அழியாத கோலங்கள் 1 : யாழ் றியோவில் பார்த்த சார்ல்ஸ் புரோன்சனின் 'ரெட் சன்' (Red Sun)
என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.
கதை இதுதான்: கொள்ளையர்களான சார்ல்ஸ் புரோன்சனும், அலென் டெலோன் (Alain Delon) குழுவினரும் விரைந்து கொண்டிருக்கும் புகையிரதமொன்றைக் கொள்ளையிடுகின்றார்கள். அந்தப்புகையிரத்ததில் ஒரு பெட்டியில் யப்பானிய தூதுவர், ஜனாதிபதிக்கு அன்பளிப்பாகக்கொடுப்பதற்காக ஒரு தங்க வாளொன்றினையும் கொண்டு வருகின்றார். அவருக்குப்பாதுகாப்பாக அவருடன் கூட 'சாமுராய்' போர் வீரர்கள் சிலரும் வருகின்றார்கள். கொள்ளையடித்துச்செல்கையில் அலென் டெலொன் யப்பானியத்தூதரிடமிருந்த தங்க வாளினையும் சார்ள்ஸ் புரோன்சனுக்குத்தெரியாமல் கொள்ளையடித்துக்கொண்டு செல்கின்றார். அவரது குழுவினர் சார்ள்ஸ் புரோன்சனிருந்த புகையிரதப்பெட்டியின் மீது குண்டுகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள். சாகக்கிடந்த சார்ல்ஸ் புரோன்சனை யப்பானியத்தூதுவர் காப்பாற்றுகின்றார். அவ்விதம் காப்பாற்றிய யப்பானிய தூதுவருக்கு உதவும் பொருட்டு, ஏழு நாள்களுக்குள் அவர் இழந்த அந்த அந்தத்தங்க வாளினை மீளக்கைப்பற்றி அவரிடம் ஒப்படைப்பதற்காகச் செல்லும் சார்ல்ஸ் புரோன்சனுக்குத் துணையாக யப்பானியத்தூதுவர் தன் பாதுகாவலர்களில் ஒருவரையும் கூட அனுப்பி வைக்கின்றார். அந்தச் சாமுராயாக யப்பானிய நடிகர் Toshiro Mifune அற்புதமாக நடித்திருப்பார்.
யப்பானியர் இழந்த தங்க வாளினை மீட்பதற்காகச்செல்லும் சார்ல்ஸ் புரோன்சனும், டொசிரோ மிஃபுனும் , அவர்தம் வாழ்வில் எதிர்ப்படும் சம்பவங்களும் சுவாரசியமானவை. ரசிகர்களின் சினிமாப்பசிக்குத்தீனி போடும் தன்மை மிக்கவை. அவர்கள் இருவரும் அலென் டெலொனின் குழுவினரைத்தேடி அவர்கள் கடத்திய கொள்ளையிட்ட செல்வத்தையும், யப்பானியத்தூதர் இழந்த தங்க வாளினையும் மீட்பதற்காகச்செல்லும்போது, அலென் டெலொனின் காதலியான உருசுலா அன்ட்ரெஸைக் கடத்தி, அவள் மூலம் அலென் டெலொனின் இருப்பிடத்தை அறிகின்றனர். இவ்விதம் திரைக்கதை செல்கின்றது.
இத்திரைப்படம் மிகப்பெரு வெற்றியடைந்த வெஸ்டேர்ன் திரைப்படங்களிலொன்று. இத்திரைப்படத்தின் இன்னுமொரு சிறப்பு பல்வேறு நாடுகளைச்சேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதுதானது. இதனை இயக்கியவர் இங்கிலாந்தைச்சேர்ந்த டெரென்ஸ் யங் (Terence Youg). சார்ள்ஸ் புரோன்சன் அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கர். அலென் டெலொன் பிரெஞ்சு நடிகர். நடிகையான உருசுலா அன்ட்ரெஸ் சுவிஸ் நாட்டைச்சேர்ந்தவர். மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் விளங்கும் உர்சுலா அன்ட்ரெஸ்ஸின் திரைப்படங்கள் வெளியாகும் போது Urusula Andres in Un Dress என்று திரைப்பட விளம்பரப்பிரசுரங்களில் குறிப்பிடுவார்கள். இத்திரைப்படம் 1971 இல் ஐரோப்பாவில் திரையிடப்பட்டு அதன் பின்னர்தான் 1972இல் அமெரிக்காவில் திரையிடப்பட்டது.
அக்காலகட்டத்தில் நடிகை உருசலா அன்ட்ரெஸ் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் உட்படப்பல ஹாலிவூட் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகையர்களிலொருவர்.
சார்ல்ஸ் புரோன்சனுடன் சாமுராயாக நடித்திருக்கும் டொசிரோ மிஃபுனின் வாள் வீச்சும் இலாகவத்தில் ரசிகர்கள் மெய்ம்மறந்திருப்பார்கள். நானும் கூடத்தான். இன்னும் ஞாபகம் இருக்கிறது. யு டியூப்பில் ரெட் சன் திரைப்படத்தைப்பார்த்ததும் மனது அந்தக்காலத்துக்கே சிறகடித்துப்பற க்கத்தொடங்கி விட்டது. நீங்களும் ஒருமுறை பாருங்கள். உங்கள் சிந்தனைப்பறவைகளும் சிறகடித்துப்பறக்கத்தொடங்கிவிடும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.