அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
அதிகாலை நேரத்திற்குரிய மெல்லிய குளிர் எங்கும் பரவிக் கிடந்தது. கீழ் வான் சிவந்து கிடந்தது அதிகாலைக் கருக்கிருளுக்கோர் அழகினை அளித்தது. விடிவெள்ளியும், முழு நிலவும் நட்சத்திரக் கன்னியர் சிலருடன் பிரிவதற்கஞ்சி இன்னும் உறவாடிக் கொண்டிருந்தார்கள். நியுயார்க் நகரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இளங்கோவின் சிந்தனை கடந்த வார நிகழ்வுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அவனால் அந்தக் கிரேக்கனின் கடலுணவு உணவகத்தில் ஒரு வாரம் வரையிலேயே தாக்குப் பிடிக்க முடிந்தது. வெள்ளிக் கிழமை மட்டும் தாக்குப் பிடிப்பதே அவனுக்குப் பெரும் சிரமமாகப் பட்டது. வெள்ளிக் கிழமை காலை வேலையினை ஆரம்பிப்பதற்கு முன் அவன் தன் முடிவினை நெப்போலியனுக்குக் கூறியபோது அவன் சிறிதும் இதனை , இவ்வளவு சீக்கிரத்தில், எதிர்பார்க்கவில்லையென்பதை அறிய முடிந்தது. அதனை அவனது வினாவும் நிரூபித்தது.
"உனக்கு வேலை பிடிக்கவில்லையா?"
அதற்கு இளங்கோ இயலுமானவரையில் தன் மனச்சாட்சியின்படியே பதிலிறுக்க முடீவு செய்தவனாக "வேலை பிடிக்கவில்லையென்று சொல்வதற்கில்லை..." என்று கூறிக் கொண்டிருக்கையில் நெப்போலியன் இடைமறித்துக் கேட்டான்:
"பின். வேலை சிரமமாயிருக்கிறதா?"
"அதுதான் முதற் காரணம். தொடர்ந்து நீண்ட மணி நேரம் வேலை செய்து விட்டு இருப்பிடம் திரும்பிப் படுக்கையில் சாய்ந்தால் மறுநாள் எழும்பியதுமே மீண்டும் வேலைக்கு வந்து விட வேண்டும். அது மிகவும் சிரமமாயிருக்கிறது. உடம்பும் முறிந்து போய் விடுகிறது. அடுத்தது..."
"அடுத்தது..."
"சிரமமப்படுகின்ற அளவுகேற்ற ஊதியமுமில்லை. இரண்டு பேருடைய வேலையை ஒரு ஆளே செய்வது அவ்வளவொன்றும்
எளிதாகவில்லை.."
இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது திகைப்பினை அளித்திருக்க வேண்டும். அதனை அவனது அடுத்த கேள்வி நிரூபித்தது: "இரண்டு பேருடைய வேலையா..? யார் உனக்குக் கூறினார்கள்?"
"யார் சொல்ல வேண்டும்.. வேலையின் அளவீனைப் பார்த்தாலே தெரியவில்லையா?"
இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது விசனத்தை அளித்திருக்க வேண்டும்.
"இருப்பதோ சட்டவிரோதம். இதை விட வேறென்ன வேலையினை நீ எதிர்பார்க்கிறாய்.?"
இவ்விதம் நெப்போலியன் அவனது நிலையினைச் சுட்டிக் காட்டிக் கூறியது இளங்கோவுக்கு ஆத்திரத்தை அளித்தது. அது குரலில் தொனிக்க அவன் இவ்விதம் கூறினான்: "நான் சட்டவிரோதமாகத் தற்போதிருந்தாலும் அதற்குரிய பத்திரங்களுடன்தான் இருக்கிறேன். சட்டரீதியாகத்தான் நாட்டினுள் நுழைந்தவன். தவிர்க்க முடியாத நிலையில் இங்கு தங்க வேண்டியதாயிற்று." அதே சமயம் இவ்விதம் இவனுடன் தன் சொந்த வாழ்வு பற்றிய விபரங்களையெல்லாம் தெரிவிக்கத்தான் வேண்டுமா என்றும் பட்டது. இவ்விதம் நினைத்தவன் "என்னால் இந்த வேலையைச் செய்யவில்லை என்று வைத்துக் கொள். என்னால் செய்யக் கூடிய வேலைகளைத் தேடிப்பார்க்கிறேன். இங்கிருந்து கொண்டு இந்த வேலையை இன்னும் ஒரு வாரம் செய்தேனென்றால் எனக்கு விசரே பிடித்து விடும். இப்பொழுது கூட என்னால் இந்த வேலையினைத் தொடர்ந்து செய்ய முடியும் நிபந்தனையொன்றின் அடிப்படையில்.." என்று இழுத்தான்.
அதற்கு நெப்போலியன் "என்ன நிபந்தனை விதிக்கிறாயா? இவ்விதம் நிபந்தனை விதிக்கும் முதல் ஆள் நீ தான். சரி உன் நிபந்தனையைத்தான் சொல்லேன்.." என்றான்.
"பத்து மணித்தியாயம் மட்டுமே வேலை செய்வேன். அதற்குரிய ஊதியம் தரவேண்டும். மேலதிகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்குமுரிய ஊதியம் தரவேண்டும். இலவசமாகச் செய்ய என்னால் முடியாது. சிரமப்படுகிற அளவுக்கு ஊதியம் கிடைத்தால் மனதைச் சமாதானப்படுத்தவாவது முடியும். சிரமத்திற்குரிய பலன் சிறிதாவதிருக்க வேண்டும்."
இளங்கோவின் பதில் உண்மையிலேயே நெப்போலியனுக்கு வியப்பினை அளித்தது.
"இங்கு பார் என் நண்பனே. நீ நன்கு வேலை செய்யும் ஆள். மிகவும் கடுமையான உழைப்பாளி. உன்னை இழப்பது எனக்கு மிகுந்த கவலையினை அளிக்கிறது. உன்னை மாதிரி இன்னுமொருவனைத் தேடிப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால் நீ கேட்பதைத் தர எனக்கு உரிமையில்லை. உணவக்ச் சொந்தக்காரன் நிச்சயம் இதற்குச் சம்மதிக்க மாட்டான். நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் இத்தகைய வேலைக்கு நாயாய் அழைந்து கொண்டிருக்கிறார்கள். பீற்றரிடம் கூறினால் இன்னொருவனை அவன் அனுப்பி விடுவான். இருந்தாலும் இவ்வாரம் நீ கடுமையாக உழைத்ததற்காக நன்றி. இன்று மாலை உனக்குரிய ஊதியத்தைக் கணகெடுத்துத் தந்து விடுகிறேன். உன் எதிர்கால நல்வாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்."
இவ்விதம் நெப்போலியன் வெளிப்படையாகக் கூறியது அவன்பால் சிறிது மரியாதையினை இளங்கோவின் மனதிலேற்படுத்தியது. அவனைப் பொறுத்தவரையில் எந்த ஊதியத்திற்கும் வேலைக்கு ஆள் பிடிப்பது அவ்வளவு கஷ்ட்டமான காரியமில்லை. முகவன் பீற்றரின் அலுவலகத்தில் தவமிருக்கும் 'கொக்குக'ளின் ஞாபகம் நினைவிற்கு வந்தது.
அச்சமயம் அவனுக்கு எமிலியின் ஞாபகம் வந்தது. அங்கு பணி புரியும் பணிப்பெண்களில் அவள் சிறிது வித்தியாசமானவள். நியூஜேர்சியிலுள்ள கல்லூரியொன்றில் 'ஓட்டல் நிர்வாகம்' பற்றிய துறையில் படித்துக் கொண்டிருந்தாள். உண்மையில் அவள்தான் அவனுக்கு அந்த வேலையை அவனுக்கு முன்னர் இருவர் செய்து கொண்டிருந்த விபரத்தைக் கூறியவள். நாள் முழுவதும் அவன் படும் சிரமத்தைக் கண்டு அவ்வப்போது ஓய்வெடுக்கும் சமயங்களில் அவனுடன் உரையாடுமொரு சம்யம் கூறியிருந்தாள். அத்துடன் நியூயார்க்கிலேதாவது வேலையினை பாரென்று அறிவுரையும் கூறியிருந்தாள்.
உண்மையில் எமிலி சிறிது கண்டிப்பானவளும் கூட. உதவிச் சமையற்காரன் மார்க் ஒரு வேடிக்கையான பேர்வழி. பெண்களென்றால் வழியும் பிரிவினன். அவர்களுடன் சல்லாபிப்பதில், அங்க சேஷ்ட்டைகள் புரிவதில் ஆன்ந்தம் கொள்பவன். அவர்கள் அப்பால் நகர்ந்ததும்
'எளிய விபச்சாரிகளென்று' நையாண்டி செய்பவன். அங்கு பணிபுரியும் பணிப்பெண்கள் ஒவ்வொரு முறை சமையலறைக்குள் வரும்போதும் அவர்களுடன் ஒரு சில நிமிடங்களாவது சல்லாபிக்கவும், அவர்களது பிருஷ்டங்களை வருடவும் அவன் தவறுவதேயில்லை. ஆனால் எமிலியுடன் மட்டும் அவன் அவன் பருப்பு வேகாது. அவளுடன் மிகவும் பெளவ்வியமாக நடந்து கொள்வான்.
இளங்கோவின் சிந்தனை எமிலியிலிருந்து மீண்டும் நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைக்குத் திரும்பியது. அருள்ராசா அவன் உடனேயே திரும்பியதும் நிச்சயம் 'நக்கல'டிப்பான். 'இதுதான் நான் இந்த வேலைக்கே போகவில்லை. எனக்கு முதலிலையே தெரியும் நீ நின்று பிடிக்க மாட்டாயென்று. ஏன் சொல்லுவானென்று இருந்தனான்' என்பான். யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவத்ற்கில்லை. மீண்டும் முகவன் பீற்றரிடம் செல்வதில் பயனில்லை. அவன் இப்படித்தான் ஏதாவதொரு இடத்திற்கனுப்பப் போகின்றான். நியூயார்க்கிலேயே வேறெங்காவது தேடிப்பார்க்க வேண்டும். அதற்கிடையில் சமூகக் காப்புறுதி இலக்க அட்டையினை எடுக்க முடியுமாவென்று பார்க்க
வேண்டும். குறைந்தது ஒரு வாரமாவது தாக்குப் பிடித்ததால் கையில் கொஞ்சமாவது பணமாவதிருக்கு. இல்லாவிட்டால் கஷ்ட்டமாயிருந்திருக்கும். அடுத்த முயற்சியினை இன்னும் முனைப்புடன் செய்வதற்கு இந்தப் பணம் உதவும். இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவனாகப் பயணித்துக் கொண்டிருந்தானவன்.
வெளியினூடு மிகவும் வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் இந்தக் கோளத்தினுள் அவனது இந்தச் சிறிய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை விசித்திரமான உலகம்! எத்தனை விசித்திரமான இருப்பு! விரையும் வேகத்தைக் கூட உணர முடிவதில்லை. உணராமல் எத்தனை கும்மாளங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிமிடமும் இந்தப் பூமிப பந்தின் எந்த மூலையிலாவது குண்டுகள் வெடிக்காமல் பொழுது கழிந்திருக்கிறதா? எத்தனை எததனை மோதல்களாலும், இரத்தக் களரிகளாலும் நிறைந்து போய்க் கிடக்கிறதிந்த உலகம். இவ்வளவும் இந்தப் பிரமாண்டமான வெளியினூடு விரையுமிந்தக் கோளத்தின் வாயுக் குமிழிக்குள் இருந்து கொண்டு ஆடும் கூத்தினால்தானே? இந்தக் குமிழியும் எந்தக் கணத்திலென்றாலும் உடைந்து விடலாம். ஏற்கனவே ஓட்டை போட்டாகி விட்டது. இன்னுமெத்தனை நாளைக்கோ இந்த இருப்புமிந்த உலகில்? அதனைக் கூட உணராமாலேனிந்த ஆட்டம்?
இத்தகைய தனித்த பயணங்களில், அதிகாலைகளில், அந்திப் பொழுதுகளில், இருண்ட நகரத்து வானை இரசித்து வருகையிலெல்லாம் அவனது மனம் இவ்விதமான இருப்பு பற்றிய தத்துவச் சிந்தனைகளிலாழ்ந்து விடுகிறது. அது அவனது வழக்கமாகியும் விட்டது. இவ்விதமே இந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்து ஓடி விடலாமாவென்றிருக்கும். மறுகணமே நடைமுறையின் வலைக்குள் சிக்கி அதிலாழ்ந்து விடுவான். இருத்தலிற்கான போராட்டத்தில் மூழ்கி விடுவான். வாழ்க்கை மீண்டுமொரு சுழலத் தொடங்கிவிடும். மகாகவியின் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' கவிதை வரிகள் சில ஞாபகத்திற்கு வந்தன. 'மப்பன்றிக் காலமழை காணா மண்ணில் சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது. ஏர் ஏறாது. காளை இழுக்காது. இருந்தும் பாறை பிளந்து பயன் விளைப்பான் அந்த விவசாயி. ஆழத்து நீரகழ்ந்து நெல் வளர்ப்பான். அந்த் நெல்லோ... 'சோ'வென்று நள்ளிரவில் கொட்டுமொரு மழையில்..., ஆட்டத்து மங்கையராயாடிய அப்பயிரினமோ வீழ்ந்தழிந்து பாழாகிப் போம். வெள்ளம் வயலை விழுங்கும். இருந்துமென்ன அந்த விவசாயி தளர்ந்து விடுவானா? வெள்ளம் வற்றியதும் வலக்கரத்தில் மண்வெட்டியேற்றி மீண்டும் கிண்டத் தொடங்கி விடுவான். சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வான் பார்த்து அவன் அயர்ந்து விடுவதில்லை. முதலில் இருந்து முன்னேறுதற்காய் மீண்டும் தொடங்கும் அவன் மிடுக்கு'. இருப்பின் சவால்களை எதிர்த்துத் துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் விவசாயி பற்றிய கவிதை மனித வர்க்கத்தின் சவால்களைக் குறிப்பாக நம்பிக்கையுடன் விபரிக்கும். இந்த வேலை போனாலென்ன? அவன் தளர்ந்தா போய் விடுவான். நிச்சயம் அவன் வாழ்வில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு