முனைவர் ஆர் .தாரணி (Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D) அவர்களை எனக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தெரியும். இணையம் மூலம் அறிமுகமான இலக்கியவாதிகள், கல்வியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர். இவரை நான் முதலில் அறிந்துகொண்டதே சுவாரசியமானதோர் அனுபவம். இணையத்தின் முக்கியமான பயன்களை எனக்கு உணர்த்திய அனுபவம் அது. அப்பொழுது நான் இணையத்தில் எனக்கொரு பக்கத்தை வைத்திருந்தேன். அதில் என் சிறுகதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் பலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் மான்ரியாலிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி , கனடிய அரசின் நிதி உதவியுடன் Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!' என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அதற்காக அவர்கள் கனடிய எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய இணையத்தளப்பக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் கனடாவில் வாழும் பல்லின எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள்தம் இணையத்தளங்கள் மற்றும் அவ்விணையத்தளங்களுக்கான இணைப்புகள் என அப்பக்கத்தில் தகவல்களைப்பதிவு செய்திருந்தார்கள். (இந்தத்தளம் இப்பொழுது இயங்குவதில்லை.)
அக்காலகட்டத்தில் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதுவதற்காக, அது பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் முனைவர் தாரணி. அவர் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றியே அச்சமயம் இணையத்தில் தேடிக்கொண்டிருந்ததாகப்பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அச்சமயம் அவரது கண்களில் மான்ரியால் பல்கலைக்கழகம் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருந்த கனடிய எழுத்தாளர்கள் பற்றிய இணையத்தளமும், அதிலிருந்த என் பக்கத்துக்கான இணைப்பும் பட்டிருக்கின்றது. என் பக்கத்திலிருந்த புகலிட வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த கதைகளை, சிறு நாவலான 'அமெரிக்கா' ஆகியவற்றை வாசித்திருக்கின்றார்.அவற்றை வாசித்ததும் என் கதைகளையே மையமாக வைத்துத் தான் எழுதவிருந்த புகலிட ஆய்வுக்கட்டுரையினை எழுதுவதாகத்தீர்மானித்து என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு "‘Seeking the invisible Humanness in an Alien Land' : A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan" . இவ்வாய்வுக் கட்டுரையினைத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இதன் பின்னர் மேலுமிரு ஆய்வுக்கட்டுரைகளை அவர் என் படைப்புகளை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். அவற்றின் விபரங்கள் வருமாறு"
1. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan
2. An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan. [அண்மையில் வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மின்னூலாக வெளிவந்துள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை.]
இவரது எனது கதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் காரணமாக முனைவர் ஞானசீலன் ஜெயசீலன் (இலங்கை) "The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan" என்றோர் ஆய்வுகட்டுரையினை ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். அக்கட்டுரை தமிழகத்தில் முனைவர் ஆர்.ஶ்ரீனிவாசன் அவர்களால் வெளியிடப்படும் ஆய்விதழான 'பனுவல்' இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
மேலும் முனைவர் தாரணியின் ஆய்வுக்கட்டுரையினையும், எனது படைப்புகளையும் ஆதாரங்களாக வைத்து சென்னைப்பல்கலைக்கழகத்திலும் மாணவர் ஒருவர் M.Phil பட்டப்படிப்புக்காக எனது கதைகளைப்பற்றிய ஆய்வொன்றினைச்செய்திருக்கின்றார்.மேற்படி கட்டுரைகளைப்பின்வரும் இணைய இணைப்பினில் வாசிக்கலாம்: https://vngiritharan23.wordpress.com/category/reviews/
அச்சில் நூலாக வெளிவராத இணையத்தில் மட்டுமே வெளிவந்திருந்த ('பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில்) எனது படைப்புகளைத்தேடி எடுத்து, என்னுடன் தொடர்பு கொண்டு , தன் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய முனைவர் தாரிணியின் செயல் எனக்கு இணையத்தின் முக்கியமான பயன்களிலொன்றினை உணரவைத்தது. எழுத்தாளர்கள் தம் படைப்புகளை இணையத்தில் பதிவேற்றுவதன் அவசியத்தை உணரவைத்த செயல் அது. இணையப்பக்கம் புகழ் பெற்றதாகவோ, பல வாசகர்களைக்கொண்டதாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் படைப்புகள் இணையத்திலிருந்தால், இவ்விதமாக ஆய்வுகள் செய்யப்படும்போது அப்படைப்புகளும் அவவாய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும். பொதுவாக பிரபல தமிழ் எழுத்தாளர்களின், விமர்சகர்களின் அங்கீகாரத்தை நாடிக்குழுச்சேர்க்கும் நம் காலத்துப்படைப்பாளிகள் அதற்குப்பதில் இணையத்தில் தம் படைப்புகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
மேலும் இன்னுமொரு விடயத்தையும் மேற்படி ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அறிய முடிகின்றது. புகலிடப் படைப்புகளைப்பற்றிக் கட்டுரைகளை எழுதும் நம் காலத்து எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் பலர் 'புகலிடப்படைப்புகளில் இன்னாரினது கதைகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. அகதி வாழ்வின் அவலத்தை எடுத்துரைக்கின்றன' என்பது போன்ற பொதுவான வசனத்தொடர்கள் சிலவற்றைத் தம் கட்டுரைகளில் திணிப்பதுடன் திருப்தி அடைந்துவிடுகின்றார்கள். ஆனால் முனைவர் தாரிணி சர்வதேசரீதியிலான புகலிடப்படைப்பாளிகள், அவர்கள்தம் எழுத்துகளை ஆராய்ந்து, பின் ஆய்வுக்குட்படுத்தும் தமிழ்ப்படைப்புகளையும் நுணுகி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கின்றார். இவ்விதமான அணுகுமுறைதான் முறையான புகலிட எழுத்துகள் பற்றிய ஆய்வுக்கு வழிவகுப்பவை. இதனை மேலோட்டமாகப் புகலிடக் கதைகள் பற்றி அடிக்கடி திருவாய் மலர்ந்தருளும் இலக்கியவாதிகள் (திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற) கவனத்திலெடுக்க வேண்டும். தம் புகலிட எழுத்துகள் மீதான மேலதிக வாசிப்புகள் மூலமாக தம் ஆய்வுகளை வளப்படுத்த முனைய வேண்டும்.
இலங்கையில் எழுத்தாளர் சு.குணேஸ்வரன் ஒருவரே நான் அறிந்த வரையில் அண்மைக்காலத்தில் புகலிடப்படைப்புகள் பற்றி விரிவாக ஆய்வுக்கட்டுரைகள எழுதிவரும் எழுத்தாளராவார். அவரது தமிழர்களின் புகலிட இலக்கியம் பற்றிய கட்டுரைகள் சமகாலத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பினை வழங்குவன எனலாம். தமிழகத்தில் முனைவர் வெற்றிச்செல்வனும் குறிப்பிடத்தக்கவர். 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும், படைப்பும்' என்றொரு நல்லதோர் ஆய்வுக்கட்டுரையினை எழுதியதுடன் அதனை நூலாகவும் 'சோழன் படைப்பகம்' வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.
முனைவர் தாரணி அவர்கள் புகலிடத்தமிழ்ப்படைப்பாளிகள் பலரின் படைப்புகளை ஆய்வுக்குட்படுத்தி மேலும் பல ஆய்வுக் கட்டுரைகளைப் படைப்பாரென்றால் அது தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளத்தினைச்சேர்க்கும்; எதிர்காலத்தில் அவர் மேலும் பல ஆய்வுக் கட்டுரைகளைத் தருவாரென்று நம்புகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.