- அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. -
சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். 'நீலகடல் ஓரத்தில்',' நங்கூரம்' ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.
'சருங்கலய' (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.
சருங்கலய திரைப்படத்தில் தமிழ்ப்பாடலொன்றும் இடம் பெற்றுள்ளது. 'வானத்து மழைத்துளி' என்னும் அப்பாடலை எழுதியவர் யோகா பாலச்சந்திரன். பாடியவர் கலாவதி சின்னச்சாமி. இசையமைத்தவர் விக்டர் ரத்னாயக்க (Victor Ratnayake).
படம்: சருங்கலய
இசை: விக்டர் ரத்னாயக்க
பாடல் வரிகள்: யோகா பாலச்சந்திரன்
பாடகர்: கலாவதி சின்னச்சாமி
முழுப்பாடல் வரிகளும் கீழே:
வானத்து மழைத்துளியும் வையத்து மண்துகளும்
தான் ஈன்ற சேய்களில் தரம்பிரிக்கா தாய்மை போல்
ஊன் படைத்த உயிருக்கெல்லாம் உற்றவோர் உறுதுணையாய்
முன் நின்றுதவும் முதல்வோனே விநாயகனே
வாய் திறந்து பேசாயோ இந்நிலைமாற வழியேதுமில்லையோ
வாய் திறந்து பேசாயோ
நீரில் குமிழிபோல் நிலையில்லா வாழ்வை நம்பி
பாரினில் சாதிச்சுவரை அமைத்திடும் மனிதன்
சீரழிந்த போர்கோலம் சூழ்ந்ததனால்
பேரழிந்த பாச நெஞ்சம் விடிவதெங்கே
வாய் திறந்து பேசாயோ இந்நிலைமாற வழியேதுமில்லையோ
வாய் திறந்து பேசாயோ
பொங்கிடும் பாசத்தில் பேரலைகளை தடுக்க
இங்கே சாதிசமய சுவரெழுப்பினால்
தங்கிடும் மண்பலையின் மேகமென வீணே
மனப்பால் பருகும் ஆணவம் மாய்வதெங்கே
வாய் திறந்து பேசாயோ இந்நிலைமாற வழியேதுமில்லையோ
வாய் திறந்து பேசாயோ
முகநூல் எதிர்வினைகள்:
- பேராசிரியர் சுனில் ஆரியரத்தின -
1. Thavam Myalvaganam Thavam நல்லது நன்றே
2. Ramanitharan Kandiah இன்னோர் ஈழத்துப்பாடலும் "வானத்து வண்ணத்தாரகையாக " என்று தொடங்கும்;
3. Sinnakuddy Mithu இந்த திரைபட சூட்டிங் கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோவிலிலும் அதன் சூழலில் நடந்த பொழுது நேரில் பார்த்துள்ளேன்
4. Ramesh Manivasagam · காமினி மிகவும் சிறந்த நடிகர் ஐயமில்லை. இவர் மாலினி இணைந்த காதல் பாடல் அருமை - சுது பாட்டு என்று ஆரம்பமாகும் சிங்களப்பாடல்
5. Siva Sivakumaran ஒரு சிறிய திருத்தம். 1977 இனக்கலவரந்தான் இந்தப்படத்தை எடுக்க காமினியைத் தூண்டியது. ஆனால் படத்தின் கதை 1958 கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. சிங்களத்திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டாலும் படத்தின் உரையாடல்கள் பாதிக்கும் மேல் தமிழிலேயே இடம்பெற்றது.
6. Giritharan Navaratnam தகவலுக்கு நன்றி சிவா. நான் படத்தைப் பார்க்கவில்லை. இத்திரைப்படத்தைப்பற்றிய சுருக்கமான விமர்சனத்தை இங்கு முன் வைக்கலாமே..
7. Siva Sivakumaran 38 வருடங்களுக்கு முன் பார்த்த படம் என்பதால் விமர்சனம் எழுதுமளவிற்கு ஞாபகமில்லை. மனதை ஆழமாகப் தொட்டபடம் என்பது நினைவிருக்கிறது. காமினியின் நடிப்பு பற்றி கூறவே தேவையில்லை. DVD பிரதி எங்காவது கிடைக்குமென்றால் நன்றாக இருக்கும்.
8. Thiviyarajah Vairamuttu nalla pathivu.
9. Radha Manohar · இந்த திரைபபடதின் முக்கால் வாசி படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெற்றது . ஏறக்குறைய எல்லா நாளும் அதை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது .. அதில் இடம்பெற்ற அந்த படக்குழு கரவெட்டி கிராமத்தின் செல்ல பிள்ளைகள் போன்று கொண்டாடப்பட்டனர் .. பல கரவெட்டி மக்கள் அதில் பல பாத்திரங்களில் நடித்தும் உள்ளனர். அந்த மண்ணின் வாசம் அந்த படத்தில் மிகவும் அழகாகவே படம் பிடிக்கப்பட்டது ,, அப்பொழுது எனக்கு கைரேகை பார்க்க தெரியும் என்று திரு,காமின் பொன்சேகாவிடம் யாரோ கூறிவிட்டார்கள் அவரும் கேட்டார். நானும் கொஞ்சம் தயக்கத்தோடு அவரது கைரேகை பார்த்தேன் . அவர் பிற்காலத்தில் அரசியலில் பெரிய பதவிக்கு வருவார் என்று கூறினேன், சிரித்து கொண்டே இந்த அம்மாவா தரப்போகிறார் என்று கூறி கொண்டே காமிராவுக்கு முன்னே சென்று விட்டார். அதன் பின் சுமார் பத்து வருடங்களுக்கு பின் அவர் அரசியலில் ஈடு பட்டார் பதவியும் பெற்றார், சருங்கலே படத்தில் இடம்பெற்ற பல கலைஞர்கள் இலங்கையிலும் வெளி நாடுகளில் உள்ளார்க்ள ,, ஆனால் சருங்கலே பட பிரதிக்கு என்னவானது என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை . சருங்கலே படத்திற்கு தமிழ் வசனம் எழுதி பாட்டும் எழுதிய திருமதி யோக பாலச்சந்திரன் தற்போது கனடா கல்காரி நகரில் உள்ளார்.அவர் எனது மூத்த சகோதரி ஆவார்
10. Giritharan Navaratnam உங்களது பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க தகவலுக்கு நன்றி ராதா மனோஹர் அவர்களே.
11. Ajeevan Veer சருங்கலய (பட்டம்) படத்தின் 25வீதம்தான் யாழ்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மீதம் 75வீதம் கொழும்பில் படமாக்கப்பட்டது. சாதிப் பிரச்சனை மற்றும் இனப் பிரச்சனைதான் படத்தின் கதைக் கரு. அதில் வரும் நாதஸ்வரமும் மேளவாத்தியமும் கலந்த ஒரு சிங்களப் பாடல் இது.
12. Radha Manohar · சருங்கலே படத்தின் 25 வீத காட்சிகள்தான் யாழ்பாணத்தில் படமாக்க பட்டது என்று அதை ஒரு முக்கால் சிங்கள படமாக காட்ட சிலர் தற்போது முயற்சிக்கிறார்கள் அது உண்மையல்ல . முக்கால் வாசிக்கு மேற்பட்ட காட்சிகள் கரவேட்டியில்தான் படமாக்கப்பட்டது, ஏறக்குறைய அத்தனை நாளும் அந்த படப்பிடிப்பை பார்த்து கொண்டிருந்தேன் .. இன்னும் சரியாக கூறப்போனால் படப்ப்டிடிப்பு குழுவினர் சுபாஸ் ஹோட்டலில் தங்கி இருந்தனர் ... எமது வீட்டிற்கு வந்து எனது அக்காவையும் கணவரையும் காரில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அந்த படதின் தாயாரிப்பு நிர்வாகியாக அவர் கடமையாற்றினார் . அவர்கள் பேசிக்கொள்ளும் தகவல்களை அறிந்துள்ளேன் .. கொழும்பில் 75 வீத காட்சிகளும் படமாக்கப்பட்டது என்று கூறப்படுவது தவறான தகவல் ,, சருங்கலே படம் பற்றி எதுவும் தெரியாமல் யாழ்ப்பணத்தில் 25 காட்சிகள்தான் படம்காக்கப்பட்டது என்று கூறுவது .. சருங்கலே படம் தயாரிக்க பட்டதின் அடிப்படை நோக்கத்தை கொச்சை படுத்துவதாகும் ,,, காமினி பொன்சேகாவும் சுனில் ஆரியரத்னாவும் இலங்கை தமிழ் சிங்கள ஐக்கியத்துக்காக செய்த அந்த கலை முயற்சியை சிறுமை படுத்துதல் நன்றல்ல .. மேலும் சருங்கலே படம் நீண்ட காலமாக வெளிவராமல் உள்ளது ,, அதை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்ப கூடாது
13. Giritharan Navaratnam அஜீவன் தன் கருத்தைக் கூறியிருக்கின்றார். நீங்கள் உங்கள் கருத்தைக் கூறியிருக்கின்றீர்கள். இங்கு யாருமே யாரையும் சிறுமைப்படுத்தியதாகத் தெரியவில்லையே.... உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. நீங்கள் சருங்கலே பற்றிய உங்களது அனுபவங்களை ஒரு விரிவான பதிவாக எழுதலாமே..
14. Ajeevan Veer சருங்கலய படம் வரும் போது நான் சிங்கள சினிமா துறையில்இருந்தேன். தவிர நான் அப்படத்தின் முதலாவதாக திரைத் துறையினருக்கு காட்டும் போது பார்த்து கருத்தும் சொன்னேன். என்னிடம் அந்த படத்தின் வீடியோ இருந்தது. சருங்கலய படம் இணையத்தில் இல்லை. இலங்கை வீடியோ கடைகளில் இப்போதும் வாங்கலாம்.
சருங்கலய படத்தில் எவ்வளவு நாட்கள் படமாக்கினார்கள் என்பதல்ல முக்கியம். எவ்வளவு பகுதி படத்தில் இடம் பெற்றுள்ளதென்பதே முக்கியம். இது சினிமா வல்லுனர்களுக்கு தெரியும். சூட் பண்ணுவதெல்லாம் படத்தில் வருவதில்லை. அது தமிழ் படமல்ல. அது சிங்கள படம். தமிழில் பேசும் இடங்களில் சிங்கள சப் டைட்டடில் வரும். சிங்களத்தில் பேசும் இடங்களில் தமிழில் சப் டைட்டில் கூட இல்லை. அதன் கதை இலங்கை இனக் கலவரமே. அது யாழ்பாணத்தில் நடக்கவில்லை. கொழும்பில்தான் நடக்கிறது. யாம்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பகுதிகள் நடராவின் ஊர் நினைவு காட்சிகளாக வந்து போகும் காட்சிகளாகும்.
15. Radha Manohar · கொஞ்சமாவது நேர்மை இருந்தால் எனது பதில் பின்நூட்டத்தை மீண்டும் இருட்டடிப்பு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்
16. Giritharan Navaratnam //கொஞ்சமாவது நேர்மை இருந்தால் எனது பதில் பின்நூட்டத்தை மீண்டும் இருட்டடிப்பு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்// யாருமே உங்களை இருட்டடிப்பு செய்யவில்லையே. நீங்கள் எதனைக் கூறுகின்றீர்கள்? சிறிது விளக்குவீர்களா? மீண்டும் இருட்டடிப்பு செய்ய மாட்டீர்களென்று கூறுவதைப்பார்த்தால் முதலில் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்னும் கருத்தையல்லவா அக்கூற்று தருகின்றது. விளக்குங்கள் நண்பரே!
17. Janaki Karthigesan Balakrishnan Radha Manohar: கருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகும் போது சில உள்ளே மறைந்து விடுகின்றன. View more என்பதை அமத்தினால் மீண்டும் தோன்றும். சில வேளைகளில் ஒரே போஸ்ட் ஒரு தடவைக்கு மேல் காண்பிக்கப்படுகின்றது. மறுதடவை வரும் போது, நான் போட்ட சாதாரண லைக் கூட மறைந்து விடுகிறது. அது எனக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சில போஸ்ட் சாதாரணமாக முதல் பக்கத்தில் தோன்றினாலும், கிளிக் செய்தவுடன் இன்னோர் பக்கத்தை திறக்கிறது. இரண்டு பக்கங்களிலும் கருத்துக்களை பதிய இடமுண்டு. நாம் எங்கே பதிகிறோம் என்பதைப் பொறுத்தே, அது காண்பிக்கப்படுகிறது. இதுவும் ஒரு தடவை எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்காக நான் எழுதிய கருத்தை இன்றுவரை அவர் இவ் ஒழுங்கினால் போலும் பார்க்கவில்லை. நான் இவற்றையெல்லாம் புதிதாக கற்பவள் என்பதால், உங்களது பின்நூட்டமும், இவ்வாறான ஒரு காரணத்தினால் அடியுண்டு போயிருக்கமோ என எனது அனுபவத்தைப் பகிர்ந்தேன். மற்றும்படி, இன்னொருவர் எழுதியதை மற்றவர் அழிக்கவோ, மறைக்கவோ, திருத்தவோ முடியாது என்பதுதான் நான் இன்றுவரை அறிந்து கொண்டது.
18. Radha Manohar · இதே மாதிரி குழப்பங்கள் எனக்கும் வந்திருக்கிறது ... தங்களின் Janaki Karthigesan balakiruhnan பதிவுகள் மிகவும் வரவேற்க படவேண்டியது வாழ்த்துக்கள்
19. Radha Manohar · Giritharan Navaratnam தவறாக எண்ணவேண்டாம் எனது பின்னூட்டம் முதலில் காணப்படவில்லை அதனால் எனக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் அது, தங்களின் நேர்மையை சந்தேகப்பட்டமை எனது அவரசர முடிவால் ஏற்பட்ட விளைவு. அதற்காக தங்களின் மனம் வருந்தியதற்கு மன்னித்து கொள்ளவும் ,, தங்களின் பதிவுகள் மிகவும் சிறப்பானவை .. வாழ்துக்கள்
20. Janaki Karthigesan Balakrishnan நான் இந்தப் படத்தை அனுராதபுரத்தில் வேலை பார்த்த காலத்தில் சிங்கள குடும்பத்தினருடன் தங்கியிருந்த வேளை அவர்களுடன் சென்று பார்த்தேன். நல்ல மனதைத் தொட்ட படம். பார்த்தவர்கள் அழுத அல்லது சிவந்த கண்களோடு படம் முடிந்து வெளியே வந்தது ஞாபகம். ஆனால் முழுக்கதையும் இப்போ நினைவுக்கு வரவில்லை. அழுதவர்கள் நடிகர் காமினி பொன்சேகாவிற்காகவா அல்லது தமிழன் மிஸ்டர் நடராஜாவிற்காகவா என்று திட்டவட்டமாக கூறத் தெரியவில்லை. வயது போன மிஸ்டர் நடராஜாவின் வாழ்வின் பகுதி கூடுதலாக ஞாபகம் இருந்தது. அஜீவன் இணைத்த பகுதி மீளப்பெற உதவியாக இருந்தது. மிஸ்டர் நடராஜாவை எல்லா நேரமும் சந்தனப் பொட்டும், தொப்பியும், கோட்டும் என்று காண்பித்ததை விட, ஒரு கட்டத்தில் மிஸ்டர் நடராஜா ஒரு சாப்பாட்டுக் கடையில் உண்ணும் போது கையிலிருந்து வடிந்த சாப்பாட்டை முழங்கைக்கு அண்மையான பின்புறத்தை நக்கி சாப்பிடுவதாக காட்டப்பட்டது, தமிழரின் பழக்க வழக்கங்களை சிறிது மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டதாக உணர்ந்தேன். நட்புறவைப் பேண நல்லெண்ணத்தோடு இதைப் போன்ற சீரியஸ் ஆன படங்கள் எடுப்பதானால், அது போன்றவை எவ்வாறான தாக்கங்களையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என நம்புகிறேன். இடைக்கிடை இவ்வாறான பழைய நினைவுகளைக் கொணரும் (நனவிடை தோய்தல் - சரியான சொல்லா?) விடயங்களை அறிமுகப்படுத்தும் கிரிதரனுக்கு நன்றிகள்.
21. Giritharan Navaratnam //நடிகர் காமினி பொன்சேகாவிற்காகவா அல்லது தமிழன் மிஸ்டர் நடராஜாவிற்காகவா என்று திட்டவட்டமாக கூறத் தெரியவில்லை// வணக்கம் ஜானகி பாலகிருஷ்ணன். இவ்விதம் நீங்கள் கூறுவது படத்தின் நோக்கத்திற்கு மாறானது. நடராஜன் என்னும் மனிதராக நடித்திருக்கும் பாத்திரத்தை அப்பாத்திரத்தினூடு புரிந்து கொள்வதை நீங்கள் தமிழர் என்னும் யதார்த்தம் தடுப்பதன் விளைவோ இக்கூற்று என்னும் ஐயத்தினை ஏற்படுத்துகின்றது. நீங்கள் நடராஜா என்னும் பாத்திரத்தை நடித்தவரின் சிங்களப் பின்னணியை வைத்து ஆராய்வது சிறிது வியப்பினைத்தான் தந்தது.
22. Ajeevan Veer ஜானகி ! சொல்லும் இடத்தில்தான் இனக் கலவரம் ஆரம்பித்த காட்சி ஆரம்பமாகிறது. காமினி நடராசாவாக நெற்றியில் திருநீறோடு உட்கார்ந்திருப்பார். கலவரம் ஒன்று தொடங்கியதற்கான குரல்கள் வெளியில் இருந்து வரும். தெளுன்வ மறப்பியவ் (தமிழரை கொல்லுங்கடா) எனும் குரல்கள் கேட்கும். அது ஒரு தமிழ் தோசைக் கடை. அதே இடத்தில் இந்த நேரத்தில் யாழ்பாணத்தில் வேலை செய்தவரான சிங்கள குடும்பத்தரது மகளாகவும் , நடராசாவை காதலியாகவும் நடித்த வீனா ஜெயக்கொடி ஓடிவந்து நடராசா(காமினி)வின் நெற்றியிலிருந்த திருநீறை தனது சேலையால் அழித்து காமினியை அணைத்துக் கொண்டு நடக்கிறாள். அவர் எனது கணவர் என தோசை கடையை உடைக்க வந்த காடையர்களிடம் சொல்லி காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். அதன் பின்னர் நடராசவை வழியில் வைத்து சிங்களவர்கள் தாக்குகிறார்கள். அங்கிருந்து வரும் போது , விமல் குமாரத கொஸ்த்தா , தள்ளாடிக் கொண்டு வரும் நடராசாவை காண்கிறார். " எனக்கு குடிக்காதே என்று சொல்லிப் போட்டு இன்றைக்கு மகத்தயா(ஐயா) நல்லா குடித்து விட்டு வருகிறார்" என சந்தோசமடைகிறார். அந்த சந்தோசம் நீடிக்கு முன்னமே நடராசா நிலத்தில் விழுகிறார். அவரை நோக்கி விமல், சிறியானி மற்றும் குழந்தை ஆகியோர் ஓடுகிறார்கள். நடராசா வேலைக்கு போகும் போது குழந்தையிடம் பட்டம் ஒன்று வாங்கி வருவதாக சொல்லிவிட்டு போவார். எனவே பட்டம் கிழிந்து போனது என தனது நம்பிக்கை கிழிந்து போனது என சொல்லி விட்டு மரணிப்பார்.
23. Radha Manohar சருங்கலேயின் உருவாக்கத்தை காணும் வாய்ப்பு கிடைத்தும் இன்றுவரை அதை திரையல் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ஒரு முக்கிய தகவல் அதில் இரண்டாவது கதாநாயகனாக ஒரு யாழ்ப்பாண முஸ்லிம் வாலிபர் நடித்திருந்தார், அவர் எனது பள்ளி தோழர்,அவரை படக்குழுவுக்கு அறிமுகப்படித்தியது அடியேன்தான் . அந்த இளைஞரின் சமுகம் அதை ஏற்ருகொள்ளமையால் அவர் அதோடு ஒதுங்கி விட்டார், அவர் சார்ந்த சமுகம் இஸ்லாமியர்களுகுள்ளேயே மிகவும் சிறுபான்மையாக உள்ள ஒரு பிரிவை சேர்ந்த பழமை கோட்பாடு நிறைந்திருந்தமையால் இன்று அவர் இலங்கையில் இருக்கிறார்.இருந்தாலும் அவர் பெயரை கூற முடியாமல் இருக்கிறது அண்மையில் கூட அவரை சந்தித்தேன்
24. Giritharan Navaratnam Radha Manohar நன்றி நண்பரே உங்களது பயன் மிக்க தகவல்களுக்கு.
25. Janaki Karthigesan Balakrishnan Radha Manohar: தங்களுடைய பின்நூட்டத்தை தயார் செய்யும் அதேவேளை நானும் எனது கருத்தினை தயார் செய்தேனாக்கும். இருவரதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பதிவாகியுள்ளது. எனது கருத்து எதுவும் உங்களுடையதை சார்ந்து தரப்பட்டவையல்ல. இருப்பினும் நானும் உங்களைப் போல சிங்கள-தமிழ் ஐக்கியத்தைப் பேணவே அப்படம் எடுக்கப்பட்டது என நம்புபவள். எனது கண்ணோக்கில் எவ்வாறு இம்முயற்சிகளை மேலும் முன்னேற்றிக் கொள்ளலாமென, சிலவற்றை வெளிப்படையாகக் கூறியுள்ளேன்.
26. Giritharan Navaratnam இத்திரைப்படம் இலங்கையில் வெளிவந்த முக்கியமான , கவனத்துக்குரிய திரைப்படமென்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள், திரைப்படக் காட்சிகள் மூலம் தெரிகின்றது. ஆனால் உலக சினிமாக்கள் பற்றி எழுதும் பலர் இது போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது வியப்பினையும், ஏன் என்னும் கேள்வியினையும் ஏற்படுத்துகின்றது.
27. Sam Mer இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கரவெட்டி கிழக்கில் உள்ள நுணுவில் பிள்ளையார் கோவிலிலும் அதற்கு அருகே உள்ள செட்டி தெருவில் ஒரு வீட்டியுலம் பல நாட்கள் இடம்பெற்றது. இந்த படம் எடுத்த போது சில நாட்கள் நானும் நண்பர்களும் இந்த இடங்களிற்கு சென்று படம் எடுப்பதனை பார்த்திருந்தோம்.
28. Ajeevan Veer சருங்கலே! தமிழர் பிரச்சனை குறித்து சிங்களவர் அறிந்து கொள்வதற்காக சுனில் ஆரியரத்ண இயக்கிய படம். அதில் காமினி நடித்தார்.இதன் ஒரு தயாரிப்பாளர் சுனில் ஆரியரத்னவின் சகோதரரும் எனது ஆசிரியர்களில் ஒருவருமான பத்திரகையாளர் குருவிட்ட பண்டார. இது தமிழ் திரைப்படம் அல்ல. ஆனால் தமிழரது கதை பேசும் சிங்கள திரைப்படம். யாழ்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பகுதிகள் திரைப்படத்தின் பிளாஸ்பெக் காட்சிகளாக ( நடராசாவின் நினைவுகளாக) படத்தில் அடிக்கடி வந்து போகும். உதாரணத்துக்கு ஒப நெத்துவ ஒபத் எக்க தமிழர் பிரச்சனை பேசும் சிங்கள படம். எனவே இதில் நமக்கு தெளிவு வேண்டும்.
29. Sriranjani Vijenthira தகவலுக்கு நன்றி. யூரியூப்பில் இந்தப் படத்தினைத் தேடினேன். பாடல்கள் மட்டுமே அதில் உள்ளன. பார்க்கவேண்டும் என்ற ஆசையை அது இன்னும் தூண்டியது. எங்காவது எடுக்க முடியுமா என எவருக்காவது தெரியுமா?
30. Giritharan Navaratnam இணையத்தில் இதுவரை இல்லையென அறியென முடிகின்றது. ஆனால் இப்படத்தைப்பற்றிய இங்குள்ள ராதா மனோஹர், அஜீவன் ஆகியோரின் தகவல்கள் இப்படத்தைப்பார்க்கும் ஆவலைத்தூண்டுகின்றன. சருங்கலே என்பதற்கான அர்த்தத்தை வெளிப்படுத்தும் படத்தின் முடிவை அஜீவன் குறிப்பிட்டிருந்தார். மிகவும் துயரகரமானது. நெஞ்சைத்தொடும் வகையில் அமமை்திருந்த்தது. உண்மையில் இதனைத்தயாரித்த சுனில் ஆர்யரத்தின, நடித்த காமினி பொன்செகா, பங்குபற்றிய கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
31. Ajeevan Veer கருங்கலே படம் இலங்கை வீடியோ கடைகளில் உண்டு. இலங்கையில் வாங்கலாம்.
- சருங்கலயத் திரைப்படக் காட்சி -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.