குஜராத் கலவர வழக்கு: 31 பேருக்கு ஆயுள் தண்டனை
மெஹசானா(குஜராத்), நவ.11 - குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு கலவரத்தின் போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2002 ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்து வன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் 22 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர்.