இத்தொகுப்பிலுள்ள 39 கதைகளைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளை அவ்வப்போது பதிவு செய்யப்போகின்றேன். 1994இல் வெளியான இத்தொகுதி பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கட்டுரைக்கு முதற்படியாக இவ்விதம் செய்வது பயனுள்ளது என்பது என் கருத்து. இது போல் தொடர்ந்தும் வாசிக்கவுள்ள அனைத்துப் புகலிடத்தமிழ்க் கதைகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்வேன். காரணம்: புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்களின் கதைகள் புகலிடக் கதைகளங்களை உள்ளடக்கியுள்ளனவா அல்லது இழந்த மண் மீதான கழிவிரக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறியும் பொருட்டுத்தான். தொடர்புகள் காரணமாகத் தமக்குக் கிடைக்கும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டுப் புலம்பெயர் தமிழர் படைப்புகள் புகலிடக் கதைக்களங்களை, பாத்திரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் கூறிவரும் கூற்றுகளில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை ஆராய்வதும் இவ்விதமான என் பதிவுகளுக்கு முக்கிய காரணங்களிலொன்றாகும்.
கதை ஒன்று: 'பனியும், பனையும்" தொகுப்பில் முதற் தொகுதிக்கதைகள் அவுஸ்திரேலியக் கதைகள். மொத்தம்: ஒன்பது. முதலாவது கதையின் தலைப்பு: ...பனையும். எழுதியவர்: சந்திரிகா ரஞ்சன். அச்சிறுகதை பற்றிச்சிறிது பார்ப்போம்:
'பனியும், பனையும்': ஆஸ்திரேலியாக் கதைகள் 1- சந்திரிகா ரஞ்சனின் '...பனையும்'.
இந்தக்கதை கூறும் பொருள்தானென்ன? நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இலங்கைத்தமிழர் ஒருவரின் பார்வையில் கதை கூறப்படுகிறது. கதை சொல்லி தன்னைப்பற்றிக் கதையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:
"அந்தக் கந்தோரில் நான் ஒருவனே வெள்ளையன் அல்லாதவன். தமிழன். சொந்த நாட்டின் பிரச்சினைகளை அந்நியர்களுக்குச்சொல்லி அநுதாபம் பெற வேண்டும் என்ற ஏக்கம் எனக்கு ஆரம்ப நாள்களில் இருந்தது. மற்றவர்களுக்கு என்னப்பற்றி அறிய ஆர்வம் இல்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டேன்"
போர்த்துக்கல்லைச்சேர்ந்த ரொனி, இங்கிலாந்தைச்சேர்ந்த பற்றிக், மூன்றாம் தலைமுறை ஆஸ்திரேலியப்பெற்றோருக்குப்பிறந்த றேச்சல், இவர்களினூடு கதை நகர்கின்றது.
ரொனி இனத்துவேசம் மிக்கவன். ஆணாதிக்கவாதி. ஆசியர்கள் மீது மிகுந்த துவேசம் மிக்கவன். பொதுவாகச் சீனர்கள், வியட்நாமியர்கள், தாய்லாந்து வாசிகள் போன்ற தென்கிழக்காசியர்களைத்தான் ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய மேற்கு நாடுகளில் ஆசியர்கள் என்று அழைக்கின்றனர். இந்தியா, சிறிலங்கா, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், நேபாள் போன்ற தெற்காசியர்களைப் பொதுவாக இந்தியர்கள் அல்லது 'ஈஸ்ட் இந்தியர்கள்' என்று அழைப்பார்கள். அல்லது இனவெறிச்சொல்லான 'பாக்கி' என்ற பெயரில் குறிப்பிடுவார்கள்.ஆசியர்கள் மீது இனத்துவேசம் மிக்கவனாகச்சித்திரிக்கப்படும் ரொனி இலங்கைத்தமிழனான கதை சொல்லியுடன் இயல்பாகப் பழகுவதாகச் சித்திரிக்கப்படுகின்றான்.
ரொனியின் இனத்துவேசம் மிக்கக் கூற்றுகளாக் கதையில் வெளிப்படும் சில கூற்றுகள் வருமாறு:
" ஏசியர்கள், குறிப்பாக வியட்நாமியர்கள், நாகரிக மற்றவர்கள். மற்ற இனத்தவர்களுடன் பழக மாட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்?'
கதையில் வரும் றேச்சல் மிகவும் முதிர்ச்சி மிக்க பெண்மணியாகக் குறிப்பிடப்படுகின்றாள். அதற்குச் சாட்சியாகக் கதையில் வரும் அவள் சார்ந்த கூற்றுகளே சான்றுகள்.
இந்தக்கதையில் கதை சொல்லியான இலங்கைத்தமிழன் ஒரு சந்தர்ப்பவாதியாகச்சித்திரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தன் மேல் ஏனைய வெள்ளையினத்தவர்கள் மத்தியில் அனுதாபம் பெற முனைவது, ஆசியர்கள் மீது இனவாதக்கருத்துகளை முன் வைக்கும் ரொனியுடன் ஒத்தூதுவதாகப் பாவனை செய்வது இவையெல்லாம் அவனது ஆளுமையினை வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் கதையில் ஆஸ்திரேலியர்களின் சமூக வாழ்க்கை பற்றியும் சிறிது குறிப்பிடப்படுகின்றது. திங்கள் தொடக்கம் வெள்ளி வரை தம்மை வேலையில் கரைத்து விடும் இவர்கள், வெள்ளி தொடக்கம் வார இறுதி நாள்களில் களியாட்டங்களில் கழித்து விடுவார்கள். அது பற்றிக்கதையின் ஆரம்பத்தில் வரும் கூற்று வருமாறு:
"திங்கள் காலையில் வேலையைத்துவங்கும் போதே, வெள்ளி மதியத்துக்கு அப்பாலுள்ள ஓய்வையும், களியாட்டங்களையும் நினைவுபடுத்திக்கொண்டு வேலையில் ஒன்றி விடுவார்கள்."
ஆஸ்திரேலியாவில் நிலவிய பொருளாதாரத்தேக்க நிலை காரணமாக , ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்குள்ளாகியவர்களில் ரொனி, பற்றிக் போன்றவர்களும் அடங்குகின்றார்கள். பற்றிக் வேலை இழந்தவுடன் தன் நாடு சென்று விடுகின்றான். ரொனியும் அவ்விதமே செல்கின்றான். செல்வதற்கு முன் அவன் கதை சொல்லியான இலங்கைத்தமிழனுக்கு "..என் மண் மிகவும் அழகானது. எங்களுடைய மொழியைப்போலவே" என்றும் கூறிவிட்டே செல்கின்றான்.
ரொனியின் அந்தக் கூற்றின் பாதிப்பு கதை சொல்லியான இலங்கைத்தமிழனையும் பற்றிக்கொள்கிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் கதை இவ்விதம் முடிவுறுகிறது"
"என் மண்ணான காலையடியின் நிலவளத்தையும், அதன் வளத்தை எடுத்துச் சொல்வது போன்று வான் நோக்கிய உயர்ந்த பனை மரங்களையும் - அவுஸ்திரேலியாவுக்கங்காரு போல, என் மண்ணின் உயிர்ச்சின்னமாக நிலைத்துள்ள பனைகளையும்- கொம்யூட்டரிலே தோற்றுவிக்க என் மனம் தைரியத்தைத்தேடுகிறதா? என் மண் மிகவும் அழகானது. எங்களுடைய ,மொழியைப்போலவே' என்று கொம்யூட்டர் வசனம் பேசுகிறதா? அல்லது பனைகள் பேசுவதான மனக்குறளியா? ...வேலையில் மூழ்கினேன்."
இந்தச்சிறுகதையின் கதை சொல்லி புகலிடம் நாடி ஆஸ்திரேலியா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழன் ஒருவன். அவன் விபரிக்குமிந்தக் கதையில் புகலிடக்கதைக்களம் , பாத்திரங்கள் விபரிக்கப்படுகின்றன. அத்துடன் இழந்த மண் மீதான கழிவிரக்க உணர்வும் வெளிப்படுத்தப்படுகின்றது. புகலிடத்தில் நிலவும் சமுகச் செயற்பாடுகள், நிலவும் இனத்துவேசம் மிக்க உணர்வுகள், பொருளாதாரப்பாதிப்பால் தொழிலாளர்கள் அடையும் பாதிப்புகள், புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் நிலவும் சொந்த மண் மீதான கழிவிரக்க உணர்வுகள் ஆகியன விபரிக்கப்படுகின்றன. கதை சொல்லியின் ஆரோக்கியமான மற்றும் எதிர்மறையான ஆளுமைக்கூறுகளைக் கதை வெளிப்படுத்துகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.