எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.
எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.
வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் 'கட்டைச்சுப்பர்' என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட 'தேர்மாஸ் பிளாஸ்கி'ல் 'கோப்பி' கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.
'கட்டைச்சுப்பர்' இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.
அக்காலகட்டத்தில் கஸ்தூரியார் வீதி வழியாகச் செல்லும் சமயங்களிலெல்லாம், வழக்கறிஞர் செந்தில்நாதனின் மாடி வீட்டைக்கடக்கும்போதெல்லாம், அவர் இரவுகளில் தனது தொலைக்காட்டி மூலம் நட்சத்திரங்களைப்பார்க்கும் காட்சி மனதில் வந்து போவது வழக்கம்.
அவரது புத்திரர்களிலொருவர் ( சேரலாதன் என்ற பெயருக்குரியவர் என்று நினைவு ) சிறிது காலம் கந்தசாமி மாஸ்ட்டரின் டியூட்டரியில் என்னுடன் இயற்பியல் (க.பொ,த உயர்தர) படித்துக்கொண்டிருந்தார். மேனாட்டு இசையில் நாட்ட முடையவர். ஆங்கிலப்பாடல்களைப்பாடுவார். பாடச்சொல்லிக் கேட்பதுண்டு. இப்பொழுதும் ஞாபகத்திலுள்ளது.
டொராண்டோ பெரும்பாகத்திலும் வானியலில் ஆர்வமுள்ள நண்பரொருவரிருக்கின்றார். கடலியல் பொறியியலாளரான நண்பர் வரதீஸ்வரனுக்கு வானியலிலும் ஆர்வம் அதிகம். அதற்காக நவீனரகத் தொலைக்காட்டியொன்றினை வாங்கி வைத்திருக்கின்றார். ஓரிரவு அதன் மூலம் சந்திரனின் மேற்பரப்பினை அருகில் பார்த்து வியந்தோம். இரவு வானில் சுடரும் நட்சத்திரக் கூட்டங்களையும் அதனூடு பார்த்து வியந்தோம். டொரோண்டோவில் வசிக்கும் வானியலில் ஆர்வமுள்ளவர்கள் விரும்பினால் அவருடன் இணைந்து வானியல் அவதான அமைப்பொன்றினை ஆரம்பிக்கலாம்.
ரிச்மண்ட் ஹில்லிலுள்ள வான் அவதான நிலையத்தை ஆர்வமுள்ளவர்கள் பாவிக்க முடியும். ஒரு கோடை இரவு 'பொன்னியின் செல்வன்' கதை நிகழ்ந்த காலகட்டத்தில் வெடித்த சுப்பர் நோவா ஒன்றின் அன்றைய தோற்றத்தினை (ஆயிரம் வருடங்களுக்கு முன்னரான தோற்றத்தினை) கண்டு இரசித்தோம். அதன் பெயர் Ring Nebula.
ரிச்மண்ட்ஹில்லிலுள்ள வான் அவதான நிலையத்தின் விபரங்கள் வருமாறு:
David Dunlap Observatory
123 Hillsview Drive
Richmond Hill, ON, L4C 1T3
http://www.theddo.ca/Home/tabid/38/Default.aspx
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.