"கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?"
அண்மையில் அகால மரணமடைந்த பின்னர்தான் பலருக்குக் கேலிச்சித்திரக்காரர் (Cartoonist) அஸ்வின் சுதர்ஸன் பற்றி தெரியவந்தது. அவரது படைப்புகள் மீது பலரின் கவனமும் திரும்பியது. என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.
அவரது இங்குள்ள கேலிச்சித்திரம் (நன்றி: தமிழ்வின்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிந்த ராஜபக்சவின் கையிலிருந்த ஆட்சி அமைதியான முறையில் மைத்திரி பால சிறிசேனாவின் கைக்கு மாறியது. ஆனால் இன்னும் அரசியல் கைதிகளின் நிலை மாறாதது ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்புகிறது. ஏன் என்ற கேள்விக்குத் தர்க்கரீதியான விடையேதும் கிடைக்கவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அரசை எதிர்த்துப்போரிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் அஞ்சாத அரசு எதற்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தவர்களையெல்லாம் ஆண்டுக்கணக்காக இன்னும் சிறைகளில் வைத்திருக்கின்றது? உண்மையில் அவர்களைச்சிறைகளில் வைத்துப் பராமரிப்பதால் அரசுக்கு வீண் செலவுதான் ஏற்படுகிறது.
இவ்வளவு காலமும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவ்வரசியல் கைதிகள் பலர் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை வெளியில் விட்டால் மேலும் பல குற்றங்களை அரசுக்கு எதிராக அவர்கள் கூறுவார்கள் என்று அரசு நினைக்கின்றதோ? பின் எதற்காக அவர்களை இன்னும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்?
ஒரு சமயம் களுத்துறைச் சிறையில் சுமார் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு வெளியில் வந்திருந்த ஒருவரைச் சந்தித்திருந்தேன். என்னிடம் சிறிது காலம் கணினி சம்பந்தமான பாடங்கள் சிலவற்றைப் படிப்பதற்காக வந்திருந்தார். அப்பொழுது அவர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் மீது புரியப்பட்ட சித்திரவதைகள் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார். அதனைப் பதிவு செய்வதற்காக 'களு(ழு)த்துறை' என்று ஒரு கவிதையினை எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டிருந்தேன். 'திண்ணை' இணைய இதழிலும் வெளியானது. அதனை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இந்தக் கவிதை எழுதியது 2001இல். ஆனால் இன்னும் சிறைகளில் அரசியல் கைதிகள் வாடிக்கொண்டுதானிருக்கின்றார்கள்.
அமரர் அஸ்வின் சுதர்சனின் 'அரசியல் கைதிகள்' பற்றிய இந்தக் கேலிச்சித்திரம் இவ்விதமானதொரு அரசியற் சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது இதனால்தான்.
திண்ணை.காம் : கவிதை - களு(ழு)த்துறை! (25.11.2001)
- வ.ந.கிரிதரன் -
நேற்றுத் தான் அவன்
விடுதலையாகி
வந்திருந்தான்.
இரு வருடங்கள்
அவனுக்கு இரு யுகங்களாகக்
கழிந்திருந்தன.
நண்பனே! அவர்கள்
உன்னை , உன் தோழர்களை
என்னவெல்லாம் செய்தார்கள் ?
உன் தோழர்கள் அங்கு
என்னவெல்லாம் செய்வார்கள் ?
காலத்தினையெவ்விதம்
கழிப்பாரோ ?
ஆசனத்துள் ‘எஸ்லோன் ‘ வைத்து
அதனுள் முள்ளுக் கம்பி வைத்து
இழுத்த இழுப்பினில்
நண்பன் ஒருவனின்
குடலே காணாமல் போனதுவாம்.
நண்பன் கூறினான்.
குடல் காணாமல் போனவன்
இன்னும் பால்பவுடர்
கலந்து தான் உணவருந்துகின்றானாம்.
நண்பன் சொன்னான்.
துளையிடும் கருவியால்
ஒருவன் குதியினைத்
துளையிட்டதில் அவன்
தொலைந்தே போனானாம்.
நண்பன் சொன்னான்.
கற்பனையும் கனவுகளுமாக
வந்த பிஞ்சொன்று
‘பிந்துனுவ ‘வில்
பஞ்சாகிப் போனதுவாம்.
இது போல் பல! பல!.
இன்னும் பல! பல!
நண்பன் சொன்னான்.
‘நான் தப்பி விட்டேன்.
ஆனால்..அவர்கள்.. ‘
நண்பன் சொன்னான்.
வெளியில் வீசும்
புயலில் அவர்கள்
மறக்கப் பட்டுப் போனார்களா ?
வருடங்களெத்தனை அவர்
வாழ்வில் வந்து போயின ?
அவர்கள் உள்ளே இருப்பது
யாராலே ? யாருக்காக ?
எதனாலே ? எதற்காக ?
கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?
குரல் கொடுப்பார் யாருளரோ ?
யாருளரோ ?
[ *இலங்கை தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் களுத்துறை வெலிக்கடைச் சிறைச்சாலையுட்படப் பல சிறைச்சாலைகளில் வருடக் கணக்கில் ,
நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப் படாமல், கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அடையும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர்
‘பிந்துநுவ ‘ போன்ற சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப் பட்டுமுள்ளார்கள். அண்மையில் கூட இவர்கள் தமது இரத்தத்தில் கடிதம் எழுதி நீதி கேட்டிருப்பதாகப்
பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.]
நன்றி: http://old.thinnai.com/?p=301112511
நன்றி: தமிழ்வின்.காம் - அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.