எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் விமர்சனம் பற்றிக்குறிப்பிடும்பொழுது குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்..... அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது."
இருவருமே ஒருவர் ஒருவர் பக்கம் மாறியிருக்க வேண்டுமென்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. டானியலுக்குத் தன் படைப்பு பல வாசகர்களிடம் செல்ல வேண்டும். வீரகேசரி நிறுவனத்துக்கு எந்தவொரு படைப்பும் இலாபம் ஈட்டி வருமானத்தைத்தர வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்கின்றார்கள். ஆனால் டானியல் வீரகேசரி நிறுவனத்துக்காகத் தன் படைப்பின் உள்ளடக்கத்தை அல்லது வரிகளை மாற்றிச் சமரசம் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
எவ்வளவோ நல்ல மார்க்சிய நூல்களை மேற்கு நாடுகளின். இலாபம் ஈட்டிச் சம்பாதிப்பதையே அடிப்படையாகக்கொண்ட பதிப்பகங்கள் பல வெளியிட்டுள்ளன. மார்க்சின் மூலதனம், மார்க்சின் வரலாறு போன்றவற்றையெல்லாம் , கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எல்லாவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் எல்லாம் மார்க்சியத்தத்துவத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டன என்று கூற முடியுமா?
மேலும் அவர் டானியலின் 'போராளிகள் காத்திருக்கின்றார்கள்' நூல் வெளியீட்டில் "முதலில் இந்த நாவலின் தலைப்பே பிழையானது. போராளிகள் எப்போதும் காத்திருக்கமாட்டார்கள். அவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள்....போராடிக் கொண்டிருப்பவர்கள் தான் போராளிகள்...போராடாது இருப்பவர்களை போராளிகள் என்று அழைப்பதில்லை. என்றேன் " என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். போராளிகள் எப்பொழுதுமே காத்திருக்கின்றார்கள் என்பதிலுள்ள அர்த்தம் பல் வேறு வழிகளில் உணரப்படலாம். போராட்டத்தில் உரிய தருணங்களுக்காக அவர்கள் எப்பொழுதுமே காத்திருக்கின்றார்கள். விடுதலைக்காக அல்லது சமுதாய அமைப்பை மாற்றி அமைப்பதற்காகப்போராட்ட நடவடிக்கைகளைப் புரியும் போராளிகள் அனைவருக்கும் இறுதி வெற்றி உடனேயே கிடைப்பதில்லை. அல்லது கிடைக்காமலும் போய் விடலாம். ஆனால் அவர்கள் எப்பொழுதும் தம் இறுதி இலக்கை அடையும் வரையில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அவ்விதம் காத்திருக்கையில் தம் செயற்பாடுகளை இடை நிறுத்தி விடுகின்றார்கள் என்பது அர்த்தம் இல்லை. அவர்கள் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இறுதி வெற்றியை நாடிய யுத்தத்துக்காக அவர்கள் எப்பொழுதுமே காத்திருக்கின்றார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காகக் காத்திருக்கும் அவர்கள், அச்சூழலை உருவாக்குவதற்காகப் போராட்டச்செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே காத்திருத்தல் என்பதை இவ்விதமும் கருதிக்கொள்ளலாம். இதுவென் சிந்தனை.
மேலும் 'போராளிகள் காத்திருக்கின்றனர்' என்னும் தலைப்பு மிகுந்த கவித்துவம் மிக்க தலைப்பாகவும் எனக்குத்தெரிகின்றது. போராளிகள் எவ்விதம் காத்திருக்கலாம் என்னும் சிந்தனையைத்தூண்டுகிறது. காத்திருத்தல் பற்றிய மேலும் விரிவான , ஆழமான சிந்தனைக்கு அது வழிகோலுகிறது. இவ்விதம் காத்திருத்தல் பற்றிப் பல் வகையான சிந்தனையோட்டங்களைத்தூண்டும் தலைப்பு அது.
முகநூலில் இப்பதிவுக்கு வெளியான கருத்துகளில் சில:
அரசரட்னம் கெளரிகாந்தன்: காத்திருப்பு எனபது ஒரு வினையாகும்(செயலாகும்). அது செயலற்ற தன்மையைக் (pessimc)குறிக்கும் சொல்லல்ல. “ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு” கொக்கு வினையாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அது தனது புலன்களை ஒருமுகப்படுத்தி தனது வேளைக்காக காத்திருக்கின்றது. போராளிகளும் காத்திருக்கவேண்டும், தூங்கிவிடவோ, கரைந்துவிடவோ கூடாது.
சடகோபன் ராமையா: உரத்த சிந்தனை.
அ.யேசுராசா: முன்பு வாசித்த நினைவில் சொல்கிறேன் - போராளிகள் காத்திருப்பதற்கும் போராட்டத்துக்கும் அந்நாவலில் பலமான காரணம் இருக்கவில்லை. சிறுவயதில் எடுத்து வளர்க்கப்பட்ட ஒருவரைச் சிங்களவர் எனச்சொல்லி, அதனால் தோன்றுவதான முரண்பாடாக - பலவீனமானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது!
நந்தினி சேவியர்: எனது காய்தல்உவத்தல் சம்பந்தமான கருத்துக்கள் எனதுகருத்துக்களே. 'தகும் என்றால் கொள்ளும் ..தகாதெனில் விட்டுவிடும்
நான் மாற மாட்டேன். இது எனது! உங்களுக்கு நான் இதனை திணிக்கமாட்டேன்.' என்றே குறிப்பிட்டுள்ளேன். இயக்கங்கள் தலை எடுக்கும்முன்னர்..1975 இல் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையை கவனம்கொள்க. எனது பதிவின் நோக்கமே காய்தல் உவத்தல் இல்லாமல் விமர்சனம் அமையவேண்டும் என்பதே. அதற்காகவே "போராளிகள்காத்திருகின்றனர்"..நாவல்வெளியீடு சம்பந்தமான நிகழ்வைக் குறிப்பிட்டேன்..என்னவர்கள் என்பதற்காக விமர்சனங்கள் பக்கச்சார்பாக அமையக்கூடாது என்பதில் நீங்கள் என்னோடு உடன்படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.
கிரிதரன்: வணக்கம் திரு.நந்தினி சேவியர் அவர்களே, விமர்சனம் என்பது காய்தல் , உவத்தல் இல்லாமல் இருக்க வேண்டுமென்ற உங்களது கருத்துத்தான் எனதும். 'விமர்சனங்கள் பக்கச்சார்ப்பாக அமையக்கூடாது' என்னும் உங்கள் கருத்துடன் அனைவரும் நிச்சயம் உடன்படுவார்கள். மேலும் டானியல் நூலான 'போராளிகள் காத்திருக்கின்றார்கள்' பற்றிய உங்கள் கருத்து பற்றிய, அவரது நூலை வீரகேசரி நிறுவனம் வெளியிட்டது பற்றிய உங்கள் கருத்து பற்றிய எனது சிந்தனைகளைப்பகிர்ந்து கொண்டேன். இவ்விதமே ஒரு விடயத்தைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துகள் இருப்பதும் இயல்பானதே. இவ்விதமாகக் கருத்தொன்றினைப்பற்றிய பல்வகைப்புரிதல்கள் , அக்கருத்து பற்றிய விரிவான மற்றும் ஆழமான புரிதல்களுக்கு வழி வகுப்பவை. அத்துடன் ஆரோக்கியமானவை கூட
நந்தினி சேவியர்: மீண்டும் சொல்லுகிறேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு... ஆயிரம் சிந்தனைப்போக்குகள் முட்டிமோதட்டும். கிரிதரன் வரவேற்கிறேன். அதன்மூலம் சரியான கருத்துப் பிறக்கட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.