என்னைப் பொறுத்தவரையில் கவிதையென்பது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிவருவது. அவ்விதம் வெளிவரும் கவிதையினைப் படைக்கும் கவிஞரின் மொழி ஆற்றல், படைப்புத் திறன், வாசிப்பறிவு, வாழ்வனுபவம், அவற்றால் அவரடையும் பாதிப்பு , இவ்விதம் பல விடயங்களுக்கேற்ப அக்கவிதை சிறக்கிறது அல்லது சிறுக்கிறது. பெரும்பாலான இன்றைய கவிஞர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் தங்களது கவிதை பிறரால் பாராட்டப்பட வேண்டும், விமர்சகர்களால் விதந்துரைக்கப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு சொற்களைத் தேடித்தேடி எடுத்துக் கவிதைகளைக் கோர்க்கின்றார்கள். இவ்விதம் கோர்க்கப்படும் கவிதைகளில் மொழி அழகாக இருக்கும். ஆனால் அவ்விதமான கவிதைகள் அவற்றை ஆக்கும் கவிஞர்களின் உள்ளத்தின் உண்மையான உணர்வுகளிலிருந்து வெளிவராததால் வாசிப்பவரின் உள்ளத்தை அசைப்பதில்லை; தொடுவதில்லை. இவ்விதமான கவிஞர்களுக்கும் அன்றைய பண்டிதக் கவிஞர்களுக்கும் வித்தியாசமில்லை. இரு சாராரும் தமது வித்துவச் செருக்கைக் காட்டுவதற்காகவே கவிதைகளை உற்பத்தி செய்கின்றார்கள்; கவிதைகளைப் படைப்பதில்லை.
எனவே கவிதையினைப் படைப்பவர்கள் தங்களது பாதிப்பினை, உண்மையான எண்ணங்களைக் கவிதைகளாக வடிக்க வேண்டும். அவ்விதம் வெளிப்படும் கவிதைகளை வாசகர்கள் தாமாகவே நல்ல கவிதைகளாக இனங்கண்டுகொள்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளாக அ.ந.கந்தசாமியின் 'சிந்தனையும், மின்னொளியும்' மற்றும் அவரது 'எதிர்காலச் சித்தன் பாடல்', மஹாகவியின் 'புள்ளி அளவுக் ஒரு பூச்சி', வ.ஐ.ச.ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த் துளிகளும்' மற்றும் பாரதியாரின் பல கவிதைகள் குறிப்பாக 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' மற்றும் 'எனது சுயசரிதை' போன்றவற்றைக் குறிப்பிடலாம். பாரதியாரின், கவீந்திரனின் (அ.ந.க), மஹாகவியின், நிலாவணனின் கவிதைகளை இன்றும் நினைத்ததும் அவை எமது உள்ளங்களை அசைத்துவிடுகின்றன. இன்றைய கவிஞர்களில் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். அவரது கவிதைகளில் மிகவும் பிடித்த கவிதை: 'கள்ளிப் பலகையும், கண்ணீர்த் துளிகளும்' எந்தச் சமயத்தில் வாசித்தாலும் நெஞ்சில் புத்துணர்ச்சி பொங்கிப் பாயும். வாழ்வின் சவால்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்த்து வாழுமோர் உணர்வினைப் பொங்க வைக்கும் கவிதை. சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை வாசிக்கும்போது அவர்கள் கையாண்டிருக்கும் மொழி வளம் பிரமிக்க வைப்பதாகவிருந்தாலும், அவை மேலுள்ள கவிஞர்களின் கவிதைகளைப்போல் உள்ளத்தைச் சென்று தீண்டுவதில்லை. இக்கூற்று என் அனுபவத்தின் விளைவான என் தனிப்பட்ட கூற்று. எனக்கு இவ்விதம் உணர்வினைத் தருமொரு கவிதை இன்னுமொருவருக்கு வேறு வகையான தாக்கத்தினை, அனுபவத்தினைத் தரலாம்.
வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்' கவிதைதான் அவரை எனக்கு முதலில் நேரடி அறிமுகம் செய்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' மலருக்காகப் படைப்புகளுக்காக அவரை அணுகியபோது அவர் எனக்கு மேற்படி கவிதையினைத் தந்திருந்தார். அக்கவிதை ஒரு பதிவுக்காக இதோ:
கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரே ஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையாகாலாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவறுத்தெறிவோம்.
வெடிமருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியியை பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலகியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
வெழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி உனக்கு
விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவும் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலாமிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.
- நுட்பம் 1980, மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு.