- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில. -
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.
'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.
ஆரம்பத்தில் மேற்கு வங்கத்திலுருவான நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போராடிச்சிறைத்தண்டனை அனுபவித்து, மார்க்சிய, லெனினிய, மாவோயிசத் தத்துவங்கள் கூறும் அடிப்படையில் தன் பாதையை வகுத்துக்கொண்ட தோழர் தமிழரசன், இந்தியாவின் தேசிய இனங்கள் தனித்தனியாகத் தம் இனத்துக்கான பொதுவுடமைக்கான் புரட்சிகரபோராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை உறுதியாக நம்பியதால்தான் தமிழ்நாட்டுப் பொதுவுடமைக்கட்சி, அதன் ஆயுதப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படை ஆகியவற்றை நிறுவினார். இந்த விடயத்தில் அவர் தமிழர் என்னும் உணர்ச்சிரீதியாகத் தமிழ்நாட்டுப்பொதுவுடமைக் கட்சியினை உருவாக்கவில்லை. தான் நம்பிய மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் அதனை உருவாக்கினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்தில் இலங்கையிலிருந்த மார்க்சிய அமைப்புகளெல்லாம் , தமிழர் உரிமைகளுக்காகத்தனியானதொரு போராட்டத்தை முன்னெடுப்பதை ஆதரிக்கவில்லை. அனைத்து மக்களினதும் ஒட்டுமொத்தபபோராட்டமாகவே பொதுவுடமைக்கான புரட்சியை அவர்கள் நம்பினர். இதனால் இலங்கையின் இனவெறி பிடித்த அரசுகளால் தமிழ் மக்கள் மேல் கடும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அம்மார்க்சிய அமைப்புகளால் தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் பற்றிய சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போனது. ஆனால் இவ்விதமான ஏனைய நாட்டு அரசியல் நிகழ்வுகளால் தோழர் தமிழரசன் இந்தியாவின் தேசிய இனப்பிரச்சினைகளை அணுகும்போது, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கானதொரு பொதுவுடமைக் கட்சியியொன்றினையும் , புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற ஆயுதப் பிரிவையும் கொண்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதனால்தான் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு விடுதலைப்படை ஆகியவற்றை அவர் உருவாக்கிப்போராடினார் என்பதையே அவரது வாழ்க்கை நமக்குப் புலப்படுத்துகின்றது. இதனைத் தோழர் பாலனின் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது.
இச்சிறு நூல் தெளிவாகத் தன் தர்க்கங்களை முன் வைக்கின்றது. மக்கள் மத்தியில் புரையோடிக்கிடக்கும் தீண்டாமைக்கொடுமைகள் விடயத்தில் தோழர் தமிழரசன் கொண்டிருந்த தெளிவான நிலைப்பாட்டினை, மக்களுக்கான மக்கள் போராட்டமொன்றில் போராளிகள் எவ்விதம் மக்களுடன் பழக வேண்டும் என்பவை பற்றியெல்லாம் தோழர் தமிழரசன் கொண்டிருந்த, கடைப்பிடித்த தெளிவான கருத்துக்களை பற்றியெல்லாம் இந்நூல் விபரிக்கின்றது. உதாரணத்துக்கு நூலின் 'தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்' அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். இதில் நூலாசிரியர் தமிழகம் மற்றும் இலங்கையில் தாழ்த்தப்பட சமூக மக்கள் அடைந்த , அடையும் இன்னல்களை, அம்மக்களைச் சாதியின் பெயரால் இன்றும் ஏமாற்றும் பாராளுமன்ற அரசியல்வாதிகளை இவற்றையெல்லாம் எடுத்துரைத்துச் சாதி பற்றிய தமிழரசனின் நிலைப்பாட்டினை விரிவாக எடுத்துரைப்பார். இது பற்றி எடுத்துரைக்கும் நூலாசிரியர் தோழர் தமிழரசனின் சாதீயம் பற்றிய 'மீன்சுருட்டி' அறிக்கை பற்றி விரிவாக விளக்கியிருப்பார். சாதியமைப்பு என்றால் என்ன?, சாதி தோன்றக்காரணம் என்ன?, சாதி நீடிக்கக் காரணம்? சாதியமைப்பு எப்போது தோன்றியது?,.. எனத்தொடங்கி 'சாதியை ஒழிப்பது எப்படி?' என்பதுவரை பதினொரு தலைப்புகளில் ஆராயும் 'மீன்சுருட்டி அறிக்கை' இந்நூல் ஆவணப்படுத்தும் முக்கியமான விடயங்களிலொன்று. இதனை நூலாசிரியர் சாதி ஒழிப்புக்காகத் தோழர் தமிழரசன் வழங்கியிருக்கும் மிகப்பெரிய பங்களிப்பாகக் கூறுவார். மேலும் இவ்வறிக்கையில் தோழர் தமிழரசன் சாதி விடயத்தில் பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியா ஆகியவற்றின் போதாமையை உணர்ந்திருந்ததும், அவற்றையும் உள்வாங்கி மார்க்சிய அடிப்படையில் சாதிப்பிரச்சினைகான தீர்வினை முன் வைத்திருப்பதும் 'உண்மையிலேயே மாபெரும் சாதனை' என்றும் நூலாசிரியர் தன் கருத்தினை வெளிப்படுத்தியிருப்பார்.
இவ்வத்தியாயம் ஆவணப்படுத்தும் இன்னுமொரு முக்கியமான விடயம் மக்களுக்காகப் போராடும் புரட்சிகரவாதிகள் எவ்விதம் மக்களுடன் பழக வேண்டுமென்பதைப்பற்றிய தோழர் தமிழரசனின் எண்ணம் , செயற்பாடு என்பவை பற்றியது. தோழர் தமிழரசன் நடைமுறையிலும் தன் கொள்கைகளைப் பின்பற்றிய ஒருவர் என்று கூறும் நூலாசிரியர் அதனை விளக்கக்கீழுள்ள சம்பவத்தை எடுத்துக்காட்டுவார்.
ஒருமுறை தோழர் பாலனின் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பெரமபலூருக்கு அருகில் அமைந்திருக்கும் மலையாளப்பட்டி என்னுமிடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமுக்குத் தோழர் தமிழரசன் வருகின்றார். அங்குள்ள தோழர்களுக்கு அவர் மார்க்சியத் தத்துவங்களைப்போதித்து வருவதால் அதன் காரணமாகவே அன்றும் அங்கு வருகின்றார். அப்பகுதியில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பொன்றுக்கு அனைவரையும் அழைத்துக்கொண்டு தோழர் தமிழரசன் செல்கின்றார். வறுமையில் வாடிக்கொண்டிருந்த அம்மக்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு தர ஆசைப்படுகின்றார்கள். உணவுண்ணுவதற்கு முன் அங்கிருந்த குளமொன்றுக்குச் செல்கின்றார்கள். கால் நனையுமளவுக்கு தண்ணீர் இருந்த அக்குளம் குட்டையாகவிருந்தது. நீரும் கலங்கி மஞ்சள் நிறத்திலிருந்தது. எருமைகளும், பன்றிகளும் (தம் குட்டிகளுடன்) நடமாடிக்கொண்டிருந்தன. பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்த, அவ்வர்க்கக் குணாம்சங்களுடனிருந்த ஈழப்போராளிகள் குட்டையில் இறங்குவதற்குத் தயங்கினார்கள். அதனைக்கண்ட தோழர் தமிழரசன் "மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்" என்று மாவோ கூறினார் என்று கூறியதுடன், தானே முதலில் இறங்கிக் குளிக்கின்றார். அதன் பின்பு உணவுண்ணுவதற்காக அம்மக்களின் வீடுகளுக்குச் சென்றபோது அங்கு இலையில் சோறும் , சுண்டெலிக்கறியும் வைக்கப்பட்டிருந்தன. அப்பொழுதும் தயங்கி நின்ற ஈழப்போராளிகளைப்பார்த்து " அந்த மக்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்குச் சோறே அம்மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்குத் தந்திருக்கின்றார்கள். நீங்கள் சாப்பிடவில்லையென்றால் அவர்கள் மிகவும் வருந்துவார்கள்" என்று எடுத்துரைக்கின்றார். அனைவரும் பின் அங்கு உணவுண்ணுகின்றார்கள். இந்நிகழ்வுகள் தோழர் தமிழரசன் வெறும் வாய்ப்பேச்சு வீரலல்லர் ஆனால் தான் நம்பும் கொள்கையினை ஏற்றுச் செயற்படுமொருவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இவ்விதமாகத் தோழர் தமிழரசன் அரசியல் ரீதியாக, ஆயுதரீதியாக முன்னெடுத்த செயற்பாடுகளை, அவற்றின் நியாய, அநியாயங்களை , அவர் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கான காரணங்களை, அவை பற்றிய தனது தனிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் எடுத்துரைக்கும் தோழர் பாலன் தோழர் தமிழரசன் நடத்திய வங்கிக் கொள்ளைகளைப்பற்றி, அவற்றுக்கான காரணங்களைப்பற்றி விரிவாகவே விபரிக்கின்றார். இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் நடைபெற்ற உரும்பிராய் சிவகுமாரனின் கொள்ளை முயற்சிகள், விடுதலைப்புலிகளின் கொள்ளை முயற்சிகள் (குரும்பசிட்டி) ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விபரிக்கும் நூலாசிரியர் தோழர் பாலன் தோழர் தமிழரசன் அவற்றிலிருந்து பாடம் படித்துச் செயற்பட்டிருக்க வேண்டும். தன்னுயிரைப்பாதுகாத்திருக்க வேண்டும் என்றும் தன் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
நூல் மேலும் பல விடயங்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. தமிழகத்தில் தமிழர் விடுதலைபடை, தமிழர் பாதுகாப்புப் பேரவை ஆகியவற்றின் போராட்டச்செயற்பாடுகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட சிறைத்தண்டனை அனுபங்கள், இலங்கைத்தமிழர் ஆயுதபோராட்ட விடயத்தில் இந்திய மத்திய அரசின தன் தேசிய நலன்களுக்குச் சார்பான செயற்பாடுகள், தமிழக அரசின் செயற்பாடுகள், இந்திய அரசின் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டம் பற்றிய அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் பற்றிய தோழர் தமிழரசனின் நிலைப்பாடுகள்,.. எனப்பலவற்றை நூல் விபரித்துள்ளதுடன் ஆவணப்படுத்தியுமுள்ளது.
சுருக்கமாகக்கூறப்போனால் இந்திய மத்திய, மாநில அரசுகளால் பயங்கரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட தோழர் தமிழரசன் பயங்கரவாதியல்லர், மக்களுக்காகப்போராடி, அரச இயந்திரத்தின் சூழ்ச்சியால் பலியாகிப்போன பொதுவுடமைப்புரட்சிவாதி. இதனை ஆணித்தரமாகவே எடுத்துரைப்பதுதான் நூலின் நோக்கம். தோழர் தமிழரசனின் வரலாற்றுப் பாத்திரம் தமிழக மற்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கிலேயே இந்நூலைத் தான் எழுதியதாகத் தோழர் பாலன் நூலின் இறுதியில் கூறியுள்ளார். அவ்விடயத்தில் இந்நூல் வெற்றி கண்டுள்ளதென்பதை நூலின் உள்ளடக்கமும், முறையான தர்க்கமும் வெளிப்படுத்துகின்றன.
தோழர் தமிழரசன் பகிரங்கமாகவே போராடி மறைந்த ஒருவர். அவரைப் பயங்கரவாதியாக யாரும் கூறினாலும், அவர் பயங்கரவாதி அல்லர். போராளி என்பதை யாருக்கும் பயப்படாது துணிச்சலாக முன் வைக்க வேண்டியது அவசியம். அவ்விதம் வைக்கும்போது எழும் விமர்சனங்களை எதிர்கொண்டு வாதிட வேண்டியது அவசியம்.
தோழன் பாலன் இந்நூலில் தமிழரசன் பற்றி விரிவாகவே எழுதியிருக்கின்றார் . தமிழரசன் ஆயுதப்போராட்ட அமைப்பு மூலம் சமுதாய அமைப்பைப் மாற்ற முனைந்த போராளி. அவர் பயங்கரவாதி என்று நிகழ்கால அமைப்பு கூறினாலும், அவர் ஒரு கோட்பாடுக்கமைய மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட ஒருவர் என்பதை அனைவரும் அறியும் வகையில் வெளிப்படுத்த வேண்டும். அதனைச் செய்திருக்கின்றார். இதனால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகின்றது.
ஜல்லிக்கட்டுப்போராட்டம், 'நீட்' போராட்டம் என்று தமிழக மக்கள் தமிழக மக்கள் என்னும் நோக்கில் தம் சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்வைக்கும் இக்காலகட்டத்தில், பல வருடங்களுக்கு முன்னரே தமிழ்நாடுப் பொதுவுடமைக் கட்சியமைத்து, அதன் ஆயுதப் பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினையும் அமைத்து, மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் , செயற்பட்டுத் தான் நம்பிய கோட்பாடுகளுக்காக, மக்களுக்காகத் தன்னுயிரையும் வழங்கிய தோழர் தமிழரசன் பயங்கரவாதியாக அல்ல மக்களுக்காகப் போராடி மரணித்த மானுட விடுதலைப்போராளியாக நினைவுகூரப்பட வேண்டிய ஒருவர். அவ்விதமே நினைவு கூர்வோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.