தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே.
அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.
தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அவரது சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில்யில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.
தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது. படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.
தமிழினி தனது ஆக்கங்களை அனுப்பியபோது அவை பற்றிய எனது கருத்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், 'பதிவுகள்' இணைய இதழிலும் அவற்றைப்பிரசுரித்து 'பதிவுகள்' வாசகர்களுக்கும் அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தினேன். பதிலுக்கு 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் அவரது படைப்புகள் பற்றிய எனது கருத்துகளைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்து வந்தார். அவரது மறைவுக்கு முன்னர்கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றிய எனது முகநூற் பதிவொன்றுக்கு எதிர்வினையாகத் தனது முகநூல் பக்கத்தில் "அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி." என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்கதாக விளங்கிய அவரது எழுத்து என்னைக் கவர்ந்தது. போர்க்களக்காட்சிகளை அவர் விபரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்கியது கண்டு மகிழ்ச்சியே ஏற்பட்டது.
'மழைக்கால இரவு' என்ற சிறுகதையொன்றில் (இச்சிறுகதை உண்மையில் அவரது சுயசரிதையின் ஒரு பகுதி என்பதை 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்னும் அவரது சுயசரிதை வெளியானபோதே அறிந்துகொண்டேன் அவர் பாவித்திருந்த கவித்துவம் மிக்க வரிகளை மீள ஒழுங்குபடுத்தி 'யுத்தம்' என்றொரு கவிதையாகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாகத் தனது முகநூற் பதிவில் அவர் "அதனை அவர் தனது முகநூலில் குறிப்பிட்டு 'மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார்." என்று எழுதியிருந்தார்.
அந்தக் கவிதையினை முழுமையாகக் கீழே தருகின்றேன்.
யுத்தம்!
போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
இது பற்றி தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன் வெளியிட்ட 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தமிழினியின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய 'தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!' என்னும் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:
"இக்கவிதை யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் கவிஞரின் மானுட நேயத்தினையும் வெளிப்படுத்துகிறது. போரில் மரித்துப்போன இராணுவத்தினரின், போராளிகளின் சடலங்கள் ஒன்றின் மேலொன்றாகப் புரண்டு கிடப்பதைக்கவிஞர் பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கு பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதனையுமே அப்போது அம்முகங்களில் காண முடியவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலியினை மட்டுமே அம்முகங்களில் காண முடிகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுடன் மோதி உயிர் விட்டவர்கள் அவர்கள். ஆனால் மடிந்த அவர்தம் முகங்களில் அவை எவற்றையுமே காண முடியவில்லை. இவ்விதம் கூறுவதற்குக் கவிஞரைத்தூண்டிய மானுட நேயம் சிறப்புக்குரியது.
இவ்விதமாகத் தமிழினியின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை. தமிழினியின் போராட்ட அனுபவங்களை, ஆழ்ந்த வாசிப்பினை, ஆழமான சிந்தனையினை வெளிப்படுத்தும் கவிதைகளின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு: அவரோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். இருந்தும் அவரது கவிதைகள் பிரச்சார வாடையற்று சிறந்து விளங்குகின்றன. யுத்த களத்து நிலைமைகளை விபரிக்கையில், சக போராளிகளின் உளவியலை, போர்ச்செயற்பாடுகளை விபரிக்கையில், பொருத்தமான படிமங்களுடன், சிறப்பான மொழியுடன் அவற்றைப் பிரச்சார வாடையெதுவுமற்று விபரித்திருக்கின்றார். இதனால்தான் அவரது கவிதைகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன."
இந்த முன்னுரையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3173:2016-02-14-04-56-51&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.
தமிழினியின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரைக்கு ' 'தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!' என்று தலைப்பிட்டிருந்தேன். இலக்கிய வானில் மட்டுமல்ல, என் வாழ்விலும் அவருடனான தொடர்பு ஒரு மின்னலைப்போல்தான் அமைந்து விட்டது. இவ்வுலகில் அவரது வாழ்வு மின்னலைப்போல் தோன்றி மறைந்தாலும், அச்சிறு கணத்துள் அவர் தான் வாழ்ந்த சமூகத்துக்கு ஒளி வீசித்தான் மறைந்திருக்கின்றார் இருந்தபோதும் சரி, இருக்காதபோதும் சரி.