'சின்ன அம்மா' சசிகலாவுக்கு அ.தி.மு.கவினரின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவரை அழைத்து அவருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவால் முடியாவிட்டால் தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவருக்குத்தான் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இருவருக்கும் தம் கட்சிச் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வினருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலாம். ஒருத்தராலும் இப்பரீட்சையில் வெற்றியடைய முடியாவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, சட்டசபைத்தேர்தல் நடத்தப்படலாமென்று கருதுகின்றேன். ஆனால் இதுபற்றி இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்களை அறிந்த வல்லுநர்கள்தாம் சரியான கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
'அரசியல் கோமாளி' என்று சுப்பிரமணிய சுவாமியைக் கூறினாலும், அவர் இந்தியச் சட்டதிட்டங்களை அறிந்த அரசியல்வாதி. அவர் சசிகலாவை அழைப்பதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கின்றார் என்று கருத்துத்தெரிவிக்கின்றார். அதில் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன்.
தமிழக ஆளுநரின் பொறுப்பு தன் கடமையைச் சட்டரீதியாகச்செய்வது. சசிகலா, பன்னீர்ச்செல்வத்தின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மக்கள் கூறுவதை வைத்து அவர் செயற்பட முடியாது. அவ்விதம் அரசியல்ரீதியாக அவர் செயற்படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவ்விதம் அனுமதிப்பது பின்னர் பாரதூரமான விளைவுகளைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அவர் ஆட்சி விலகத்தானே வேண்டும். அதனால் அவரிடம் ஆட்சியைக் கொடுக்கக்கூடாது என்று சிலர் கருத்துகளைக் கூறுகின்றார்கள். அதில் நியாயம் இருந்தாலும் சட்ட வலுவற்றது. அவ்விதம் நடைபெற்றால் சசிகலா இன்னுமொருவரைத் தமிழக முதல்வராகத் தெரிவு செய்யலாம். ஆனால் தற்போது நடைபெறுவதைப்பார்த்தால் மோடியின் மத்திய அரசு பின்னாலிருந்து ஆட்டுவிக்கிறது போல் தெரிகின்றது. தமிழக ஆளுநரும் அதற்கேற்ப ஆடுகின்றார் போலவும் தெரிகின்றது.
சிறிது தாமதித்து, சொத்துக்குவிப்பு வழக்கின் விபரம் சசிகலாவுக்குப் பாதகமாக வரும் பட்சத்தில் அச்சமயம் தற்போது சசிகலா பக்கம் இருக்கும் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் பலர் பன்னீர்ச்செல்வத்தின் பக்கம் சாயலாம். அவ்விதமான சந்தர்ப்பத்தில் பன்னீர்ச்செல்வத்தையே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கலாம். மோடியின் மத்திய அரசு தற்காலிக முதல்வர் பன்னீர்ச்செல்வத்தையே மீண்டும் முதல்வராக்க விரும்புவதாகத் தெரிகின்றது. இந்தக் கோணத்தில் சிந்தித்துத்தானோ தமிழக ஆளுநர் காலதாமதம் செய்கின்றார்?
அதே சமயம் சசிகலாவின் சொத்துக்குவிப்பு வழக்கை வைத்து மோடி அரசு அவரையும் தம் பக்கம் சரிய வைத்துத் தம் கைகளுக்குள் போட்டுக்கொள்ளவும் முயற்சி செய்வதாகவும் தெரிகின்றது.
தற்போதுள்ள சூழலில் சசிகலாவுக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது போல் தெரிகின்றது. ஆனால் தற்போதுள்ள சூழலில் அவருக்கெதிராக அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவது சசிகலாவுக்கு அதிகப் பாதிப்பினை ஏற்படுத்தும் பட்சத்தில் அவர் பக்கம் ஒருவித அனுதாபத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன்.
சென்ற வருடம் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு அதன் ஆட்சிக்காலம் முடியும் வரையில் ஆட்சி செய்வதற்கான உரிமை உள்ளது. அதனை சசிகலா / பன்னீர்ச்செல்வத்திற்கான மோதல்கள், பின்னாலிருந்து இயக்கும் மோடியின் மத்திய அரசின் அழுத்தங்கள் இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற சந்தேகமும் தற்போதுள்ள தமிழக, இந்திய அரசியற் சூழல் காரணமாக எழாமலில்லை.
அதே நேரம் சசிகலாவைப்பொறுத்தவரையில் உண்மையில் இந்த அரசியல் நெருக்கடி ஒருவிதத்தில் அவருக்கு நன்மையையே செய்கிறது என்பது என் எண்ணம். இதுவரையில் தமிழக மக்கள் சசிகலாவைப் பொதுவெளியில், அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டநிலையில் கண்டதில்லை. ஆனால் தற்போது காண்கின்றார்கள். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒருபுறம், மறுபுறமோ கூட இருந்தவர்களே கழுத்தை அறுத்து வெளியேறியதுடன் கட்சியின் உறுதிக்கும் சவால் விடுவதைச் சமாளிக்கும் நிலை, இவ்விதமான நிலையில் தனியொரு பெண்ணாக அவர் சவால்களையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டிய நிலை. ஜெயலலிதாவுக்குக் கூடவே தோழியாகச் சசிகலா இருந்தார். ஆனால் சசிகலாவுக்கு இதுவரையில் அப்படியான ஒருவர், பெண் தோழியொருவர் இருப்பதாகத்தெரியவில்லை.
ஆனால் இந்த இக்கட்டான அரசியல் நெருக்கடியில் அவர் பதறாமல், நிதானத்துடன், செயற்படுவது இதுவரை அவரின் அரசியற் செயற்பாடுகளைக் காணாதவர்களுக்கு ஒருவித அனுதாபத்தைத்தரக்கூடும். சட்டரீதியாக அவரை அழைக்க வேண்டிய ஆளுநர் அவரை அழைக்காமல் அரசியல் செய்வது மக்களுக்கு சசிகலாமேல் ஒருவித அனுதாபத்தைக்கூட ஏற்படுத்தலாம். இதுவரை காலமும் பார்த்த சசிகலா வேறு, தற்போது தன்னைச்சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனித்து நின்று அவற்றை எதிர்கொள்ளும் சசிகலா வேறு. பார்ப்போம் இந்த அரசியல் நெருக்கடியை அவர் எவ்விதம் மேலும் எதிர்கொள்கின்றாரென்பதை, இதிலிருந்து எப்படி மீளுகின்றாரென்பதை. தற்போது முதல் முறையாகச் சசிகலா அரசியலில் ஆடத்தொடங்கியிருக்கின்றார். இந்த அரசியல் ஆட்டத்தில் வெற்றி பெறுகின்றாரா என்பதைப் பார்ப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் ஆரம்பத்தில் இதனை விட மிகப்பெரிய அரசியல் நெருக்கடிகளையெல்லாம் சந்தித்து மீண்டவர்கள் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.