'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் தலைப்பில் பூங்குழழி வீரன் என்பவரால் 'வல்லினம்.காம்' இணையச்சஞ்சிகையில் கட்டுரையொன்று எழுதப்பட்டுள்ளது.
கட்டுரையில் "1943-இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"பாவலர் துரையப்பாப் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, அழக.சுந்தரதேசிகர் போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றார்கள்." என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விதம் சுருக்கமாக, பொதுவாக இலங்கைக் கவிதைத்துறைக்கு வளம் சேர்த்த கவிஞர்களைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, கட்டுரையின் இறுதியில் 'ஈழத்துப் படைப்பாளர்கள் குறித்த சில பதிவுகள்' என்னும் பகுதியில் பிரமிள், கருணாகரன், சேரன், சோலைக்கிளி, த.அகிலன், திருமலை அஷ்ரப், தீபச்செல்வன், நபீல், லதா, வ.ஐ.ச.ஜெயபாலன், றஷ்மி, றியாஸ் குரானா, ஆழியாள், புதுவை இரத்தினதுரை ஆகியோர் பற்றி விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. .
இவ்விதமான கட்டுரையொன்றினை வாசிக்கும் ஒருவரின் மனதில் விரியும் சித்திரம் எதுவோ? ஈழத்துக்கவிதைத்துறைக்கு அதிக அளவில் வளம் சேர்த்தவர்கள் ''ஈழத்துப் படைப்பாளர்கள் குறித்த சில பதிவுகள்' என்னும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர்கள்தாமோ என்ற சித்திரமல்லவா? இவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டுரையில் பதிவு செய்திருந்தால் , மிகவும் அதிக அளவில் அளப்பரிய பங்களிப்பு செய்தவர்களைப் பற்றி விரிவான குறிப்புகளை அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும்.
கட்டுரையில் ஈழத்துக் கவிதைத்துறைக்கு வளம் சேர்த்த மேலும் சிலர் விடுபட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. அவர்களில் முக்கியமான சிலர்: வேந்தனார், அ.யேசுராசா, சு.வில்வரத்தினம், சிவரமணி, செல்வி.. ஆகியோர். இவ்விதமான போதிய ஆய்வற்று, முக்கியமானவர்களை இருட்டடிப்பு செய்து, அவர்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் சாதாரணமானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ;இலங்கையில் தமிழ்க் கவிதைகள்' என்னுமொரு பொதுவான தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளைப்போன்ற மயக்கத்தைத்தரும் வகையில் எழுதப்படும் பத்தி எழுத்துகள், வாசகர்களுக்கு, ஆய்வுகளைச்செய்ய விழையும் ஆய்வாளர்களுக்குப் பிழையான , உருச்சிதைக்கப்பட்ட தகவல்களைத்தருவதால்தான் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எழுத்தாளர்களே! ஒரு விடயம் பற்றி எழுதும்போது , போதிய ஆய்வுகளை அவ்விடயம் பற்றிச்செய்துவிட்டு, பாரபட்சமற்ற முறையில், பங்களிப்பின் முக்கியத்துவத்தின் அளவுக்கேற்ப தகவல்களைச் சேர்த்துக் கட்டுரைகளை எழுதினீர்களென்றால், அதனை வாசிக்கும் ஒருவருக்கு அவ்விடயம் பற்றிய முறையான, சரியான சித்திரம் கிடைக்குமல்லவா?
அ.யேசுராசா பற்றி விக்கிபீடியாவில் வெளியாகியுள்ள அறிமுகக் கட்டுரை கீழேயுள்ளது. இவர் ஈழத்துக்கவிதைத்துறையில் எவ்வளவு முக்கியத்துவமானவர் என்பதைப்புலப்படுத்தும் அறிமுகக் கட்டுரை இது. இவரை எவ்விதம் பூங்குழழி வீரன் தவற விட்டார்? இவரைப்போல ஏனைய முக்கியமானவர்களைப்பற்றி இணையத்தில் தேடினால் பல முக்கிய தகவல்கள், உதாரணங்களுடன் கிடைக்கும். அதனைச்செய்யாமல் எவ்விதம் பூங்குழழி வீரன் பொதுவானதொரு தலைப்பில், பூரணத்துவமற்றதொரு கட்டுரையினை எழுதினார்?
ஒரு கேள்வி: எம்.ஏ.நுஃகுமானா? எம்.ஏ.நுஃமானா?
அண்மையில் எம்.ஏ.நுஃமானின் 'அடிப்படைத்தமிழ் இலக்கணம்' வாசித்துக்கொண்டிருந்தபொழுது ஏற்பட்ட சந்தேகமொன்று. அது ஆய்தம் (ஃ) பற்றியது. ஆய்தம் பற்றிய விதி பற்றிக்கூறும் நூல் பின்வருமாறு கூறும்:
"தனிக்குற்றெழுத்துக்கும் வல்லினத்துக்கும் இடையே ஆய்தம் வருமென்று தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன. அஃது, இஃது, உஃது, எஃகு, கஃசு, மஃகான் போன்ற சொற்கள் பழந்தமிழில் வழங்கின. ... தற்காலத்தமிழில் ஆய்த எழுத்து சிறுபான்மையாக வழக்கிலுண்டு. உம்: அஃது, இஃது, எ...ஃகு, நுஃமான்"
அது சரி நுஃமான் என்பது ஆய்த எழுத்து பற்றிய தமிழ் இலக்கண நூல்களின் விதியினைப் பின்பற்றவில்லையே?
நுஃமான் என்னும் பெயரிலுள்ள நு தனிக்குற்றெழுத்து. அது சரி. அதன் பின் ஃ. அதுவும் சரி. ஆனால் அதன் பின் வருவதோ மா.. அது மெல்லினமல்லவா? வல்லினமல்லவே. இலக்கண விதிப்படி ஆய்த எழுத்துக்கு அடுத்து வல்லினமல்லவா வரவேண்டும். இதுதான் அந்தச் சந்தேகம். இலக்கணத்தை மீறிய நுஃமானின் இலக்கண நூல் எழுப்பிய சந்தேகம். நுஃகுமான் என்பதே இலக்கண விதிக்கமைய சரியானதென்பதென் கருத்து