அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான 'அருவி' இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.
இக்குறும்படத்திலும் அவ்விதமான சூழல்தான் நிலவுகின்றது. சிறுமி அருவி ஓவியம் வரைவதில் மிகுந்த திறமைசாலி. ஆனால் அவளை அவளது பெற்றோர் அத்துறையில் ஊக்குவிக்காமல், விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்துகின்றார்கள். அதில் அவள் சோபிக்க முடியாமல் போகையில் , தோல்விகளை எதிர்கொள்கையில் பெற்றோரின் எதிர்மறையான அவள் பற்றிய எண்ணங்களுக்கு அவள் முகம் கொடுக்க நேரிடுகின்றது. மற்றும் சக மாணவர்களின் கேலி, கிண்டல்களுக்கும் உள்ளாக வேண்டியிருக்கின்றது.
இந்நிலையில் தன்னால் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப விளையாட்டுத்துறையில் சோபிக்க முடியவில்லையென்று சிறுமி அருவி மனம் சிறிது தளர்ந்தாலும் அவளுக்கு ஆதரவாக அவளது சகோதரி இருக்கிறாள்.
இறுதியில் அவளது ஓவியத்திறமை அவளுக்குக் கை கொடுக்கிறது. தேசிய ஓவிய அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட அவளது அவளது ஓவியம் பலரின் பாராட்டுதல்களைப்பெற்றதோடு அவளுக்குப் பல விருதுகளையும் பெற்றுத்தருகின்றது. அதன் மூலம் அவளால் அவள் கல்வி கற்கும் பாடசாலை சிறப்புறுகின்றது.
குழந்தைகள்மேல் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பழகும் பலர் தம் விருப்பு, வெறுப்புகளைத்திணித்து, அவர்கள் தம் இயல்பான திறமைகளை வளர்த்தெடுக்க முடியாமல் செய்து விடுகின்றார்கள். இவற்றின் தாக்கங்கள் குழந்தைகள் சிலரை உளவியல் ரீதியிலும் பலமாகத்தாக்கி, மன அழுத்தத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. சில குழந்தைகள் மன அழுத்தம் தாங்காமல் பாரதூரமான முடிவுகளைக்கூட எடுப்பதற்குத் துணிந்து விடுகின்றார்கள்; எடுத்தும் விடுகின்றார்கள்.
அருவியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அற்புதம். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் துயரத்தை வெளிப்படுத்தும் அவளது நடிப்பு எம் கண்களில் அருவியாகக் கண்ணீரை வரவழைத்து விடும் வகையில் அமைந்திருந்தது.
குழந்தைகள் அவர்களது திறமைகளை வளர்த்தெடுக்க உதவுங்கள். ஊக்குவியுங்கள். பெற்றோர்களே உங்கள் விருப்பு, வெறுப்புகளை அவர்கள்மேல் ஒருபோதும் திணிக்காதீர்கள் என்பதை வெளிப்படுத்தும் , காலத்துக்கு மிகவும் ஏற்ற குறும்படமே 'அருவி'.
திரைக்கதை மற்றும் இயக்கத்தைச் செய்திருப்பவர் கே.சிவகுமார். அருவி என்ற பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பவர் வானதி தனேஷ். இப்படத்தினை எஸ்.சிவரூபன், திரு அஜந்தன், கே.சிவகுமார் மற்றும் தனேஷ் கோபால் ஆகியோர் தயாரித்திருக்கின்றார்கள். பாராட்டுகள்.