முன்பொருமுறை இது பற்றி முகநூலில் தர்க்கித்தது நினைவுக்கு வருகிறது. தமிழர் தகவல் (கனடா) இதழின் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலரில் வெளியான முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் '"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும். இது 1990இல் வெளிவந்தது.' என்று குறிப்பிட்டிருந்தது பற்றித் தர்க்கித்தது நினைவுக்கு வருகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியன் 'காலம்' செல்வம் போன்றவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அம்முடிவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் கவிஞர் சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' வெளியாவதற்கு முன்னர் 14.01.1987 மங்கை பதிப்பக வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' தொகுப்பு எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. அக்கவிதைகளின் விபரங்கள் வருமாறு:
1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!
இக்கவிதைகள் அனைத்தும் மான்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியானவை. பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' நாவலும் அதே ' புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில்தான் வெளியானது.
இது பற்றிய முகநூல் தர்க்கத்தில் நான் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தேன்: "கனடாவின் முதல் தமிழ் நாவலாக வெளிவந்த ஆக்கம் எனது 'மண்ணின் குரல்' இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது. அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். இந்நூல் 87 தை மாதம் வெளியானது. அந்த வகையில் கனடாவில் வெளியான முதலாவது கவிதை நூலாகவும் இதனை ஒருவிதத்தில் கொள்ளலாமோ? சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' கவிதைத்தொகுப்பும் றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது வெளிவந்த ஆண்டு சரியாகத்தெரியவில்லை. 87ற்கு முன் வெளிவந்திருந்தால் அதனையே முதலாவது கவிதைத்தொகுதியாகக் கருதலாம். முகநூலில் இக்கவிதைத்தொகுப்பினைப்பற்றிச்சுட்டிக் காட்டியிருந்தார் நண்பர் கனடா மூர்த்தி. அவருக்கு நன்றி."
இப்பொழுது என் நூல்கள் பலவற்றை உள்ளடக்கிய பெட்டிகளைத்தேடியபொழுது சுதா குமாரசாமியின் அந்த நூலைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது கவிதைத்தொகுப்பின் பெயர் 'முடிவில் ஓர் ஆரம்பம்'. 'மண்ணின் குரல்' தொகுப்பினை அச்சடித்த றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, Tamil Progress Publications' (Montreal, Canada) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு இது. பதினைந்து கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தொகுப்பிலுள்ள கவிதைகளின் பட்டியல் வருமாறு:
1. சமர்ப்பணம்
2. என்றும் வரும் வசந்தம்....
3. சின்னவளுக்குச் சித்தியின் தாலாட்டு
4. சாம்பலாகிய கனவு
5. பிரியாவிடை பெறும் அகதி
6. உரிமையா? சலுகையா?
7. எங்கே போகிறோம்?
8. காண்பேனா? உனை.
9. காற்றில் கலந்த, காதில் ஒலித்த
10. அருமை அகராதியே..!
11. புலம்பிப் பாயும் அந்த சென்ற் லோரன்ஸ்
12. வேண்டுகோள் கேளாய்
13. கனவாகிப்போன வாழ்வு.
14. உலகமென்பது எம் உடலடா!
15. அன்னிய மண்ணில் வெறுமை.
இந்தத்தொகுப்பு வெளியான ஆண்டு: ஆகஸ்ட் 1, 1988.
ஆக, கனடாவில் வெளியான முதலாவது தமிழ்க் கவிதை நூல்: சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்'. ஆனால் எனது எட்டுக் கவிதைகளை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' தொகுப்பு வெளியான ஆண்டு: 14.01.1987.
தனிக்கவிதைத்தொகுப்பாக கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுதியென்று பார்த்தால் அது சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்', ஆனால் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய முதலாவது தொகுப்பு என்று பார்த்தால் 14.01.1987 வெளிவந்த 'மண்ணின் குரல்' தொகுப்புத்தான். கனடாத்தமிழ்க் கவிதைகள் பற்றிய ஆய்வுக்கு உதவும் தகவல்கள் என்பதால் இங்கு இவற்றைப்பதிவிடுகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.