எழுத்தாளர் கீதம்!
- அறிஞர் அ.ந.கந்தசாமி -
[ 'புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரினை 'நூலகம்' தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'எழுத்தாளர் கீதம்' கவிதையினை இங்கு பதிவு செய்கின்றேன். இக்கவிதையானது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் பரந்துபட்டது. 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'கடவுள் என் சோரநாயகன்' போன்ற கவிதைகள் முக்கியமானவை. ]
சங்கு முழங்குது! சங்கு முழங்குது!
சங்கு முழங்குது கேள் - புதுமைச்
சங்கு முழங்குது கேள்.
எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது.
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே -
சங்கு முழங்குது. - சங்கு முழங்குது
சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி
நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்!
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே - கலைச்
சிற்பிகளே! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம்! - புது
அமைப்பும் நிறுவிடுவோம். - சங்கு முழங்குது
கம்பன், வள்ளுவன், காளமேகம் வழி
வந்தவர் நாமன்றோ?
கீரன், ஒளவை, இளங்கோ பெற்ற
கீர்த்தி நமதன்றோ?
நாவலன், பாரதி - சோமசுந்தரன்
நமது இனமன்றோ? - இவர்
யாவரும் காட்டும் வழியே நமது
இலக்கிய நல்வழியாம்! - அவ்
வழியே சென்று ஒளிசேர் தமிழை
விழிபோற் காத்திடுவோம். - சங்கு முழங்குது
வானவில் வர்ணம் ஏழு
வளைவதைக் கண்டிடுவீர்!
கானகத்தில் கனிகள் ஆயிரம்
காற்றில் அசைவதைப் போல்
பூங்கா வனத்தில் ஆயிரம் ஆயிரம்
பூக்கள் மலர்வதைப் போல்
புத்தம் புதிய கருத்துகள் - ஆயிரம்
நித்தம் பெருகவென - சங்கு முழங்குது
[ இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது.]
நன்றி: 'புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர் (1956-1981) (நூலகம் இணையத்தளத்திலிருந்து : http://noolaham.net/project/94/9329/9329.pdf )