விடுகதை போடுவதில் எனக்கு நாட்டமில்லை;
சொற் சிலம்பம் ஆடுவதிலும் பெரிதும்
ஆர்வமில்லை.
விடுகதை போடுபவர்களுக்கு நிச்சயம்
விடுகதைக்கான பதில் நிச்சயம் தெரிந்திருக்க
வேண்டும்.
சொற் சிலம்பம் ஆடுபவர்களுக்கு அச்
சிலம்பாட்டத்தின் விதி முறைகள்
நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
அவ்விதம் பதில் தெரிந்தவர்கள்
போடும் விடுக(வி)தைகளை
நான் வெறுப்பதில்லை.
அவ்விதம் விதி முறைகள் தெரிந்து
சிலம்பாட்டம் ஆடுபவர்களின்
ஆட்டத்தை நான் இரசிப்பதுண்டு.
ஆனால் விதிமுறையும் தெரியாமல்,
விடுக(வி)தைக்கான பதிலும் தெரியாமல்
போடுவது விடுக(வி)தையுமல்ல.
ஆடுவது சொற் சிலம்பாட்டமும்
அல்ல.
விடுகதைகளும், சிலம்பாட்டமும்
இணைந்துவரின் அதுவுமளவுடன்
அவற்றை நான் இரசிப்பதுண்டு.
"என்னிடம் நீங்கள் விளக்கம்
கேட்பது தகுமா?
கேட்காதீர்கள்? புரிந்து கொள்ளுங்கள்.
பதிலற்ற விடுகதைகளுக்கு எந்தப்பதிலையாவது
உங்கள் அறிவுக்கேற்பப் புரிந்து கொள்ளுங்கள்.
விதிமுறைகளற்ற விளையாட்டை உங்கள் வழியில்
விளங்கிக் கொள்ளுங்கள்."
இவர்களுக்கு விடுக(வி)தை போடுவதும்,
சிலம்பாட்டம் ஆடுவதும் மிகவும் இலகுவானவை.
இவர்களது விடுகதைகளை, விளையாட்டுகளை
நான்
வெறுக்கின்றேன்.
எனக்கு விதிமுறைகள் முக்கியமல்ல. ஆனால்
சிலம்பாடுவதில் விதிகளை மீறிய
விளையாட்டுக்கும் அதன் தோற்றத்திற்கான
காரணம் இருக்க வேண்டும்.
போடும் விடுகதைகளுக்கு நிச்சயம்
அவர்களுக்கென்று உரியதொரு பதில்
நிச்சயம் இருக்க வேண்டும், ஏனையோர்
பதில்களில் தர்க்கச்சிறப்பு இருந்தாற் கூட.
விடுகதைகளை எப்பொழுதும் நாம் கேட்பதில்லை.
கேட்டால் அவற்றில்
எமக்குச் சலிப்புத்தான் மிஞ்சும்.
சிலம்பாட்டத்தினை எப்பொழுதும் நாம்
பார்ப்பதில்லை. அதற்கும் ஒரு
நேரமுண்டு இரசிப்பதற்கு.
சிலம்பு, மேகலை என்று அணிந்து வரும்
ஆயிழையின் பல் அணியழகில்
தானெத்தனை இனிமை! எளிமை!
நான் கூறியதன் அர்த்தம் புரிந்ததா?
போட்ட விடுகதைக்கான பதில்தான்
கிடைத்ததா?
அன்றி,
விளையாடிய சிலம்பாட்டத்தின்
விதிமுறைதான் விளங்கியதா?
நவீன கவிகளே! உங்களைத்தாம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.