இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'குடிவரவாளன்' நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி...
நண்பர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர்வரும் 15.05.2016 , ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு, ஞானாலயம், பருத்தித்துறை என்னும் முகவரியில் என்னுடைய நாவலான 'குடிவரவாளன்' நாவலின் வெளியீடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.
எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், எழுத்தாளர் அறிமுகவுரையினை சு.குணேஸ்வரனும், அவரைத்தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகளை திரு.ஜி.ரி. கேதாரநாதன் , வேல். நந்தகுமார் ஆகியோரும் ஆற்றுவார்கள். நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை சித்திராதரன் ஆற்றுவார்.
அதற்கான அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்காக 'உயில் & சித்தம்' குழுவினருக்கும், எழுத்தாளர் சு.குணேஸ்வரனுக்கும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் எழுத்தாளர்கள் குப்பிளான் ஐ.சண்முகன், ஜி.ரி.கேதாரிநாதன், வேல்.நந்தகுமார் மற்றும் சித்திராதரன் ஆகியோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
இந்நிகழ்வில் நூல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பணம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவுக்கு வழங்கப்படும்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி!
'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049
கனடா நண்பர்கள் கவனத்துக்கு: இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:
வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India. Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52. email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்நாவல் பற்றி மேலும் சில தகவல்கள்...
'குடிவரவாளன்'. - பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளிவந்து தற்போது தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது. தொடராக வெளியானபோது 'அமெரிக்கா 2', 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்' என்னும் பெயர்களில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவலிது.
இந்நாவல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அகதிகள், சட்டவிரோதக்குடிவரவாளர்கள் பற்றி அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் பற்றி இந்நாவல் கேள்வியினை எழுப்புகின்றது. இவ்விதமாக அமெரிக்க மண்ணில் தம் இருப்பிற்காய்ப் போராடும் குடிவரவாளர்கள் எவ்விதம் அங்கு அவர்கள் நிலை காரணமாகப் பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. குறிப்பாக இவ்விதமான குடிவரவாளர்களை எவ்விதம் அவர்களைப் பணியிலமர்த்துவோர் அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கின்றார்கள் என்பதை, வேலை வாய்ப்பு முகவர்கள் எவ்விதம் இவ்விதமான தொழிலாளர்களின் நிலையைத்தமக்குச் சாதகமாக்கி வேலை வாய்ப்பென்னும் ஆசை காட்டி, பணத்துக்காக ஏமாற்றுகின்றார்கள் என்பதையெல்லாம் நாவல் விபரிக்கின்றது. இவ்வளவுதூரம் அலைக்கழிக்கும் வாழ்வினைக் கண்டு அஞ்சாது, துவண்டு விடாது இந்நாவலின் நாயகன் எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தன் பயணத்தைத் தொடர்கின்றான் என்பதை நாவல் கூறும். அதே சமயத்தில் இலங்கையின் வரலாற்றில் களங்கமாகவிருக்கும் 1983 ஜூலைக்கலவரத்தை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவாகவும் இந்நாவல் விளங்குகின்றது.
இளங்கோ ஓர் ஈழத்துத்தமிழ் அகதி. இலங்கையின் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகக் கனடா நோக்கிப் புலம்பெயர்கின்றான் கதையின் நாயகனான இளங்கோ. ஆனால் அவனது பயணம் அமெரிக்காவின் பாஸ்டன் நகருடன் நின்று விடுகின்றது. அவனை கனடாவின் மான்ரியாலுக்கு ஏற்றிச்செல்லவிருந்த விமானம் நிறுவனம் மறுத்து விடுவதால் அவன் அமெரிக்காவிலேயே அகதிக்கோரிக்கை விடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றான். அவனை நியுயார்க்கிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றார்கள். அங்கு சுமார் மூன்று மாதங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப் படுகின்றான். சட்ட விரோதக் குடிவரவாளனாக நியுயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் அலைந்து திரிகின்றான் எந்தவிதச் சட்ட ஆவணங்களுமற்ற நிலையில், சுமார் ஒரு வருடம் வரையில் அவன் எவ்விதம் நியூயார்க் மாநகரில் தப்பிப்பிழைக்கின்றான் என்பதுதான் 'குடிவரவாளன்' நாவலின் பிரதான கரு.
இந்நாவல் அக்காலகட்டத்தில் அவன் வாழ்வில் எதிர்ப்படும் பல்வேறு வேற்றின மக்களுடனான அனுபவங்களை விவரிக்கின்றது. அமெரிக்காவுக்கு அகதியாக ஜேர்மனியிலிருந்து வரும் ரஞ்சிற்சிங், அவன் தடுப்பு முகாமிலிருந்து வெளியே வந்ததும் தங்கியிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரான இந்தியத்தம்பதியினர் அஜித்/பத்மா தம்பதியினர் அங்கு அவனுக்கு அறிமுகமாகும் வங்காளியான கோஷ், அங்கு தங்கியிருக்கும் ட்ரக் சாரதியான பஞ்சாபைச்சேர்ந்த மான்சிங், வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முகவன் பீற்றர், அவனிடம் பணி புரியும் ஹென்றி, நியூ ஜேர்சியிலுள்ள கடலுணவு உணவகத்தின் பிரதான சமையல்காரன் கிரேக்கனான நெப்போலியன், அவனது உதவியாளன் மார்க், குடிவரவுத்திணைக்கள அதிகாரி டிம் காங்கின், நடை பாதைத்தம்பதியினரான மராத்திய ஹரிபாபு தம்பதியினர், அவர்களிடம் பணிபுரியும் எஸ்கிமோ ஹென்றி, தோலாடைகளை விற்பனை செய்யும் இத்தாலியக்கடைக்காரனான கார்லோ, நியூயார்க் சட்டத்தரணி அனிஸ்மான், சட்டவிரோதக் குடிவரவாளர்களின் நிலையை வைத்துச் சுரண்டிப்பிழைப்பை நடாத்தும் ஸ்பானிஸ் வேலை வாய்ப்பு முகவனான பப்லோ எனப்பல்வேறு இனங்களைச்சேர்ந்த கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் வருகின்றன.
இவர்களுடனான இளங்கோவின் அனுபவங்களை விபரிப்பதே 'குடிவரவாளன்' நாவலின் முக்கிய நோக்கம்.
நாவலின் ஆரம்பத்தில் இளங்கோவின் 1983 காலகட்டத்துக் கலவர அனுபவங்கள் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் நியூயார்க் மாநகரத்தில் தப்பிப்பிழைப்பதற்காக அவன் செய்யும் தொழில்கள் பற்றி நாவல் விபரிக்கின்றது. கூடவே அமெரிக்க அரசின் சட்டவிரோதக்குடிகள், அகதிகள் பற்றிய சட்ட திட்டங்களை விமர்சிக்கின்றது நாவல். தப்பிப்பிழைப்பதற்காக நடைபாதைகளில் பல்வேறு தொழில்கள் செய்கின்றான்; உணவகங்களில் வேலை செய்கின்றான். இவ்விதம் இளங்கோவின் அனுபவங்களை விபரிக்கும் நாவல் அவனது உறுதியான, வாழ்வினை எதிர்நோக்கும் உள்ளத்தினையும் விபரிக்கின்றது.
நாவலின் உள்ளடக்கம்
1. இன்று புதிதாய்ப்பிறந்தேன்.
2. நள்ளிரவில்
3. சூறாவளி
4. மதகுருவின் துணிவு
5. இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து
6. மழையில் மயங்கும் மனது
7. திருமதி பத்மா அஜித்
8. விருந்தோ நல்ல விருந்து
9. 42ஆம் வீதி மகாத்மியம்
10. வழி தவறிய பாலை வனத்து ஒட்டகங்கள்.
11. இளங்கோ இலங்கா ஆன கதை.
12. மீண்டும் தொடங்கும் மிடுக்கு.
13. வேலை வேண்டும்.
14. வேடிக்கையான குடிவரவுத்திணைக்கள அதிகாரி.
15. நியூயார்க்கில் குடை வியாபாரம்.
16. ஹரிபாபுவின் விளம்பரம்.
17. ஹரிபாபுவின் நடை பாதை வியாபாரம்.
18. ஹென்றியின் சாமர்த்திய(ம் /மா?)
19. கோஷின் காதல்.
20. இந்திராவின் சந்தேகம்.
21. கார்லோவின் புண்ணியத்தில்
22. சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்
23. சட்டத்தரணி அனிஸ்மானின் அலுவலகத்தை நோக்கி..
24. அனிஸ்மானின் ஆலோசனை.
25.பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்.
26. நடு வழியில்..
27. இன்று புதிதாய்ப்பிறந்தேன்.
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மின்னூலாகவும் வெளியாகியுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.