தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?
நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது. எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.
நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.
பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.
அரசியல் ஆய்வாளரும், செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் தனது உரையில் தான் முதன் முதலாக வந்திருக்கும் இலக்கியக் கூட்டம் இதுவே என்றார். அத்துடன் நாவல் இந்திய அமைதி காக்கும் படையினரின் அட்டூழியங்களை விபரிப்பதால் , அவ்விதம் படையினர் அத்துமீறி நடக்கவில்லையென்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை கூறியதை நினைவுபடுத்தி, இங்குள்ள இலக்கியவாதிகள் பலர் அது பற்றிய எந்தவிதச்சிந்தனையுமற்று, அவருடன் கூடிக்குலாவுவதைச்சுட்டிக் காட்டினார். மேலும் அவர் தனதுரையில் நாவலின் பாத்திரச்சிறப்புகளை, குறைபாடுகளை எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்றார். ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடுமே என்னும் ஆதங்கத்தினை அவரது உரை வெளிப்படுத்தியது.
நிகழ்வில் உரையாற்றிய முனைவர் இ.பாலசுந்தரம் தன் மாணவியாகக் கலைவாணி இருந்த காலத்திலிருந்து அவரது பல்கலைக்கழக அனுபவங்களை நாவலில் கூறப்படும் சம்பவங்களினூடு விபரித்துத் தனது உரையினை ஆற்றினார். தமிழ்நதி நடுநிலையுடன் அக்காலகட்டத்து அரசியல் நிலையினை விபரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நூலிலிருந்து பந்தியொன்றினையும் எடுத்து வாசித்தார்.
தமிழகத்திலிருந்து கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பேராசிரியர் அ.ராமசாமி தான் இன்னும் தமிழ்நதியின் நூலினை முழுமையாக வாசிக்கவில்லையென்றும், முதல் மற்றும் இறுதிப்பக்கங்களையே வாசித்ததாகவும், ஆனாலும் இணையத்தில் நூல் பற்றி வெளிவந்த விமர்சனங்களைத்தொடர்ந்து படித்ததனால் நூல் பற்றித்தான் அறிந்த புரிதல்களினூடு தன் உரையினை ஆற்றுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அண்மையில்டொராண்டோவிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் புகலிடத்தமிழர்களின் பன்னிரண்டு அரசியல் நாவல்களைப்பற்றிய தனது திறனாய்வினை நடாத்தியதாகவும், அதில் இந்த நூல் கிடைக்காதபடியால் உள்ளடக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்ட அவர், இந்த நூலினை எந்தவகையில் அவ்வாய்வினுள் உள்ளடக்கலாம் என்பது பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் நிகழ்வில் ஏனைய பேச்சாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரின் பாலியல் வன்முறைகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளைப்பற்றிக்குறிப்பிடும்போது ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை ஒரு மாதிரியாகவும், இந்தியப் பிரசை என்ற வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் இன்னுமொரு கோணத்தில் நின்று பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே, அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதபோதும் கூட என்னும் கருத்துப்படத் தனது கருத்தினை எடுத்துரைத்தார். இதற்கு இறுதியில் தனது ஏற்புரை/நன்றியுரையில் பதிலளித்த தமிழ்நதி நாவலினை வாசித்து விட்டுப்பேராசிரியர் தனது கருத்துகளைக் கூற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஜெயமோகன் இந்தியப்பிரசையாகவிருந்து கருத்துக் கூறுவது சரி, ஆனால் உண்மையை உண்மை என்று கூற வேண்டுமென்ற கருத்துப்படக் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனக்கு வழங்கப்பட்ட நேரம் காரணமாகத் தான் தயாரித்திருந்த உரையின் சிறு பகுதியினையே ஆற்றவிருப்பதாகவும், ஏனையவற்றைப்பின்னர் கட்டுரை வடிவில் தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் நாவலின் குறைகளைச் சுட்டிக்காட்டிய பாங்கு என்னைக் கவர்ந்தது. முனைவர் இ.பாலசுந்தரம் தனது உரையில் நாவலைத் தமிழ்நதி நடுநிலையுடன் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டதற்கு மாறாக அருண்மொழிவர்மன் நாவல் பேசாத விடயங்களைப்பற்றிக் குறிப்பிட்டார். குறிப்பாக நாவல் விபரிக்கும் காலகட்டத்தில் நடைபெற்ற முனைவர் ராஜனி திரணகமவின் படுகொலையினை நாவல் தவிர்த்து விட்டதை அவர் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிடலாம். இதற்கு இறுதியில் பதிலளித்த தமிழ்நதி தான் அப்படுகொலை பற்றிய சரியான விபரங்கள் தெரியாததால் (யார் கொன்றது என்பது பற்றிய) வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாகக் குறிப்பிட்டார். ராஜனி திரணகமவைக் கொன்றவர்கள் பற்றிச் சரியான விபரங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவ்விதம் அவர் கொல்லப்பட்டது மிகவும் தவறான ஒன்று அல்லவா. அதனை நாவல் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா. அருண்மொழிவர்மனின் கேள்வி நியாயமானது. மேலும் அருண்மொழிவர்மன் நாவலின் சில பகுதிகள் கட்டுரைத்தன்மை மிக்கதாக இருந்ததாகவும் தனது புரிதலை எடுத்துரைத்தார்.
நிகழ்வில் உரையாற்றுவதாகவிருந்த முனைவர் சேரன் , உடல்நிலை காரணமாகக் கலந்து கொள்ளவில்லையென்று தமிழ்நதி தனதுரையில் குறிப்பிட்டார்.
இறுதியில் நூலாசிரியரிடமிருந்து பிரதிகளைப்பெற்றுக்கொள்ளலாமென்று அறிவிக்கப்பட்டது. இவ்விதமானதொரு போக்கு அண்மைக்காலமாகத்தான் இவ்விதமான நிகழ்வுகளில் பின்பற்றப்படுவதாக அறிகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான நடைமுறை தவிர்க்கப்பட்டு, நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் வாசலில் முன்பு நடைபெற்ற நிகழ்வுகளில் நடைபெற்றுள்ளதைப்போல் நூல்களை விற்க ஒருவரைப்பொறுப்பாளராக நிறுத்தலாமென்று கருதுகின்றேன். மேலும் இவ்விதமான நடைமுறையினால் நூல்களை வாங்க விரும்பும் ஒருவர் தாமதப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நூலை வாங்க வரும், நூலாசிரியரைத் தெரிந்தவர்கள் அந்தச் சமயம் பார்த்து உரையாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் ஏனையவர்கள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியேற்பட்டு விடுகின்றது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் நேரத்துடன் செல்ல விரும்பும் இலக்கிய ஆர்வலர்களுக்கு நூலை வாங்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகின்றது.
நாவலுக்குப் பார்த்தீனியம் என்ற பெயரை வைத்திருக்காமல் இன்னுமொரு பெயரினை வைத்திருக்கலாமோ என்று படுகின்றது. பார்த்தீனியம் உண்மையில் நச்சுச்செடிதானா என்பதிலும் சந்தேகமுள்ளது. ஒவ்வாமையைப் பார்த்தீனியம் மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனிதர் அன்றாடம் பாவிக்கும் பொருள்கள், கடலை போன்றவை கூட ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியம் களைகளிலொன்றாக இருந்த போதும், நல்லதோர் உரமாகப்பாவிக்கப்படக்கூடியது என்றும் தி இந்து பத்திரிகைக் கட்டுரையொன்றில் வாசித்தது ஞாபகத்திலுள்ளது. அத்துடன் அமெரிக்கக்கண்டத்தில் அது மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது என்பதையும் அறிய முடிகின்றது.
மேலும் பார்த்தீனியம் ஆரம்பத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பிய கோதுமை மா மூலமே பரவியதாகவும் கருதப்படுகின்றது. மேலும் இலங்கைக்கு இந்தியப்படையினருக்கு உணவுக்காக அனுப்பப்பட்ட ஆட்டிறைச்சி வாயிலாக இலங்கையில் பரவியிருக்கலாமென்று கருதப்பட்டாலும், இது நிரூபிக்கப்பட்டதோர் உண்மையல்ல. அக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அகதிகள், ஏனையவர்கள் மூலமும் பரவியிருக்கலாம்தானே. நச்சாகக் கருதப்படும் பார்த்தீனியம் உரமாகவும் , மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது.
இவ்விதமான காரணங்களினால் பேரழிவுக்குச் சரியான குறியீடு பார்த்தீனியம் இல்லையென்பதென் கருத்து. இவ்விதமானதொரு நிலையில், பார்த்தீனியம் இலங்கையில் அட்டூழியங்கள் புரிந்த, அமைதி கொல்லும் படையாகச் செயற்பட்ட, இந்திய அமைதி காக்கும் படையினரைக்குறிக்குமொரு குறியீடாகக் கருதப்படுமானால், இன்னுமொரு திறனாய்வாளர் உரமாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் , மருந்தாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் இந்திய அமைதிப்படையினரை ஒப்பிடும் அபாயமுமுள்ளது. எனவேதான் நாவலுக்குப் பார்த்தீனியம் என்பதற்குப் பதில் இன்னுமொரு பெயரை வைத்திருக்கலாமென்று தோன்றுகின்றது.