அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளில் இதுவரையில் வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்; தமிழகத்தில் பாரி பதிப்பாக வெளிவந்தது.), மதமாற்றம் (நாடகம்) தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. ஏனைய படைப்புகள் இதுவரையில் நூலுருப்பெறவில்லை. மொழிபெயர்ப்பு நாவலான நாநா, குழந்தைகளுக்கான நாவல் 'சங்கீதப் பிசாசு', தினகரனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பினைப்பெற்ற 'மனக்கண்' நாவல், அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனக்குறிப்புகள் என அனைத்தும் நூலுருப்பெற வேண்டியது அவசியம்,
அ.ந.க.வின் படைப்புகளைப்பெறுவதற்காக இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள் பலருடன் தொடர்புகொண்டேன். உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதாகவும் குறிப்பிட்டேன். எதுவுமே சரிவரவில்லை.
பின்னர் அமரர் சில்லையூர் செல்வராஜனின் துணைவியார் திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடம் நாவலின் பிரதி இருப்பதாகவும், தொடர்புகொள்ளும்படியும் கூறியிருந்தார். அவ்விதமே தொடர்புகொண்டபோது அவர் அப்பிரதிக்கு வைத்த விலை அக்காலகட்டத்தில் என்னால் கொடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடமிருந்த பிரதியைக் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்துக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அதன் பின்னர் அப்பிரதியைப் பல வழிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் இணையத்தில் இலங்கைச்சுவடிகள் திணக்களத்தின் விபரங்களைப் பெற்று, அதன் அக்காலத்து இயக்குநர் விமலரத்தினாவுக்குக் கடிதமொன்றினைப்போட்டிருந்தேன். அக்கடிதத்தை அனுப்பியபோது (31.08.1998) எனக்குச்சிறிதும் நம்பிக்கை இருக்கவில்லை. சிங்களவரான அவர் தமிழ் எழுத்தாளரின் படைப்பினைப்பற்றி ஆர்வம் காட்டுவாரா என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவரிடமிருந்து 24.05.1999 அன்று கடிதம் வந்தபோது என்னால் சிறிதும் நம்பவே முடியாமலிருந்தது.
அந்தக் கடிதத்தில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:
Dear Sir,
Request for the 'Manakkan Novel'
With reference to your letter dated 31.08.98 we are oleased to inform you that the novel requested by you has appeared in the 'Thinakaran' newspapers from 21.10.1966 to 22.06.1967. It consists 68 pages. Please remit us Rs. 476/= as scanning copy charges to the Director, Department of National Archives, Reid Avenue, Colombo -7. In addition, please send us Rs. 120/== as the search fee and Rs. 275 / as the airmail postage along with your copying fees.
அதன் பின்னர் பணத்தை அனுப்பியதும் நாவலின் போட்டோப்பிரதிகளை இயக்குநர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆனால் நாவலின் அத்தியாயம் 30 இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திலும் கிடைக்காததால், அந்த அத்தியாயம் தவிர்ந்த பிற அத்தியாயங்களையே சுவடிகள் திணைக்களத்தினர் அனுப்பியிருந்தனர். ஆனால் அவை அளவில் சிறியதாக இருந்ததால் வாசிப்பதற்குச் சிரமமாகவிருந்தது. இருந்தாலும் அவற்றை உடனடியாகத் தமிழகத்திலுள்ள ஸ்நேகா பதிப்பகத்தைச்சேர்ந்த நண்பர் பாலாஜிக்கு அனுப்பி , தட்டச்சு செய்து மீளப்பெற்றுக்கொண்டேன். அதன் பின்னரே 'மனக்கண்' நாவல் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது.
அன்றிலிருந்து இன்று வரையில் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. அதனால நாவல் நூலாக வெளிவருவது தாமதமாகிக்கொண்டே செல்கிறது.
அதன் பின்னர் பதிவுகள் இணைய இதழில் அ.ந.க.வின் படைப்புகளைபெறுவதற்காக விளம்பரம் செய்தபொழுது கொழும்பிலிருந்து மயூரன் என்பவர் தொடர்புகொண்டார். அவர் ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து, சுவடிகள் திணைக்களத்துக்குச் சென்று அ.ந.க.வின் படைப்புகளைத்தேடி, சுதந்திரன் பத்திரிகையில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான அ.ந.க.வின் படைப்புகள் சிலவற்றை அனுப்பியிருந்தார் (நாநா மொழிபெயர்ப்பு நாவல், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் சில).
அதன் பின்னர் இதுவரையில் அ.ந.க.வின் படைப்புகளைத்தேடிக்கொண்டுதானிருக்கின்றோம். அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்பவர்கள், மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதினை வைத்திருப்பவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அ.ந.க.வின் படைப்புகள் சிலவற்றையும், மனக்கண் நாவலையும் வாசிக்க விரும்புவர்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்க முடியும். இணையத்தள முகவரி: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=25&Itemid=47