ஈழத்துத்தமிழ் நாடக உலகைப்பற்றி எழுதும் எவரும் அறிஞர் அ.நகந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தை மறக்க முடியாது. 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம் மட்டுமல்ல , அதன் கூறு பொருள் காரணமாகப் பலத்த சர்ச்சைக்குமுள்ளாகிய நாடகமும் கூட.
எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், சங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.
சைவப்பழமான சிவப்பிரகாசம் அவர்களின் மகளான மீனாவும், கிறிஸ்தவ இளைஞனான யோசப்பும் காதலிக்கின்றனர். அதற்கு மீனாவின் பெற்றோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்புகின்றது. தம் காதலில் உறுதியாக நிற்கின்றார்கள் காதலர்கள். பெற்றோர் அவளுக்கு இந்து சமயத்தைச்சேர்ந்த ஒருவரைத்திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர். அதனால் மீனா வீட்டை விட்டே ஓடுகின்றாள். இதே சமயம் இந்துவான மீனாவை மணம் முடிப்பதற்காக யோசப் பாலச்சந்திரன் என்னும் இந்துவாக மதம் மாறுகின்றான். மீனாவோ அவனை மணம் முடிப்பதற்காக ஷீலா என்னும் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறுகின்றாள். உண்மையில் இந்துவாக மதம் மாறிய யோசப்பைத்தான் மீனாவுக்கு மணம் முடிக்க அவளது பெற்றோர் தீர்மானித்திருந்தனர். அவர்களுக்கும் யோசப்பதான் அவ்விதம் இந்துவாக மதம் மாறியிருந்தான் என்ற விடயம் தெரியாது.
மீண்டும் மதம் மாறிய காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருமே தாம் மாறிய மதங்களைத்தீவிரமாகப்பின்பற்றும் விசுவாசிகளாக மாறி விட்டனர். ஷீலாவாக மாறிவிட்ட மீனா பாலச்சந்திரனாக மாறிவிட்ட யோசப்பை மீண்டும் தான் தற்போது நம்பும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால்தான் அவனுடன் ஒன்று சேர முடியும் என்று உறுதியாக நிற்கின்றாள். அதுபோல் பாலச்சந்திரனாக மாறிய யோசப்பும் ஷீலாவாக மாறிய மீனா மீண்டும் ஷீலாவாக மாறினால்தான் அவளுடன் சேர முடியுமென்று உறுதியாக நிற்கின்றான். மிகவும் கிண்டலும், ஆழமான கருத்துகளையும் உள்ளடக்கிய உரையாடல்களுன் மேற்படி நாடகத்தின் கதையினை அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் அறிஞர் அ.ந.க
இந்நாடகத்தைப்பற்றி நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறியிருப்பார்: "சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் 'மதம்', 'காதல்' என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.' - கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார்."
.
'மதமாற்றம்' நாடகத்தைப் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரிக்க முடிவு செய்திருக்கின்றோம். அதற்கு முன்னோட்டமாக 'மதமாற்றம்' பற்றி, அது மேடையேறிய காலகட்டத்தில் இலங்கையின் பல்வேறு ஊடகங்களில் வெளியான கருத்துகளையும் , அந்நாடகம் பற்றி நாடகாசிரியரான 'அறிஞர் அ.ந.கந்தசாமி'யே 'ராதா' பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தையும், நாடகத்தை வெற்றிகரமாகத் தயாரித்த காவலூர் ராஜதுரை அந்நாடகம் பற்றி எழுதிய கட்டுரையினையும் தொகுத்துப் பிரசுரிக்கின்றோம்.
எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் (இலங்கை) பதின்மூன்றாவது வெளியீடாக 1989இல் நூலாக வெளியானது 'மதமாற்றம்' நூலில் மதமாற்றம் வெளிவந்த காலத்தில் பல்வேறு ஊடகங்களில் அது பற்றி வெளியான கருத்துகளையும் தொகுத்துப் பிரசுரித்திருந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே ஒரு பதிவுக்காக, ஞாபகத்துக்காகப் பதிவு செய்கின்றோம்.
'மதமாற்றம்' 1967இல் அரங்கேறியபோது...
1. 'மதமாற்றம்' தமிழ் நாடகத்துறையில் புதியதொரு திருப்பம். - 'தினகர'னில் த.ச -
2. ஈழத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய 'மதமாற்றம்' புரட்சிகரமான கதாம்சத்தைக் கொண்ட ஒரு சிறந்த நாடகம். மனித பலவீனங்களை, மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து குத்திக் காட்டுகையில் சிரிப்புடன் சிந்தனையையும் கிளறிவிடும் வகையில் கதை மிக நுணுக்கமாகப் பின்னப்பட்டிருக்கிறது. - 'வீரகேசரி'யில் எஸ்.எஸ்
3. 'மதமாற்றம்' புதியதோர் நிலையைத் தமிழ் நாடக உலகில் தோற்றுவித்திருக்கின்றது. மத சம்பந்தமான பிரச்சினைகள் நகைச்சுவையோடு மேடைக்குக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. - 'டைம்ஸ் ஒப் சிலோ'னில் டி.ஆர்4. திரு கந்தசாமியை எவ்வித தயக்கமுமின்றி அவரது நாடகப்புலமைக்காக மெச்சுகின்றேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கடைசிக்காட்சியில் மிகச்சிறந்த நாடகப்பண்புகள் அமைந்துள்ளன. - 'டெய்லி மிரரி'ல் அர்ஜூனா -
5. கதையைக் கட்டி எழுப்பி நடாத்திச் செல்லும் விதத்தில் ஆசிரியரின் கலை நுணுக்கமும், சாதுரியமும் பளிச்சிடுகின்றன. ஒன்றின் மீதொன்றாக முறுகி இறுகும் கட்டங்கள் கலைஞர்களைப் பிணித்து வசப்படுத்துவதுடன் அமையாது மதச்சார்பு பற்றிய பற்றிய உளவியல் அடிப்படைகளைக் குறிப்பாக உணர்த்திச் செல்லுகின்றன. - 'வசந்தத்தில்' கவிஞர் முருகையன் -
6. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றத்தில்' கதா நகழ்சி திடீர்த்திருப்பங்களும் மாற்றங்களும் கொண்டது. ஓ ஹென்றிச்சூழல்கள் நிறைந்த்து. பேர்னாட்ஷாவின் 'டெவில்ஸ்டிசைப்பிள், அன்ட்ரோக்கில்ஸ் அன்ட் த லயன்' போன்றவற்றின் பின்னால் ஷாவின் நகையொலி கேட்பது போல 'மதமாற்றத்தின்' கதாநிகழ்ச்சிக்குப்பின்னாலும் கதாசிரியரின் நகையொலி கேட்கிறது. இலங்கையில் சொந்தமாகத்தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த நாடகம் இதுவே. அ.ந.கந்தசாமியின் மதமாற்றத்தோடு ஒப்பிடக்கூடிய எந்நாடகத்தையும் இந்திய எழுத்தாளர் படைப்புகளிடையேகூட இவ்விமர்சகன் ஒரு போதும் கண்டது கிடையாது. - 'ரிபியூனில்' சில்லையூர் செல்வராசன் -
6. கதையில், மொழியில், கருத்தில் உயர்ந்த தரத்தை எட்டிப்பிடிக்கும் நண்பர் அ.ந.கந்தசாமியின் இந்நாடகம் ஈழத்து நாடகக்கர்த்தாக்களுக்கு ஒரு தீபஸ்தம்பமாக, விடிவெள்ளியாகத் திகழ்கின்றது. - 'தேசாபிமானி'யில் எச்.எம்.பி
7. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' கதை திடீர்த்திருப்பங்கள் பல கொண்ட நெஞ்சைப்பிணிக்கும் சுவையான கதை. நையாண்டிக்கதையானாலும் நவரசங்களும் பொதிந்து படித்தவர், பாமரர் யாவரையும் கவரவல்லவவாக அமைந்திருக்கின்றன. உரையாடல்கள் உலகப்பெரும் நாடகாசிரியர்களான பேர்னாட்ஷா, இப்சென், சாட்டர் போன்றோரின் படைப்புகள் கலைஞர்களால் கொண்டாடப்படுவதற்கு இவ்வம்சங்கள் யாவும் ஒரு சேர அவற்றில் அமைந்திருப்பதே காரணம். மதமாற்றம் நாடகத்திலும் இப்பண்புகள் குறைவில்லாது அமைந்திருக்கின்றன. - 'ராதா'வில் 'கலாயோகி' -
8. தற்கால இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கை வைத்துத் தாம் தொட்ட துறை எல்லாம் வெற்றி பெற்ற திரு.கந்தசாமி 'மதமாற்றத்'தில் ஈழத்தில் மிகச்சிறந்த மேடை நாடகாசிரியர் என்று வர்ணிக்கும் அளவுக்குப் பெரும் வெற்றி ஈட்டியிருக்கிறார். சுருக்கமாய்ச் சொன்னால் மதமாற்றம் ஒரு உயர்ந்த அனுபவம். தமிழுக்கு வாய்த்த நாடகச்செல்வம். புதுமைக் கருத்தோவியம். இன்றைய சமுதாயத்தின் தத்துவச்சிக்கல்களின் கண்ணாடி. - - தேசபக்தனில் எஸ்.ஸ்ரனிஸ் -
9. இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் 'மதமாற்றம்' என்ற இந்நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக்காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம்முதல் நாடகத்திலேயே அச்சிறப்பைக் காணக்கூடியதாக இருந்தது. உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச்செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச்செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். ...
சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் 'மதம்', 'காதல்' என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.' - கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார். - நூலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் -
10. நாவல் துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்' என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்' நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்து நாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம்.கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும் சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம். நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப் பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை அ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
'மதமாற்றம்' முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற காரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக் குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர் நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி 'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார்.
எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மனக்கண்' நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவது நிறைவேற்றுவார்களா? - அந்தனி ஜீவா ('சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் கட்டுரைத்தொடரில்) -
'மதமாற்றம்' நாடகம் பற்றி நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் விமர்சனமிது.
['மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த 'செய்தி' இதழில் தனது நாடகமான 'மதமாற்றம்' கொழும்பில் மேடையேற்றப்பட்ட காலகட்டத்தில் எழுதிய விமர்சனக் கட்டுரையிது.ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள்-]
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.
கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.
நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.
'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல். ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.
ஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி? 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா, மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர் செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிப்பு
ஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது? நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.
கலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.
பொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.
செல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா?
செட்டுகள்
நாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.
டைரக்ஷன்
'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமைஅயும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.
பொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்
நன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967 ; பதிவுகள் நவம்பர் 2003 இதழ் 47
அ.ந.க.வின் 'மதமாற்றம்' பற்றி காவலூர் ராசதுரை!
'[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்]
இலங்கை வானொலியின் 'கலைக்கோலம்' என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். "வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது' என்று சொன்ன அவர் , 'என்னுடைய 'மதமாற்றத்தை' உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்" என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.
தமிழ் நாடகத்துறையில் ஈடுபாடுள்ள முத்தையா இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், லடீஸ் வீரமணி ஆகியோரும் என்னுடைய இந்தப் பரிசோதனைக்கு உதவ முன்வந்தார்கள். நாளடைவில் ஒரு குழுவே திரண்டு விட்டது. ஆயினும் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணற்ற நாடக மன்றங்களைப் போல நாமும் ஒரு நாடக மன்றத்தை அமைக்க முற்படவில்லை. எம்முடைய இந்த முயற்சி தமிழ் நாடகத்துறையின் முன்னேற்றம் கருதிச் செய்யப்படும் ஒரு சோதனையே. இந்தச் சோதனை வெற்றி பெற்று, அந்த வெற்றியைக் கண்டு இதைப்போன்ற சிறந்த நாடகங்களை நல்ல முறையில் மேடையேற்ற வேறு மன்றங்களும் முன்வருமானால், அதுவே தமிழ் நாடகத்துறைக்கு நாம் செய்த சேவையென்று மனநிறைவு பெறுவோம்.
நாடகத்தை நடத்துவதற்கு வேண்டிய செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்ததைத் தவிர நான் பிரமாதமாக வேறொன்றும் சாதித்து விடவில்லை. ஆனால் அப்படி முன்வந்தமையால் பெரிய உண்மையொன்றினை நான் உணர்ந்து கொண்டேன்.
கலைத்துறையில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களை, அவர்களின் திறமைகளை, இனங்கண்டு வழிநடத்தக் கூடிய, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான , தலைவர் எவரும் இன்று நம் நாட்டில் இல்லையென்பதே அந்த உண்மையாகும். இருந்திருந்தால் இத்தகைய பரிசோதனை எப்பொழுதே நடைபெற்றிருக்கும்.
அனுபவத்திலும் திறமையிலும் மற்றேல்லாவகையிலும் என்னிலும் மேலானவர்கள், பல்வேறு பதவிகளிலும், துறைகளிலும் மன்றங்களிலும் உள்ள சிறந்த நடிகர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து, தங்கள் நேரத்தையும், சொந்தப் பணத்தையும், செல்விட்டு இந்த நாடகத்தைச் சிறப்பிக்க முன்வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னைப் போலவே அவர்களும் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி தம்மனவளவில் சிந்தித்து, இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தமையேயாகும். அல்லாவிட்டால் இவ்வளவு திறமைசாலிகளையும் ஒரே குழுவாகத் திரட்ட முடிந்திருக்காது.
இவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த நாடகம் எப்படி அமைதல் வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கத்தக்க வகையில் நம்நாட்டின் திறமை மிக்க நடிகர்கள் 'மதமாற்றத்தை' இன்று நடித்துக் காட்டுகிறார்கள். அவர்களையும் என்னையும் பொறுத்தவரையில் இந்நாடகம் ஈழத்து நாடகத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாவதற்கான முன்னோடியாகும். அந்த நோக்கத்துடன், ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறோம் என்ற பணிவுடனும் பிரக்ஞையுடனும் இந்த நாடகத்தை ரசிகப் பெருமக்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.