அண்மையில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் தனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது வருமாறு:
"மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள். எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு. இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் 'நாவல்' தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்."
திரு.குப்பிழான் சண்முகம் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. இப்பதிவில் அவர் நாவலின் வடிவம் பற்றி 'இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது' என்று குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. அவரது கூற்றினை மீண்டுமொருமுறை சிந்தித்துப்பார்த்தேன்.
உண்மையில் இந்த நாவலுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்துக்குள் தான் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அமைக்கப்பட்டு , அதற்குள் ஓவியம் இருப்பதுபோல்தான் நான் நாவலின் வடிவத்தை அமைத்திருந்தேன். இந்த வடிவத்தை நான் இந்த நாவலுக்குப் பாவிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் மரபுக் கவிதையினோர் வடிவம்தான்.
மரபுக்கவிதையில் ஒரு வடிவம் உண்டு. அது அந்தாதித்தொடை. 'யாப்பருங்கலக்காரிகை' 'அந்தாதித்தொடை' பற்றி 'அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி' என்று கூறும். அடி தோறும் இறுதியாக (அந்தம்) நிற்கும் சீர், அசை, அல்லது எழுத்து ஆகியவற்றையே அடுத்த அடியின் முதலாக (ஆதி) வைத்துப் புனையப்படும் கவிதையில் பாவிக்கப்படும் தொடை அந்தாதித்தொடை என்பதிதன் பொருள்.
அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல்லாக வரும் சொல்லையே அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்து முழுப்பாடல்களையும் அமைத்திருப்பார். அதனாலேயே அப்பாடல்களின் தொகுதி அபிராமி அந்தாதி ஆயிற்று.
தமிழ்த்திரைப்படப்பாடல்களில் இவ்விதமான அந்தாதித்தொடை மிகவும் அரிதாகவே பாவிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கவிஞர் கண்ணதாசன் தனது திரைப்படப்பாடலொன்றில் அந்தாதித்தொடை பாவித்துப் பாடலொன்றினைப் புனைந்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். அதனால் மிகவும் இலகுவாக அவரால் தனது தமிழ் இலக்கியப்புலமையினைப்பாவித்துத் திரைப்படப்பாடல்களை எழுத முடிந்தது. அந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்ற 'மூன்று முடிச்சுகள்' திரைப்படப்பாடல். அது:
"வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்"
இங்கு ஒவ்வொரு அடியின் இறுதிச்சொல்லும் அடுத்த அடியின் முதற் சொல்லாக வந்திருக்கின்றது. அற்புதமான சொல்லாட்சி.
இவ்விதம் முடிவே முதலாகவும், அடுத்து வரும் முடிவே இன்னுமொரு முதலாகவும் அமையும் வண்ணம் அமைக்கப்பட்ட நாவல்தான் 'குடிவரவாளன்' யாராவது இதனை வாசித்துக் கண்டு பிடிப்பார்களென்று பார்த்தேன். இதுவரையில் இதனை யாரும் கண்டு பிடிக்கவில்லை. அதனால் நானே இதனை இங்கு போட்டுடைக்கின்றேன். அது சரி எதற்காகக் 'குடிவரவாளன்' நாவல் இவ்விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றீர்கள் என்று கேட்கின்றீர்களா?
அது விளங்க வேண்டுமானால், நாவலின் அத்தியாயங்களை ஒரு முறை பாருங்கள். நாவல் மொத்தம் 27 அத்தியாயங்களை உள்ளடக்கியது. அத்தியாயம் ஒன்றின் தலைப்பு: "இன்று புதிதாய்ப்பிறந்தேன்.". நாவலின் கடைசி அத்தியாயமும் "இன்று புதிதாய்ப்பிறந்தேன்" தான். இவ்விதம் நாவல் கட்டமைக்கப்பட்டதுக்குக் காரணமுண்டு. ஆரம்பத்தில் கதை சொல்லியான இளங்கோவின் தடுப்பு முகாம் வாழ்வு முடிவடைந்து, தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி , அவனது வாழ்க்கை நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிவரவாளனாக ஆரம்பமாகின்றது. சிறை வாழ்வு முடிந்து, சுதந்திர மனிதனாகப் புதிய வாழ்வு ஆரம்பமாகின்றது. ஒன்றின் முடிவு இன்னுமொன்றின் ஆரம்பமாகவிருக்கின்றது.
இதுபோல் நாவலின் இறுதி அத்தியாயமும் 'இன்று புதிதாய்ப்பிறந்தேன்' என்று முடிவடைகின்றது. சுமார் ஒரு வருட காலம் நியூயார்க் மாநகரில் சட்ட விரோதக் குடிமகனாக , எந்தவிதச்சட்டபூர்வமான ஆவணங்களுமற்று பல்வேறு அனுபவங்களைப்பெற்ற இளங்கோவின் நியூயார்க் மாநகரத்து வாழ்வு முடிவுக்கு வருகின்றது. அவன் நம்பிக்கைகளைத்தாங்கியவனாகக் கனடாவை நோக்கிப் புதிய வாழ்வொன்றினை நாடிப்பயணமாகின்றான். நீயுயார்க் நகரத்து வாழ்வின் முடிவு, கனடா வாழ்வின் ஆரம்பமாக அமைந்து விடுகின்றது.
முடிவே தொடக்கமாக ஆரம்பமாகி நடைபோடும் நாவல் , இடையில் பல்வேறு அனுபவங்களையும் உள்வாங்கி மீண்டும் முடிவுக்கு வந்து. அந்த ,முடிவே இன்னுனோர் ஆரம்பமாக அமைந்து விடுகின்றது.
'அந்தாதி' இலக்கிய வடிவத்தை மையமாக வைத்துப்புனையப்பட்ட நாவல்தான் 'குடிவரவாளன்'. இவ்விதமாகத் தமிழில் இதுவரையில் நானறிந்து வேறெந்த நாவலும் புனையப்படவில்லை. ஆக இந்த நாவலிக்கு ஒரு வடிவமுண்டு. ஆழந்து நாவலின் கட்டமைப்பைப்புரிந்து கொண்டால் விளங்கிக்கொள்ளலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.