'மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)' எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான 'மகுடம்' இதழின் ஏப்ரல் - டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.
கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் 'வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..' கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் 'காணாமல் போனவர்' கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.
எஸ். லிங்கேஸ்வரனின் 'எறும்புகள்' கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.
த.அகிலனின் 'உற்றபோதில் கற்றதை மறப்பாய் - மஹாபாரதம்' கவிதை இரு விம்பங்களைப்பற்றி எடுத்துரைக்கின்றது. விம்பம் ஒன்று எப்போதுமில்லாத வகையில் கவிஞர் விம்பமொன்றின் மீது கொண்ட வெறுப்பினை வெளிப்படுத்துகின்றது. நாற்பது வருடமாக வேடங்கட்டி மேடையேறிய அந்த விம்பத்தின் கோரமுகம் காட்டிய பொய், கயமையினை எடுத்துக்காட்டும் கவிதை, கவிஞர் அந்த விம்பத்தின் நடிப்பினால் தானும் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து வரும் வரிகளில் வெளிப்படுத்துகின்றார். இவ்விதம் அந்த விம்பம் ஏற்படுத்திய பாதிப்பு கவிஞரின் மனதிலும் தீராச்சினங்கொண்ட உணர்வுகளை எழுப்பி விடுகின்றது. அவ்விதம் ஏற்பட்டதற்குக் காரணம் விதியா அல்லது மதி கொண்ட மயக்கமா என்பதிலும் கவிஞருக்குத் தெளிவற்ற நிலை. இதுவரையில் நினைவு உண்ட (உள்வாங்கிய) அந்த விலாங்கை உமிழ்கின்றேன் என்று கவிஞர் உணர்வது அவரது உள்ளத்தில் ஏற்பட்ட தெளிவைப் புலப்படுத்துகின்றது. அது சரி அந்த விம்பம் தான் எது அல்லது எவர்? என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான பதிலைக் கவிதையின் வாசகர்கள் தம் அறிதல், புரிதலுக்கேற்பத் தீர்மானிக்கட்டும். :-) அதற்கான உரிமை அவர்களுக்கு நிச்சயம் இருக்கவே இருக்கிறது. எனக்கும்தான். :-)
விம்பம் இரண்டு அவனைக்கண்டவர்களைக் கண்டவர்களைப்பற்றிப்பேசுகின்றது. பிரச்சினை என்னவென்றால் பாவக்கடல் பெருகி , வாங்கியழித்து அவன் குரல் பாழில் மிதந்தது. ஆனால் அவனைக் கண்டவர்களெல்லாரும் கரைந்து போனார்கள். பாழ் நிலம் என்றொரு டி.எஸ்.எலியட்டின் புகழ்பெற்ற கவிதையொன்றினை 'பாழில் மிதந்தது' என்னும் வரி நினைவுபடுத்தியது. காலங்களெட்டா அகாலத்தொலைவில் நெடுமலையுச்சியில் போகும் ஒருவனாக அவனைக் கவிஞர் விபரிக்கின்றார். அவ்விதம் போகக்கூடியவர்கள் மானுடர்களால் கடவுள் என்று கருதப்படுபவர்கள் மட்டுமே. அவனும் அவ்விதமே கடவுளாகக் கருதப்பட்டவன் என்று கருதப்படலாம் என்பதையே 'காலங்களெட்டா அகாலத்தொலைவில் நெடுமலையுச்சியில் ' என்னும் அவனைப்பற்றிய விபரிப்பு வெளிப்படுத்துவதாகவும் கருதலாம். பாழ்நிலம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் நினைவு படுத்துவது 'முள்ளிவாய்க்கா'லையே. இவ்விதமாகத் த.அகிலனின் கவிதை கூறும் விம்பங்களைப்பற்றிய புரிதல்களும் பன்முகப்பட்டவையாகத்தானிருக்கும். ஏனெனில் ஒரு பிரதியின் புரிதலென்பது எழுதுபவனின் எழுத்தில் மட்டுமல்ல, வாசகர்களின் அறிந்துணரும் திறனிலும் தங்கியுள்ளது.
தான்யாவின் தலைப்பற்ற கவிதையும் அழகுப்பதுமையாக, போகப்பொருளாக ஆணாதிக்கச் சமுதாயத்தில் காட்டப்படும் பெண்களைப்பற்றியும், தம் பால், இனம், நிறம் , வர்ணம் மற்றும் வர்க்கப்பிரிவுகளுக்கெதிராகப் போரிடும் போர்க்குணம் மிக்க அழகிய பெண்கள் பற்றியும் எடுத்துரைக்கும் ஆவேசத்துடன் கூடிய உரிமைக்குரலாக ஒலிக்கின்றது.
'அழகான மலர் போன்ற பெண்ணை
எதுவும் பாதிப்பதில்லை' என்று தொடங்கும் கவிதை
'அவள்
உத்தரப்பிரதேசத்தில் ஒருமுறையும்
போராட்டத்தில் கதறலாயும்
போரிடலாயும்
அமெரிக்காவில் மூர்க்கம் பிடித்த
கறுப்புப் பெண்ணாய்
ஒரு லெஸ்பியனாய்
பிறப்பதில்லை' என்று முடிவது மேற்படி கருத்தினையே வெளிப்படுத்தும் போர்க்குரலாக எனக்குத் தென்படுகின்றது.
மலரின் சிறுகதைகளை ஆனந்த பிரசாத், மெலிஞ்சி முத்தன், கற்சுறா, மாமூலன் மற்றும் கீதா கணேஷ் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். இவற்றை இன்னும் வாசிக்கவில்லை. பின்னர் தனியாக இவற்றைப்பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுவேன்.
மலரின் கட்டுரைகளைப் பேராசிரியர் செ.யோகராசா, கலாநிதி மனோபவன் மனோகரதாஸ், வ.ந.கிரிதரன், சுமதி, கவிஞர் கருணாகரன், மீராபாரதி மற்றும் இளங்கோ ஆகியோர் எழுதியிருக்கின்றனர். பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் கட்டுரையான 'தமிழ்நதியின் புனைகதையுலகம்: சில அவதானிப்புகள்' என்னும் கட்டுரை தமிழ்நதியின் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' (சிறுகதைத்தொகுப்பு), கானல்வரி (நாவல்), மற்றும் 'பார்த்தீனியம்' (நாவல்) ஆகிய படைப்புகளைப்பற்றிய பேராசிரியரின் எண்ணங்களை எடுத்துரைக்கின்றது. நல்லதொரு திறனாய்வுக் கட்டுரை. அதே சமயம் இக்கட்டுரையில் அவர் கூறிய இரு கருத்துகளும் என் கவனத்தைக் கவர்ந்தன. ஒன்று: மாதவி பற்றி அவர் கூறும் கூற்றொன்று. 'கானல்வரி' நாவலைப்பற்றிக் குறிப்பிடும்போது பேராசிரியர் ' இந்நாவலில் வரும் மாதவி சிலப்பதிகார மாதவி போன்று பலரோடு வாழாவிடினும்..' என்று அவர் கூறுவது ஆச்சரியமூட்டுவது. மாதவி பலரோடு வாழ்ந்த விடயத்தை அவர் சிலப்பதிகாரத்தில் எங்கே கண்டு பிடித்தார்? மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தாலும், கோவலன் ஒருவனையே கணவனாக ஏற்று வாழ்ந்தவள். அவன் பிரிவுக்குப் பின்னர் தன் ஆடற் தொழிலையே விட்டு, மகளுடன் புத்தபிக்குணியாகச் சென்றவள். அவ்விதம் வாழ்ந்த ஒருத்தியைப்பற்றிப் பேராசிரியர் இவ்விதம் கூறியிருப்பது வியப்பினை அளிக்கின்றது. இதற்கான அவரது ஆதாரங்களைக் காண ஆவலாயுள்ளேன்.
மேலும் பேராசிரியரின் கூற்றிலுள்ள முரண்நகை என்னவென்றால் அவர் குறிப்பிடும் சிலப்பதிகார மாதவி கோவலன் ஒருவனுடனேயே வாழ்ந்தவள். அவனுடன் வாழ்வு தொடரவில்லையென்றதும் புத்த பிக்குணியானவள். ஆனால் கானல்வரி மாதவிக்கோ கணவன் இருக்கின்றார். இன்னொருத்தியின் கணவனான காதலரும் இருக்கின்றார். கானல்வரி மாதவியைச் சிறிது உயர்வாகக் காட்டுவதற்காகவா பேராசிரியர் காவிய மாதவியைச் சிறிது தாழ்த்தினார் என்ற கேள்வியும் எழுவதைத்தடுக்க முடியவில்லை.
அடுத்தது ஒரு நூலின் அளவு பற்றியது. கட்டுரையின் முடிவில் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிக் குறிப்பிடும்போது 'இந்நாவல் அளவில் பெரிதாகவிருப்பதும் ஆய்வாளர் சிலருக்கு ஈழத்தில் பிரம்மாண்டமான நாவல்கள் வருவதில்லை என்று விசனிப்போருக்கு ஆறுதல் தரலாம்' என்று கூறுவார் பேராசிரியர். ஒரு நாவலின் சிறப்பு என்பது அதன் அளவில் அல்ல உள்ளடக்கத்தில்தான் தங்கியுள்ளது. ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'ஒரு கடலும் கிழவனும்' அவரது நாவல்களிலேயே மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுவது. அவருக்கு நோபல் பரிசுக் கிடைப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கின்றது. அது பெரிய நாவலல்ல. குறைந்த பக்கங்களே கொண்ட சிறியதொரு நாவல். குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்ட., சிறிய காலகட்டத்தை உள்ளடக்கிய நாவலது. ஆனால் அது உலக இலக்கியத்தில் முக்கியமானதொரு நாவல்.
நம்மவர்கள் பக்கங்கள் கூடிய பெரிய நாவல் எழுதினால்தான் தாம் கவனிக்கப்படுவோம் என்ற மாயையிலிருந்து வெளியே வரவேண்டும். அவ்விதம் வந்தால்தான் அவர்களால் சிறப்பான படைப்புகளைத்தர முடியும். என்னைப்பொறுத்தவரையில் தமிழ்நதியின் கானல்வரி நாவல் அமைப்பில், மொழியில் நீண்ட நாவலான பார்த்தீனியத்தை விடச்சிறந்ததென்பேன். பார்த்தீனியம் கூறும் பொருளையொட்டி முக்கியத்துவம் பெற்றாலும், நாவலின் கட்டுக்கோப்பில், பாத்திரப்படைப்பில் , மொழியில் சிறந்ததாகக் கானல்வரியைவிடச் சிறப்பானதாகத்தெரியவில்லை. மேலும் பேராசிரியர் அவர்கள் இவ்விதம் நீண்ட நாவல்கள் பற்றிக் கருதும் ஆய்வாளர்கள் யார் என்பதையும் எடுத்துரைத்திருந்தால் நன்றாகவிருக்கும். இவ்விதமான கருத்துகளை ஆய்வுக்கட்டுரையொன்றில் குறிப்பிடும்போது அவற்றுக்கான சான்றுகளையும் குறிப்பிடுவது ஆய்வின் சிறப்பினை அதிகரிக்க வைக்குமென்பதென் கருத்து.
கலாநிதி மனோபவன் மனோகரதாஸின் 'சமுசாவும் பால் ரீயும்' அவரது மாணவப்பருவ அனுபவங்களைச் சுவையாக விபரிக்கும் நனவிடை தோய்தல். டியூசன் வகுப்புக்குச் செல்லாமல் வாசிகசாலை சென்று வாசிக்கும் அனுபவங்களை, ஹாஜியாரின் சாப்பாட்டுக்கடை அனுபவங்களை, சினிமாத்தியேட்டர் அனுபவங்களை எல்லாம் சுவையாக, ஒருவித ஏக்கத்துடன் விபரிக்கும் கட்டுரை. இவர் ஹாஜியாரின் சாப்பாட்டுக்கடையில் வாங்கிச்சாப்பிடும் 'சமுசா' என்று குறிப்பிடுவது நாம் இங்கு 'கனடாவில் இந்தியக் கடைகளில் வாங்கி உண்ணும் 'சமோசா'க்களை என்று எண்ணுகின்றேன். நாம் அதனையே 'பற்றிஸ்' என்று அறிந்திருக்கின்றோம்.
வ.ந.கிரிதரனின் நீண்ட கட்டுரை புகலிடத்தமிழ் நாவல் முயற்சிகள் பற்றி ஆராய்கிறது. சுமதியின் 'கனடியத் திரைப்பட அனுபவம்' கட்டுரை கனடாவில் அவர் இயக்கி வெளியாகிப் பலரதும் கவனத்தையும் ஈர்த்த, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைத்தட்டிச்சென்ற 'நியோகா' திரைப்படம் பற்றிய அவரது அனுபவங்களை விபரிக்கின்றது.
கவிஞர் கருணாகரனின் கவிஞர் திருமாவளவன் பற்றிய கட்டுரையான 'பனிவயல் உழவனின் துயரங்கள்' கட்டுரை விரிவாகவே கவிஞர் திருமாவளவனின் கவிதைகளைக் கவிஞர் திருமாவளவனின் புகலிட அனுபவங்களினூடு, அவருடன் தான் கொண்ட நட்பின் அடிப்படையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்வதுடன் தனக்கும் , திருமாவளவனுக்குமிடையிலான பெயர் மட்டும் வாழ்க்கை அனுபவங்களில் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளையும் நினைவு கூர்கிறது. நல்லதொரு கட்டுரை.
இம்மலரில் வெளியாகியுள்ள ஏனைய கட்டுரைகளிலொன்றான இளங்கோவின் 'வரலாற்றின் தடங்களில் நடத்தல்' புகழ்பெற்ற கனடிய எழுத்தாளரான மைக்கல் ஒந்தாச்சியின் சகோதரரான கிறிஸ்தோபர் ஒந்தாச்சி எழுதிய 'வூல்ஃப் இன் சிலோன்' என்னும் நூல் பற்றிய நூல் விமர்சனம். 1904-1911 காலப்பகுதியில் இலங்கையில் பிரித்தானிய அரசின் அலுவலராகப்பணியாற்றிய லியனார்ட் வூல்ஃப் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தோபர் ஒந்தாச்சியினால் எழுதப்பட்டதோர் ஆவணப்பதிவே மேற்படி 'வூல்ஃப் இன் சிலோன்' நூலாகும்.
மீராபாரதியின் 'புத்தங்கள் தேடலும் வாசிப்பும்' நல்லதொரு நனவிடை தோய்தல். நூல்களுடனான அவரது தொடர்புகள், பிரிவுகள் என்பவற்றை உளப்பூர்வமாக விபரிப்பது வாசிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும் வகையிலமைந்திருக்கின்றது. அவரது நனவிடைதோய்தல் ஒரு குறிப்பிட்ட காலத்து ஈழத்தின் சமூக, அரசியல் வரலாற்றையும் ஆவணப்படுத்துகின்றது. அத்துடன் கட்டுரை அவரது புறத்தேடல்களுடன் அகத்தேடல்களையும் எடுத்துரைக்கின்றது. தேடல் மிக்க அவரது பயணம் தொடர்ந்து செல்வதை எடுத்தியம்பும் கட்டுரை நல்லதொரு கட்டுரை.
மலரை அமரர் கவிஞர் திருமாவளவனுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்கள். ஆசிரியர் மைக்கல் கொலினின் முயற்சி பாராட்டுக்குரியது. நிச்சயம் அவர் பெருமைப்படத்தக்க மலர்தான் 'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ். வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.