அத்தியாயம் பதினாறு: 'ஹரிபாபுவின் விளம்பரம்!'
காலை மணி பத்திருக்கும். இளங்கோ படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அறை நண்பர்களனைவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். அருள்ராசாவும் ஏதோ அலுவலாக வெளியில் சென்று விட்டிருந்தான். அன்று இளங்கோவின் மனநிலை எங்கும் செல்வதற்கு இடம் கொடுக்கவில்லை. அன்றையைப் பொழுதினைத் தன்னிருப்பிடத்திலேயே ஓய்வெடுத்துக் கழிப்பதற்கு அவன் மனம் விரும்பியது. கடந்த சில வாரங்களாக அலைந்த அலைச்சலில் உடம்பு முறிந்து போய் விட்டிருந்தது. ஓய்வை உடலும் உள்ளமும் நாடின. படுத்திருந்தபடியே சிந்திப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்தது. அவனது சிந்தனை ஒரு கணம் குடை வியாபாரத்தில் பதிந்து மீண்டது. இலேசாக இளநகையொன்று கோடிழுத்தது. நியூயார்க்கில் குடை வியாபாரம்... . நல்லதொரு அனுபவம். முதலுக்கு நிச்சயம் நட்டமில்லாமல் அவர்களது குடை வியாபாரம் அமைந்திருந்தது நல்லதொரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்திருந்தது. அவன் அன்று எட்டுக் குடைகளை நாற்பது டாலர்களுக்கு விற்றிருந்தான். அருள்ராசா ஏழு குடைகளை முப்பத்தைந்து டாலர்களுக்கு விற்றிருந்தான். அவனுக்கு இருபது டாலர்கள் இலாபமும், நான்கு குடைகள் மீதியுமாகக் கிடைத்திருந்தன. சொந்தத் தொழில் செய்வதில் உண்மையில் இன்பமிருக்கத்தான் செய்கிறது. யாரிடமும் கையேந்தாமல், தன் தலைவிதியினைத் தானே நிர்ணயிப்பதிலுள்ள சுகமே தனிதானென்று பட்டது.
யாரோ நடந்து வருமோசை கேட்டது. வந்தது திருமதி பத்மா அஜித். அவளது கைகளிலொரு வான் கடிதம் கிடைத்தது. இளங்கோ படுக்கையிலிருந்து எழுந்தமர்த்தான். பத்மா அஜித் அவனிடம் கடிதத்தைத் தந்தவாறு கூறினாள்: "இக்கடிதம் உனக்குத்தான் இளங்கோ?"
"நன்றி" என்றவாறு கடித்ததை வாங்கிக் கொண்டான். ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தாள்.
அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாகத் திருமதி பத்மா அஜித் கேட்டாள்: "இளங்கோ எவ்விதம் உனது வேலை தேடும் படலம் போகிறது?:
"எல்லா வழிகளிலும் நானும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன். இதுவரையில் ஒன்றும் பெரிதாக வந்தமையவில்லை."
"இந்தியா எப்ரோட் பத்திரிகையில் விற்பனை முகவனுக்குரிய விளம்பரமொன்று வந்திருந்தது. உடனடியாகத் தேவையாம். அன்றாடம் கைகளில் ஊதியம் வழங்கப்படுமாம். அதைப் பார்த்ததும் உன் ஞாபகம்தான் வந்தது. அந்த விளம்பரத்தை மட்டும் கத்தரித்து வைத்துள்ளேன் உனக்குத் தேவைப்பட்டாலுமென்று... விருப்பமென்றால் சொல்லு. எடுத்துத் தருகிறேன்"
இளங்கோவுக்கு மீண்டும் குடை வியாபார நினைப்பு வந்தது. சிரித்துக் கொண்டான்.
"என்ன சிரிக்கிறாய் உனக்குள்ளேயே இளங்கோ" என்றாள் திருமதி பத்மா அஜித்.
"ஒன்றுமில்லை. குடை விற்ற கதை ஞாபகத்திற்கு வந்தது?
"அதென்ன புதுக்கதை. குடை வியாபாரம் செய்தாயா? எங்கே?"
இவ்விதம் திருமதி பத்மா அஜித் கேட்கவும் இளங்கோ அவளுக்குத் தாங்கள் செய்த குடை வியாபாரம் பற்றி விரிவாக எடுத்துரைத்தான். அதனைக் கேட்டதும் திருமதி பத்மா அஜித் விழுந்து விழுந்து சிரித்தாள். அத்துடன் கூறினாள்: " நீ பிழைத்துக் கொள்வாய். உனக்கு எந்தச் சூழலையும் எதிர்த்து நின்று போராடும் ஆற்றல் நிறையவே உள்ளது. உன்னை மாதிரியெல்லாம் என்னால் செய்து பார்க்கவே முடியாது."
"பார்த்தீர்களா குடை வியாபாரம் கூட இப்பொழுது ஒருவகையில் எனக்கு உதவப் போகிறதை.."
"குடை வியாபாரம் உதவப் போகிறதா?"
"நீங்கள் கூறிய விற்பனை முகவன் வேலைக்கு இப்பொழுதே எனக்கு அமெரிக்க விற்பனை முகவன் அனுபவம் குடை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்து விட்டதல்லவா? இந்த அமெரிக்க அனுபவத்தை மூலதனமாக வைத்து அடுத்த வேலை எடுக்க முடிகிறதல்லவா."
"பார்த்தாயா இளங்கோ. எந்தச் செயலுமே வீணாகப் போவதில்லை. ஏதோ ஒருவகையில் உதவத்தான் செய்கிறது இல்லையா? குடை வியாபாரம் உனக்கு நட்டத்தைத் தரவில்லை. அதே சமயம் அமெரிக்க அனுபவத்தையுமல்லவா தந்துள்ளது. எதற்கும் அந்த விளம்பரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன். வாசித்துப் பார். பிடித்திருந்தால் சென்று முயன்று பார். சில் நேரம் அதிருஷ்ட்டம்கூட அடிக்கலாம் யார் கண்டது?"
இவ்விதம் கூறிய திருமதி பத்மா அஜித் கீழே சென்று சில நிமிடங்களிலேயே அந்த விளம்பரத்துடன் திரும்பி வந்தாள். அந்த விளம்பரத்தை வாங்கி வாசித்தான் இளங்கோ. அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:
'உடனடியாக இரு விற்பனை முகவர்கள் தேவை. மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஹரிபாபுவை 'மேற்கு நான்காம் தெருவும், அமெரிக்கா அவென்யுவும் சந்திக்குமிடத்தில் (வடமேற்கில்) வந்து சந்திக்கவும்'
அந்த விளம்பரம் அவனுக்குச் சிறிது விசித்திரமாகப் பட்டது.
"இந்த விளம்பரம் எனக்கு நூதனமாகப் படுகிறது. வித்தியாசமான விளமபரம்!"
"ஏன் அப்படிச் சொல்கிறாய் இளங்கோ?"
"விற்பனை முகவர்களுக்கான விளம்பரம். ஆனால் வீதியின் மூலையொன்றில் சந்திக்கும்படி கூறப்பட்டுள்ளதே. விநோதமாக உங்களுக்குப் படவில்லையா?"
அப்பொழுதுதான் அந்த விடயமே திருமதி பத்மா அஜித்துக்கும் உறைத்தது.
"நீ சொல்லுவதும் சரிதான் இளங்கோ. நான் அந்த விடயத்தைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. நீ சொல்லிய பின்புதான் கவனித்துப் பார்க்கின்றேன். உண்மைதான். விநோதமான விளம்பரம்தான். ஒருவேளை..."
"ஒருவேளை.. என்ன திருமதி பத்மா அஜித் அவர்களே!"
"ஒருவேளை ஹரிபாபு நடைபாதை வியாபாரியோ. எதற்கும் ஒருமுறை அவனைப் போய்ப் பார்ப்பதுதான் சரியாகப் படுகிறது. சிலவேளை.."
"என்ன சிலவேளை... பத்மா அஜித் அவர்களே!"
"சிலவேளை அந்நியர்களுக்குத் தன்னிருப்பிடத்தைக் காட்ட அவன் விரும்பவில்லையோ என்னவோ"
"நீங்கள் கூறுவதும் சரிதான். முதல்வேளையாக ஹரிபாபுவைச் சென்று சந்திக்க வேண்டியதுதான். அவனிடமே வேலை என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சரியான நடைமுறை. அதற்குமுதல் வீணாக ஏனிந்தக் கற்பனை. தேவையற்ற மன உளைச்சல்."
இதற்குள் திருமதி பத்மா அஜித் எழுந்து கொண்டாள்: " இளங்கோ. மீண்டும் கூறுகிறேன். என்னுடைய ஆலோசனையென்னவென்றால்... நீங்கள் கூறியபடியே அவனை, ஹரிபாபுவை, சந்திக்க வேண்டியதுதான்"
இளங்கோவுக்கும் அவள், திருமதி பத்மா அஜித், கூறுவதே சரியாகப் பட்டது.
அந்திச் சூரியனின் தண்ணொளியில் பூமிப்பெண் குளித்துக் கொண்டிருந்தாள். பகல் முழுவதும் நகரில் அலைந்து திரிந்துவிட்டு அருளராசா மெதுவாக வந்து சேர்ந்தான்.
"அருள். உனக்கொரு விசயம் தெரியுமே?"
"என்ன... "
"திருமதி பத்மா அஜித் ஒரு விளம்பரப் பிரதியினைத் தந்தவர். அதில் விற்பனை முகவர்கள் தேவையெனப் போட்டுள்ளதாம். ஆனால்..."
"ஆனால்... என்ன இளங்கோ?"
"எனக்கென்றால் அந்த விளம்பரத்திலெங்கோவொரு குறை இருப்பதுபோல் படுகிறது"
"உனக்கெப்பவுமே இப்படித்தான். ஏதாவதொன்றிலை குறை கண்டுபிடிக்காவிட்டால் உனக்குப் பொழுதே விடியாதே!"
"பின்னே... விற்பனை முகவர்கள் தேவையென்று விளம்பரம். ஆனால் நடைபாதையில் சந்திப்பும் , நேர்முக வர்ணனையுமாம். இது எப்படியிருக்கு?"
"இளங்கோ! எதற்குமொருமுறை அந்த விளம்பரத்தை மீண்டும் படித்துப் பார். சில சமயங்களில் உண்மைகூட நித்திரை கொள்வதுண்டு."
"சரி சரி அருள். சுற்றி வலைத்துப் பேசாமல் விசயத்திற்கு வா. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டுமென நீ நினைக்கிறாய்? "
"'நாமிருவரும் அந்த விளம்பரத்திலுள்ளவாறே நாளைக் காலை ஹரிபாபுவை அவன் குறிப்பிட்ட இடத்திலேயே சென்று சந்திப்போம். அவன் குறிப்பிடும் வேலை பற்றி மேலுமதிகத் தகவல்களை அச்சந்திப்பின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். பிடித்திருந்தால் செய்கிறோம். பிடிக்காவிட்டால் திரும்பி விடுவோம்.குடியா முழுகி விடப் போகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?"
இளங்கோவுக்கும் அருள் கூறுவதே சரியாகப் பட்டது.
"அருள் நீ கூறுவதே சரி. அவ்விதமே நாளைக் காலைப் பொழுதினைக் ஹரிபாபுவுடம் கழித்து விடுவோம்."
இவ்வாறு நண்பர்களிருவரும் அன்றிரவு நீண்ட நேரம் இவ்விடயம் பற்றியயே கதைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தூங்கிப் போனார்கள். தூங்கப் போவதற்கு முன் இளங்கோ தாயாரின் கடிதத்தை எழுத்து வாசித்தான். அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது:
'இளங்கோ! நீ அங்கு நல்ல சுகமாக இருப்பாயென நினைக்கிறேன்; வேண்டுகிறோம். புது இடம். கொஞ்சம் கவனமாக இருக்கப் பழகு. இங்கு நாங்கள் அனைவரும் சுகமே. இங்கு சூழ்நிலையொன்றும் அவ்வளவு சரியாக இல்லை. எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம். பார்வதி நேற்றும் வந்து போனவ. அவ மட்டும் அவசரத்துக்கு உதவியிருக்காவிட்டால் நீ வெளியிலை போயிருக்க முடியாது. பாவம் அவள். உன் நிலையும் எனக்கு விளங்குது. இவ்வளவு நாளும் உள்ளுக்குள்ளை உன்னை வைச்சிருந்தாங்கள். இப்பத்தான் வெளியிலை விட்டிருக்கிறான்கள். கெதியிலை உழைக்கப்பார். அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமாவது அனுப்பி வைச்சாயென்றால் உதவியாகவிருக்கும்.'