1. கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்....
முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் கனடாவில் வெளியான கவிதை நூல்களைப்பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அது வருமாறு:
"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும். இது 1990இல் வெளிவந்தது. இதனையடுத்து கெளரி என்பாரின் 'அகதி' என்ற நெடுங்கவிதை நூலும், அ.கந்தசாமி , மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான 'காலத்தின் பதிவுகள்' என்ற தொகுதி 1991இலும், ஆனந்தபிரசாத் என்பாரின் 'சுயதரிசனம்' என்ற தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில் என்.கே.மகாலிங்கம் அவர்களின் 'உள்ளொளி' (1993), அ.கந்தசாமி அவர்களின் 'கானல் நீர்க்கனவுகள்' (1994), நிலா குகதாசன் அவர்களின் 'இன்னொரு நாளில் உயிர்த்தேன்' (1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. இத்தகவல்களைத் தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு.ப.ஶ்ரீஸ்கந்தன் ஆகியோராவார்."
சேரனின் கவிதைத்தொகுதியான 'எலும்புக்கூடுகளின் ஊர்வலம்' தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.
இங்கு தவற விடப்பட்ட சில கவிதைத்தொகுதிகள் வருமாறு: கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு அகதியின் பாடல்'(1991) என்னும் கவிதைத்தொகுதியும் தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது. வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா' (1994) மங்கை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிஞர் கந்தவனத்தின் பல கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. இவையும் தவற விடப்பட்டுள்ளன. குறிப்பாகக் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் எழுதிய இரு - வரி மணிக்கவிதைகள் நூலுருப்பெற்றுள்ளன.
எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுதியினை மங்கை பதிப்பகத்தினூடு வெளியிட்டபோது அதனை அச்சிட்டுத்தந்தவர் 'தாயகம்(கனடா)' ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவ் அவர்கள். அவர் சொந்தமாக வைத்திருந்த சிறிய அச்சியந்திரத்தின் மூலம் , நியாயமான கட்டணத்தில் அச்சிட்டுத்தந்தார்.
நூல்களை நான் ஜோர்ஜிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்று , அன்று அவர் வசித்த வெலஸ்லி/பார்லிமென்ட் பகுதியிலிருந்த அவரது இருப்பிடத்தில் 'காலம்'செல்வம், எழுத்தாளர் அமரர் குமார் மூர்த்தி மற்றும் இன்னும் சிலரிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் 'எழுக அதிமானுடா' கவிதை நூலினைக்கொடுத்தது ஞாபகத்துக்கு வருகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியம் அவர்களுக்குக் கனடாவில் வெளியான நூல்களின் பட்டியலைக்கொடுக்கும்போது அவர் 'எழுக அதிமானுடா' நூலினை மறந்தது ஆச்சரியத்தைத்தருகின்றது. இங்கு முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவணப்பதிவுக்காகக் கனடாவில் வெளியான நூல்களின் பட்டியலைக்கேட்டிருக்கின்றார். கவிஞர் செல்வம் தனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, ஆவணப்பதிவுக்காக 'எழுக அதிமானுடா' நூல் பற்றிய விபரத்தையும் கொடுத்திருக்கலாம் என்றெண்ணுகின்றேன். கனடாவில் வெளியான கவிதைகள் பற்றிய திறனாய்வென்றால் தமக்குப் பிடித்ததைக்குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் வெளியான கவிதை நூல்களின் பட்டியல் ஓர் ஆய்வுக்காக என்றால், நிச்சயம் அந்நூல்களின் உண்மையான பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
'எழுக அதிமானுடா' பற்றி 'பதிவுகளி'ல் வெளியான பத்தி: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2853:-110-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
2. பள்ளிக்கூடமா? பல்கலைக்கழகமா?
மாணவர்களின் கல்வியானது ஆரம்பப்பாடசாலை, உயர்தரப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் என்று பரிணாம வளர்ச்சியடைந்து செல்வது. ஆரம்பத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவி மிகவும் அதிகமாகத்தேவைப்படும். மேலும் அவர்கள் குழந்தைப்பருவத்திலிருப்பதால் அவர்களைக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருக்க வேண்டும். அவர்கள் வயது கூடக் கூட , அவர்கள் மேல் கைக்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தளர்ந்து, அவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்லும்போது , வயது வந்தவர்களாக, எவற்றையும் சுயமாகச்செய்யும் நிலையில் இருப்பவர்களாக இருப்பார்கள். பள்ளிக்கூடங்களில் ஆசான்களாக விளங்கிய ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்களில் தோழர்களாக மாறி விடுவார்கள்.
இந்நிலையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் அங்கு படிக்கும் மாணவர்களுக்குப் புதிதாகக்கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகத்தெரிய வருகிறது. இது பற்றிய குளோபல் தமிழ்ச்செய்திகள் இணையத்தளத்தில் வந்துள்ள செய்தி வருமாறு"
"யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன. யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன."
இவ்விதமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் பல மனித உரிமைப்பிரச்சினைகளை உருவாக்கும்.
தமிழர் பண்பாடு பற்றித்தீவிரமாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இருக்குமானால் முதலில் அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் மேற்கு நாட்டவர்களால் கீழ்த்திசை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 'பாண்ட்ஸ்', 'சேர்ட்' போன்ற அனைத்து வகை உடைகளையும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
மேற்கு நாட்டவர்களின் தொழில் நுட்பங்களைப்பாவிக்கலாம்; மேற்கு நாட்டவர்களின் உணவு வகைகளை உட்கொள்ளலாம்; மேற்கு நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடை வகைகளை அணியலாம்; மேற்கு நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கிய வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். இவ்விதம் நிலைமை இருக்கையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் இந்தக் கட்டுப்பாடுகள் தேவையற்றது என்பேன். ஆனால் டெனிம் ஆடைகள் விடயத்தில், பிருஷ்டங்கள் தெரிய உருவாக்கப்படும் Baggy pants டெனிம் வகைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்
மேலும் மாணவர்களுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப்பதிலாக, கடந்த காலங்களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் மாணவிகளுடன் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக செய்திகளில் அடிபட்டனவே. அவ்விதமான செய்திகள் எதிர்காலத்தில் வராத வகையில், விரிவுரையார்கள் விடயத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது இன்னும் பொருத்தமானதாகும். இவ்விதம் செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாணப்பல்கலைகழகம் முன்மாதிரியாகச்செயற்பட முடியும். கட்டுப்பாடுகள் விதிப்பதானால் முதலில் மேலிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதுவே நீதியானதுமாகும்.
தாடி வளர்க்காமல் வரவேண்டும் என்ற அறிவிப்பு என் சிந்தையில் பழைய எண்ணங்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தின. தொலைந்து போன என் புது Raleigh சைக்கிள் வழக்குக்காக என் பதின்ம வயதினில் , யாழ் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று நீதிபதியாக இருந்தவர் ஞானச்சந்திரன். அப்பொழுது நான் தாடியும், நீண்ட தலைமயிரும், பெல்பாட்டமுமாகத்தானிருப்பேன். அவ்விதமான தோற்றத்தில் என்னைக்கண்டதும் மிகவும் கடுமையாகக் கண்டித்த நீதிபதி ஞானச்சந்திரன், மறுமுறை நீதிமன்றத்துக்கு வரும்போது தலைமயிரை ஒழுங்காக வெட்டி வரவேண்டுமென்று கூறி எச்சரித்திருந்தார். அன்று எனக்காக வாதாட வந்திருந்த வழக்கறிஞர் இளம் வழக்கறிஞராக அப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்திருந்த பின்னாள் யாழ் பா.உ. யோகேஸ்வரன் அவர்கள். பின்னர் இலங்கையில் நிலவிய போராட்டச்சூழலில் அவர்கள் இருவருமே வன்முறைக்குப் பலியாகிப்போனார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.