இடாலோ கால்வினோவின் சிறுகதை - நூலகத்தில் ஒரு தளபதி
வாசிப்பு என்பது புத்தகப் பிரியர்களுக்கு வேறு எதையும் விட உவப்பானது. ஆனால் வாசிப்பு என்பதை அதன் பயன் (அல்லது கெடுதல்) என்ன என்பதை ஒரு அதிகார அமைப்பால் நிறுவ முடியுமா? இந்த ஆர்வமூட்டும் சரடை மையமாகக் கொண்ட இடாலோ கால்வினோ படைப்பான "நூலகத்தில் ஒரு தளபதி" என்னும் கதையை சொல்வனத்தில் மாது மொழி பெயர்ப்பாகத் தருகிறார். அதற்கான இணைப்பு இது. ராணுவ ஆட்சியிலிருக்கும் பாண்டூரியாவின் ராணுவத் தலைமைக்கு தமது அதிகாரத்துக்கு எதிரான கருத்துக்கள் புத்தகங்கள் வழி பரவுகின்றனவோ என்னும் ஐயம் எழுகிறது. எனவே அவர்கள் அந்த நாட்டின் மிகப் பெரிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து ஆராய்ந்து அவற்றை ஆபத்தானவை மற்றவை என இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு அறிக்கை தருவதற்கு ஒரு சிறிய படையையே அனுப்புகிறது.
ஒரு சின்னஞ்சிறிய கதை வழியே நம்மை ஒரு மிகப் பெரிய கேள்விக்கு நெருக்கமான அண்மையில் கொண்டு நிறுத்துகிறார் கால்வினோ. வாசிப்பு என்பதில் நாம் எதைத் தேர்வு செய்கிறோம்? எதை வாசிக்கிறோம்? ஆரம்ப நிலை வாசகர் யாருமே மனதைக் கிளர்ச்சியுடன் வைத்து நீண்ட நேரம் வாசிக்கத் தக்க ஒரு பொழுது போக்கான கதையை மட்டுமே வாசிப்பார். ஆனால் அதற்கு அடுத்த நிலை வாசிப்பு நமக்கு அனேகமாக விமர்சகர்கள் பரிந்துரைத்தவை என்னும் அடிப்படையில் அல்லது தற்செயலாக ஒரு நண்பர் வியந்து வாசித்து நமக்கு இரவலும் கொடுத்தது என்னும அடிப்படையிலேயே அமைகிறது. இல்லையா?
சமகாலத் தமிழ்ச் சூழலில் ஒரு வாசகர் (அவர் எழுத்தாளர் இல்லை என்றால்) அதிக பட்சம் சிறு பத்திரிக்கைகள் மற்றும் இலக்கிய இணைய தளங்களின் வழி அவர்கள் கவனப்படுத்தும் பத்துப் பதினைந்து ஆளுமைகள் அல்லது முப்பது நாற்பது நூல்களைத் தாண்டி வாசிக்க வாய்ப்பு இருக்காது.
சுதந்திர சிந்தனை மற்றும் விரிந்த நோக்கு இவற்றைப் புத்தகங்கள் வாயிலாக அல்லாது நாம் சென்றடையும் மார்க்கம் எதுவுமில்லை. நுட்பமாகவே தான் நம்மையுமறியாமல் நாம் வாசிக்கும் தடம் நெறி முறைப்படுத்தப் பட்டு விடுகிறது. இஸம் சார்ந்த சிந்தனை உள்ளவர்கள் அந்த இஸத்தின் நிறுவப்பட்ட கோட்பாடுகள் காயப்படாத வகையில் எழுதப்பட்டிருக்கும் அரைத்த மாவை அரைக்கும் வரிசை நூல்களையே வாசிப்பதை நாம் காண்கிறோம்.
கால்வினோ ஆயுதம் ஏந்துபவர்கள் கருத்துச் சுதந்திரத்தைக் கண்டாலே நடுங்குபவர்கள் சுதந்திரமாக வாசிக்கும் ஒரு சூழலை முன் வைக்கிறார். அப்படி அவர்கள் ஒரு நூலகத்தின் எல்லா நூல்களையும் வாசித்து விரிவான ஒரு அறிக்கை தயார் செய்தால் அது எப்படி இருக்கும். முத்தாய்ப்பான இந்தப் பகுதியில் அந்தச் சித்திரம் விரிகிறது:
பெடீனா அலுவல் குழுவின் முன் இறுதி அறிக்கையை விவரித்து உரையாற்றினார். அவருடைய பேச்சுத் தோற்றம் முதல் இன்று வரையான மனித வரலாற்றின் களஞ்சியம் போல் தோன்றியது – விவாதத்திற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் எனப் பாண்டூரியரிப் பெருமக்களால் கருதப்பட்ட கருத்துக்களைத் தாக்கும் களஞ்சியம், நாட்டைப் பிடித்த பிணிகளுக்கு ஆளும் வர்க்கமே காரணம் என்று கூறும் களஞ்சியம், தவறான கொள்கைகளுக்கும் தேவையற்ற போர்களுக்கும் வீரக் காவுகளாக மக்களைத் தூக்கிப் பிடிக்கும் களஞ்சியம். அண்மையில் புதிய கருத்துக்களைத் தழுவியோர் கொள்ளும் குழப்பம் போல் அவ்வுரை மிகவும் குழப்பமிக்கதாக எளிமையான ஒன்றோறொன்று முரணான தீர்மானங்கள் நிரம்பியதாக இருந்தது. ஆனால் அவ்வுரை முன் வைத்த ஒட்டு மொத்த கருத்தில் சந்தேகம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. தளபதிகள் ஸ்தம்பித்தார்கள், அவர்கள் கண்கள் அகல விரிந்தன, தங்களுக்குக் குரல் இருக்கிறது என்று அப்போதுதான் கண்டுபிடித்தவர்கள் போல் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அவர்கள் பெடீனாவை உரையை முழுதுமாக முடிக்க விடவில்லை. அவரை இராணுவ வழக்குமன்றத்தில் விசாரணை செய்து பதவி இறக்கம் செய்யக்கூடும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு பயங்கரச் சதி இருக்குக் கூடும் என்று பயந்து பெடீனாவும் அவர் கீழிலிருந்த நான்கு துணையதிகாரிகளும் கட்டாய ஓய்வில் விடுவிக்கப்பட்டார்கள். ‘பணியினால் மிகத் தீவிர மன அழுத்ததிற்கு உள்ளானார்கள்’ என்று காரணம் கூறப்பட்டது. பனியில் உறைந்து போகாமல் இருக்கக் கனமான மேலங்கிகளையும் ஸ்வெட்டர்களையும் அணிந்து கொண்டு அவர்கள் அந்தப் பழைய நூலத்திற்கு அடிக்கடி செல்வதைக் காண முடிகின்றது. சின்யோர் கிரிஸ்பினோ தன் புத்தகங்களுடன் அவர்களுக்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்.
முரணான தீர்மானமான முடிவற்ற எழுத்துக்களின் வழி நாம் கண்டடைவது சுதந்திர சிந்தனை மட்டுமே. அதுவே வரலாற்றின் பக்களில் புதிய அத்தியாயங்களைத் துவக்கியது. சுதந்திர சிந்தனையை சிந்தனையாளர்கள் முன் வைக்கிறார்களா? தாம் கொண்டாடும் ஒன்று எந்த இடத்தில் சுவர் முட்டி நின்று விடும் என்று எத்தனை சிந்தனையாளர்கள் தெளிவு படுத்துகிறார்கள்?
அனேகமாக ஒரு படைப்பாளி அல்லது சிந்தனையாளருக்குத் தனது ஆளுமையைத் தூக்கிப்பிடித்துப் பிரம்மாண்டமாகக் காட்டிக் கொள்வதில் உள்ள ஆர்வம் சுதந்திர சிந்தனையின் அடிப்படையில் ஆன ஒரு தேடலில் நாமெல்லாம் ஒன்று படுவோம் என்று புதிய தடங்களில் வாசகனோடு மேற்செல்வதில் உண்டா?
கால்வினோ மிகப் பெரிய ஒரு கற்பனை நகை முரணை முன் வைக்கிறார். ஒரு ராணுவமே கட்டாயத்தில் முனைந்து படித்தாலும் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் வாசிக்கலாம். ஆனால் சராசரி வாசகன் விரிவாக வாசிக்க அவனை ஊக்கப்படுத்தும் வழிகாட்டுதல் எதுவும் இல்லை. அபூர்வமான தேடலில் ஆயிரத்தில் ஒருவர் மனத்தடை இன்றி அனைத்திலும் தேடித்தேடி வாசித்தால் அது அவரது அதிர்ஷ்டம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.