கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'தாயகம்' சஞ்சிகையின் பங்களிப்பு.
கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் 'தாயகம்' சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. ஐந்து வருடங்கள் வரையில் 200ற்கும் அதிகமான இதழ்கள் வெளியாகியது மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரின் படைப்புகளையும் தாங்கி வெளியான சஞ்சிகை / பத்திரிகை அது. மாத்தளை சோமு , பேராசிரியர் சிவசேகரம், கலா மோகன் (பல படைப்புகள்: ஜெயந்தீசன் என்னும் பெயரில் எழுதிய குட்டிக்கதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்ற), தி. உமாகாந்தன், செல்வம் (இவரது 'கிழுவை மரச் சிலுவை' என்னும் நாடகம் தாயகத்தில் தொடராக வெளிவந்தது), ரதன், ஆனந்தபிரசாத் ('ஆடலுடன், பாடலைக்கேட்டு' தொடர்), வ.ந.கிரிதரன் (பல படைப்புகள்: சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் ஆகியன), கவிஞர் கந்தவனம் (இவரது 'மணிக்கவிகள்' தாயகம் சஞ்சிகையில்தான் முதலில் வெளியாகின), ஜி.மொனிக்கா (இவரது பல சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன), நேசமித்திரனின் பல படைப்புகள், சின்னத்தம்பி வேலாயுதத்தின் 'ஈழம் ஒரு தொடர்கதை'த் தொடர்) கனடா மூர்த்தி 'முனி' என்னும் பெயரில் அளித்த சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதில்கள் , ஜோர்ஜ் குருஷேவ்வின் 'சிறுகதைகள்' .. என பலரின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை / சஞ்சிகை 'தாயகம்'. 'தாயகம்' பத்திரிகை. சஞ்சிகையினைத் தவிர்த்துக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிக் கதைக்க முடியாது. இங்கு குறிப்பிட்டவர்களைப் போல் இன்னும் பலர் 'தாயக'த்துக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். 'தாயகம்' சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வொன்றின் அவசியம் (கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு அது ஆற்றிய பங்களிப்பு பற்றி) தவிர்க்க முடியாது. 'படிப்பகம்' இணையத்தளத்தில் 'தாயகம்' சஞ்சிகையில் சுமார் 50 வரையிலான இதழ்களுள்ளன. 'தாயகம்' சஞ்சிகை தனது அரசியல் கருத்துகளைப் படைப்பாளிகளின் மேல் ஒருபோதுமே திணித்ததில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களின் படைப்புகளை பலவற்றைத் தாங்கி அதனால் வெளிவர முடிந்திருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து , மிக அதிகமான இதழ்களை வெளியிட்ட இலக்கியச் சஞ்சிகை / பத்திரிகை அது.
எழுத்தாளர் ஜெயமோகனும், முகநூலும்!
எழுத்தாளர் ஜெயமோகன் இணையம், இணைய இதழ்கள் மற்றும் முகநூல் பற்றி அருண்மொழிவர்மன் என்னும் வாசகரின் கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் கீழ்க் குறிப்பிட்ட விடயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.
'இணையம் வந்ததுமே செலவில்லாத சிற்றிதழ்களாக இணைய இதழ்கள் வந்தன. ஆனால் வலைப்பூக்களின் வரவுடன் இணைய இதழ்கள் அழிந்தன. அது ஒரு பெரிய இழப்பு. வலைப்பூக்களுக்கு வாசகர்கள் தொடர்ந்து வருவதில்லை. ஆ...கவே ஃபேஸ்புக் வந்ததும் வலைப்பூக்கள் அழிந்தன. இன்றிருப்பது ஃபேஸ்புக் மட்டுமே.' என்று கூறியிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இணைய இதழ்கள் வலைப்பூக்கள் வந்ததும் காணாமல் போய்விடவில்லை. அதுபோல் வலைப்பூக்களும் முகநூல் வந்ததும் காணாமல் போய் விடவில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் இணைய இதழ்கள், வலைப்பூக்கள் போன்ற தளங்களுக்குச் செல்லாமலிருப்பதால் (முன்புபோல்) அவ்விதம் அவருக்குத் தென்படலாமென்று நினைக்கின்றேன்.
எழுத்தாளர் ஜெயமோகன்: 'நான் ஃபேஸ்புக் என்றால் என்ன என்ற அளவுக்கு மட்டும் அதைக் கவனித்துவிட்டு விட்டுவிட்டேன். அடிப்படையில் ஃபேஸ்புக்கின் அமைப்பே வேறு. அது எழுத்து வாசிப்புக்கான தளம் அல்ல. அது நட்புக்கான தளம். உங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என அது வலையை விரித்துச்செல்கிறது' என்று கூறியிருக்கிறார். அது நட்புக்கான தளம் மட்டுமல்ல. உண்மையில் முகநூல் நிறுவனத்தார் அவ்விதமானதொரு எண்ணத்துடன் ஆரம்பித்திருந்தாலும் , இன்று முகநூலின் பாவனை முகநூல் நிறுவனத்தின் நோக்கத்தினையும் மீறிச் சென்றுவிட்டது.
முகநூலைப் பாவிக்கும் அனைவரும் தத்தமது தேவைகளுக்கேற்ப பாவித்துக்கொள்ளலாம். எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் தமக்கேற்ற வகையில் பாவித்துக்கொள்ளலாம். உதாரணமாக என் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், நண்பர்கள், கலையுலகப் பிரமுகர்கள், ஓவியர்கள், பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், இவ்விதம் பலர். அவர்களின் கருத்துகளைப் பற்றி, படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் மிகவும் ஆக்கபூர்வமான 'டிஜிட்டல்' ஊடகம் முகநூல் என்பேன். அதனைப் பாவிப்பவர்கள் தத்தமது தேவைகளுக்கேற்ப பாவித்துக்கொண்டால் மட்டுமே உரிய பயனை அடைய முடியும்.
எழுத்தாளர் ஜெயமோகன்: "ஆகவே வந்து இணைபவர்களில் வெறும் நண்பர்கள், தெரிந்தவர்கள்தான் அதிகம். உங்களைப்போல சிந்திப்பவர்கள், வாசிப்பவர்கள் சிலரே இருப்பார்கள். கல்யாணவீட்டில் நம்மைச்சுற்றி கூடும் பலதரப்பட்டவர்களின் கூட்டம் போன்றது அங்கு வரும் தொடர்புவலை"
இதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என் முகநூல் நண்பர்களில் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் வெகு சிலரே. 80% ற்கும் அதிகமானவர்கள் நேரடித் தொடர்பற்ற ஆனால் கலை, இலக்கியத்துறையில் அறியப்பட்டவர்கள். இவ்விதமானதொரு தொடர்பினை முகநூல் இல்லாவிட்டால் என்னால் அடைந்திருக்க முடியாது. அடுத்தது இவர்களுடன் உடனுக்குடன் தொடர்புகொள்ள முடியும் வசதியும் முகநூலில் உள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான முகநூல் நன்மை.
என்னைப்பொறுத்தவரையில் முகநூலின் மூலம் பெறப்படக்கூடிய நன்மைகளே மிக அதிகமென்பதால், கலை, இலக்கிய உலகின் ஆர்வலர்கள் மற்றும் அனைவரும் முகநூலினை ஆரோக்கியமான முறையில் பாவித்துப் பயனை அடைவதே நல்லதென்பேன்.