32 நாடுகளைச்சேர்ந்த 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து செல்லமுத்து வெளியீட்டகம் (வள்ளுவர்புரம்) என்னும் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டுக்கான செயலியக்குநராக இருக்கின்றார் இளம் எழுத்தாளர் யோ.புரட்சி. ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பங்கு பற்றி, சிறை சென்று மீண்டு வந்த இவரைப்போன்ற பலர் தமிழ் இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்தித் தடம் பதித்து வருவது பாராட்டத்தக்கது. இதுபோன்றதொரு தொகுப்பு சங்க காலத்தொகுப்புகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு எண்ணிகையான கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளிவருவதாக நான் கருதுகின்றேன்.
பொதுவாகக் குழுக்களாக இயங்கும் அமைப்புகளால், எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளே வெளிவருவதால் பெரும்பாலும் இலை, மறை காயாக இருக்கும் கவிஞர்கள் பலரின் கவிதைகளை அத்தகைய தொகுப்புகளில் காண முடிவதில்லை. இவ்விதமானதொரு சூழலில் 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு என்பது இக்காலகட்டத்தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வரலாற்றில் ஆவணப்படுத்தும் தொகுதியாக நிச்சயமாக விளங்குமென்று கருதுகின்றேன்.
இன்று எவ்விதம் நூற்றுக்கணக்கான சங்ககாலக் கவிஞர்களின் கவிதைகளை ஆவணப்படுத்தி எமக்கு வெளிப்படுத்தும் அகநானூறு, புறநானூறு, நற்றினை, ஐங்குறுநூறு போன்ற சங்க காலத்துத் தொகுப்புகள் விளங்குகின்றனவோ அவை போன்று இத்தொகுப்பும் விளங்கும். இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களின் பின்னரும் இக்காலகட்டத்துத் தமிழ்க்கவிஞர்களை அவர்களது கவிதைகளுடன் எதிர்காலத்துத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் தொகுப்பாக இத்தொகுப்பு விளங்கும். வாழ்த்துக்கள். இவ்விதமானதொரு தொகுப்புக்காகத் தன் கடும் உழைப்பை வழங்கும் எழுத்தாளர் யோ.புரட்சியின் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். கடும் உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.