ அவ்விதமே இம்மெல்லிசைப்பாடல்களும் மானுடரின் அகம் , புறம் பற்றிப் பல் கோணங்களில் மானுட வாழ்வை, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதலின் சிறப்பை, காதலின் இழப்பையெல்லாம் அற்புதமான நெஞ்சையள்ளும் மொழிநடையில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வைரமுத்து போன்ற கவிஞர்கள் பலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல் வரிகளுக்கு உணர்வூட்டிய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் புறக்கணித்து விட முடியாது.
காதலின் பிரிவுதுயரை வெளிப்படுத்தும் சிறப்பான பாடலிது. இப்பாடலின் சிறப்புக்கு மெல்லிசை மன்னர்களின் இசையும், சுசீலாவின் குரலும் ஏனைய முக்கிய காரணங்கள். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு தன் குரலால் உயிரூட்டும் சுசீலாவின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வைத்தெண்ணப்படும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். இப்பாடல்களெல்லாம் மானுடரின் பல்வேறு பருவங்களில் அவர்தம் மனதுக்கு ஆறுதளிப்பவை; இதமாகவிருப்பவை. இப்பாடலின் 'யு டியூப்' காணொளி ஒன்றுக்கான எதிரிவினைகளில் முதியவர் ஒருவர் எழுதியிருந்த கருத்தொன்று என் நெஞ்சினைத் தொட்டது. அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். அத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்த மேலும் சில கருத்துகளையும் பதிவு செய்கின்றேன். இக்கருத்துகளெல்லாம் இவ்விதமான மெல்லிசைப்பாடல்கள் எவ்விதம் மானுட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவன.
இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு கவிஞர் கண்ணதாசன் சொற்களைக் கையாண்டுள்ள இலாகவம். 'தெரிந்த' மற்றும் 'தெரியாதா' என்னுமிரு சொற்களை எவ்வளவு இலாகவமாகக் கையாண்டுக் கவிஞர் இப்பாடலைப் புனைந்துள்ளார்! இவ்விதமாகச் சொற்களை மீண்டும் மீண்டும் பாவித்துச் சிறப்பான பாடல்களை எழுதுவதில் வல்லவர் கவிஞர் கண்ணதாசன்.
1. CPV .RATNAM: My wife died 85 days ago; she lived 75 years and with me for 53 years; I was very sad with depression and the songs which are relayed by You tube are very apt to my situation and I hear tham to relieve my distree. I convey my gratitude and exteem to Kalaignar Kannadasan and YOU TUBE in this occasion.
2. Eranya Nathan: நாம் வானொலிப்பெட்டியையே நம்பிக்கொண்டிருந்த காலத்தில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் மிக அதிகமுறை அதிக ரசிகர்களால் கேட்கப்பட்ட இரண்டு பாடல்களில் இது ஒன்றாகும்...மற்ற பாடல்? கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ. .
3. Prak kash: பி, சுசீலா அம்மாவை ஒரு முறை வாழ்வில் தரிசிக்க வேண்டும். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
4. Velusamy Samy: என்னுடைய வாழ்க்கையில் புரட்டி போட்ட பாடல் இது.என் காதுகளில் இன்றைக்கும் ஒலித்து கொண்டு இருக்கும் பாடல் இது.
5. Kesaven: இந்த பாடலை ஒரு முறை மேல் மாடியில் இரவில் நிலவு வெளிச்சத்தில் தனிமையில் ரசித்து கேட்ட நினைவு வருகின்றது. அருமையான பாடல்.
6. raju rangaraj: உயிரும்,உடலும் இணேந்திருந்தாலும் இயக்குவதற்கு உறவு அவசியமே!
படம்: ஆனந்தஜோதி
பாடகர்: பி.சுசீலா
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
நடிப்பு: எம்ஜிஆர், தேவிகா
இசை: எம்.எஸ்.வி / ராமமூர்த்தி
பாடலின் முழு வரிகளும் கீழே:
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…
உயிரே விலகத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…
உயிரே விலகத் தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த தமிழே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா… பனியே
மறையத் தெரியாதா…
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா… தலைவா
என்னைப் புரியாதா…
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…
உயிரே விலகத் தெரியாதா
காலத்தால் அழியாத கானங்கள் 2: "பூ வரையும் பூங்கொடியே"
எம்.எஸ்.வி / ராமமூர்த்தி, P.B.ஸ்ரீநிவாஸ், கவிஞர் வாலி மற்றும் ஜெமினி / தேவிகா கூட்டணியிலுருவான மனதைக்கொள்ளை கொள்ளுமின்னுமொரு கானமிது. பூ வரையும் பூங்கொடிக்குப் பூ மாலை போடும் காதலினால் பாமாலை பாடும் காதலனின் உணர்வுகளை கவிஞர் வாலியின் மொழிச்சிறப்பில் அனுபவிப்பதிலுள்ள சுகமே தனி. அக்காதலனின் மெல்லுணர்வுகளை , மெல்லிசை மன்னர்களின் மெல்லிசையில், மென்குரற் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸின் குரலில் மெய்ம்மறந்து கேட்பதிலுமோர் சுகமே. ஜெமினி கணேசன் / தேவிகா கூட்டணியில் பல நெஞ்சையள்ளும் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவற்றிலிதுவுமொன்று.
இப்பாடலின் பின்வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவையாகக்கூறுவேன்:
"நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே "
காரிகையவள் கைகளால் வரையும் ஓவியத்தைக் காளை அவன் தன் கண்களால் உள் வாங்கி அக்கண்களால் காதலெனும் காதல் ஓவியத்தை வரைகின்றான். அவன் வரையும் ஓவியமோ வடிவங்கள் மாறினாலும் வண்ணங்கள் மறையாத ஓவியம். ஏனென்றால் அவள் தன் கன்னமெனும் கிண்ணத்தில் போட்டுக்குழைத்த வண்ணங்கள் கொண்டு அவன் வரைந்த காதல் ஓவியம் அது. அவளது அவன் மீதான காதல் உணர்வுகளுக்கேற்ப அவள் கன்னமெனும் கிண்ணத்திலுருவாகும் வண்ணங்கள் அவை. அவ்வண்ணங்களைத்தாம் அவள் அதே கன்னக்கிண்ணத்தில் குழைக்கின்றாள். அவற்றுடன் இடையிடையே அவள் கொஞ்சி வரும் தன் புன்சிரிப்பையும் இறைத்துக் கலக்கும் வண்ணங்கள் அவை. அவ்வண்ணங்களைத் தன் கண்களால் பருகிக் காளையவன் அதே கண்களால் வரையும் காதல் ஓவியங்களின் உருவங்கள்தாம் எத்தனை எத்தனை! உருவங்கள் மாறினாலும் காலத்தில் அழியாத , காதல் உணர்வு மாறாத உள்ளங்களில் நிறைந்திருக்கும் ஓவியங்களல்லவா அவை.
"கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கொஞ்சி வரும் புன் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே
உருவங்கள் மாறி விடும்
உள்ளங்கள் மாறாதே"
கவிஞர் வாலியின் படைப்பாற்றல் மிக்க , காதலனொருவனின் காதலி மீதான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான காலத்தால் அழியாத கானமிது.
படம் : இதயத்தில் நீ;
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி;
பாடல்:- வாலி;
பாடியவர் : P.B.ஸ்ரீநிவாஸ்;
நடிப்பு:- ஜெமினிகணேசன், தேவிகா
பாடல் முழு வரிகளும் கீழே:
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
வடிவங்கள் மறைந்து விடும்
வண்ணங்கள் மறையாதே
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கொஞ்சி வரும் புன் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே
உருவங்கள் மாறி விடும்
உள்ளங்கள் மாறாதே
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா
காலத்தால் அழியாத கானங்கள் 3: "எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா"
பதின்ம வயதுகளில் இளமை உணர்வுகள் படம் விரித்துத் தலைவிரித்தாடத்தொடங்கும் சமயங்களைக் கடந்த பொழுதுகளில் எம்மையெல்லாம் ஆட்டி வைத்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். இந்தப்பாடலை அண்மையில் கேட்டபோது 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா' என்று கேட்டபோது ஆச்சரியமாகவிருந்தது. ஏனென்றால் முதன் முதலில் கேட்டபோது 'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா' என்றுதான் கேட்டதுபோலிருந்தது. எனவே பாடலைத்தேடியபோது அப்படியுமொரு பதிவினை இணையத்தில் கண்டேன். அவ்விதமுமொரு பாடலையும் யு டியூப்பில் கண்டேன்.
குமுதம் சஞ்சிகையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ரா.கி.ரங்கராஜனின் இது சத்தியம் சுமைதாங்கி என்னும் திரைப்படமாக வெளியானது. அதில் ஜெமினி , தேவிகா ஆடிப்பாடுவதாக வரும் பாடலிது. வெளிவந்த காலத்தில் இளம் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு இன்றும் அழியாத கோலங்களிலொன்றாக, காலத்தால அழியாத கானங்களிலொன்றாக விளங்கும் பாடல்.
இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமொன்றுள்ளது. அது: பாடலின் ஆரம்பக் காட்சியில் சில கணங்கள் ஜெமினியும், தேவிகாவும் பார்வையாலேயே பல்வேறு உணர்வுகளுடன் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுப் பதிலும் கூறுவார்கள். பாடலின் கூறுபொருளும் அதுவே. அதனையே ஆரம்பத்தில் பாடல் தொடங்குவதற்கு முன் அமைத்த இயக்குநர் ஶ்ரீதரின் இயக்கத்தை அக்கணங்களில் நான் இரசித்தேன்.
கேட்பதற்கு இனிமையான , எளிமையான சொற்களில் காதலர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய பாடல்.
படம்: சுமைதாங்கி
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.வி / டி.கே.ஆர்
பாடகர்கள்: பி.பி,.ஶ்ரீனிவாஸ் / ஜானகி
பாடலின் முழு வரிகளும் கீழே:
ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓ ராஜா..
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா
அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ
முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
பெண்மை தலைகுனிந்திருப்பதும் தவிப்பதுமேனடி ராதா ராதா
அது தலைமுறையாய் எங்கள் தாய் தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா ஓ
கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி ராதா ராதா
அது மனமெனும் வண்டியை நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா
[இன்னும் வரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.