தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய 'ஏழாவது ஊழி' நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
சூழலியலை வெறும் அறிவியற் துறையாக மட்டும் ஐங்கரநேசன் கருதவில்லை. அதனை 'இயற்கையில் தோய்ந்து அதனொரு அங்கமாக, அனுபவித்து வாழுமொரு வாழ்க்கையாகவே' கருதுகின்றாரென்பதை நூலின் முன்னுரையிலுள்ள அவரது பின்வரும் கூற்று புலப்படுத்துகின்றது:
" சூழலியல் வெறுமனே கல்வி அல்ல. அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல். சூழலியல் குறித்து இவ்வாறுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் அபிவிருத்தியின் பெயரால் காடுகள் அழிக்கப்படும்போது, எனக்கு வலிக்கிறது. காற்றில் குவியும் கரிப்புகை எனக்குச் சுடுகிறது. உயிர்ப்பல் வகைமையில் அழியும் ஒவ்வொரு உயிரினமும் என்னை அழ வைக்கிறது. உடையில் , உணவில், அருந்தும் பானத்தில், மொழியில் பல்லினத்துவத்தை நிராகரிக்கும் உலகமயமாக்கலின் போக்கு என்னைக் கோபப்படுத்துகிறது. பெரும்பான்மையின் பெயரால் எனது நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை." [ பக்கம் 11]
நவகால மனிதரின் தொழிற் புரட்சி காரணமாகக் காபனீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு, மெதேன், கந்தக ஈரொக்சைட்டு, நைட்ரஸ் ஒக்சைட்டு போன்ற 'பச்சை வீட்டு வாயுக்கள்; எனப்படும் வாயுக்கள் மிக அதிக அளவில் இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தினுள் செலுத்தப்படுகின்றன. இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் வாழுவதற்குரிய வெதுவெதுப்பான சூழலுக்கு வளி மண்டலத்திலுள்ள மேற்படி வாயுக்களின் விளைவாக உருவாகும் வெப்பம் முக்கிய காரணம். ஆனால் மேற்படி வாயுக்கள் அளவுக்கு மீறி அதிகரிக்கும்போது மேற்படி 'பச்சை வீட்டு வாயுக்க'ளின் அளவு பல மடங்குகள் அதிகரிக்கின்றன. அதுவே பூமியின் வெப்பம் விரைவாக அதிகரிப்பதற்குக் காரணமாகின்றது. இதன் காரணமாகத் துருவங்கள் உருகுவதும், பல்வேறு காலநிலை மாற்றங்கள் உருவாவதும் அதிகரிக்கின்றன. இவற்றின் விளைவாக இந்தக் கிரகமானது உயிரினங்கள் வாழுவதற்குரிய கிரகமென்ற அந்தஸ்தினை விரைவாகவே இழந்து வருகின்றது. பல உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகவும் இந்த அதிகரிக்கும் வெப்பம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஒரு புறம் துருவங்கள் உருகிக் கடல்களின் நீர் மட்டங்கள் உயர்ந்து நாடுகளை இழக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. இன்னொருபுறமோ பசுந்சோலைகள் பாலைகளாகி, வளம் நிறைந்த வறண்டு போகின்றன. பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. போதிய உணவின்றி வறிய நாடுகளில் வறுமை, பட்டினியால் மக்கள் துன்புறுகின்றார்கள்; மடிகின்றார்கள்.
இதே சமயம் இக்கிரகத்தின் சீரழிவுக்கு அபிவிருத்தி அடைந்த, செல்வந்த நாடுகளான மேற்கு நாடுகளே (குறிப்பாக அமெரிக்கா) முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சூழற் பாதுகாப்பு சம்பந்தமாக, 'பச்சை இல்ல வாயுக்களை'க் குறைப்பதற்காக உருவான சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதும், மறுப்பதுமாக அமெரிக்கா இருந்துவருகின்றது. 1992ம் ஆண்டில் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையினால் கூட்டப்பட்ட 'புவி உச்சி மாநாட்டில்' 'பச்சை இல்ல வாயுக்களை' மிக அதிக அளவில் வெளியேற்றும் செல்வந்த நாடுகள் இவ்விதமான வாயுக்களைக் கட்டுப்படுத்தும்படி கொண்டுவரப்பட்ட ஒப்பந்ததினை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்படி ஒப்பந்தமானது மேற்படி 'பச்சை இல்ல வாயுக்க'ளின் அதிகரிப்புக்குக் காரணமான செல்வந்த நாடுகளை வற்புறுத்தியதைப்போல், ஏனைய வறிய, அபிவிருத்தி அடையாத, நாடுகளையும் வற்புறுத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் கருத்தாக இருந்துவருகின்றது. இது சம்பந்தமாக ஜப்பானில், கியோட்டோவிலும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் ' பச்சை இல்ல வாயுக்களை'க் குறைத்து, புவி வெப்பமுறுவதைத் தடுக்கும் வகையில் 1997இல் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்டது. இதன் பிரகாரம் 2012ற்குள் பச்சை இல்ல வாயுக்களை 1990இல் இருந்த அளவிலும் பார்க்க 5.2 விழுக்காடு குறைவாகக் கொண்டுவரவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. 300 மில்லியன் தொன்கள் காபனை உறுஞ்சக் கூடிய அளவுக்குக் காடுகளை வளர்த்துள்ளதால் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படவேண்டிய தேவையில்லையென்று அமெரிக்கா வாதிட்டது. 'மேலும் வளர்முக நாடுகளைக் கட்டுப்படுத்தாத இந்த ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமானது' என எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் அன்று ஜனாதிபதியாகவிருந்த அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள்.
இவ்விதமாகச் சூழற் பாதுகாப்பானது எவ்விதம் அஸ்பெஸ்டாஸ் என்னும் கட்டடப் பொருள், பிளாஸ்ரிக் என்னும் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்காகப் பாவிக்கப்படும் மூலப்பொருள் போன்றவற்றால் சீரழிக்கப்படுகின்றதென்பதை 'ஏழாவது ஊழி' என்னும் இந்நூல் மிகவும் விரிவாகவே விளக்குகின்றது. உதாரணமாக பிளாஸ்ரிக் ஆயிரக்கணக்கான வருடங்களாக உக்கிச் சிதையாமலிருக்கும் தன்மை மிக்கது. இதன் காரணமாக பிளாஸ்ரிக் கழிவுகள் மழை நீரை நிலத்தினுள் நுழைய விடாமல் தடுத்து, நிலத்தடி நீரின் பற்றாக்குறையினை அதிகரிக்கின்றது. கழிவுகள் இயற்கையாகச் சிதைந்து அழிவதை 'உயிர்மச் சிதைவு' (Bio - Degradation) என்பார்கள். இதனைப் பிளாஸ்ரிக் தடுத்து நடைபெறவேண்டிய இயற்கைச் சுழற்சியினைத் தடுத்து விடுகின்றது. நிலத்தினுள் செல்லும் காற்றினை அளவினையும் அழியாத பிளாஸ்ரிக் தடுத்து, மண்ணினுள் வாழும் நுண்ணுயிர்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கின்றது. பிளாஸ்ரிக் உறையினுள் கிடக்கும் உணவுகளை உண்டு பறவைகள், மிருகங்கள் எனப் பல உயிர்கள் உயிரிழக்கின்றன.
இது போல் மரங்களை வெட்டுவதன் மூலம் அழிந்துவரும் மழைக்காடுகள் , மென்சதுப்பு நிலக் காடுகள், இவற்றால் அழிந்து வரும் உயிரினங்கள், காலநிலை மாற்றங்கள், பாதிப்புகள் எனச் சூழற்சீரழிவினை விரிவாக விளக்கி வைக்கும் இந்நூல் உலகமயமாதல் எவ்விதம் சூழற் சீரழிவுக்குக் காரணமாக விளங்குகின்றதென்பதை,. பன்னாட்டு நிறுவனங்கள் எவ்விதம் வறிய நாடுகளின் நிலங்களைச் சுரண்டி, சூழற் சீரழிவுக்கு வழி வகுக்கின்றனவென்பதைக் கடுமையாக விமர்சிக்கின்றது. உதாரணமாக இன்று உலகமெங்கும் அனைவராலும் அணியப்படும் ஜீன்ஸ் உடைகளுக்குத் தேவையான பருத்தி நூலின் உற்பத்திக்காக எவ்விதம் வறிய, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வளமான நிலங்கள் (அதுவரையில் உணவுக்காகப் பாவிக்கப்பட்டுக்கொண்டிருந்த) பாவிக்கப்படுகின்றன. இதனால் எவ்விதம் அந்நாடுகளின் நிலங்கள், அவற்றில் வாழும் உயிரினங்கள் பாதிப்புறுகின்றன, அந்நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்த பூர்விக குடிகள் இடம் பெயர்க்கப்பட்டு பாதிப்புறுகின்றார்கள், எவ்விதம் பருத்திச் செய்கைக்காக நதிகள் திருப்பி விடப்பட்டுக் காலப்போக்கில் வறண்டு போகின்றன, எவ்விதம் பருத்திப் பயிர்ச்செய்கைக்காகப் பாவிக்கப்படும் கிருமி நாசினிகள், பருத்திப் பஞ்சினை நீல நிறமாககப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் ஆகியன சூழலினை (நிலத்தினை, நீரினை) நஞ்சாக்குகின்றன என்பவற்றையெல்லாம் நூலில் ஆசிரியர் ஐங்கரநேசன் மிகவும் விரிவாக, மனது உறைக்கும்படியாக விளக்கியுள்ளார். இதற்குதாரணமாக எதியோப்பியாவைக் குறிப்பிடும் ஆசிரியர் அதற்காகப் பன்னாட்டு நிறுவனங்களின் மீதான தனது கடுமையான விமர்சனத்தையும் முன் வைக்கின்றார்:
"மேற்கு நாடுகள் தங்களது ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை மூன்றால் உலக நாடுகளில் இயக்க ஆரம்பித்திருப்பதற்குத் தமது சுற்றுச் சூழலைத் தற்காத்துக் கொள்வது மாத்திரம் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் சம்பாதிக்கக் கூடிய கொள்ளை இலாபமும் இதன் பின்னணியில் உள்ளது. மூன்றாம் உலகத்தில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக் கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. இந்தியா, வங்காளதேசம், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் தொடுப்பில் உள்ள கலப்பினப் பருத்திவிதை உற்பத்திப் பண்ணைகள் பெண் குழந்தைகளைக் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தியுள்ளன. ...கண்ணீரும் கம்பலையுமாக வாடி நிற்கும் இந்தக் குழந்தைகளில் ஒன்றின் பிஞ்சு விரல்கள் தடவி உருவாக்கிய பருத்திப் பஞ்சிலிருந்து கூட நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் ஜீன்ஸ் நெய்யப்பட்டிருக்கலாம்." [பக்கங்கள் 89- 90]
இவ்விதமாக இப்புவியில் வாழும் மானுடர்கள் தமது நெறியற்ற செயலால், பேராசையால், இந்த அழகான கோளினைச் சீரழித்து வருகின்றார்கள். ஒரு காலத்தில் இக்கோளின் மீது மோதுண்ட எரிகல்லினால் அச்சமயம் வாழ்ந்த டைனசோர்கள் போன்ற உயிரினங்களெல்லாம் அழிந்தன. அது போல் இன்றைய மனிதரின் சூழற் சீரழிவின் விளைவுகளால் இந்தக் கோளில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே அழியும் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றதென்பதை எச்சரிக்கும் நூலாசிரியர் அதனையே ஏழாவது ஊழியாகவும் கருதுகின்றார். இந்த நிலையிலும் ஆசிரியர் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையினை இழந்து விடவில்லை என்பதை நூலின் இறுதி அத்தியாயமான 'விடுதலைச் சூழலிய'லும், நூலின் முன்னுரையில் அவர் கூறியுள்ள சில வார்த்தைகளும் புலப்படுத்துகின்றன.
"பூமி அனுபவித்துவரும் இன்னோரன்ன சீரழிவுகளுக்கு மத்தியிலும் , மனிதன் பூமியின்மீது மேலாண்மை செய்வதை விடுத்துக் கூட்டாண்மை உறவுக்குத் திரும்புவான் என்ற நம்பிக்கை எனக்குள் இன்னமும் மீதமிருக்கிறது." [பக்கம் 13]
பீட்டர் மார்ஷல் என்னும் தத்துவஞானியால் முன்மொழியப்பட்ட 'விடுதலைச் சூழலியல்' என்னும் கொள்கையினை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்படுவதன் மூலமே தற்போது மானிடர் சூழற் சீரழிவின் விளைவாக உருவாகும், உருவாகவிருக்கும் அபாயங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்பது ' நூலாசிரியரின் கருத்தாகவிருக்கிறது. விடுதலைச் சூழலியல் என்னும் கோட்பாடானது 'ஒன்றுடன் ஒன்று உறவுகொண்ட இயற்கையை அங்கீகரிக்கின்றது; மனிதரே மையம் என்பதை நிராகரிக்கிறது; இங்கு வாழும் உயிர்களின் வலைப்பின்னலில் மனிதரும் ஓர் இழை, சக உயிரினங்களில் ஓரினமாக மனிதர் இருக்கின்றார் என்பதையும், மனிதரைப் போலவே தாவரங்களும், விலங்குகளும் இப்பூவுலகில் வாழ உரிமை உடையவை என்பதையும், மனித வாழ்க்கையைப் போலவே அவற்றின் வாழ்க்கையும் பெறுமதி மற்றும் பரஸ்பர பெறுமதி மிக்கவை (அத்துடன் பயனுள்ளவை) என்பதையும்' நூலாசிரியர் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றார்.
சூழற் சீரழிவென்னும் 'ஏழாவது ஊழி'யின் விளைவாக அழிவினை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய மானுடரின் நிலைக்குக் காரணமான காரணிகளையும், காரணமானவர்களையும் தெளிந்த பார்வையுடன் விளக்கும் இந்நூலானது இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் மானுட சமுதாயத்தில் நம்பிக்கை இழக்காத ஆசிரியர் பொ. ஐங்கரநேசனின் 'விடுதலைச் சூழலியல்' கோட்பாடு மீதான நம்பிக்கையினை வெளிப்படுத்தி நிற்பதுடன், வாசகர்களுக்கும் நம்பிக்கையினைத் தருவதுடன் அதற்காக அவர்களின் பங்களிப்பினையும் கோரி நிற்கிறது. அதில் நூலாசிரியர் வெற்றியே அடைந்துள்ளார். ஏனெனில் சூழல் சீரழிவு பற்றிய விரிவான, தெளிவான பார்வையினை வாசிக்குமொருவருக்குத் தரும் வகையில் எழுதுவதில் ஆசிரியர் வெற்றியடைந்துள்ளார். அதன் காரணமாக இதனை வாசிக்குமொருவர் சூழல் பாதுகாப்புக்கான தனது பங்களிப்பினை முடிந்த வகையில் செய்யவே முற்படுவாரென்பது திண்ணம். நூலின் வெற்றியே அதுதானே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.