ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'
* 'அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்' இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *
'கல்கி' சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', மற்றும் 'பி.வி.ஆர் எழுதிய 'மணக்கோலம்' ஆகிய நாவல்கள் பெற்றன.
'முள்ளும் மலரும்' நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலுக்கு ஓவியர் வினுவும், 'மணக்கோலம்' நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.
என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் 'முள்ளும் மலரும்' நாவல் 'பாசம்' திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.
உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னைப்போராடத்தூண்டிய, தனக்குப் பிடித்த நாவலாக இதனைக்குறிப்பிட்டுள்ளதை ஊடக வாயிலாக அறிந்திருக்கின்றேன். நடிகர் கமலஹாசன் இந்நாவலைத்தழுவி 'ஹேராம்' திரைப்படத்தை எடுத்ததாக எழுந்த சர்ச்சையும் இத்தருணத்தில் ஞாபகத்துக்கு வருகின்றது. அத்துடன் 'பதிவுகள்' இணைய இதழ் 'தமிழர் மத்தியில்' அமைப்புடன் இணைந்து நடாத்திய சிறுகதைப்போட்டியில் ர்.சு.நல்லபெருமாள் அவர்களின் மகள் அலர்மேல் மங்கை எழுதிய சிறுகதை மூன்றாவது பரிசுச்சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் (http://www.geotamil.com/index.php… ) இத்தருணத்தில் நினைவில் வருவதைத்தடுக்க முடியவில்லை.
ர.சு,நல்லபெருமாள் 'போராட்டங்கள்' உட்பட வேறு பல நாவல்களை எழுதியிருந்தாலும் , அவரது பெயரைத் தமிழ் இலக்கிய உலகில் நிலை நிறுத்தி வைக்குமொரு நாவலாக இந்நாவலையே கருதலாம்.
'கல்கி' சஞ்சிகையில் தொடராக வெளியான 'கல்லுக்குள் ஈரம்' நாவலின் முதலாவது அத்தியாயத்தின் முதற்பக்கத்தினையே இங்கு காண்கின்றீர்கள் (ஒரு பதிவுக்காக).
*விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 'ஃப்ரொன்ட் லைன்' ஆங்கிலச் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் 'கல்லுக்குள் ஈரம்' நாவல் பற்றிக் குறிப்பிட்டுள்ள பகுதி:
Prabakaran: "Ra. Su. Nallaperumal’s serial Kallukkul Eeram (“It is wet inside the stone”) published in Kalki magazine. I have read it five times. It revolves round the Indian freedom struggle. Mr Nallaperumal balances the ahimsaic struggle and the armed struggle. Generally, I read anything on any freedom movement. I used to read books on Joan of Arc, Napoleon and so on. I was always interested in history. Shivaji was the first guerilla to have fought against Mughal rule. When I was young, I always had a picutre of Netaji Subhas Chandra Bose. I used to keep his picture on my table when I used to study. I had written on my table, “I will fight till the last drop of my blood for the liberation of my motherland.”"
http://www.frontline.in/.../fl2701/stories/19870822078.htm' /
அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள் - என்னைக் கவர்ந்த எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'.
என் பால்ய காலத்து வாசிப்பனுவத்தில் எழுத்தாளர் ஜெகசிற்பியனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. கல்கி சஞ்சிகையில் வெளியான இவரது நாவல்களான 'சொர்க்கத்தின் நிழல்', 'ஜீவகீதம்', 'கிளிஞ்சல் கோபுரம்', 'பத்தினிக்கோட்டம்' மற்றும் 'காணக்கிடைக்காத தங்கம்' ஆகிய நாவல்களைக் கல்கி சஞ்சிகையில் அவை தொடர்கதைகளாக வெளிவந்தபோது வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன். ஆனந்த விகடனில் வெளியான 'ஆலவாயழகன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய வரலாற்று நாவல்களை வாசித்திருக்கின்றேன். ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான இவரது 'நந்திவர்மன் காதலி' எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று நாவல்களிலொன்று. இவை தவிர இவரது சிறுகதைகள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். விகடனின் எழுத்தாளர்கள் தம் ஊர்களைப்பற்றி எழுதிய 'எங்கள் ஊர்' பகுதியில் இவர் தனது ஊரான 'மாயவரம்' பற்றி எழுதியதை வாசித்துக் களிப்படைந்திருக்கின்றேன். மீண்டும் இவ்விதமான தொடர்களையெல்லாம் இணையத்தில் வாசிப்பதற்குரிய வாய்ப்பினைக் கல்கி நிறுவனத்தினர் ஏற்படுத்தித்தந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஜீவகீதம்' அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாவல். இதுபற்றிப் 'பதிவுகள்' இணைய இதழில் குறிப்பும் எழுதியுள்ளேன். இந்திய சாகித்திய அகாடமியினரால் 14 மொழிகளில் வெளியான நாவலும் கூட. அதில் வரும் 'நச்சி' பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் எங்கும் காணாத பாத்திரங்களிலொன்று. சென்னைத்தமிழில் அவன் வெளுத்து வாங்குவான். ஆபிரிக்க இராணுவத்தினனுக்கும், தமிழ்ப்பெண்ணொருத்திக்கும் பிறந்தவன். அண்மையில் வானதி பதிப்பக வெளியீடாக மீள்பிரசுரம் பெற்றுள்ள ஜெகசிற்பியனின் நாவல்களிலொன்று
கல்கி சஞ்சிகையில் வெளியான ஜெகசிற்பியனின் ஜீவகீதக் காட்சியொன்றினையும், ஜீவகீதம் பற்றி நான் எழுதிய குறிப்பொன்றினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
"பர்மாவுக்கு உழைப்புக்காகத் தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் பர்மாவிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டு மீண்டும் தாயகமான தமிழகத்துக்குத் திரும்புகின்றான். அவ்விதம் திரும்புகையில் அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு இவ்விதம் அகதியாக வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி என்னும் இந்தப் பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை யாரும் சந்தித்திராத வித்தியாசமான பாத்திரமென்று நான் நினைக்கின்றேன். சென்னைப் பேச்சுத்தமிழில் அசத்தும் இவனுக்கும், கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையிலான காதல், , அதற்காக அவள் முன் தான் ஒரு உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அவனெடுக்கும் பல்வேறு அவதாரங்கள் நாவலின் சுவையினைக் கூட்டுபவை. இவனது பிறப்பும் வித்தியாசமானது. இவனது தாயான கன்னியம்மாள் ஆங்கிலோ இந்தியக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாக வேலை பார்க்கின்றாள். உலக மகா யுத்தக் காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், கன்னியம்மாளுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவன்தான் நச்சி. அவனது தோற்றமும ஈர் இனக்கலப்பின் விளைவினை வெளிப்படுத்தும் தன்மையானது.
ஓர் அரசியல்வாதியின் சகோதரிக்கும் , பயில்வான் ஒருவனுக்கும் பிறந்த வேதா என்னும் பெண்ணும் நச்சுவின் தாயாரின் பொறுப்பில் வளர்கின்றாள். வீதியில் அநாதரவாகக் கை விடப்பட்ட குழந்தையான வேதாவை அப்பயில்வான் தம்பையாவே கன்னியம்மாளிடம் வளர்க்கக் கொடுக்கின்றான். நச்ச்சினார்க்கினியன் என்று நச்சுவுக்கும், வேதகுமாரி என்று வேதாவுக்கும் பெயர் வைப்பதும் அந்தப் பயில்வான் தம்பையாதான். தம்பையாவும் வித்தியாசமான பாத்திரம்தான். நாவலின் இறுதியில்தான் பயில்வான் தம்பையாவுக்கே வேதா அவன் மகள் என்னும் விபரம் தெரியும் வகையில் கதையினை நாவலாசிரியர் பின்னியிருக்கின்றார். அதே சமயம் அகதியாகச் சென்னையில் வீடற்றவனாக அலையும் சபேசனின் அன்றாட நகர வாழ்க்கையினை நன்கு விபரித்திருப்பார் ஜெகசிற்பியன்.
இவ்விதமாக நகரும் கதையினூடு ஆசிரியர் அக்காலகட்டத்தில் நிலவிய ஊழல் நிறைந்த அரசியலை, நாயகன் சபேசனின் தேச பக்தி மிக்க இலட்சிய நோக்கினை, உணர்வினை, நகரத்து வாழ்வின் அவலங்களை, கிராமத்து வாழ்வின் இனிமையினை, ஆரோக்கியமான இயல்பினை, அகதிகளின் வாழ்வின் அவலங்களையெல்லாம் (பர்மாவிலிருந்து மற்றும் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியா திரும்பியவர்களின் அவலங்களையெல்லாம்) விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார். சபேசன், நச்சி, கன்னியம்மாள், தம்பையா போன்ற பாத்திரங்களூடு நகர அடித்தட்டுமக்கள் இருப்புக்காக அன்றாடம் போராடுவதை விரிவாகவே நாவலில் விபரித்திருப்பார் ஜெகசிற்பியன். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும், அவ்விதம் பணம் கொடுப்பதன்மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மேலும் துணைபோகும் வாக்காளர்களின் செயற்பாடுகளையும் கடுமையாகவே விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பார் நாவலாசிரியர். சிந்தனையைத் தூண்டும் ஆரோக்கியமான இலட்சிய நோக்கு மிக்க இவ்வகையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்குமென்பதால் இந்த நாவலும் அன்றும், இன்றும் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம்."
'என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' என்று 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய குறிப்புக்கான இணைய இணைப்பு http://www.geotamil.com/index.php…
அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள் - கல்கி. கி. ராஜேந்திரனின் 'சாருலதா'
கல்கியின் புத்திரரான கி.ராஜேந்திரன் என் வெகுசன வாசிப்புக்காலத்து அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். இவரது பல தொடர்கதைகள் கல்கி இதழில் வெளியாகியுள்ளன. 'போர்முனை', 'பொங்கிவரும் பெரு நிலவு', 'நெஞ்சில் நிறைந்தவள்', 'சாருலதா' எனப் பல தொடர்கதைகள் கல்கியில் வெளியாகியுள்ளன.. இவரது சரித்திர நாவல்களும் செம்பியன் என்னும் பெயரில் கல்கி இதழில் வெளியாகியுள்ளன. இவர் 'விண்ணும் மண்ணும்' என்றொரு அறிவியல் நாவலும் எழுதியிருக்கின்றார். இவையெல்லாமே கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்தவை. வானதி பதிப்பக வெளியீடுகளாகவும் வெளிவந்தவை.
கி.ராஜேந்திரனின் முக்கியமான நாவல்களிலொன்று 'சாருலதா'. சாருலதா என்னும் புகழ்பெற்ற தொழில் அதிபர்களிலொருவர். அவரது வாழ்வை விபரிப்பதுதான் 'சாருலதா'.
அண்மைக்காலத்தில் அமெரிக்க வாழ் எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் இக்கரையில் நாவல் தொடராகக் கல்கியில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. 'இக்கரையில்.. 'நாவலும் (தொடர்கதை) பெண் தொழிலதிபர்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால் இந்த விடயத்தில் நானறிந்த வரையில் முதல் முதலாகப் தமிழ்ப்பெண் தொழில்அதிபரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாவலாக கி.ரா.வின் 'சாருலதா' நாவலைக் குறிப்பிடுவேன்.
தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெண் தொழில் அதிபரைப்பற்றிச் 'சாருலதா' நாவலுக்கு முன்னர் வேறு ஏதாவது நாவல்கள் வெளியாகியுள்ளனவா. இதற்கு முன்னர் வேறெந்த நாவலிலாவது தமிழ்ப்பெண்ணொருத்தி தொழிலதிபராகச் சித்திரிக்கப்பட்டிருந்தால், யாராவது அது பற்றி அறிந்திருந்தால், அது பற்றிய தகவல்களை இங்கு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.